உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 16. ‘வருவார்’ விடங்கி சிறைப்பட்டுச் சென்ற சிறிது நாழிகை கழித்து, நல்லடிக்கோன் புறப்பட்டான். செய்ய எண்ணிய காரியத்தை மிகுந்த ஆதுரத்தோடு செய்ய முற்பட்டான். குமாரபவனத்தை விட்டுப் புறப்பட்டவன், மிக விரைவில் அரண்மனையை அடைந்தான். விடங்கி சிறைப்பட்டதும், அவன் அரண்மனையை ஆடைந்ததும், பிறருக்குப் புலப்படாத ஒரு புதிராகத் தோன்றியது. நல்லடிக்கோனின் செய்கை, அவனை அறிந்த யாவருக்கும் மிகுந்த வியப்பையே உண்டாக்கியது. அரண்மனையை அடைந்தவுடன், சிறைக்கோட்டம் சென்றான்; பெருகுகின்ற கண்ணீருடன் புலம்பிக் கொண்டிருக்கும் விடங்கியை வீரர் பலர் காவல் காத்து நின்றார்கள். அவ்விடத்தில் நல்லடிக்கோன் புகுந்தவுடன் விடங்கியின் புலம்பல் நின்றது. அவள் முகத்தில் ஏதோ கலக்கம் தெரிந்தது. நல்லடிக்கோன் சிறைக் கோட்டத்துக்குள் புகுந்து விடங்கியின் அருகில் போய் நின்றான். ‘இளவரசர் என்ன செய்யப் போகிறார்? இந்தக் கிழவி, செய்த குற்றம் என்ன? ஏன் இவ்வளவு பரபரப்புடன் நிற்கிறார்?’ என்று காவலர் எண்ணிவியப்போடு நின்றார்கள். “குமரா, நான் உனக்கு என்ன தீங்கு செய்து விட்டேன்? உன்னுடைய நகரத்தை விட்டுப் போய் விடுகிறேனே! ஏன் என்னை இப்படி, சிறையில் பிடித்து வைத்திருக்கிறாய்? மருதிதான் உன்னிடம் அகப்பட்டுக் கொண்டாளே!” என்று விடங்கி கண்ணீர் துளும்பக் கூறினாள். அதைக் கேட்டு நல்லடிக்கோன் பெருமிதத்தோடு நகைத்தான், அடுத்த கணமே, அவன் முகத்தில் கோபத்தின் நிழல் பரவியது. “விடங்கி, முதலில் உன்னைக் கருவூரிலிருந்து சிவிகையில் மருதியுடன் அனுப்பிய போது, சூழ்ச்சி செய்து நடுவிலேயே தப்பி ஓடிவிட்டாய். அத்தியிடம் தூது போயிருந்தாய். அதன்பின் மறுபடியும் ஏமாற்றி எப்படியோ குமாரபவனத்துக்குள் புகுந்து விட்டாய்! இப்போது பெரிய சூழ்ச்சியோடு அத்தியைப் பார்க்கப் புறப்பட்டு விட்டாய். மருதியின் சூழ்ச்சியும் உன் சூழ்ச்சியும் இனி வெற்றி பெறாது. உண்மையை உணர்ந்த பின் என்னை ஏமாற்ற முடியுமா?” “உன்னை ஏன் ஏமாற்ற வேண்டும்? நான் இனி இந் நகருக்குள் புகவில்லை. என்னை விட்டுவிடு!” “விடங்கி! என்னிடம் மறைக்க முடியுமா? நாழிகை ஆகிறது. விரைவில் உண்மை...” என்றான் நல்லடிக்கோன். உடனிருந்தவர்கள் நல்லடிக்கோனின் பேச்சைக் கேட்டு திடுக்கிட்டார்கள். விடங்கியும் எதிர்பாராத விதம் நடுங்கி விட்டாள். அவள் கண்கள் மருட்சியுற்றன. கைகளைப் பிசைந்து கொண்டே நல்லடிக்கோனைச் சந்தேகம் தோன்றப் பார்த்தாள். “என்ன? நான் ஒன்றும் மறைக்கவில்லையே!...” “விடங்கி, உன் மார்பில் செருகி வைத்துக் கொண்டிருக்கும் ஓலையை என்னிடம் விரைவில் கொடு! இல்லையேல்...” என்றான் நல்லடிக்கோன் விசித்திரப் பார்வையோடு. திடுக்கிட்டுப் பேச்சு