(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

24. ‘செய்தி பரவியது’

     இலவந்திகைச் சோலை வழியே அந்தரியின் பல்லக்குச் சென்றது. நள்ளென்ற நடுயாமமும் சென்று தேய்ந்தது. பின் யாமத்தின் குளிர்காற்று சோலையில் பரவி வீசியது. நடுயாமத்தின் அமைதி கலைந்ததால், சோலையில் மரம், செடி, கொடிகள் அசைந்து நெளிந்து கலகலப்புற்றன; சிறு துயில் கொண்ட பறவையினங்களும், மென்மெலக் கூவி தம் இனங்களை ஒன்று சேர்க்க முயன்றன. பறவையினங்களின் இன்பக் குரலும் குளிர் காற்றின் இயக்கமும், மரம் செடி கொடிகளின் அசைவும், விடியல் வெள்ளியின் உதயத்தை முன்னதாக அறிவுறுத்தின என்றே சொல்லலாம். விடியல் வெள்ளியின் உதயத்திற்கு முன்பே, பல்லக்கு கன்னிமாடத்தின் வெளிவாயில் மதிள்புறத்தை அடைந்து விட்டது.

     மதிள்புறத்தை அடைந்ததுதான் தருணம்: - உடனே பல்லக்கை விட்டுப் பரபரப்போடு வெளிவந்தாள் அந்தரி. அவள் நிலவு மிளிர்கின்ற வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். வெள்ளியின் உதயத்தையும் கீழ் வானத்தே கண்டாள். மனம் கலங்கி உடல் பதைக்க மல்லர்களைப் பார்த்தாள்.

     “விரைவில் போய்விடுங்கள்!” என்று கூறியவள், கன்னிமாடத்திற்குள் இருந்து யாரோ பேசுவதையும் கேட்டாள்.

     “இதோ போய் விட்டோம். உன் காரியத்தைப் பார்” என்று சொல்லி விட்டுச் சோலைக்குள் பல்லக்குடன் மறைந்தனர் மல்லர்கள்.

     அவர்கள் போன பின்பு ஒரு கணம், பிரமிப்போடு நின்றாள் அந்தரி. அவள் மனம் பயத்தால் அலைமோதிக் கொண்டிருந்தது. ‘இனி, நான் செய்ய வேண்டியது என்ன? சேடியர்களுக்கு என்ன சொல்வது? புலவர் சொல்லியபடி சொல்லிவிட வேண்டியதுதான்! வேறு உபாயம் இல்லை!’ என்று தனக்குள் உறுதி செய்து கொண்டாள்.

     மதிள் வாயிலைக் கடந்து கன்னிமாடத்திற்குள் புகுந்தாள். கன்னிமாடத்தின் வெளி வாயிலில் யாரும் இல்லை; மாடத்தினுள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது. ‘வேறு யார் பேசப் போகிறார்கள்? அந்தச் சேடியர்களாகத்தான் இருக்க வேண்டும்’ என்று உறுதி செய்து கொண்டு கன்னிமாடத்திற்குள் புகுந்தாள்.

     மாடத்தின் உள்வாயிலில் இரு பெண்கள் பேசிக் கொண்டு நின்றார்கள்; அவ்விருவருக்கும் சிறிதே அணிமையில் வேறு சில சேடியரும் நின்று கொண்டிருந்தார்கள்; அவ்விடத்தில் அந்தரி பரபரப்போடு புகுந்தாள். அந்தரியின் வருகையைக் கண்டு, அங்கே நின்ற சேடியர் திடுக்கிட்டார்கள்; அவளுடன் ஆதியைக் காணாததால் மனம் மருண்டு அந்தரியைப் பார்த்தார்கள்.

     “அந்தரி... ஆதி எங்கே?” என்று கேட்டபடியே அந்தச் சேடியர் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள்.

     இரு கைகளையும் கன்னங்களின் கதுப்பில் வைத்துக் கொண்டு மௌனமாக நின்றாள் அந்தரி. சேடியர்கள் முன்னிலும் மிகுதியாகக் கலங்கினார்கள். அந்தரியின் தலையை நிமிர்த்தி, அவள் முகத்தை உற்றுப் பார்த்தார்கள். அவள் கண்கள் அச்சத்தால் மருண்டு விழித்தன.

