(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

19. ஆதியின் கோபம்

     “ஆதி... ஆதி” என்று கூறிக் கொண்டே கரிகாலன் ஓடினான் அவன் நிலை மிகவும் இரங்கத் தக்கதாயிருந்தது. தளர்ந்த நடையுடன் ஓடினான் அவன். மின்னலென மறைந்து விட்டாள் ஆதி. ஆம்! - அவள் கட்டிளங் கன்னி அல்லவா? அவன் ஆதி மீது கோபம் கொண்டு ஓடினானா? - இல்லை; தன் செல்வச் சிறுமியின் உள்ளம் புண்பட்டிருக்கிறதே, அதை ஆற்ற வேண்டுமே, என்று கழி விரக்கத்துடன் மனம் பதறி ஓடினான்.

     ‘என் விருப்பத்தை மாற்ற எண்ணுவதோடு, - என்னிடம் வெறுப்புத் தோன்றும் முறையில் பேசுகிறார் இவர்! இனி இவரிடம் என் முகத்தை எப்படிக் காட்டுவேன்? அறிவிலும், அநுபவத்திலும், வயசிலும், ஆராய்ச்சியிலும் மேம்பட்டவரான இவருக்கு என் இருதயத்தை உணரும் திறமை இல்லையா, என்ன? ஏன் இவருக்கு ஆடலாசிரியரிடம் அவ்வளவு வெறுப்பும் கோபமும்? என் உள்ளம் விரும்பிய காதலரை நான் தேடிப் பெற்றதில் இவருக்கு மகிழ்ச்சியல்லவா இருக்க வேண்டும்! - இனி என் முகத்தை இவர் காணும்படி நிற்க மாட்டேன். என் வாழ்வின் கதியை நானே வரையறை செய்து கொள்வேன்!-’ என்று உள்ளத்தில் ஆழ்ந்த சிந்தனையைக் கொண்டவளாய், கன்னி மாடம் நோக்கி ஓடி விட்டாள் ஆதி.

     கரிகாலனின் நினைவு வேறாக இருக்கிறதே! ஆதியின் கருத்துக்கு எப்படி இசைவான்? ஆனால் அவள் கருத்தை மாற்றி விடவேண்டுமென்று உறுதி கொண்டான் கரிகாலன். அவள் நன்மைக்காகவேதான் அவன் மாறுபட்ட முடிவு செய்தான? - ஆம்! உண்மை அதுதான். முதலில் நன்மையெனத் தோன்றி, பின்பு திறமையை உண்டாக்கும் செயலில் வெறுப்புக் கொண்டான். அத்தியின் தொடர்பு ஆதிக்குத் துயர் விளைக்கும் என்பதே அவன் கண்ட முடிபு. ‘எனக்கு இன்பம் தரும் காரியத்தில், துன்பம் இருக்கிறது என்று பிறர் கூறுவதை நான் விரும்பவில்லை’ என்பதே ஆதியின் முடிவு.

     ஆதிக்கு அத்தி நாட்டியம் பயில்விக்க வந்தவன் என்பதும் இருவரிடையேயும் காதல் விரைவில் வளர்ந்து விட்டது என்பதும் அத்தி கணிகைத் தொடர்புடையவன் என்பதும், அதனாலேயே கரிகாலன் அத்தியை நாடு கடத்தி விட்டான் என்பதும் மற்றும் எல்லாச் செய்திகளும் அரண்மனையில் உள்ள யாவருக்கும் நன்கு தெரிந்தவை. ஆகவே, கரிகாலன் பின் தொடர்ந்து வர ஆதி ஓடுவது அங்குள்ள யாவருக்கும் மனக் கலக்கத்தை உண்டாக்கியது. ‘கோபத்தால் மனம் பதறிச் செல்லும் இவன், என்ன செய்துவிடுவானே’ என்றுதான் யாவரும் கவலை கொண்டனர். ‘தன் செல்வப் பெண்ணிடம், இவனுக்கு ஏன் இவ்வளவு கோபம்?’ என்று எண்ணினார்கள்.

     ‘ஆதிக்கும் அத்திக்கும் ஏற்பட்ட காதல் புதியதாகத் தெரியவில்லை; கருவூரில் இவள் இருக்கும்போது ஏற்பட்டு விட்டதாகவே தெரிகிறது! இல்லையேல், இவ்வளவு விரைவில் இருவரும் ஒன்றுபட்டிருக்க முடியாது. உண்மை உணராமல் கரிகாலன் கோபப்படுகிறான்!’ - என்று அரண்மனைக் காவலர் தமக்குள் பேசிக் கொண்டார்கள்.

