![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 22. ‘யவன வீரன்’ இருளில் மிக விரைவாக, இருவரும் பேசிக் கொண்டே சென்றார்கள்; ‘ஆதி - அத்தியின் தொடர்பால் ஏற்பட்ட கலகம் பெரிதாகி விட்டதை அரண்மனையில் யாவரும் அறிந்து கொண்டார்கள். கரிகாலனுக்கு எதிராகப் புலவரும் மணக்கிள்ளியும் சூழ்ச்சி செய்வதை யாவரும் உணர்ந்தனர். புலவரின் சூழ்ச்சி வெல்லுமென்றே யாவரும் நம்பினர். ஆதி - அத்தியின் சேர்க்கையில் நகரில் யாவருக்கும் குதூகலம் என்பதைக் கரிகாலனே அறிவான்; ஆனால் அவன் தான் கொண்ட முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் புலவர் எவ்வகையிலேனும் கரிகாலனை வென்றுவிட முயன்றார். ‘அத்தியை மாய்த்து விட வேண்டும்’ என்று கரிகாலன் கூறியதைக் கேட்டு, புலவர் திடுக்கிட்டதில் வியப்பு இல்லை; தம் எண்ணம் முடிவதற்குள் கரிகாலன் ஏதேனும் செய்து விடுவானோ’ என்று கலங்கி விட்டார். தம் சூழ்ச்சியை நிறைவேற்றப் பரபரப்புற்ற புலவர், மணக்கிள்ளியின் மாளிகையை அடைந்ததும், அவனிடம் தம் கருத்தை வெளியிட்டார். “மணக்கிள்ளி, இனி தாமதம் கூடாது; உடனே காரியத்தை முடிக்க முற்பட வேண்டும். கரிகாலனின் சிந்தனை எனக்குப் பெரும் பயத்தை உண்டாக்குகிறது; நீ இப்போது செய்ய வேண்டியது...” “என்ன? - எதற்கும் துணிந்து நிற்கிறேன்; இப்போது, குறிப்பிட்ட வீரர்கள் ஆயத்தமாயிருக்கிறார்; இதோ அந்தரி... கட்டளையை எதிர்பார்க்கிறாள்!” “முதலில் அந்தரியை இப்போதே கன்னிமாடம் அனுப்பிவிட வேண்டும்; நடு யாமத்தில் சந்திரன் உச்சி வானத்தை அடைந்த அளவிலே பல்லக்குப் புறப்பட்டு விட வேண்டும்...” என்று கூறிவிட்டு, அந்தரியை நோக்கிக் கூறலானார். “நீ இப்போதே ஆதியிடம் போ; நடு வானத்தைச் சந்திரன் அடைந்தவுடன், ஆதியை அழைத்துக் கொண்டு கன்னி மாடத்து வெளிவாயிலில் நிற்கும் பல்லக்கிடம் வந்து விட வேண்டும்; நிலவில் விளையாடப் போவது போல், மற்றச் சேடியர் நினைக்க வேண்டும், உன் திறமையை இக்காரியத்தில் உபயோகிக்க வேண்டும்...” “ஆதியைக் கன்னிமாடத்தின் வெளியே கொண்டு வருவது என் பொறுப்பு” என்று கூறி விட்டு மின்னலென மறைந்தாள் சேடி அந்தரி. பல்லக்குத் தூக்கும் மல்லர்கள் புலவரின் கட்டளையை எதிர்பார்த்து முன் நின்றார்கள்; புலவர் உடனே கட்டளையிட்டார்: “மல்லர்களே, நடுயாமத்தில் நீங்கள் பல்லக்குடன் ஆயத்தமாக இருக்க வேண்டும்; கன்னிமாடத்து வெளி முற்றத்தின் வாயிலின் மதிள்புரம் பதுங்கியிருக்க வேண்டும்.” “இப்போதே நாங்கள் போய் விடுகிறோம்; இலவந்திகைச் சோலை வழியே வந்து விடுகிறோம். நாங்கள் சோலைக்குப் போகும் சந்தில் தங்கியிருக்கிறோம். காவலர் எவரும் நாங்கள் இருப்பதை