     “நான் என்ன செய்வேன்? ஆதியின் பேச்சைக் கேட்டு, சோலையில் நிலாவில் விளையாடிக் கொண்டிருந்தேன்... எங்கிருந்தோ...” என்பதற்குள் அந்தரியின் தோள்களை இறுகப் பிடித்துக் கொண்டு “என்ன? என்ன நேர்ந்தது... ஆதி?” என்று கூக்குரலிட்டார்கள் சேடியர்.

     “என்னவென்று சொல்வேன்? எங்கிருந்தோ தெரியவில்லை? எந்தத் திக்கிலிருந்து அந்தக் கள்வர் வந்தார்கள் என்று தெரியவில்லை! என் முன் நாட்டியமாடிக் கொண்டிருந்த ஆதியைத் தூக்கிச் சென்றார்கள் - ஓடினார்கள்; நானும் பின் தொடர்ந்து ஓடினேன் -”

     “ஐயோ! ஆதியைத் தூக்கிச் சென்றார்களா? கேடு வந்து விட்டதே! நீ ஏன் திரும்பி விட்டாய்?” என்று ஆரவாரத்துடன் கேட்டார்கள்.

     “ஓடினேன், இலவந்திகைச் சோலை வழியே. அவர்கள் கன வேகத்துடன் ஓடி விட்டார்கள்; காவிரிக்கரை வரை நானும் ஓடினேன்; ஆனால், காவிரிக்கரை வழியே மேற்குத் திக்கு நோக்கி அவர்கள் போய் விட்டார்கள்; நான் என்ன செய்வேன்? இப்போதே அரசரிடம் தெரிவிக்க வேண்டும்... மிக வேகமாக ஓடி வந்தேன்...” என்று அந்தரி, உணர்ச்சி நிறைந்த குரலில் முறையிட்டாள்.

     “ஆதியைப் பறி கொடுப்பதற்காக, நிலா விளையாட்டிற்குப் போயிருந்தாயா? அவளை இழந்து வந்து விட்டாயே! அரசரின் கோபத்திற்கு எங்களை ஆளாக்கி விட்டாயே! என்ன தண்டனை விதிப்பாரோ? என்ன செய்வது இனி? வா, விரைவில் அரசரிடம் சொல்வோம்...” என்று சொல்லி கொண்டே கன்னிமாடக் காவல் கன்னிகைகளான, சேடியரும் அந்தரியும் அரசனின் அரண்மனை நோக்கி ஓடினார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து மற்றச் சேடியரும் ஓடினார்கள் மனம் கலங்கி.

     அரசனின் அரண்மனையை அடைந்தனர்; வாயில் காவலர் இடைமறித்து, “எங்கே இப்போது போகிறீர்கள்? அரசர் பள்ளியை விட்டு எழவில்லை இன்னும்” என்றனர்.

     “பெருங் கேடு வந்து விட்டது. ஐயா! விரைவில் அரசருக்கு எங்கள் வரவை உணர்த்துங்கள்” என்று பதற்றத்தோடு வார்த்தைகளை வெளியிட்டார்கள். அவர்கள் உடல் நடுக்கத்தையும், பதற்ற வார்த்தைகளையும் கேட்ட வாயில் காவலர் திடுக்கிட்டார்கள்.

     “அப்படி என்ன? செய்தியைச் சொல்லுங்கள்; அரசரை இப்போது பார்க்க முடியாது; உள்ளே யாரும் புக முடியாது. நீங்கள் செய்தியைச் சொன்னால் தெரிந்து ஆவனவற்றைச் செய்கிறோம்; பெருங்கேடு என்ன நேர்ந்தது?”

     “மன்னவர் குமரி, ஆதியைக் களவர் கூட்டம் கவர்ந்து சென்றதாகச் சொல்ல வேண்டும்; விரைவில் தெரிவியுங்கள்; கன்னிமாடத்துச் சேடியர் வந்திருப்பதாக உணர்த்துங்கள் ஐயா...! இன்னும் ஏன் நிற்கிறீர்கள்?”