     ‘ஆதியை அத்திக்கு மணம் செய்ய வேண்டுமென்று, புலவர் விடா முயற்சியுடன் இருக்கிறார். இருவரையும் ஒன்றாகப் பிணைத்தவர் அவர் அல்லவா! மணக்கிளியின் எண்ணமும் இதுவேதான்; ஆனால், வேந்தரின் கோபத்துக்குக் காரணமாகிறான் அவன்! என்ன நடக்குமோ தெரியவில்லை!’ என்று கவலையுடன் கரிகால னின் போக்கைக் கண்டு வியப்புடன் நின்றார்கள்.

     கடுகி ஓடிய ஆதி, கன்னிமாடத்தை அடைந்தாள்; அவள் வந்த வேகத்தைக் கண்டு பிரமிப்புற்ற சேடியர், இரிந்து ஓடினார்கள். கரிகாலனும் அடுத்தாற் போல் உள்ளே புகுந்தான். அவன் முகம் சிவந்திருந்தது. பரபரப்புடன் காணப்பட்டான். ஓடி இளைத்த ஆதி, மதிவட்ட முகக்கட்டில் ஒன்றில் சாய்ந்து முகத்தைப் பஞ்சணையில் கவித்துக் கொண்டாள். கரிகாலன் அந்தக் கட்டிலின் முன்புறம் அமர்ந்து கொண்டான்; ஆதியின் முகத்தைப் பார்க்க ஆதுரத்துடன் இருந்தான்.

     “ஆதி! ஆதி!” - இரு முறை அழைத்தான். ஆதியிடமிருந்து மறுமொழி கிடைக்கவில்லை. அதற்கு மாறாக அழுகையின் விம்மும் குரல் கேட்டது. அவன் இருதயம் பதை பதைத்தது. அவளிடமுள்ள எல்லையற்ற அன்பின் பெருக்குக் கரை புரண்டது; தன் சொல்லைக் கேட்க வில்லையே இவள் என்ற ஒரு புறம் எல்லையற்ற துயரும் உண்டாயிற்று.

     “ஆதி” - என்றான் கருணை மிகுதியோடு. அவள் முகத்தைப் பார்த்தால்தானே! அவள் மனம் வெந்து கருகிக் கொண்டிருந்த அந்நிலையில், அவள் என்ன செய்ய முடியும்? தந்தையிடம் அளவற்ற அன்புடையவள் தான்; ஆனால், அவள் விருப்பத்திற்கு மாறாக நிற்கும் அவனிடம் அவள் முகத்தைக் கூடக் காட்ட விரும்பவில்லை; ‘மகளின் வாழ்க்கைக்கு, தந்தை நலம் புரிவதா? - அல்லது கேடு சூழ்வதா?’ என்று எண்ணி விட்டாள் அவள். உண்மையில் கரிகாலனை, கேடு சூழ்ந்தவனாகக் கருதுவது நேர்மையா?

     “ஆதி - என் முகத்தைப் பார்க்கவும் உனக்கு விருப்பம் இல்லையா? - நான் உன் பகைவனா - உன்னைப் பெருமை வாழ்வில் நிலையுறச் செய்ய வேண்டும் என்பது என் எண்ணம்! - வேறு விதமாகக் கருதி விட்டாயா? உனக்கு நல்வாழ்வு அளிப்பதே என் உட்கோள் என்பதை நீ நம்பவில்லையா? - தந்தை மகளுக்குச் செய்யும் கடமையை நான் செய்வதில் தவறில்லை!-’’ என்று கூறிக் கொண்டே ஆதியின் கூந்தலைத் தடவினான்.

     கரிகாலனின் வார்த்தைகளைக் கேட்டுச் சீறி எழுந்தாள் ஆதி. அடிபட்ட நாகம், தலையெடுப்பதென முகத்தைக் கரிகாலன் பக்கம் திருப்பினாள். கரிகாலன் கண்டான் அவள் மதிமுகத்தை. குறு வியர்வுடன் ஒளி வீசும், அவள் நெற்றியைத் தொட்டான்; அவள் கண்களில் கணத்துக்குக் கணம் மின்னலொளி பாய்ந்தோடியது.

