(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

20. சிறைத் தண்டனை

     “பயமில்லாமல் போ! நான் இருக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே புலவர் இரும்பிடர்த்தலையார் அத்தியைக் குதூகலம் அடையச் செய்தார்; மணக்கிள்ளி, பெருவிறற்கிள்ளி, இரும்பிடர்த்தலையார் மூவரும் அத்தியைச் சூழ்ந்து நடந்தார்கள். மணக்கிள்ளியின் மாளிகையை நோக்கியே அவர்கள் சென்றார்கள். கரிகாலனின் ஆணையால் உள்ளம் பதறிக் கொண்டிருந்த அத்தி, புலவரின் உறுதி மொழியால் சிறிதே மனத்தில் துணிவு கொண்டான். எனினும், ‘இனி என்ன நேர்ந்து விடுமோ? நான் கரிகாலனின் கட்டளையை அவமதித்து அரண்மனைக்குள் புகுந்தது பெருந் தவறுதான்! ஆனால் நான் வரவில்லையே! மணக்கிள்ளியல்லவா அழைத்து வந்தான்? புலவரின் உதவி இருக்கையில் நான் அஞ்ச வேண்டியதில்லையே!-’ என்று. ஒரு கணம் பயந்தும், மறு கணம் ஒருவாறு ஆறுதலும் பெற்றான்.

     “விரைவில் போய் விடுவோம்!..” என்று கூறிக் கொண்டே மணக்கிள்ளி கடுகி நடந்தான்.

     “என் உயிர், தங்களிடம் இருக்கிறது...” என்று புலவரைப் பார்த்துக் கூறிவிட்டு நடந்தான் அத்தி.

     அவன் பயம் அடைந்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டார் புலவர். உடனே ஆழ்ந்த பார்வையோடு. குறு நகை செய்தார் அத்தியை நோக்கி.

     “அத்தி, எண்ணித் துணிந்த காரியத்தில் அச்சத்திற்கு இடமில்லை. நான் சூழ்ந்து செய்த காரியம்... எவ்வகையிலும் நிறைவேறாமல் இருப்பதில்லை! என் கருத்துக்கு இணங்கி நடந்து கொள்!”

     புலவரின் வாய்மொழி கேட்டுக் குதூகலம் அடைந்தான். மனத்தில் கலக்கம் ஒழிந்தது அவனுக்கு. ‘ஆதியைப் பெறலாம்’ என்ற நம்பிக்கை உண்டாயிற்று. உண்மையில் புலவரின் சூழ்ச்சியைப் பற்றி - அவர் சூழ்ந்து செய்யும் ஒவ்வொரு செயலைப் பற்றியும் அத்தி நன்கு அறிந்தவனாதலால், அவர் வார்த்தையில் அவனுக்கு உறுதி உண்டாயிற்று. ‘கரிகாலன் இன்று முடி மன்னனாக இருப்பதும், இப்புலவரின் சூழ்ச்சியால் அல்லவா?’ என்று எண்ணினான் மறுகணமே. உண்மை அதுதானே? - புலவர் இல்லையேல், கரிகாலனுக்குச் சோழ நாட்டு ஆட்சி கிட்டியிருக்குமா?

     குதூகலமும், விசித்திர நினைவும் கொண்டு புலவரும் அரசிளங் குமரரும் சூழ, அத்தி மணக் கிள்ளியின் மாளிகைக்குள் புகுந்தான்; மாளிகைக்குள் புகுந்து நிற்கும் தருணம் இடிக் குரல் போல், “புலவரே, உம் சூழ்ச்சி வீண் என்பதை இதோ காட்டுகிறேன்” என்று கூறிக் கொண்டு கையில் வாளுடன் கரிகாலன் தோன்றினான், மின்னலின் வேகத்தோடு வந்து தோன்றினான். அவன் கை வாள் மின்னலின் கதிரொளி நழுவியதுபோல் பளிச்சிட்டது; அவன் பின்னே, இருளைக்கிழித்து எழும் கதிர்க்கொடி ஒன்றுபோல் ஆதி தோன்றினாள்: நிலத்தில் பதறி நடந்து வந்ததால் அவள் பாதம் சிவந்து கொப்பளித்திருக்குமே என்று இரக்கம் தோன்றப் பார்த்துத் திகில் அடைந்தார் புலவர்; கரிகாலன் வந்த வேகத்தைக் கண்டு ஏழடி தூரம் பின்னடைந்து பதுங்கினார்கள் மணக்கிள்ளி, அத்தி, பெருவிறற்கிள்ளி மூவரும். புலவர் மட்டும் கரிகாலனின் கோபக் கனலை ஆற்ற முற்பட்டு விட்டார். கரிகாலனின் கைவாள் வீச்சும் அப்படியே நின்றது. ஆனால் அத்தியிடம் பாய்வதற்கே ஆவல் கொண்டான் கரிகாலன்; அதற்குத் தடையாகப் புலவர் முன் நின்றார்.

