(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

21. ‘ஏமாற்றம்’

     வலையில் அகப்பட்ட பெண் மயில் போல், கன்னி மாடத்தின் அறையில் மறுகிப் பொருமிக் கொண்டிருந்தாள் ஆதி. அத்தி சிறைப்பட்டுச் சென்ற காட்சி, அவள் மனத்தை அலைத்துப் பதைபதைக்கச் செய்தது. அவள் எண்ணியது என்ன? - நடந்த காரியம் என்ன? அரசிளங் குமரியாகப் பிறந்த அவள் இவ்விதம் அவமுற்றுக் கலங்க நேர்ந்ததும் விதிப்பயன் அன்றோ! அவள் அழுகையை மாற்றி ஆறுதல் கூறுவதற்கு யாரும் இல்லையா? - அவளைப் பெற்ற தாயாகிய நாங்கூர் வேண்மாள், ஆதியின் இளம் பருவத்திலேயே இறந்து விட்டாள்; பெற்றதாய் இருந்தால் பெண்ணின் மனம் கலங்கும் காரியத்தைச் செய்வாளா? தந்தையைக் காட்டிலும் தாய்க்கு, தன் பெண்ணிடம் அன்பும் ஆதரவும் மிகுதியாக இருக்கும் என்பது உலகம் அறிந்த உண்மை! ஆகவே தாயை இழந்த ஆதிக்கு உற்ற துணை வேறு யார்? துணை இல்லையென்று சொல்ல முடியுமா?

     தாயை இழந்த பெண்ணுக்குத் தாயினும் மிக்க ஆதரவு காட்டி வளர்த்து அறிவு புகட்டிய பெருமை, புலவர் இரும்பிடர்த்தலையாருக்கே உரியது என்பதை யார் மறுக்க முடியும்? ‘தன் தந்தையிடம் காட்டிலும் புலவரிடம் பேரன்பு மிக்கவள் ஆதி’ என்பதையும் மறுக்க முடியாததுதான். இல்லையேல் ஆதியின் நல் வாழ்வுக்கு இவ்வளவு அரிய பெரிய முயற்சிகளைப் புலவர் செய்வாரா? தமிழ் நாட்டின் முடிமன்னனான கரிகாலனையே எதிர்த்து நிற்கும் திறமை புலவருக்குத் தானே உண்டு! தன் பெருமைக்கெல்லாம் முதற் காரணமாக நிற்கும் புலவரை, கரிகாலன் என்ன செய்ய முடியும்? புலவரிடம் எல்லை மீறிக் கரிகாலன் சினம் கொண்டால் உலகமே அவன் மீது பழி கூறும்!

     ஆகவே புலவரின் முயற்சியைக் குலைப்பதற்குக் கரிகாலன் அஞ்சினான். ஆனால் கரிகாலன் அத்தியைச் சிறைப்படுத்திய பின்பும், அவனிடம் புலவர் கோபம் கொள்ளவில்லை.

     அதற்குக் காரணம், தம் முயற்சி பயன் அளிக்கும் என்ற நம்பிக்கையும், கரிகாலனிடம் அவருக்கு உள்ள அன்புமே தான். சூழ்ச்சியில் வல்லவராகிய புலவரிடம், கரிகாலனே அஞ்சியிருக்கையில், வேறு யார் அவரை எதிர்க்க முடியும்? ஆதி - அத்தி - இருவருடைய தொடர்பும், புலவரின் சூழ்ச்சியின் விளைவல்லவா? இருவரும், புலவரிடம் உள்ள நம்பிக்கையால் அல்லவா, அவ்வளவு விரைவில் ஒன்றாகி விட்டார்கள் - கரிகாலனின் அரண்மனையில் கன்னிமாடத்தில் வாழும் அரசிளங்குமரியாகிய ஆதியை, சேர நாட்டுச் சிற்றரசன் ஒருவன் அணுகிக் காதலித்து வாழ்வதென்றால், அதற்குக் கரிகாலன் உடம்படுவானா? அதுவன்றி, தன் மகளுக்கு ஒத்த கணவனைத் தேடி, உலகறிய மணம் செய்ய வேண்டும் என்று கருதி ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் நம் கரிகாலனின் உட்கோளுக்கு எதிராக, ஒரு சிற்றரசன், - நாட்டிய மாடும் கூத்தன் அவளைக் காதலிப்பது என்றால், கரிகாலனின் கோபத்துக்கு எல்லை உண்டா? அவனுடைய கோபம், அத்தியை வாளுக்கு விருந்தாக்காமல் விட்டதற்குக் காரணம், புலவரிடம் அவனுக்குள்ள பயமேதான் என்பதை யாரும் அறிவர்! - சிறைப்பட்ட அத்தி கூட உண்மை உணர்ந்து கொண்டான். எனவே புலவரிடம் ஆதிக்கு நம்பிக்கை குன்றுமா?