     “தங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டீர்களே! இனி என்னிடம் வருத்தம் எதற்கு? என் வாழ்வின் முடிவு...” என்று கூறிக் கொண்டே கண்ணீர் துளும்ப, சரேலென்று கட்டிலை விட்டு எழுந்தாள். கரிகாலன் திடுக்கிட்டான். ஆதியின் துயர் மிகுதியைக் கண்டு அவன் உள்ளம் கலங்கி விட்டது.

     “ஆதி... அமர்ந்து கொள்!-” என்றான் அமைதியோடு. அவன் கண்களில் நீர் திரையிட்டதைக் கண்டாள் ஆதியும். கட்டிலில் அமர்ந்தாள். ஆனால் அவள் இதழ்கள் படபடப்புற்றன; “இன்னும் என்ன இருக்கிறது?-” என்றாள் கொதித்த உள்ளத்தோடு.

     “நீ, கற்றுத் தெளிந்தவளாயிற்றே! - மறுவற்ற வாழ்க்கையை விரும்பவேண்டிய நீ-”

     “என்னுடைய அறிவுக்குத் தெளிவானது! - நான் விரும்பிய வாழ்வே எனக்கு இன்பம் அளிப்பது; அதில் மாசற்ற தன்மையே இருக்கிறது... தாங்கள் இன்னும் அறியவில்லையானல், நான்...”

     “எனக்குத் தெளிவாக விளங்குவது, அவன் தொடர்பு உன் புகழுக்குக் களங்கம் உண்டாக்கும் என்பதே! - என்னுடைய சொல்லில் உனக்கு உறுதியில்லையே!”

     “இல்லை! - என் அறிவில் அப்படி ஒன்றும் தோன்றவில்லை. என்னுடைய பெண்மைக்குப் புகழ் உண்டாக வேண்டுமானால், நான் விரும்பிய விதமே நடப்பதுதான் நேர்மை! எனக்கு இன்பமும் பெருமையும் அளிக்கும் தூய வாழ்க்கையையே நான் தேடினேன்; தெய்வம் பிணைத்து வைத்த வாழ்க்கைதான் மேம்பட்டது!-”

     “நான் கூறுவதில் உனக்கு ஏன் இன்னும் நம்பிக்கை உண்டாகவில்லை! - பெண்மைக்கு இயல்பாகவே அறியாமை உண்டு - தன்னுடைய வாழ்க்கையைத் தானே உறுதி செய்து கொள்வதில் அறியாமையால் எமாற்றமே ஏற்படுகிறது. நீ, எவ்வளவுதான் கற்றுத் தெளிந்தவள் என்றாலும், நான் கூறுவதில் உனக்கு நம்பிக்கை இல்லையென்றால், உன் அறியாமையே இதற்குக் காரணம்! கணிகைத் தொடர்புடைய அவன் இயல்பை உன்னால் அறியமுடியாது! - நான் ஒன்று சொல்லுகிறேன் கேள்! - அவனால் உனக்குப் பெருந் துன்பங்கள் உண்டாகும் என்று எனக்குத் தோன்றுகிறது. கணிகைத் தொடர்புடைய எவனும் தூய வாழ்வு உடையவன் அல்ல! மாதவியின் தொடர்பால் கோவலன், இன்று, தன் மனைவியைக் கைவிட்டு விட்டான்! அவள் நிலை இன்று பரிதாபகரமாயிருக்கிறது!-”

     “தாங்கள் எனக்கு நன்மை கருதினால், என் மனம் விரும்பிய அவரையே நான் அடையச் செய்ய வேண்டும்; பெண்களுக்குக் கற்பு ஒன்றே எல்லாப் பெருமையும் அளிக்கும் என்பது உண்மைதானே!”

     “அதில் என்ன சந்தேகம்? கற்பை விடச் சிறந்தது என்ன இருக்கிறது? உயிரை விட நாணம் சிறந்தது. நாணத்தைக் காட்டிலும் கற்பே சிறந்தது.”

     “தந்தையே! அப்படியானால், நான் கற்புடையவளாக வாழ விரும்புவதில் தாங்கள் இடையூறாக இருக்கிறீர்கள் என்றுதான் சொல்லுகிறேன்; நான் நாணத்தை இழந்து இப்படிக் கூற முற்பட்டது என்னுடைய தீவிர வேதனையால் தான்.”