அறிய முடியாது.” “மல்லர்களே, இலவந்திகைச் சோலை வழியேதான், காவிரிக் கரைக்குப் போக வேண்டும்; நினைவிருக்கட்டும்; விரைவில் போயிருங்கள்” என்றார். மல்லர்கள் நால்வர் விரைவில் அவ்விடம் விட்டுப் போனார்கள். அடுத்தாற் போல் மணக்கிள்ளி, தன் தம்பி பெருவிறற்கிள்ளிக்குக் கட்டளையிட்டான். “நீ முன்னதாகச் சென்று காவிரிச் சாலையில் குதிரையுடன் இரு; நாங்கள் நடு யாமத்தில் வந்து சந்திக்கிறோம்.” புலவர் சரேலென்று எழுந்து பெருவிறற்கிள்ளியின் தோல்களைப் பிடித்துக் கொண்டு கூறலானார். “ஆதி - அத்தியின் மணக்கோலத்திற்காக மட்டும் அல்ல! - என் சூழ்ச்சியின் முடிவு என்ன தெரியுமா உனக்கு?” என்றார் புன்னகையோடு புலவர். பெருவிறற்கிள்ளி குறுநகையுடன் கூறினான். “எங்கள் தந்தைக்குச் செய்த உதவியைக் காட்டிலும், இது மிகப் பெரியது; நிச்சயம், இதில் வெற்றி கிட்டுமா? -” “வெற்றி என் உள்ளத்தில்! நீ போய்க் காரியத்தைப் பார்!” அடுத்த கணமே பெருவிறற்கிள்ளி புலவர் கட்டளையை ஏற்றுப் புறப்பட்டுச் சென்றான். இடி இடித்தாற் போல் புலவர் சிரித்தார். “என்ன?” என்று வியப்போடு கேட்டான் மணக்கிள்ளி. “என்ன? உன் தந்தை - என் மருமான் - சோழ நாட்டு முடி மன்னனின் ஏமாற்றத்தை நினைத்துத்தான் சிரித்தேன்” என்றார். “காரியம் முடிவதற்குள்ளா?” என்றான் அவன். “எல்லாம் முடிந்து விட்டது; இனி நாம் செய்ய வேண்டிய காரியம் மட்டுமே -” “யவன வீரனை என்ன செய்வது?” என்றான் மணக்கிள்ளி. “என்ன செய்வது? முடிவான வழியைத் தவிர்த்து வேறு என்ன செய்ய முடியும்? இருவரையும் அடக்கி விடலாம்; யவனன் முடிவு - முடிவு செய்ய வேண்டியதுதான்.” “உயிரை இழக்கத் துணிவானே தவிர்த்து, ஒரு காலும் வழி தவற மாட்டான்; மன்னனின் கட்டளையை மறக்க மாட்டான்; சிறைக் கோட்டத் தலைவன் நாங்கூர்வேள் நிச்சயம் இதற்கு உடம்படான்! -” “அவன் வரையில் போனால் காரியம் நிறைவேறாது! நீ கவலைப் படாதே! ஒரு கொலையைச் செய்தாக வேண்டும்; அந்த யவன வீரனை வீர சுவர்க்கம் அனுப்பினால் தான் காரியம் நடக்கும்; மற்ற இருவரையும் எளிதில் வசம் செய்து கொள்ளலாம்; ஆனால், இதனால் இனி எவ்வளவு பெரிய காரியம் நிறைவேறப் போகிறது தெரியுமா? கரிகாலனே பின்பு பிரமிப்படையப் போகிறான்.” “கொலையை மறுக்கும் தாங்களே, ஒரு கொலையைச் செய்யத் துணிவது நேர்மையா? அதுவல்லாமல், யவன நாட்டைச் சேர்ந்த ஒரு வீரனை -” “என்ன செய்வது? - அவனைக் கொல்லாமல், நம் காரியத்திற்கு உடம்படச் செய்ய முடியுமா? அதுதான் முடியாததாயிற்றே! அவனிடம் நம் சூழ்ச்சியைச் சொன்னால் உடனே அது நாங்கூர்வேளிடம் பரவும்; மறு கணமே கரிகாலனை அடையும்; அடுத்த சில நாழிகையில் அத்தியை