     நம்பிக்கை காரணமாகவே அவள் உயிர் வாழ்கிறாள் என்று சொல்லி விடலாம்; அத்தி சிறைப்பட்டுச் சென்றவுடனே, ஆதி அலமந்து கன்னிமாடம் நோக்கி ஓடிய போதே, அவளைப் பின் தொடர்ந்து புலவரும், மணக்கிள்ளியும் போனதைக் கண்டு, கரிகாலன் பலவாறாகச் சிந்தித்துக் கோண்டே தன் மாளிகை சென்றான். அதனால் அவன் தான் கொண்ட உறுதியை நெகிழ விடவில்லை. ‘அத்தி சிறைப்பட்டு விட்டான்; மானம் உள்ளவனானால் உயிரை இழப்பான் - இல்லையேல் ஆதியை மறந்து விடுவான்; இனி ஒருவாறு கவலை நீங்கியது; விரைவில் ஆதியை அழகிய அரசிளங்குமரன் ஒருவனுக்கு மணம் செய்வித்து விடலாம்; வடநாட்டு அரசிளங்குமரர் தவம் கிடப்பதைக் கூட ஆதி அறியவில்லையே! பாண்டிய நாட்டிலிருந்து அரசிளங்குமரர் பதின்மர் வந்திருக்கிறார்கள்! சேர, சோழ, குலத்து உத்தம வீரர் வந்திருக்கிறார்கள்! - நான் நினைத்தபடி செய்து விடுகிறேன்; பாண்டிய மகன் புலமை உடையவன் - ஆதியை மணப்பதற்கு உயிரை விடவும் துணிகிறான்; அவனுக்கே நாளையே மணம் செய்வித்து விடுகிறேன்’ என்று மனம் துணிந்து எண்ணியவாறே, மேல் நடக்கும் காரியத்தைச் செய்ய முயன்றான்.

     கன்னிமாடத்தில் ஆதிக்கு நம்பிக்கை அளிப்பதற்காக, புலவரும் மணக்கிள்ளியும், அவளை ஆறுதல் செய்து கொண்டிருந்தார்கள். ஆதி துயரத்தால் பேசுவதும், புலவர் சமாதான வார்த்தைகள் கூறூவதுமாகப் பொழுது போய்க் கொண்டிருந்தது. மணக்கிள்ளி ஆதிக்காகத் தன் உயிரை இழக்கவும் ஆயத்தமாக இருப்பதாக வாக்குறுதி அளித்தான். ‘அத்தி சிறைப்பட்ட பின் இனி செய்வது என்ன?’ என்று ஏங்கினாள் ஆதி. புலவரிடம் அவளுக்கு உறுதி இருந்தாலும் அவர் பேச்சில் சந்தேகம் கொண்டாள். எவ்விதமேனும் அத்தி விடுதலை பெற்று தன்னை அடைய வேண்டும் என்று ஆதுரப்பட்டாள். தான் காதலித்த வீரனை, தன் விருப்பத்துக்கு மாறாகச் சிறை செய்ததை அவளால் பொறுக்க முடியவில்லை.

     “அவர் சிறைப் பிடிக்கப்பட்டு போவதைப் பார்த்துக் கொண்டு தானே இருந்தீர்கள்? இனி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நாளைக்கு அவர் கொலைத் தண்டனை அடைந்தால் பார்த்துக் கொண்டு தானே இருப்பீர்கள்! வார்த்தைகளால் என்ன பயன்? அவரைச் சிறைப்படுத்துவதா யிருந்தால், மீட்டும் அழைத்து வந்திருக்க வேண்டாம்...” என்று சுடுசொற்களைப் பேசினாள் ஆதி.