     “ஆதி - நான் கூறுவது...”

     “மன்னிக்க வேண்டும்... தங்களைத் தந்தையாகப் பெற்ற பெருமையால் நான் மிக மேம்பட்டவளாக விளங்குகிறேன். ஒரு வீரரிடம் மனதைப் பறிகொடுத்த பின், அதை மீண்டும் வேறு படுத்திக் கொள்வது கற்புக்கு மாறானது! இன்பமோ, துன்பமோ எதையும் பொறுக்கும் திறமை கற்புக்கு இல்லையென்று கருதுகிறீர்கள்? என் மனத்தை வேறு படுத்துவது, என் கற்பின் திறத்துக்குக் குறை உண்டு பண்ணுவதாகவே ஆகிறது.”

     “ஆதி, இவ்விதம் நீ பேசுவது நேர்மையன்று! இன்று நீ முடிவு செய்ததில் உனக்குத் துன்பமே உண்டாகும்! பெண்களை மணம் செய்யும் காரியத்தில், தந்தையின் முடிவே, நியாயமானது. அதை ஏற்பதே, உத்தமப் பெண்களின் கடமை! இவ்வரையறை இல்லாவிடின், வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களைப் பொறுக்கும் திறமை இருக்க வேண்டும். அரச குலத்திலே தோன்றிய உனக்குச் சுதந்தரம் உண்டு; ஆனால் நன்மை தீமைகளை உன்னால் பகுத்தறிய முடியாது; நான் சொல்வதை நம்பவேண்டும்; உன்னிடம் உள்ள அன்பின் மிகுதியால் நான் சொல்கிறேன் என்பதை நீ உணரவில்லையே!-”

     “மனம் ஒன்று பட்டபின் வேறு பிரிப்பது எதற்கு? இதனால் ஏற்படும் இன்பம் சிறிதெனினும் போதும்; துன்பம் பெரிது என்றாலும் ஏற்றுக் கொள்வேன்; ஊழ்வினை எவ்விதம் இருக்கிறதோ - தாங்கள் இதுபற்றி, கவலையை ஏன் மேற்கொள்ள வேண்டும்? வாழ்வை மேற்கொள்பவள் நான் அல்லவா?-”

     “முடிந்த முடிவாகச் சொல்கிறேன்! அத்தியின் தொடர்பால் உன் வாழ்க்கையில் துன்பமே மிகுதியாக இருக்கும்.”

     “அதையே இன்பமாக ஏற்றுக் கொள்கிறேன்; என் உள்ளம் கலந்த அவரை என்னிடமிருந்து பிரிக்க வேண்டாம்.”

     “ஆதி - இவ்வளவு கூறியும் அந்தக் கூத்தனின் தொடர்பில் உனக்கு வெறுப்பு உண்டாகவில்லையே; கணிகையால் வெறுக்கப்பட்ட, அவனை நீ விரும்புவதை நான் விரும்பவில்லை; அவன் தொடர்பை உனக்கு அளித்த என் மாமனின் மதியை என் என்பேன்! எல்லாம் சூழ்ச்சியாகவல்லவா ஆகிவிட்டன! உன் பெருமையை நீ எப்படி அறிவாய்? உன்னை மணக்கும் எண்ணத்தோடு நூற்றுக்கணக்காக அரசிளங் குமரர் இந்நகரில் வந்து தவம் கிடக்கிறார்கள்! - ஆனால் நீயோ, நர்த்தனப் பிரியனான ஒரு பேடியை விரும்புகிறாய்! - இதை நான் பொறுக்க முடியாது - என் சொல்லை மதிக்காத நீ பின்னர் பெருந்துன்பத்தை அடைவாய்! உன்னைத் துன்பச் சேற்றில் ஆழ்த்துவதற்கு என் மனம் விரும்பவில்லை; அரிய செல்வமாக உன்னை இவ்வளவு காலம் பாதுகாத்து, இனி இழக்க முடியுமா? என் மனத்தைப் புண்படுத்தாதே! - உன்னால் எனக்குத் துன்பம் உண்டாகச் செய்யாதே! அவனை மறந்து விடு! இன்றே உனக்குப் பல வகையாலும் ஒத்த அரசிளங் குமரனைத் தேடித் தருகிறேன்; நாடிழந்து, போரில் புறங்காட்டி கணிகையாலும் வெறுக்கப்பட்டு அரங்கில் பேடி போல் நடமாடும் அத்தியை மறந்தே விடு!-”