நாம் காண முடியாது!” “ஒருவனைக் கொன்று ஒருவனைக் காப்பாற்ற வேண்டும்!” “ஆம்! யவன வீரனைக் கொல்வதால் எத்தனை காரியங்கள் நிறைவேறப் போகின்றன தெரியுமா? - அது இருக்கட்டும்; நான் சுற்றிப் பார்த்து வருகிறேன்; நீ ஆயத்தமாக இரு!” என்று கூறி விட்டுப் புலவர் மறைந்தார். ‘புலவர் எங்கே போயிருக்கிறார்? இரவு இவ்வளவு நாழிகை ஆன பின்னும் வரவில்லையே! காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றனவே!’ என்று இரும்பிடர்த்தலையாரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் மணக்கிள்ளி. அவன் மாளிகையில் காவல் வீரர் இருவரைத் தவிர வேறு எவரும் இல்லை. மாளிகையின் நாலு புறத்திலும் விளக்குகள் சுடர்விட்டு எரிந்தன; அத்தருணம் மென் மெல இசை நாதமும், தாளச் சப்தமும் அரண்மனையின் நானாபுறமிருந்தும் எதிரொலித்தன. மாந்தர்களின் பேச்சுக் குரல் எங்கும் அடங்கி விட்டது; இசையும் தாளமும் கூட அடங்கி விட்டன, சிறிது நாழிகையில். இரவுக் கன்னி, நள்ளிரவாகிய தருண நிலையை அடைந்து கொண்டிருந்தாள். அப்போது இருளைக் கிழித்து நிலவு ஒளி புறப்பட்டது; மாளிகையின் சாளரங்களின் வழியே இன் கதிர் வீறுடன் புகுந்து உள்ளிடத்தே வெம்மையைப் போக்கித் தண்மையை அளித்தது. தூணின் ஒரு புறம் சாய்ந்து நின்று சாளரத்தின் வழியே வெளி முற்றத்தைப் பார்த்துக் கொண்டு, ‘புலவர் வரவை’ ஆவலோடு எதிர்பார்த்திருந்தான் அரசிளங்குமரன். அவன் உள்ளத்தைப் புளகாங்கிதம் அடையச் செய்தது நிலவு. எங்கும் நிலவிய அமைதியானது அவன் மனத்தையும் அமைதி கொள்ளச் செய்தது; அவ்வமைதியிடையே, அவன் மனத்தில் புலவரைப் பற்றிய நினைவலைகள் மோதிக் கொண்டு தான் இருந்தன. ‘புலவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டதா? ஏன் இன்னும் அவர் வரவில்லை? போன இடம் கூடத் தெரியவில்லை; நடு இரவாகி விட்டது; இன்று செய்த முடிவெல்லாம் வீணாகிவிடும் போல் தெரிகிறதே! இன்று தவறினால் நாளை என்ன நேரும் என்று சொல்வதற்கில்லை! இவரைத் தேடிக் கொண்டு நான் எங்கே போவேன்?’ என்று மருண்டு நின்றான். அதற்கு மேல் அவன் அங்கே நிற்க விரும்பவில்லை. சரேலென்று திரும்பினான். அரையில் கச்சையை இறுகக் கட்டிக் கொண்டான்; ஒரு புறம் ஒளி துள்ளுகின்ற வாளைச் செருகிக் கொண்டான்; தூணில் சார்த்தியிருந்த வேலைக் கையிலே எடுத்துக் கொண்டான். மிகுந்த பரபரப்போடு, மாளிகையின் வாயிலை அணுகினான்; வாயிலுக்கு நேராக ஓர் உருவம் வந்து கொண்டிருந்தது; ‘இது புலவரின் உருவம்தானா’ என்று யோசித்துக் கொண்டே கடிதாகச் சென்றான். “நீ எங்கே புறப்பட்டாய் இப்போது?” என்று கேட்டுக் கொண்டே புலவர், அவன் முன் வந்தார். திடுக்கிட்டுச் சிறிது