     செவ்வரி படர்ந்து மதர்த்துச் சுழலும் கருவிழிகளில் நீர் பெருகிச் சுழித்து நிற்க, வாயிதழ்கள் சிவந்து துடிக்க, இரு கன்னங்களும் தடித்துப் பொரும, இரு புருவங்களும், காமனின் வசீகர வில்லென நெளிந்து நிற்க, இரு கைகளையும் பின்னலிட்ட கூந்தலிலே வைத்து ஒசிந்து விழும் பூங்கொம்பு போல் கரிகாலனின் பின்னே நின்றாள் ஆதி; அவள் இருவிழிகளும், அகல நின்ற அத்தியின் மீதே நிலைகொண்டு நின்றன.

     “கிள்ளி, என் ஆணையை மதிக்கவில்லை நீ! புலவரின் சூழ்ச்சியில் ஈடுபட்டு விட்டாய்! மேல் நடக்கப் போவதை ஆராயாமல், அவனைக் கொணர்ந்து விட்டாய்! இதோ இவ்வாள் அவன் வாழ்நாளை எல்லை...” என்று புலவரைக் கடந்து முன்னே தாவினான்; அவன் கைவாள் அடுத்த கணமே, அவன் பின்புறமிருந்து பறிக்கப் பட்டது; ஏமாற்றத்தோடு திரும்பிப் பார்த்தான். புலவரின் கையில் அவ்வாள் இருந்தது. கோபத்தால் மனம் பதறினான்;

     “அழிவில்லாத புகழ் பெற்றவனை அழிப்பது நியாயம் அல்லவே! நீ இதனால் அடையப் போகும் அழியாப் பழி...” என்றார் புலவர். அவர் பார்வை ஆதி மீது சென்றது.

     “நீ செய்யும் காரியத்தால் ஆதிக்கு உண்டாகப் போகும் கேட்டையும் சிந்திக்க வேண்டும்” என்றார் மீட்டும்.

     “இதல் வரும் பழியை வரவேற்கிறேன்!...” என்று கூறிவிட்டுப் புலவரின் கையிலிருந்து வாளைப் பறிக்க முற்பட்டான்.

     “இதோ கொடுத்து விட்டேன், முதலில் ஆதியின் உயிர் நிலையை அறிந்து கொண்டு, அப்புறம் அத்தியிடம் செல்” என்றார் சீற்றம் கொண்ட புலவர்.

     கரிகாலன் திரும்பிப் பார்ப்பதற்குள் ஆதி கரிகாலனின் பாதங்களைப் பற்றிக் கொண்டாள்; வாளை ஓங்கிய கையுடன், கொடியால் சுற்றப்பட்டவன் போல் நின்றான் கரிகாலன். அவன் கண்கள், ஆழ்ந்த கருத்தோடு ஒரு முறை ஆதியை நோக்கின.

     “ஆதி, இவனை மறந்துவிடு! - இல்லையேல் என்னை மறந்துவிடு” என்றான் கரிகாலன் கனிந்த குரலுடன். விம்மி அழும் ஆதிக்குப் பேச நா எழவில்லை.

     சரேலென்று புலவர் அத்தியிடம் அணுகினார். அவன் செவிகளில் ஏதோ மெள்ள உரைத்தார்; நடுநடுங்கிக் கொண்டிருந்த அத்தி, புலவர் கூறிய வார்த்தைகளுக்கு மனம் கலங்கினான்; அப்படி என்ன சொல்லிவிட்டார் புலவர்? உயிர் அற்ற உடலமென நின்றான் அத்தி; கரிகாலன் திரும்பிப் பார்க்கையில், புலவர் அத்தியிடமிருந்து விலகிக் கொண்டார். அத்தி மிகவும் நடுங்குவதைக் கண்டு, புலவர் மீட்டும், கண்களால் குறிப்பிட்டார்.

     புலவரின் வார்த்தைகளில் உறுதி கொண்டான் அத்தி. ‘ஆனால் உயிரை இழக்க நேர்ந்தால்! - இது என்ன? புலவரின் வார்த்தையை மறுத்தாலும் காரியம் நிறைவேறாதே! என்ன செய்வது’ என்று தடுமாறினான்; உண்மையில் அத்தி ஆபத்தான நிலைமையில் அகப்பட்டுக் கொண்டான்: ‘இனி நான் தப்ப முடியாது; ஆதியைப் பெறுவதற்காக உயிரை இழப்பதே பெருமையைத் தரும்; உயிர் தப்பினால் புலவரின் பெரு முயற்சியேதான்! விதியின் செயல்!’ என்று உறுதி செய்து கொண்டான். மணக்கிள்ளியையும் பெருவிறற்கிள்ளியையும் விலக்கிக் கொண்டு அத்தி முன் வந்தான்; புலவர் குறிப்பறிந்து அரசிளங்குமரர் இருவரும் விலகி நின்றனர்; கரிகாலன் கடுஞ் சீற்றத்தோடு ஆதியை உதறித் தள்ளிவிட்டுப் புலவரிடம் அணுகினான்.