     “இப்போது என்ன? சிறைப்பட்டதால் ஒன்றுமில்லை; நீ கவலைப்படாதே! தந்தையின் கோபம் இப்போது ஆறியிருக்கும்; மறுபடியும்...” என்றான் மணக்கிள்ளி. புலவர் அவனைக் கையமர்த்தி விட்டுக் கூறினார்.

     “ஆதி, என் பொறுப்பு எல்லாம். உன்னைக் கருவூரிலிருந்து அழைத்து வந்த போதே சொல்லவில்லையா? அத்திக்கும் உனக்கும் விதி கூட்டு வித்தது காதல் மணம்; இனி அதை மாற்றுவது கரிகாலனால் முடியாது; எனக்குத் தெரியும், எவ்விதம் செய்ய வேண்டும் என்று. நான் இருக்கையில் நீ ஏன் கவலைப் படுகிறாய்? கரிகாலனின் முயற்சியெல்லாம், மலை யுச்சியிலிருந்து புரண்டு உருண்டு வரும், பாறைக்கல்லைப் புறங்கையால் தடுப்பது போலத் தான்!” என்றார் புலவர்.

     “தாங்கள் சொல்வது ஆறுதலை அளிக்கிறது; ஆனால் காரியம்...” என்றாள் நீர் திரையிட்ட விழிகளுடன். “நான் சொல்லும் உபாயத்தை நீ மேற்கொண்டால்...” “உபாயம் என்ன?” என்று மலர்ந்த விழிகளால் புலவரைப் பார்த்தாள்.

     “உடன்பாடுதானே! பயமில்லாமல் செய்ய வேண்டும்; பின்புதான் சொல்வேன்.”

     “தாங்கள் சொல்லும் உபாயம் எதுவானாலும் அவரை அடையவும் காரியமானால் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன்.”

     “உறுதியுடன்... சொல்! உனக்குத் துணிவு வேண்டும்...”

     “என் உயிரை இழப்பதானாலும்... துணிந்து செய்கிறேன். ஆனால் பழிபாவத்துக்கு உடன்படேன், தாங்கள் உடனிருந்து... என்னை ஊக்க வேண்டும்; துணிவு கூறுங்கள்... அது என்ன உபாயம்?”

     ஆதியின் முகம் மலர்ந்தது; விழிகள் வியப்புடன் புலவரை நோக்கின; அவள் வாயிதழகள் நெளிந்தன; படபடப்புற்ற இருதயத்தோடு புலவரின் வார்த்தைகளை எதிர்பார்த்தாள், மலைத் தாரை நோக்கி அங்காந்து பார்க்கும் சாதகப் பறவை போல்.

     புலவர் சுற்றிலும் பார்த்துக் கொண்டார்; இருள் சூழ்ந்து கொள்ளும் தருணம்; மணி விளக்குகளைக் கொணர்ந்து வைத்துவிட்டு இரு சேடியர் மறைந்தனர்.

     கன்னிமாடத்தின் அறை வாயிலில் காவல் காத்து நின்ற இரு சேடியரும், புலவரும் ஆதியும் பேசுவதைக் கூர்ந்து கேட்டார்கள்; அதைக் கண்டு கொண்டார் புலவர்.

     “நீங்கள் வெளிமாடத்தின் வாயிலில் இருங்கள்” என்று அந்தச் சேடியர் இருவரையும் வெளியே அனுப்பி விட்டு, “மணக்கிள்ளி, நீ வாயிலில் சிறிதே நில்; யாரேனும் வருவார்கள்...” என்றார். மணக்கிள்ளி சரேலென்று வாயிலில் நின்றுகொண்டு காவல் காத்தான்.

     ஆதிக்கு மனம் மருண்டது. அப்படி என்ன ரகஸ்ய உபாயம்?

     “யோசித்துச் சொல்லுங்கள்!...” என்று கலங்கிய கண்களோடு சொன்னாள் ஆதி. அதை கேட்டுப் புலவர் வியப்புற்றார். புன்னகை செய்தார்.