நேரம் நின்றான் மணக்கிள்ளி. “தங்களைத் தேடிக் கொண்டு தான்...” என்று மணக்கிள்ளி கூறுகையில் புலவர் நடந்து கொண்டே, “என்னுடன் வா!” என்று திரும்பினார். சட்டென்று புலவரின் தோள்களைப் பிடித்துக் கொண்டு, “எங்கே?” என்றான். புலவர் அவனைப் பார்த்துக் குறிப்பிட்டார். வாயில் காவலர் அரைத் தூக்கமாக வாயில் தோறும் சாய்ந்து கிடப்பதைக் காட்டி, கையமர்த்தினார். மணக்கிள்ளியின் மனம் அப்போது அமைதி கொள்ளவில்லை. “என்னுடன் வா?...” என்றார். மெள்ள மணக்கிள்ளி மௌனமாகப் புலவரைப் பின் தொடர்ந்தான். புலவர் மிக வேகமாக, வந்த வழியே திரும்பி நடந்தார்; வாயில்கள் பலவற்றையும் கடந்தார். கரிகாலனின் மாளிகையையும் கடந்தாயிற்று; சித்திரை மண்டபத்தையும் கடந்து ஆதியின் கன்னிமாடத்தின் வாயிலை நோக்கி நடந்தார். அப்போது கன்னி மாடத்தின் வாயிலிலிருந்து இரு உருவங்கள், வெளியே சென்றன; அவை வெளி நிலாமுற்றத்தை நோக்கிச் செல்வதை உற்றுப் பார்த்தார்கள் புலவரும் மணக்கிள்ளியும்; தூண் மறைவில் இருவரும் நின்று கொண்டார்கள். புலவர், அவ்வுருவங்கள் போகும் போக்கைக் குறிப்பிட்டு மணக்கிள்ளிக்குக் காட்டினார்; மணக்கிள்ளி வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்; ஆனால், கன்னிமாடத்தின் உட்புறம் யாரோ இரு பெண்கள் பேசிக் கொள்ளும் சப்தமும் சிறிதே அவர்கள் காதுகளுக்குக் கேட்டன; அதனால் கன்னிமாடத்தின் வாயிலைக் கடந்து செல்வதற்கு இருவரும் தயங்கினார்கள்; அதுவரை, வெளியே சென்ற இரு உருவங்கள் எங்கே போகின்றன என்பதை உற்றூப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், புலவரும் மணக்கிள்ளியும். கன்னிமாடத்தின் உட்புறம் பேசிக் கொண்டிருந்த இரு பெண்களும் பேச்சை நிறுத்தி விட்டு, கன்னி மாடத்தை விட்டு வெளி வந்தார்கள்; அவ்விருவரும் வாயிலைக் கடந்து, மெள்ள நடந்து, முன்னே சென்ற இரு உருவங்களையும் பின் தொடர்ந்தார்கள்; அந்தக் காட்சியைக் கண்டு புலவர் திடுக்கிட்டு விட்டார். மணக்கிள்ளியையும் அழைத்துக் கொண்டு, சரேலென்று தூண்களை மறைவிடமாகக் கொண்டு, அவ்விரு பெண்களையும் பின் தொடர்ந்தனர். கன்னிமாடத்தின் வெளி முற்றத்தில், முன்னே சென்ற இரு உருவங்களும் நின்றன. பின் தொடர்ந்த இரு பெண்களும் அவ்வுருவங்களை அணுகின. வெளி முற்றத்தின் வாயிலில், மறைந்து நின்று கொண்ட புலவரும், மணக்கிள்ளியும் நிலா முற்றத்தில் நிற்கும் நால்வரையும் பற்றி ஆராய்ந்தார்கள். “ஆதி... எங்கே இப்படி அந்தரியுடன் வந்து நிற்கிறாய்?” என்று கேட்டார்கள், பின் தொடர்ந்து சென்ற இரு பெண்களும். வெறுப்பும் கோபமும் பயமும் கொண்ட ஆதி, அவ்விரு