     “என் இயல்பு தெரிந்தும் இவ்விதம் சூழ்ச்சி செய்தது. நேர்மையன்று: சூழ்ச்சியால் முடியும் காரியம் அன்று இது!” என்றான் நாத் துடிக்க.

     “சூழ்ச்சியால் முடியாத காரியம் இல்லை; எந்தக் காரியத்தையும் சூழ்ந்து செய்தால்தான் பயன் பெறலாம்” என்று கூறிக் கொண்டிருக்கையில் அத்தி மிக வேகமாக முன் வந்து கரிகாலனின் பாதங்களில் பணிந்தான். அத்தியின் செய்கையைக் கண்டு கரிகாலனுக்கு வியப்பு ஏற்பட்டது. கம்பீரமும் பொலிவும் மிகுந்த வசீகரத் தோற்றமுடைய அத்தியின் அழகைக் கண்டு, கரிகாலன் ஒரு கணம் நிலை தடுமாறினான். கரிகாலனின் கோபத்தில் மாறுதல் உண்டாயிற்று; ஆனால் முன்னிலும் கோபம் மிகுதியாகி விட்டது.

     “வேந்தே, தாங்கள் அளிக்கும் தண்டனையை ஏற்கிறேன்; ஆனால் ஆதியை நான் இரந்து கேட்கிறேன்; நான் தகுதியற்றவனா? யாசித்துக் கேட்கும் எனக்கு அளித்து விடுங்கள்! என் உயிரைப் போக்கினாலும் நான் ஆறுதல் பெறுகிறேன்! என்மீது குற்றம் இருக்குமானால் பொறுக்க வேண்டும்” என்று கரிகாலனிடம் மண்டியிட்டுப் பணிந்து கேட்டுக் கொண்டான்; என்ன துணிவு அவனுக்கு? - இதுவும் புலவரின் சூழ்ச்சியல்லவா? அத்தியின் வார்த்தைகள் கரிகாலனைத் திகைக்கச் செய்தன; ‘என்னிடம் இப்படி இவன் யாசித்துக் கேட்கிறானே! என்ன துணிவு இவனுக்கு! புலவர் சூழ்ச்சிதான் இதுவும்’ என்று அறிந்து கொண்டான். உடனே விலகி நின்று கொண்டான். ஆதியையும் பார்த்தான்; அவள் அலங்கோலமாகக் கீழே கிடப்பதைக் கண்டு மனம் மாழ்கினான்.

     “அத்தி, என்னிடம் நீ இரந்து கேட்கிறாயா? நீ தகுதியற்றவன் என்பதை நான் சொல்ல வேண்டுமா? கணிகையிடம் மயங்கிக் கிடந்தவன் நீ; அவளாலேயே வெறுக்கப் பட்டவன்! - உன்னை நானே, என் கையால் கொல்வது இப்போது ஏற்றதன்று! - என்னுடைய மகளை உனக்கு நான் உயிர் உள்ளளவும் கொடேன்; உனக்காக, என் குமாரர்களும், அம்மானும் சூழ்ச்சி செய்கின்றனர்; இதனால் பயன் இராது! என் ஆணையைக் கடந்து இந்நகர் புகுந்து - இவ்வரண்மனைக்குள்ளும் வந்து விட்டதற்காக உன்னை- உன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து விடுகிறேன்; சிறையிலேயே நீ உன் உயிரை மாய்த்துக் கொள்; என் மகளை விரும்பிய உனக்குச் சிறை வாழ்வை அளிக்கிறேன்... புலவரே... இப்போது உம்முடைய மனம் மகிழுமல்லவா? கொலைத் தண்டனையினின்றும் அத்தி தப்பி விட்டான்!” என்று கூறிவிட்டு அருகிலிருந்த வீரனை அழைத்து, “அடே, சிறைக்கோட்டைத் தலைவன், நாங்கூர் வேளை, அழைத்து வா!” என்றான். வீரன் அவனை அழைத்துவர ஓடினான்.