     “முடியாது! - மன்னிக்க வேண்டும்! இந்த ஒரு வார்த்தையை மட்டும் தாங்கள் மறந்து விடுங்கள். நான் உயிரை இழந்த உடல்போல் உள்ளேன்! தாங்கள் அவரை , நாடு கடத்தி விட்டீர்கள்! - அதோடு என்னேயும் துரத்தியிருக்க வேண்டும்; ஆனால் என் உயிர் அவரைப் பின் தொடர்ந்து போய்விட்டது; அவரை நான் அடைந்தே ஆகவேண்டும்! - அதுவே என் கற்புக்கடமை; என் உயிரை இழக்க விரும்புவேன் - ஆனால் அவரை மறக்க விரும்பேன். அவரைக் காண முடியாதபடி தாங்கள் மறைத்து விட்டாலும் அவரை நினைத்து வாழ்வதே என் வாழ்க்கை விரதம்!”

     “அவனை நாடு கடத்திவிட்டது மட்டுமல்ல! - அவன் மணக்கிள்ளியால் மீட்டு வரப்பட்டால் - இதோ இவ்வாள் கொண்டு அவன் பரந்த மார்பைப் பிளந்து விடுவேன்.”

     “அப்படிச் செய்வதால் தாங்கள் அடையக் கூடியது பழியா - புகழா என்பதை யோசித்துக் கொண்டீர்களா?”

     “அத்தியை நீ மணந்து பழி விளைப்பதைக் காட்டிலும், அந்தப் பழி அதிகமானதன்று.”

     “அவருக்குச் செய்யும் தண்டனையை எனக்கே செய்து விடுங்கள்.”

     “உன்னைப் பெண்ணாகப் பெற்ற பெருமையை...” என்று கரிகாலன் கூறுகையில் சேடி ஒருத்தி வந்து தலை வணங்கினாள். கரிகாலன் திரும்பிப் பார்த்தான்,

     “தங்கள் உண்மை ஒற்றாள் வந்திருக்கிறான்” என்று கூறிவிட்டு நின்றாள்.

     “அவன் எங்கே?” என்று எழுந்தான் கரிகாலன்; விரைவாக முன் நடந்து வாயிலை அணுகினான் கரிகாலன்; மெள்ள ஆதி பின் தொடர்ந்தாள் அச்சத்தோடு.

     ஒற்றாள் முன் வந்து தலைவணங்கினன்.

     “வேந்தே! - தங்கள் கட்டளையைக் கடந்து, அத்தியை அரண்மனைக்குள் அழைத்து வந்துவிட்டார் இளவரசர் மணக்கிள்ளி! செய்தியைத் தெரிவிக்க வந்தேன்; தங்கள் கட்டளை வாழ்க!” என்று கூறிப் பின்னே நடந்தான்.

     “வந்துவிட்டானா? என் கட்டளையை மறுத்து...” என்று கூறிக் கொண்டே ஆதியைப் பார்த்தான்; அவள் முகம் சிவந்திருந்தது. கரிகாலன் முகத்தைப் பார்ப்பதற்கே அஞ்சினாள் ஆதி.

     “ஆதி, உன் கண்களுக்கு முன்பே, அந்தக் கூத்தனை என் வாளுக்கு இதோ விருந்தாக்குகிறேன்!” என்றான் கரிகாலன். அவன் கால்கள் கோபத்தின் மிகுதியால் நடுங்கின, அச்சத்தின் மிகுதியால் ஆதி உடல் வியர்த்தாள். பேச நா எழவில்லை; தொண்டை வறண்டது: கண்கள் சுழன்றன. கரிகாலனின் கோபம் எல்லை மீறி விட்டது.

     “ஆதி, இப்போதாவது சொல்!...” என்றான்.

     “மன்னிக்க வேண்டும்! தாங்களே...”

     “ஆதி, அத்தி உயிருடன் இருந்தால்தானே நீ. அவனை நினைக்கப் போகிறாய்... இதோ பார்” என்று கூறிவிட்டு உறையிலிருந்து வாளை எடுத்து உயர்த்திக் கொண்டு கன்னிமாடத்தை விட்டுக் கடுகி நடந்தான்; ஆதியும் மனம் பதறி ஓடினாள்.



மருதியின் காதல் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19