பெண்களையும் பார்த்து, “உங்களுக்கு என்ன காரியம் இங்கே? வாயிலில் காவல் செய்து நிற்கும் சேடியருக்கு இங்கே என்ன? நான் அழைத்தால் வரலாம்; போங்கள்” என்றாள். சேடியர் இருவரும் திடுக்கிட்டார்கள்; உண்மையில் பயந்து விட்டார்கள். பின்னே அகல நின்று கைகுவித்து வணங்கினார்கள். “ஆதி, கோபம் வேண்டாம்! நள்ளிரவாகி விட்டதே, நாங்களும் வர எண்ணி...” “நான் எங்கே போகிறேன்? நிலவில் இங்கே தானே பொழுது போக்கப் போகிறேன்? நீங்கள் மாடத்தில் போயிருங்கள். என்னைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்! எனக்குத் துணையாக அந்தரி இல்லையா?” என்றாள் ஆதி. “இதோ உன் விருப்பம் போல் போகிறோம்... கோபம் வேண்டாம்; ஆனால், விரைவில் வந்து விடு... வேந்தர் எங்களுக்குக் கடுந்தண்டனை விதித்து விடுவாரே என்று தான் பயப்பட்டு வந்தோம்” என்று கூறிவிட்டு இரு பெண்களும் வெளி முற்றத்தை விட்டுக் கன்னிமாடத்தை நோக்கிச் சென்றார்கள். போகும் போது அவர்கள் மறைந்து நிற்கும் புலவரையும் மணக்கிள்ளியையும் பார்க்கவில்லை. மிக வேகமாகக் கோபத்தோடு கன்னிமாடத்திற்குள் சென்று விட்டனர், இரு பெண்களும். “அந்தரி எங்கே வந்தாள் இன்று? மாயக்காரியான அந்தரியின் நட்பு இவளுக்கு ஏன்? இவ்வளவு நாள் இல்லாமல் இன்று நம்மிடம் ஏன் கோபம் இவளுக்கு? எல்லாம் அத்தியின் பிரிவால் ஏற்பட்டதாகத் தான் இருக்க வேண்டும். பொழுது புலர்ந்தால் என்ன நடக்குமோ என்று கவலைப்படுகிறாள் போலிருக்கிறது...” என்று தமக்குள் பேசிக் கொண்டே அப்பெண்கள் இருவரும் கன்னிமாடத்தின் உட்புறம் போய் மறைந்த பின், வெளி வந்தனர், புலவரும் மணக்கிள்ளியும். அந்தரியுடன் ஆதி நிலா முற்றத்தைக் கடந்து இலவந்திகைச் சோலை வழியே போவதைக் கண்டனர். மிக லாவகமாக, அவ்விருவரையும் பின் தொடர்ந்து சென்றனர் புலவரும் மணக்கிள்ளியும். இலவந்திகைச் சோலைக்குள் அவ்விருவரும் புகுந்தனர். “ஆதி!...” என்று மெள்ள அழைத்தார் நடந்து கொண்டே, திடுக்கிட்டுப் பின்னே பார்த்தாள் ஆதி. அந்தரியும் பிரமையுடன் பார்த்தாள். புலவரும் மணக்கிள்ளியும் பின் தொடர்ந்து வந்து நிற்பதைக் கண்ட அவ்விருவரும் ஒரு கணம் பேச நா எழாமல் நின்றனர். “ஆதி, நீ விரைவில் புறப்படு; மறுபடியும் அந்தச் சேடியர் வருவார்கள்...” என்று கூறிவிட்டுப் புலவர் இலவந்திகைச் சோலையின் மதிள் பக்கம் சென்றார். அவர் சென்றவுடனே, அவ்விடம் மறைந்து நின்ற மல்லர்கள், புலவர் முன் வந்து தலை வணங்கினார்கள். “ஆதி...” என்றார் புலவர். அந்தரியுடன் ஆதி முன் வந்தாள்; மணக்கிள்ளி வியப்போடு புலவரின் உபாயத்தைக் கண்டு பேசாமல் நின்றான். மல்லர்கள் மர நிழலில் நிறுத்தியிருந்த