     மறுகணமே ஆதி விம்மி அழலானாள்; அத்தியின் கண்களில் நீர் சுரந்தது. அசைவற்று நின்றான் அப்படியே; மணக்கிள்ளி, அத்திக்கு நேர்ந்த சிறை வாழ்வை, எண்ணிக் கலங்கினான். கரிகாலனின் கட்டளைக்கு மாறு, கூற அஞ்சினன். புலவர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டார். நான் எண்ணியபடி நடக்க வில்லையே! கரிகாலனின் மனம், எளிதில் மாறாது! சிறைவாழ்வு பெற்ற அத்தியும், மயிரை_மாய்த்துக் கொள்வான்! என்னால் அத்திக்கு, பெருங்கேடல்லவா உண்டாகி விட்டது! அறிவுடைய, கரிகாலனும் மனம் மாறவில்லை; ஏனோ தெரியவில்லை; என் சூழ்ச்சி வீணாகி விடும் போல் தெரிகிறது; எப்படியும் இன்றே சிறை வாழ்வினின்றும் அத்தியை விடுவிக்க வேண்டும்; இப்போது நான் சொல்வதைக் கரிகாலன் மதிப்பவனாகத் தெரியவில்லை; தெய்வம் துணை செய்ய வேண்டும்; ஆதியின் நல்வினையைப் பொறுத்தது எல்லாம்; நன்கு யோசித்து இன்றிரவே காரியத்தை நிறைவேற்ற வேண்டும். இனி கரிகாலனின் உடம் பாட்டைப் பெற்று ஆதியை அத்தி பெற முடியாது. ஆனால் அத்தியின் மனம் மாறாமல் இருக்க வேண்டும்’ என்று சிந்தனை செய்தார் புலவர் இரும்பிடர்த் தலையார்.

     அத்தருணம் சிறைக்கோட்டத் தலைவன் நாங்கூர் வேள் என்பவன், கரிகாலனின் முன்வந்து வணங்கி நின்றான்; அவன் பின்னே வாள் வீரர். இருபதின்மர் வந்து நின்றார்கள். கரிகாலன் அத்தியைச் சுட்டிக்காட்டி, கூறலானான்:

     “இவன், நாடு கடத்தப்பட்டவன்; என் ஆணையை அவமதித்து உள்ளே வந்துவிட்டான், ஆகவே இவன் வாழ்வு முழுவதும் சிறையில் இருக்க வேண்டியவனாகி விட்டான்; இப்போதே இவனைப் பிடித்துச் சென்று சிறைக்கோட்டத்தில் அடைத்து விடுக!”

     மன்னன் கரிகால் வளவன் கட்டளைக்குத் தலை வணங்கினான் நாங்கூர்வேள்; “மன்னர் பெருமான் ஆணை வாழ்க’’ என்று கூறி, இருபதின்மர் வீரர் சூழ அத்தியைப் பிடித்துப் புறப்பட்டான்; புலவர் உறுதி தோன்ற அத்தியைக் கடைக்கணித்தார். குறிப்பறிந்த அத்தியும் மனம் ஆறுதல் பெற்று நடந்தான். புலவரின் குறிப்பிலே நம்பிக்கை கொண்ட மனக்கிள்ளி மனம் கலங்கவில்லை; கரிகாலனிடம் எதிர் மொழியவும் இல்லை. ஆனால் ஆதியின் அழுகை எல்லை கடந்தது; அவள் தீவிர உணர்ச்சி வேகம் கொண்டு கரிகாலனைக் கடுமை தோன்றப் பார்த்தாள்; அத்தி காவல் வீரர்களுடன் அவ்விடம் விட்டுச் சிறைக் கோட்டம் நோக்கிச் சென்றான். கரிகாலனின் மனம் ஆறுதல் பெற்றது. ஆனால் ஆதியின் முகத்தை அவனால் எதிர் நோக்க முடியவில்லை.

     “தாங்கள் செய்த காரியம், தங்களுக்கு இப்போது ஆறுதலைத் தரும்; ஆனால் தாங்களே வருந்த வேண்டியும் நேரும்” என்று கூறிவிட்டுக் கன்னிமாடம் நோக்கிக் கடுகினாள் ஆதி, அவளைப் பின் தொடர்ந்து புலவரும் மணக்கிள்ளியும் போனார்கள்; கரிகாலன் ஆழ்ந்த சிந்தனையோடு தன் மாளிகையை நோக்கி நடந்தான்; புலவரும் மணக்கிள்ளியும் ஆதியைப் பின்_தொடர்ந்து சென்றதைக் கண்டு அவன் சந்தேகம் கொள்ளாமல் இல்லை; ஆனால் புலவரின் சூழ்ச்சியைக் குலைப்பதிலே தீவிரமாக அவன் மனம் சிந்தனை செய்தது, ஆனால் வெற்றி யாருக்கு?



மருதியின் காதல் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25