     “ஆ! அப்படியா?” என்று சொல்லி விட்டு, அவர்கள் பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த மணியின் பக்கம் இரு காவலரும் பாய்ந்து ஓடினார்கள். பெருங்கேடு எது நேர்ந்தாலும், உடனே அரசனுக்குத் தெரிவிப்பதற்காகத் தொங்கவிடப்பட்ட மணி அது. அம்மணியை, மிக வேகமாக அசைத்தார்கள் காவலர். “டணார் டணார் டணார்” என்று அம்மணியின் நாதம் இடியொலியெனக் கேட்டது. அம்மணியின் ஒலி, அச்சமயம் கேட்டவுடன் அரண்மனையெங்கும் ஒரே ஆரவாரம் உண்டாயிற்று. பள்ளியறையில் அயர்ந்து உறங்கிய கரிகாலன் திடுக்கிட்டு எழுந்தான்; அரையில் செருகிய வாளைக் கையில் எடுத்துக் கொண்டு, மணியொலி கேட்ட இடத்தை நோக்கிப் பாய்ந்து வந்தான்; அங்கே காவலர் இருவரும், கன்னி மாடத்துச் சேடியரும் நின்று கொண்டிருந்தார்கள்; இருதயப் பதற்றத்தோடு, “ஏன்? என்ன நேர்ந்தது?” என்று கம்பீரத் தொனியில் கேட்டவாறே சிங்கவேறு போல் கடுகி வந்தான் கரிகாலன். அவனை நோக்கிக் கைகுவித்து நின்றார்கள் காவலர். சேடியரும் அந்தரியும் கைகுவித்து வணங்கிவிட்டு, அரசனைப் பார்ப்பதற்கும் அஞ்சியவர்களாய், நாக் குழறச் சொன்னார்கள்.

     “ஆதியைக் கள்வர் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள்...” - அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் கரிகாலன் தூக்கியெறியப்பட்டவன் போல் ஆனான்.

     “ஆ!” என்றான். அவனால் பேச முடியவில்லை; கண்களும் கருத்தும் சுழன்றன.

     “இது உண்மையா?” என்று கேட்டுத் துயர உணர்ச்சியால் இருதயம் பிளந்து விடுபவன் போல் நிலைத்து நின்றான்; ஏன்? அவன் இருதயம் வெடித்து விடும் போலிருந்தது என்பது உண்மைதானே!

     “கன்னிமாடத்தின் வெளிமுற்றத்தில் இலவந்திகைச் சோலையில், நிலாவில் விளையாடிக் கொண்டிருந்தாள்...”

     “எப்போது?”

     “நள்ளிரவிலேயே விளையாடப் போனாள்! அந்தரியுடன் விளையாடினாள்...”

     கரிகாலன் திடுக்கிட்டான்; அவன் பார்வை அந்தரி மீதே சென்றது.

     “அந்தரி! நீ விளையாடிக் கொண்டிருந்தாயா?”

     “ஆம்... விளையாடுகையில் எந்தத் திக்கிலிருந்து வந்தார்கள் என்று சொல்ல முடியவில்லை; ஒரு கூட்டம் வந்தது; சரேலென்று ஆதியைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். சோலை வழியே, நானும் பின் தொடர்ந்தேன்...”

     “எந்தப் பக்கம் போனார்கள்?”

     “காவிரிக் கரை வரை நான் ஓடினேன்; அதற்கு மேல், அவர்கள் மேற்கு நோக்கிக் காவிரிக்கரை வழியே ஓடி விட்டார்கள். என்னால் அவர்களைப் பின் தொடர முடியவில்லை...”

     “அவர்கள் ஓடியதைக் காவலர் யாரும் அறியார்களா?”

     “சோலை வழியே ஓடி விட்டார்கள்! யாரும் அறியார்கள்!”

     “தூக்கிச் சென்ற போது ஆதி... எதுவும் பேசவில்லையா?”

     “இல்லை!”

     “ஆ! நான் ஏமாற்றம் அடைந்து விட்டேன்; அவள்...” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். மறுகணமே அவன் கடுங்கோபத்தை அடைந்தான்; சோர்வுற்ற அவன் உள்ளம் சீறி எழுந்தது. தளர்வுற்ற அவன் உடலம் திமிர்வுற்றது. கோபப் புன்னகை அவன் முகத்தில் நெளிந்தது. கை வாளை உறையில் செருகிக் கொண்டான்.

     “ஆதியைத் தூக்கிச் சென்றவர் யார்? காரணம் என்ன? அத்தி சிறையில் கிடக்கிறான்! வேறு யார் இதைச் செய்ய முடியும்? ஆதியைக் கவர்ந்த கள்வர்களை இன்னும் ஐந்து நாழிகைப் போதில் அறிகிறேன்! நீங்கள் போங்கள் உங்களிடத்திற்கு? அடே, மணக்கிள்ளியை ஓடிச் சென்று அழைத்து வா? புலவரும் இருப்பார், அவரையும் அழைத்து வா” என்று கட்டளையிட்டான் இதழ் துடிக்க.