     “ஆதி, உனக்குள்ள மனவுறுதி இவ்வளவுதானா?”

     “உறுதிக்குக் குறைவில்லையே! தாங்கள் என்னைப் போர் வீரன் ஒருவனைப் போல் மனவுறுதி உடையவளாகச் செய்திருக்கிறீர்கள். ஆனால் பெண்மையின் இயற்கை உபாயத்தை என்ன வென்று சொல்வதற்கே தாங்கள் இவ்வளவு தயங்கினாள் என்னை இகழ்வதில் என்ன பயன்? சொல்லுங்கள்...”

     என்ன சொல்லப் போகிறாரோ என்று நடுங்கினாள். அவள் கண்களை உற்று நோக்கிக் கொண்டே புலவர் சொல்லலானார்.

     “இன்று பின்னிரவில் ஒரு சேடி இவ்விடம் வருவாள். அவளுடன் புறப்பட்டு, கன்னிமாடத்தின் வாயிலுக்கு வந்து விட வேண்டும்; அங்கே ஒரு பல்லக்கு இருக்கும்; மணக்கிள்ளியும் நானும் அங்கே இருப்போம்.”

     ஆதி அவ்வார்த்தைகளைக் கேட்டுத் திடுக்கிட்டாள்.

     “நான் புறப்பட்டு வருவதா? வந்த பின்?”

     “பல்லக்கில் ஏறிச் சென்று காவிரியின் கரையில் தங்கியிருக்க வேண்டும்; அங்கே நாங்கள் வருகிறோம்...”

     “சிறைப்பட்ட அவர்...”

     “இப்போது ஒன்றும் கேட்காதே...”

     “அவர் சந்திப்பு... எப்போது? - இது தெரியாமல் நான் துணிய முடியுமா?”

     “அத்தியின் சந்திப்பு கிட்டி விடும். நான் சொல்வது போல் செய்...”

     “பிறர் அறிந்தால்?”

     “இன்று ஓர் இரவு மட்டும் பிறர் அறியக் கூடாது; ஆனால் விடியு முன்பு, இந்நகரைக் கடந்து விட வேண்டும்...”

     “தங்கள் வார்த்தைகளை நம்பி நான் புறப்படுகிறேன்...”

     “கலங்காதே! மணக்கிள்ளியின் பணிப்பெண் அந்தரி இன்று பின்னிரவு இவ்விடம் வருவாள். நான் மேல் ஆவனவற்றைச் செய்ய வேண்டும்... நான் போய் வருகிறேன்... உறுதியுடன் புறப்படு...”

     “அப்படியே! தங்கள் துணையை நம்பிச் செய்கிறேன். பழி பாவங்கள் என்னைத் தொடராமல் பாதுகாத்துக் கொள்வது தங்கள் கடமை” என்று கூறி விட்டுக் கட்டிலை விட்டு எழுந்தான். புலவர் புன்னகையோடு புறப்பட்டார். மணக்கிள்ளி குறு நகையுடன் ஆதியைப் பார்த்தான்.

     “உன் விருப்பமே நிறைவேறிவிடும். இந்த உபாயத்திற்கு மாறாக எதுவும் செய்து விட எண்ணாதே! இதை விடச் சிறந்த உபாயம் வேறில்லை. நான் போய் வருகிறேன்; உனக்காக, நானும் புலவரும் தீவிர யோசனைக்குப் பின் இந்த முடிவு செய்திருக்கிறோம்; இதோடு - இல்லை - இன்னும் பெரிய காரியங்கள் செய்தாக வேண்டும். இல்லையேல் நீ அத்தியை அடைய முடியாது...” என்று கூறிப் புறப்பட்டான்.

     புலவரும் மணக்கிள்ளியும் கன்னிமாடத்தை விட்டு விரைவில் கடுகி நடந்தார்கள். மணக்கிள்ளியின் மாளிகையை நோக்கியே இருவரும் சென்றார்கள்; இவ்விருவர்களுக்கும் எதிராக மிக வேகமாகக் கரிகாலன் வந்தான். கடுகி நடந்த இவர்களின் வேகம் தடைப்பட்டது. கரிகாலன் கோபத்தால் பொருமியவாறே மணக்கிள்ளியையும் புலவரையும் பார்த்தான்.