பல்லக்கை முன் கொணர்ந்தனர். “ஆதி, நீ அந்தரியுடன் இப்பல்லக்கில் ஏறிப் போய் காவிரிக் கரையில் இரு!” என்றார். ஆதி சிறிதே தயக்கத்தோடு நின்றாள். “நான் போய் என்ன செய்வது? நள்ளிரவாயிற்றே!... தாங்களும் வாருங்கள்...” “நீ சென்ற சிறிது நாழிகையில் நான் வந்து விடுவேன். உன் வரவை எதிர் பார்த்துக் கொண்டு அங்கே பெருவிறற்கிள்ளி இருக்கிறான். உனக்குக் கவலை இனி வேண்டாம்...” “அவர்!...” “அங்கே சந்தித்துக் கொள்ளலாம். விரைவில் புறப்படு. நானும் மணக்கிள்ளியும் மேல் நடக்க வேண்டியதைச் செய்யப் போக வேண்டும்.” அதற்கு மேல் ஆதி பேசவில்லை. தயக்கத்தோடு புலவரையும், மணக்கிள்ளியையும் பார்த்தாள். “மணக்கிள்ளி, நான் புறப்பட்டு விட்டேன்; எல்லாம் உன்னுடைய பொறுப்பு. என்னுடைய விருப்பத்தை...” “புறப்படு... இங்கே பேசுவதே... தவறு!” ஆதி, அந்தரியுடன் பல்லக்கில் ஏறி அமர்ந்து கொண்டாள். மறுகணமே, பல்லக்குப் புறப்பட்டது; மல்லர்கள், புலவரின் கட்டளைப்படி இலவந்திகைச் சோலையின் சந்து வழியே காவிரிக் கரை நோக்கிப் பல்லக்கைக் கொண்டு சென்றார்கள். பல்லக்கு, மெள்ள மெள்ள, கடுகிச் சென்று, மறைந்தது. பல்லக்கின் உருவம் மறையும் வரை அங்கேயே நின்று பார்த்தனர் புலவரும் மணக்கிள்ளியும்; அதன் உருவம் கண்களுக்குப் புலனாகாமல் மறைந்த அளவிலே, அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கன்னிமாடத்தின் வாயிலைக் கடந்து, அரண்மனைக்குள் புகுந்தார்கள். காவலர் ஆங்காங்கே, அரைத் தூக்கத்திலே மயங்கிக் கிடந்தார்கள். எங்கும் அமைதி குடி கொண்டு விளங்கியது. புலவர் மணக்கிள்ளியுடன் சிறைக் கோட்டம் நோக்கிச் சென்றார்; ஒரு புறம் இருளும், ஒரு புறம் நிலவும் கலந்த சிறு சந்து வழியே சிறைக் கோட்டம் நோக்கிப் போனார்கள். வாழ்வு முழுவதும் தண்டனை பெற்றவர்கள், செத்து வாழ்கின்ற சிறைக் கோட்டத்தையே அவ்விருவரும் அடைந்தனர். சிறைக்கோட்டத்தின் வெளி மதிளில் காணப்பட்ட சிறிய வாயிலில் இரு வீரர் கண்ணுறங்காமல் வேலைக் கையில் ஏந்தி மிடுக்குடன் நின்றார்கள். அண்ணாந்து பார்க்கவும் முடியாத வகையில், மேலோங்கியிருந்தது மதிள் இருபுறமும். அத்தகைய பெரிய மதிளுக்குள் சிறிய வாயில் காணப்பட்டது. ஒருவர் புகுந்து போகும் அளவுக்கே, வழி இருந்தது. அவ்வழிக்கு, இரு வீரர்கள் காவல் புரிந்தனர் என்றால் வியப்பு அல்லவா? வேல், மின்னலிடுகிறது நிலவூடே! அவர்களின் ஆஜானுபாகுவான தோற்றம் மதிள்சுவர் மீதே தெரிகிறது. இரவு முற்றும் எப்போதும் இருவரும் சிறிதும் கண் உறங்குவதில்லை. வேல்களால் பிணைக்கப் பெற்ற கதவு தாழுடன், அச்சிறுவாயிலில் அமைந்திருந்தது. அதன் வழியே அடிக்கடி