     “ஆதி கள்வரால் கவரப்பட்டாள்; இது என்ன விசித்திரம்?” என்று கூறிக் கொண்டான்.

     காவலன் ஓடினான் மணக்கிள்ளியின் மாளிகையை நோக்கி. சேடியர் திரும்பிச் சென்றனர் நடுக்கத்தோடு, அதற்கு அடுத்த கணமே, வீரர் கூட்டத்தோடு, சிறைக் கோட்டத் தலைவன் நாங்கூர்வேள் ஓடி வந்தான். கடுகி நடந்து வரும் நாங்கூர்வேளைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்து நோக்கினான் கரிகாலன். அம்பெனக் கடிதாக வந்தான் அவன். வந்தவுடனே கரிகாலன் பொருமுகின்ற உள்ளத்தோடு. ‘நாங்கூர் வேள்!’ என்றான். கரிகாலன் கலங்கி நிற்பதை முதலில் எதிர்பாராத வகையில் கண்ட அவன், அரசனின் குரலைக் கேட்டவுடன் முன்னிலும் அதிகமாகத் துணுக்குற்றான். கரிகாலனை அணுகி வணங்கி நின்றான்.

     “நீ எங்கே இப்படி வந்திருக்கிறாய்? காரியம் எதுவும் உண்டா?” என்றான் கரிகாலன் அவனை நோக்கி.

     நாங்கூர் வேள், தான் சொல்லவந்த செய்தியை எப்படிச் சொல்வதென்று கலங்கி நின்றான். நான் சொல்லப் போகும் செய்தி முன்னதாகக் கரிகாலனுக்குத் தெரிந்து தான், இப்படி அவன் பிரமித்து நிற்கிறானோ என்றும் சந்தேகம் கொண்டான். எனினும் கரிகாலன் கேட்ட கேள்விக்குப் பின் மறுமொழி சொல்லாமல் அவன் நிற்க முடியுமா?

     “சிறையிலிருந்து அத்தி நள்ளிரவில் தப்பி ஓடி விட்டான்! ஒரு கள்வர் கூட்டம் இவ்விதம் அவனைச் சிறையிலிருந்து மீட்டுச் சென்று விட்டதாக...”

     இடிக்கு மேல் இடியாக இருந்தது கரிகாலனுக்கு.

     “அத்தி ஓடி விட்டானா?-” என்றான்; ஆதி தூக்கிச் செல்லப்பட்டதற்குக் காரணத்தை அப்போது தான் கரிகாலன் அறிந்தான். நெருப்புப் பொறி கக்கின, அவன் கண்கள். உள்ளமும் உடலும் துடித்தன அவனுக்கு.

     “அத்தி ஓடி விட்டானா? - அவன் மட்டுமல்ல, ஆதியும் கொண்டு போகப் பட்டாள். ஆதியை அந்தக் கள்வன், யாருடைய உதவியால் கொண்டு சென்றான்? அவன் சிறையிலிருந்து தப்பியது எப்படி? இனி சிறை சிறையாகுமா? வேள், இது என்ன பேச்சு? அவன் சிறைக்காவலை விட்டு எப்படித் தப்பினான்? காவல் இல்லையா அங்கு? யவன வீரனின் காவல் என்ன ஆயிற்று? மற்ற வீரர்கள் என்ன ஆனார்கள்? என் ஆட்சி மிக நன்றாக இருக்கிறது! கள்வர் கூட்டம் இதுவரை நம் நகரில் உண்டா? நம் அரண்மனைக்குள் புகும் கள்வர் உண்டா! இல்லை! இதில் ஏதோ சூழ்ச்சி! அந்தக் கள்வன் அத்திக்குத் துணை புரிந்த கள்வர் யார் என்று கண்டு பிடிக்க வேண்டும்? அந்தக் கள்வர் ஆதியை எங்கே கொண்டு போக முடியும்? அவன் நாட்டை அவன் அடைவதற்குள் சிறைப் பிடித்து விட வேண்டும்; கன்னி மாடத்தின் புறமும், சிறைக் கோட்டத்திற்குள்ளும் புகும் கள்வரும் உண்டோ? என்ன விசித்திரம்? இந்தக் காரியத்தைத் துணிந்து செய்தவர் யார்? சிறைக்காவலர் எங்கே?” என்று சீறி விழுந்தான் கரிகாலன்.