     “மணக்கிள்ளி, நீ அந்தக் கூத்தனை அரண்மனைக்குள் அழைத்து வந்தது மிகவும் நல்லதாயிற்று; சிறைப்பட்ட பின் அவனைப் பற்றிக் கவலையில்லை; ஆனால், ஆதிக்குப் போதனை செய்ய முயன்றிருக்கும் உங்கள் இருவரையும் பார்த்து ஒரு வார்த்தை சொல்லவே இப்போது இங்கு வந்தேன்” என்றான், கரிகாலன் எல்லை கடந்த கோபத்தோடு.

     புலவரும் மணக்கிள்ளியும் புன்னகை செய்தார்கள்; சாதுரியமாகப் பேச முற்பட்டார் புலவர்;

     “கரிகால! ஏன் இவ்வளவு கோபம்! அத்தி சிறைப்பட்ட பின் உனக்குக் கோபம் வரக் காரணம் என்ன? அத்தியை மறந்து விடும்படிக் கூறுவதற்குத்தான் நாங்கள் ஆதியிடம் போய் வருகிறோம்; அவள் இனி மனம் மாறி விடுவாள்...”

     புலவரின் வார்த்தைகளைக் கேட்டுக் கரிகாலன் திடுக்கிட்டான். உண்மையிலேயே உவகையால் உடல் பூரிப்புற்றான்.

     “புலவரே, அப்படியானால் நாளையே பாண்டியன் குமரனுக்கு ஆதியை மணம் முடித்து விடுவோம். தாங்கள் நினைத்தால் ஆதியின் மனத்தை முன்பே மாற்றியிருக்கலாம். இனி நடந்ததைப் பற்றிச் சொல்வதில் பயனில்லை...” என்று சொல்லிக் கொண்டு தன் மாளிகையை நோக்கித் திரும்பினான். புலவரும் மணக்கிள்ளியும் மனம் மகிழ்ந்தார்கள். எப்படியாவது அன்றிரவு கரிகாலனை ஏமாற்றி விடுவது என்று உறுதி செய்து விட்டார்கள். பாவம்! புலவரின் சூழ்ச்சியால் கரிகாலன் ஏமாற்றம் அடைந்தான்.

     புலவரும் மணக்கிள்ளியும் பேசிக் கொண்டே, கரிகாலனுடன் அவன் மாளிகை வரையில் போனார்கள். கரிகாலன் ஒருவாறு ஆறுதல் அடைந்தான் என்பதைப் புலவர் கண்டு கொண்டார்.

     “நாங்கள் போகிறோம்; நீ அமைதியாக இன்று தூங்கலாம்” என்றார் புலவர் பெருமிதத்தோடு.

     “ஆமாம்! இன்று தான் கவலை ஒழிந்தது. பெண்ணறிவு இயல்பாகவே பேதமையுடையதுதானே! கற்றுத் தெளிந்த பெண்ணும் தன் இயற்கையறிவால் பேதமையோடேதான் பேசுகிறாள் என்பதை ஆதியிடமாக அறிந்து கொண்டேன்.”

     “ஆதி அத்தகையவள் அல்ல; கற்றுத் தெளிந்து அதற்கேற்ப நடப்பவள் தான்! தமிழ் நாட்டின் பெண் விளக்காகத் தோன்றியிருக்கிறாள்... நாங்கள் போய் வருகிறோம்...” என்று புலவரும் மணக்கிள்ளியும் புறப்பட்டனர்.

     கரிகாலன் வியப்போடு புலவரைப் பார்த்தான்; சரேலென்று இடைமறித்துக் கேட்டான்.

     “என்ன புலவரே, என் மனம் ஆதியின் மணம் முடிந்த பின்பே அமைதி பெறும் போல் இருக்கிறது; அத்தியைப் பற்றி யோசனையாக இருக்கிறது; அவனை எண்ணிக் கொண்டு ஏதாவது...” என்று ஆழ்ந்த பெருமூச்சு விட்டான்.