அவ்விருவரும், உள்ளே அடைப்புண்டவரைப் பார்த்துக் கொள்கிறார்கள். இந்நிலையில், அந்தச் சிறை கோட்டத்தை, புலவரும் மணக்கிள்ளியும் அணுகினார்கள். சிறைவாயிலை இருவரும் அணுகும் போதே, வாயில் காவலரான இருவரும் பார்த்து விட்டார்கள். அவ்விருவரும், வருபவர் யார் என்பதை அறியாமலில்லை; காவலரின் அருகில் இருவரும் வந்து நின்றார்கள். கைக்கொண்ட வேலுடன் இருவரும் இருவரை வணங்கினார்கள். அரசிளங்குமரனான மணக்கிள்ளியின் முன் நிற்பதற்கும் அஞ்சி அகன்று நின்றார்கள். காரணம் இல்லாமல், அக்காவலர் இருவரும் நடுங்கினார்கள்; மணக்கிள்ளி புலவரைப் பார்த்தான். “இனி, மேலே செய்ய வேண்டியது...” என்றான். “மன்னவ குமாரருக்கு, அடியோம் ஒரு வார்த்தை!” என்று பேசத் தொடங்கினார்கள் காவலர் இருவரும். “அடே, உங்களுக்குத்தான் நான் முன்பே சொல்லி விட்டேனே! இனி ஒன்றும் பேச வேண்டாம்; எல்லாம் தெரியும்... உங்களுக்குக் கேடு எதுவும் நேராத வகையில் நான் பார்த்துக் கொள்கிறேன்...” என்றார் புலவர். மணக்கிள்ளி ஒன்றும் தோன்றாமல் விழித்தவன் புலவரைப் பார்த்துப் புன்னகையுடன், “நீங்கள், முன்னிரவில் இங்கு வந்து எனக்குத் தெரியாமலே ஏற்பாடு செய்து விட்டீர்களே!” என்றான். “ஒருவனே செய்யக் கூடிய காரியமும் இருக்கிறது; இருவர் சேர்ந்து செய்ய வேண்டிய காரியமும் உண்டு” என்றார் புலவர். மணக்கிள்ளி மிகுந்த குதூகலத்தோடு புலவரைப் பார்த்தான். “இனி, வேறு காரியம் ஏது? இவ்விருவர்களுக்கும் இதோ சம்மானம் இருக்கிறது...” என்று இரு முத்து மாலைகளைக் கழற்றி இருவரிடமும் கொடுத்தான். “உங்கள் இருவருக்கும் கெடுதல் உண்டாகாதபடி பார்த்துக் கொள்கிறோம்; எல்லாம் நன்மைக்குத்தான்! ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது இன்னும் இருக்கிறது...” என்று புலவரைப் பார்த்தான். புலவர், வீரர் இருவரையும் அருகில் அழைத்துக் கூறினார்: “நாங்கள் அத்தியை அழைத்துப் போன பின்பு, - விடியும் தருணம் நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும்; விடியற்போதில், ஒரு வீரர் கூட்டம், உங்களைத் தாக்கி தள்ளிவிட்டு, அத்தியை மீட்டுச் சென்றதாக உடனே நீங்கள் செய்தியை அரசனிடம் உணர்த்த வேண்டும்; அதற்கு மேல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; உண்மையை எந்தக் காரணத்துக்காகவும் சொல்வீர்களாயின் உங்கள் உயிர்...” என்றார். “இல்லை! இல்லை! தங்கள் கட்டளைப்படியே செய்கிறோம்; அடியேமைக் காப்பாற்ற வேண்டும்; ஆனால் உள்ளே யவன நாட்டு வீரன்...” என்றனர் காவலர். “நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; அவனுக்கு இப்போதே வீர சுவர்க்கம் கிட்டிவிடும்.” “காரியம் முடிந்த