     நாங்கூர் வேள் அச்சத்தால் அலைப்புண்டான்; ‘ஆதியும் தூக்கிச் சொல்லப்பட்டாள் என்ற பிதற்றலைக் கேட்டதும் அவன் திடுக்கிட்டான். இந்தக் காரியங்கள் ஒற்றுமையாக நடந்திருக்கின்றனவே!’ என்று வியப்புற்றான்.

     “வேந்தே! சிறைக் காவலர் இதோ இருக்கிறார்கள்! இவர்கள் மீது குற்றம் இல்லை; யாரோ பலர் கூடிச் செய்த காரியமாக இருக்கிறது இது! உள்ளே காவல் புரிந்த யவன வீரன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். வெளி மதில்புறம் காவல் புரிந்த இக்காவலர் தாக்கப்பட்டு மூர்ச்சையடைந் திருக்கிறார்கள்! அச்சமயமே, நள்ளிரவு! விடிய ஒரு நாழிகை முன்பு தான் இவர்கள், மூர்ச்சை தெளிந்து என்னிடம் ஓடி வந்து செய்தியைச் சொன்னார்கள். நான் சிறைக்கோட்டம் சென்று பார்த்தேன். யவன வீரன் மாண்டு கிடந்தான்; உடனே தங்களிடம் ஓடி வந்தேன். ஆதி கொண்டு போகப்பட்டது இப்படித்தான் நடந்திருக்கும்! எல்லாம் ஒற்றுமையாக இருக்கின்றன. இப்போதே இந்தக் காரியத்தில் ஈடுபட்ட கள்வர்களைக் கண்டு பிடித்து விட வேண்டும். ஓடிச் சென்ற அத்தி, ஆதியுடன், அவன் நகருக்கு ஓடியிருப்பான். இப்போதே அவனைப் பின் தொடர்ந்தால்...” என்று நாங்கூர்வேள் உணர்ச்சியோடு பேசினான். அவன் பேச்சைக் கேட்டுக் கரிகாலன் உணர்ச்சி மிகுந்த குரலில் கூறினான்.

     “வேள்! - யவன வீரன் கொலை செய்யப்பட்டது சாமான்யமன்று; நடந்திருக்கும் காரியம் மிக ஒற்றுமையாக நடந்திருக்கின்றன. ஆனால் இதற்கு ஒற்றுமையாக இருந்தவர்கள், நம் அரண்மனையில் உள்ளவர்களே தான்! - அவர்கள் யார் யார் என்று அறிய வேண்டும்... புலவர் நேற்றிரவு பேசி விட்டு போனதற்கும் இரவு நடந்திருப்பதற்கும் மிகவும் வேறுபாடு இருக்கிறது! சிறைக் காவலர் எங்கே?” என்று கேட்டான் கரிகாலன்.

     “இதோ, இவர்கள் தான்!” என்று சுட்டிக் காட்டினான் நாங்கூர்வேள். சிறைக்காவலர் இருவரும் உடல் நடுங்க அரசனை நோக்கி நின்றார்கள்.

     “அடே, நீங்கள் தாக்கப்பட்டீர்களா?-” என்றான் கரிகாலன்.

     “ஆம்! வேந்தே! எதிர்பாராதபடி மின்னலெனத் தோன்றித் தாக்கி மூர்ச்சையடையும் படிச் செய்து விட்டார்கள்; அவர்கள் எங்களைத் தாக்கியதுதான் தெரியும். அப்புறம், தெளிந்த பின் உள்ளே புகுந்து பார்த்தோம். யவன வீரன் இறந்து கிடந்தான்; அத்தியைக் காணவில்லை... வேறு ஒன்றும் அறியோம்; உடனே...”

     “இருக்கட்டும்; எவ்வளவு பேர் வந்தவர்கள்? அவர்கள் யாராக இருக்கலாம் தெரிந்து கொண்டீர்களா?”

     “வேந்தே, தெரியவில்லை எங்களுக்கு! அவர்கள் பதின்மருக்கு மேல் இருப்பார்கள்! வேறு ஒன்றும்...”

     “போங்கள்...” என்றான்; இருவரும், தலை தப்பியது என்று அகலப் போனார்கள்.