     புலவர் கரிகாலனின் முகத்தை உற்றுப் பார்த்தார். “கரிகால்! ஏன் உனக்குக் கவலை? அத்தியை அவள் மணப்பதில் உனக்குத்தான் விருப்பம் இல்லையே!-”

     “அவனை இந்நகரிலேயே சிறையில் வைத்திருப்பது பொருத்தமா? ஆதியின் மனத்தைக் கவர்ந்த அவனை எங்கேனும் கண்காணாத இடத்தில்...” என்று கரிகாலன் பேசத் தொடங்கினான்; புலவர் திடுக்கிட்டார்.

     “அவ்வளவு கவலை உனக்கு ஏன்? அவனை விடுதலை செய்து இன்றிரவே நகர் எல்லைக்குப் புறத்தே கொண்டு போய்விட்டால் - தலை தப்பியது என்று அவனே மறைந்து போய் விடுவானே!-”

     “அவனே மறைந்து போவதை விட, நாமே அவனை மாய்த்து விட்டால்-”

     “என்ன துணிவு உனக்கு? முறை தெரிந்த நீயும் இக்காரியத்திற்குத் துணிவதா?-” புலவர் பயந்து விட்டார்.

     “என் கட்டளையைக் கடந்து இந்நகருக்குள் புகுந்தவனை - முறைப்படி தண்டனை -”

     “அவன் வரவில்லை; ஆதியின் விருப்பத்துக்கு இணங்கி மணக்கிள்ளி அவனை அழைத்து வந்தான். அவன் மீது குற்றம் இல்லையே!-”

     “அப்படியானால் - அவனை உயிருடன் போக விடுவதும் நேர்மையன்று-”

     “அவனை உயிருடன் சிறையில் வைத்திருப்பது மட்டும் நேர்மையா? - உன் விருப்பம்!”

     “புலவரே, அத்தி சிறையில் இருக்கிறான் என்பது தெரிந்திருப்பதால் ஆதி ஏதேனும் சமாதானமாகச் சொல்லி விடுவாள் - அவனை ஒழித்து விட வேண்டும். அல்லது - அத்தி கொலை செய்யப்பட்டான் என்றாவது அவள் உணரும்படிச் செய்ய வேண்டும்; இல்லையேல் ஆதியை ஒரு நிலைக்குக் கொணர்வது முடியாது - ஆகவே எண்ணியதை எண்ணிய போதே செய்து விட வேண்டும்; என்ன செய்யலாம்?-”

     “நான் சொல்வது போல் செய்து விடு; அவனைக் கொல்வது முறை கேடானது; அவனை விடுதலை செய்து விட்டால் இப்போதே ஓடி விடுவான்; இல்லையேல் அவனை அதிக நாட்கள் சிறையில் வைத்திருப்பதும் தகுதியல்ல; ஆதியின் துணிவு எப்படி என்று யாரால் அறிய முடியும்? அத்தியும் அற்பமானவன் அல்ல!”

     “அது முடியாது புலவரே; அவனை இன்னும் இரண்டு நாட்களில் -”

     புலவரும் மணக்கிள்ளியும் திடுக்கிட்டார்கள். ‘நாம் ஒன்று நினைத்தோம்; இவன் அதற்கு எதிராக முடிவு செய்கிறான்! அத்தியின் உயிர்-’ என்று தடுமாறினார்கள்.

     “ஆதி, அத்தியை மறக்க வேண்டுமானால் அவன் இவ்வுலகத்தை விட்டே மறைய வேண்டும்; இல்லையேல் அவனை அவள் மறப்பாள் என்று சொல்ல முடியாது! - அவன் அழகும் வசீகரமும் உடையவன் தான்! - அரச குலத்தில் பிறந்தவன் தான்! - நர்த்தனம் ஆடுதலில் வல்லவன் தான்! - பெண்களை அறிவிழக்கச் செய்யும் பேரழகன் தான்! - ஆனால், வீரம், மானம், புகழ், கல்வி ஒன்றுமே அவனிடம் பொருந்தியிருக்கவில்லையே! - கணிகையர் மோகம் கொண்ட களியல்லவா! அவனை எப்படி ஆதிக்கு ஒத்த காதலனாக மதிப்பது? புலவரே, உம்முடைய நோக்கம் ஏன் இவ்வளவுக்கு மாறுபட்டது? ஆதியின் பெருமை என்ன? - அழகும் கல்வியும் வீறு பெறப் பெற்ற ஆதிக்கு அவனை எப்படி ஒப்பிட்டீர்கள்? அவ்விருவரையும் பிணைத்த பெருந்தவறு உம்முடையது! சிறிதே சிந்தியுங்கள்! - அவனை அவள் இனி மறக்க முடியுமா? - அதற்கு வழி என்ன தோன்றுகிறது உம் சூழ்ச்சியில்! - அத்தியை அழிப்பதன்றி வேறு வழி? புலவரே, அத்தியை மாய்த்த பின்பே என் மனம்-”