பின் உங்களுக்கு வேண்டிய சம்மானம் கிடைக்கும். உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று மணக்கிள்ளி கூறினான். அடுத்த கணம், புலவர் சிறைவாயிலில் கதவை தாழ் தெறித்து விட்டார்; கதவைத் தள்ளினார். மணக்கிள்ளியும் பின் தொடர்ந்தான். காவலர் உள்ளமும் உடலும் ஒருங்கே நடுங்க நின்றார்கள். சிறைக் கதவுகள் திறக்கப்பட்டதும், புலவர் உள்ளே புகுந்தார்; மணக்கிள்ளி துணிவுடன் முன்னே பாய்ந்தான். உள்ளே வெளி முற்றத்திற்கு அடுத்தாற் போல் சுற்றிலும் வேல் வேலி சூழ்ந்த ஒரு மாடத்தின் வாயிலில், ஒரு வீரன் நின்று கொண்டிருந்தான். ஆம்! - அவன் யவன நாட்டு வீரன் தான்! - அரசனின் கட்டளையை அச்செனக் கொண்டு அசையாமல் நிற்கும் வீரன்! - கல் நெஞ்சம் படைத்தவன்; யார் கூறினும், என்ன நேரினும், உயிர் இழக்க நேர்ந்தாலும், தான் கொண்ட கடமையில் தவறாதவன்; யவன நாட்டு வீரன் ஒவ்வொருவனும் அத்தகையவன்! அவ்வுண்மையை உணர்ந்தே, தமிழ் நாட்டின் முடி மன்னன் கரிகாலன் அரண்மனையில், யவன வீரர்களை நம்பிக்கைக்கு உரியவராக மதித்துப் பல இடங்களில் காவலராக நியமித்தான். ஆகவே அவன் நிலையைக் கண்டு, இரும்பிடர்த்தலையாரும், மணக்கிள்ளியும் கலங்கினார்கள் என்றால் மிகையாகாது. அரசனே என்றாலும் நெறி தவறினால் அதற்கு மனம் ஒப்பாத குணம் படைத்தவன் அவன்! புலவர், மணக்கிள்ளியைப் பிடித்து நிறுத்தி, “முதலில், அவனிட்ம நீ எதுவும் பேசாதே! - முதலிலேயே, அவன் மார்பில் வாளைச் செருகி விடு” என்றார். மணக்கிள்ளி, மிக வேகமாக வேல் வேலியை நோக்கிச் சென்றான்; ‘சிறைக்கோட்டத்திற்குள் நள்ளிரவில் எவன் வருகிறான்?’ என்று நின்றபடியே பார்த்தான் யவன வீரன். அவனுக்குத் தமிழ் மொழி தெரியாதாகையால் எதுவும் பேசவில்லை. அவனுடைய பாஷையிலே அவன் ஏதோ இரைந்து கூவினான். ஆனால் மறு கணமே, அவன் மணக்கிள்ளி மீது பாய்ந்து விட்டான். அவன் பாய்ந்து நிற்கு முன், மணக்கிள்ளியின் கை வாள் முன் நின்று, யவன வீரனின் மார்பில் பாய்ந்தது. ‘ஆ’ என்று கூவி யவன வீரன் நிலத்தில் சாய்ந்தான். நிலத்தில் சாய்ந்தவுடன், அவன் மார்பிலிருந்து வாளை வாங்கிக் கொண்டான் மணக்கிள்ளி. யவன வீரனின் கூக்குரலைக் கேட்டு, வேல் வேலி சூழ்ந்த மாடத்தின் வாயிலில் நிலவொளியில் ‘அத்தி’ காட்சியளித்தான். அத்தியின் காட்சியைக் கண்டு புலவரும் மணக்கிள்ளியும் முன்னே நடந்தார்கள். “அத்தி!” என்று புலவர் கூறுகையில், அவன் வேல் வேலியைக் கடந்து அவர் முன் வந்து சேர்ந்தான். ஆதூரத்தோடு மணக்கிள்ளி அவனை இறுகத் தழுவிக் கொண்டான். உடனே அத்தியுடன் புலவரும் மணக்கிள்ளியும் விரைந்து வெளிக் கிளம்பினார்கள். |