     “வேள்... அந்தக் கள்வர் யார் என்பதை முதலில் அறிய வேண்டும்...” என்று பெருமூச்சு விட்டான், கரிகாலன்.

     “நான் எப்படியும்...” என்று நாங்கூர்வேள் கூறுகையில் புலவர், மணக்கிள்ளி, பெருவிறற்கிள்ளி மூவரும் அங்கே வந்து கொண்டிருப்பதைக் கண்டான் கரிகாலன். உடனே அவன் மனத்தில் இருந்த சந்தேகம் நீங்கியது.

     “வேள், அதோ புலவர், கிள்ளிகள் மூவரும் வருகிறார்கள்! என் மனத்திலிருந்த சந்தேகம் அகன்றது. புலவர் செய்த காரியமோ என்று எண்ணினேன்; ஆனால் அதோ வந்து விட்டார் புலவர்; ஆகவே, அத்தியின் சார்பாக அவனைச் சேர்ந்த கூட்டம் ஒன்று இவ்வரண்மனைக்குள் பதுங்கியிருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது; இனி யோசனை செய்வானேன்? பெரும்படையுடன் அத்தியைப் பின் தொடர்ந்து போவதே இனி, செய்ய வேண்டியது. அவன் தொண்டி நகர் போய்க் கொண்டிருப்பான்...” என்று கூறிக் கொண்டிருக்கையில் புலவர் முதலிய மூவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.

     “கரிகால்! என்ன விசேஷம்? கேட்டை உணர்த்தும் மணியொலி கேட்டது! அதற்கு அடுத்தாற் போல் அழைப்பு வந்தது!” என்றார் புலவர் வியப்புடன். அவர் உள்ளத்தின் மாயத்தை அவன் அறிய முடியுமா? நாங்கூர்வேள் அதிசயத்தோடு பார்த்து நின்றான்.

     “புலவரே ஏமாற்றம் அடைந்தேன்! நீரும் ஏமாற்றம் அடைந்தீர். இப்போது செய்ய வேண்டியது, பெரும்படையுடன் தொண்டி நகர் நோக்கிப் போருக்குப் புறப்பட வேண்டும்.”

     “என்ன நடந்து விட்டது?” என்று புலவரும் அரசிளங்குமரர் இருவரும் சேர்ந்து கேட்டனர்.

     “ஆதியும், அத்தியும் நேற்றிரவு ஓடி விட்டார்கள். ஆதியை அத்தி கொண்டு போய் விட்டான்! அவனுக்கு யாரோ உதவியை செய்திருக்கிறார்கள்; அத்தியைச் சிறைக் கோட்டத்திலிருந்து விடுதலை செய்து கொண்டு போனதுடன் ஆதியைக் கன்னிமாடத்திலிருந்தும் தூக்க்ப் போய் விட்டார்கள்; இது மன்னிக்க முடியாத குற்றம்; இந்தக் காரியம் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை! சிறையில் யவன வீரனைக் கொன்று, மற்ற இருவரை மூர்ச்சிக்கச் செய்து அத்தியை மீட்டுப் போக வேண்டுமானால், என்ன துணிவு வேண்டும் அவர்களுக்கு? நம் காவல் முற்றிலும் பயனற்றதாகி விட்டது; என் மனம் இந்தக் காரியத்தைப் பொறுக்க முடியாமல் குமுறுகின்றது. நான் ஏமாற்றப்படுவதா? இது பொறுக்கக் கூடியதா? புலவரே, கன்னி மாடத்தின் வெளியில் சோலையில் நிலாவில் அந்தரியுடன் விளையாடிக் கொண்டிருந்த அவளைத் தூக்கிப் போவதென்றால்...”

     கரிகாலன் பொருமிப் பொருமிப் பேசினான். அவன் மனம் அடங்கவில்லை. கணத்துக்குக் கணம் பெருமூச்சு விட்டான்; கோபம், துயரம், வெறுப்பு, இவை ஒன்று மாறி ஒன்று அவன் மனதில் தோன்றிப் போராடின.