     “கரிகால்! - நீ மனம் கலங்கியிருக்கிறாய்? உலக அறிவும், கல்வியறிவும் உனக்கு இப்போது உதவி செய்யவில்லை. உன் அறிவு கொடிய வழியில் அகப்பட்டிருக்கிறது; இதனால் உனக்குத்தான் துயர் மிகுதியாக உண்டாகும்!”

     “புலவரே, ஆதியின் வாழ்க்கை நான் குறிப்பிடும் வழியில் போக வேண்டும்; அதுதான் சிறந்த நெறி; அதற்குக் குறுக்கீடாக நிற்கும் அத்தியின் மார்பைப் பிளந்து விடுவதே என் முதல் காரியம்!”

     “ஆதியின் வாழ்க்கையை அவளே அமைத்துக் கொள்வாள்; அவளுக்கு நேரும் இன்ப துன்பங்கள் அவளைத்தானே சாரும்! உனக்கும் எனக்கும் கவலை ஏன்? ஆகவே, அத்தியைப் பற்றி நீ அறியவில்லை; அவனைக் கண் காணாத இடத்திற்கு அனுப்பி விடலாம்; ஆனால் அவனைக் கொலை புரிய உனக்கு உரிமை இல்லை!” - புலவருக்குக் கோபம் மிகுதியாயிற்று.

     கரிகாலன் மனம் கலங்கிச் சிறிதே நின்றான். “புலவரே, காலையில் சந்திப்போம். இதைப் பற்றித் தீவிரமாக யோசிக்க வேண்டும்; என் மனம் அவனை வெறுக்கிறது; பெண் கனியான ஆதியை, அந்தப் பேடிக்குக் கொடுக்க மனம் துணியவில்லை-”

     “ஊழ்வினையை எதிர்க்க உன்னால் ஆகுமா, என்னால் தான் ஆகுமா? - அவரவர் அடையும் இன்ப துன்பங்களுக்கு வரையறை செய்ய நாம் யார்? - ஓர் ஆணும் பெண்ணும், உயர் குலத்தினரேனும், தாழ்ந்த குலத்தினரேனும் ஒன்றாவதோ, பிரிவதோ, இயற்கையின் முடிவில்லாத சக்தியால் நடக்கின்றன - தெய்வத்தின் முடிந்த முடிபே, ஓர் ஆணும் பெண்ணும் உள்ளம் ஒன்றாகிறார்கள்! ஆண் - பெண் இரண்டின் அதி விசித்திரச் சேர்க்கையிலேதான், நாம் தெய்வத்தின் விசித்திரச் சக்தியை அறிய முடியும்! மனிதனின் முயற்சிக்கு எல்லை உண்டு; இயற்கையின் சக்தியை எதிர்ப்பதற்கு வன்மை யாருக்கு உண்டு? எதிர்ப்பவன் முடிவு என்னாகும்? மதியால் வெல்லக்கூடிய காரியமல்ல இது!”

     “ஆதியின் மனம் மாறுவது முடியாததா?”

     “மாறி விடலாம்! - இப்போது நீ இதைப் பற்றிச் சிந்தனை செய்யாதே; நாளைக் காலையில் நாம் பேசுவோம்.”

     “என் அறிவு கலங்கியிருக்கிறது உண்மைதான்... போய் வாருங்கள்” என்று கூறிவிட்டு மாளிகைக்குள் சோர்ந்த நினைவோடு புகுந்தான்; புலவரும் மணக்கிள்ளியும் மிக விரைவாகத் தம் மாளிகையை நோக்கிச் சென்றார்கள்.



மருதியின் காதல் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21