     “ஆதி! ஆதி! - என்னைப் பிரிந்து போனாள்! அந்தக் கள்வன் அத்தியிடம் கொண்ட காதல் என் அன்பை மறக்கச் செய்தது; அவளுக்கு நல் வாழ்வு தேடிய என்னை அவள் சிந்திக்கவில்லை! ஏனோ - இதை என்னால் பொறுக்க முடியவில்லை புலவரே - அவனிடம் கொண்ட பெருங் காதல் அல்லவா அவளை இவ்விதம் துணிவு கொள்ளச் செய்தது - என் மனத்தைப் புண்ணுறுத்திச் செல்லும் அவளை - என்னென்று சொல்வேன்? - பெண்கள் தாம் கொண்ட முடிவைக் கைவிடுவதில்லை - பெண்களுக்குள்ள இந்தக் குணம் மிகவும் பெருங்கேட்டை உண்டாக்கும் - இந்தத் தீராக் குணம் பெண்களின் நல் வாழ்வுக்குப் பெருங் களங்கமாக விளங்குகிறது! - எவ்வளவு படித்தாலும் எவ்வளவு பெருமைக் குணங்கள் பெற்றிருந்தாலும், எத்துணை அநுபவம் உடையவர் ஆனாலும், ‘தாம் கொண்டது கை விடாத குணம்’ பெண்கள் இனத்திற்குப் பெரிய இழிவைக் கொடுக்கின்றது; இந்தக் கொடுங் குணம் ஒன்றால் அவர்கள் மிகவும் உயர்ந்த நிலையிலிருந்து, மிக மிக ஆழ்ந்த பள்ளத்திலே வீழ்ந்து மடிகிறார்கள்! புலவரே இனி என்ன செய்வது? அத்தியைக் கொன்று...” என்று கரிகாலன் தீவிர வேகத்தோடு பேசினான்.

     புலவர் புன்னகை செய்தார். அரசிளங் குமரர் இருவரும் இளநகை செய்து புலவர் மொழியை எதிர்பார்த்தார்கள். புலவர் சொல்லலானார்:

     “கரிகால்! வீண் காரியம்!”

     “எது?”

     “அத்தியைக் கொல்ல எண்ணுவதும், ஆதியை இகழ்வதும்!”

     “ஆனால், அவர்கள் செய்கை ஏற்றதா?”

     “ஏற்றதல்ல! - உன் விருப்பம் போல் படையுடன் சென்று சிறை செய்துவிடலாம்...”

     “புலவரே, என்னை ஏமாற்றிய அவனை நிச்சயம் சிறைப் பிடித்தல் வேண்டும்; இப்போதே புறப்படுகிறேன்” என்று புறப்பட்டான்.

     புலவர் அவனை வழி மறித்தார். உடனே அரசிளங்குமரர் இருவரையும் சுட்டிக் காட்டினார்.

     “இதோ, இவ்விரு கான் முளைகளும் இருக்கையில் உனக்கு ஏன் தொல்லை! - நானே படைத்தலைமை ஏற்றுச் செல்கிறேன்; குமரர் இருவரும் வந்தால் போதும்; உன்னை ஏமாற்றியது மட்டுமல்ல! எனக்கும் பெரிய ஏமாற்றம் அல்லவா? நிச்சயம் அவனைச் சிறைப்பிடிப்பது வேண்டும். இதோ புறப்பட்டு விட்டோம் நாங்கள்” என்று அரசிளங்குமரர் இருவரையும் இரு கைகளாலும் தழுவிக் கொண்டார்.

     “தந்தையே, புலவர் விருப்பம் போல் செய்யுங்கள். தாங்கள் கவலைப் பட வேண்டாம். நாங்கள் அந்தக் கள்வனை ஆதியுடன் சிறைப் பிடித்து வருகிறோம்” என்று அரசிளங்குமரர் கூறினர்.

     கரிகாலன் அதற்குக் குதூகலத்தோடு மனம் ஒப்பினான்.

     “அப்படியே! புறப்படுங்கள்; வெற்றியுடன் திரும்பி வாருங்கள்” என்றான். மறுகணமே புலவரும், அரசிளங்குமரரும், நாங்கூர்வேளுடன், படை திரட்டப் புறப்பட்டார்கள். தீவிர சிந்தனையோடு கரிகாலன் மாளிகைக்குள் புகுந்தான். சிறிது நாழிகையில் அரண்மனையில் எங்கும் ஆரவாரம் உண்டாயிற்று. ‘ஆதி - அத்தி மறைந்தோடிய செய்தி’ மிக விரைவில் எங்கும் பரவியது; அதற்காகப் படை திரட்டும் செய்தியும் நகரில் எங்கும் கலக்கத்தை உண்டாக்கியது.



மருதியின் காதல் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24