மூச்சற்று நின்றாள் விடங்கி. ஆச்சரியம் நிறைந்த பார்வையோடு யாவரும் விடங்கியைப் பார்த்தார்கள். “இது முறையல்ல! பிறருடைய ஓலையை (லிகிதம்) நீ பார்க்க வேண்டியதற்கு காரணம்...” “விடங்கி, எல்லாம் எனக்குத் தெரியும்! கொடி மாடத்து முற்றத்தில் நீ மருதியுடன் பேசிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியாதா? மருதி உன்னிடம் அத்திக்குக் கொடுக்கும் படியாகக் கொடுத்த ஓலையை நீ மார்பில் செருகி வைத்துக் கொண்டதை நான் பார்க்க வில்லையா? ஏன் - எல்லாவற்றையும் மேல் மாடத்தின் வழியே வந்து பார்த்து விட்டுத்தான் திரும்பினேன்; கொடு விரைவில்! என்னுடைய பாதுகாப்பில் இருக்கும். மருதிக்கு என்னை அறியாமல் ஓலை எழுத உரிமையில்லை; ஓலையை எடுத்துச் செல்லும் நீ - பெண் என்ற காரணத்தால் உயிர் தப்பினாய். இல்லையேல் வேறு யாராயிருப்பினும் இதற்குள் உயிரை இழக்க வேண்டியதுதான். ஆனால், இனி உனக்கு இந்தச் சிறைக்கோட்டமே மயானம்” என்றான். “நான் அப்படி என்ன தீங்கு செய்துவிட்டேன் உனக்கு? இந்த ஓலையைக் கொடுத்து விடுகிறேன்: என்னை விட்டுவிடு!” என்று சொல்லிக் கொண்டே மார்பிலிருந்து ஓலையை எடுத்துக் கொடுத்தாள் நல்லடிக்கோனிடம். ஆவலோடு, மருதியின் ஓலையைக் கையில் வாங்கிக் கொண்டு பிரித்துப் படித்தான்; உடனே அவன் மனம் குமுறியது: மீட்டும் படித்தான். படிக்கப் படிக்கச் சுவை தரும் வாசகங்கள்! காதலின் தீவிர வேகமும் தூய்மையும் பிரதிபலிக்கும் இனிய சொற்கள்; ஆம்! உண்மையில், அழியாத காதலின் உணர்ச்சிப் பெரு வெள்ளத்தைப் புலப்படுத்தும் உயிர்மொழிகள் தாம் அவை!
“காதல ஊழ்வினையால் உம்மைப் பிரியும் காலம் எனக்கு வந்ததே! நான் இன்னும் உயிர் வாழ்வதும் ஊழ்வினையின் செயலேதான். என் நிலை நீர் அறியாததா? ‘எக்காலத்தும் என்னைப் பிரிவதில்லை என்ற உறுதிமொழி வேண்டும்’ என நான், அன்று தொண்டி நகர்க் கடற்கரையில் கேட்டது உமது நினைவில் இருக்கும்! ஆனால், அப்படி உறுதிமொழி பெற்ற நான் உம்மைப் பிரிய நேர்ந்தது விதியின் செயல்தான்! உம்மைக் காணலாம் எனும் ஆசையால் உயிர் வாழ்ந்திருக்கிறேன்; அழகு நலம் கனிந்த உம் திருவுருவை என் இரு கண்களுக்குள்ளும் வைத்துக் காவல் செய்கிறேன். என் இருதய பீடத்தில் உம் நடனத் திருவுருவம் எப்போதும் களி நடனம் செய்து கொண்டுதான் இருக்கிறது. உம்முடைய அருள் நோக்கின் கீழ் வாழ்ந்து வருகிறேன். ஆனால் விடங்கி கூறிய வார்த்தைகள் என் உள்ளத்தைப் புண்ணுறுத்தி விட்டன; நீர் விடங்கியிடம் சொன்னவை, என்னை, ஒடியெறி மரம்போல் ஆக்கிவிட்டன. இப்போது இறந்தும் இறவாமல் வாழ்கிறேன்! இன்பமும் துன்பமும் நம் வாழ்வில் என்றுமே, காதலின் உறுதியை நிலை குலைத்ததில்லையே! இனியும் அப்படியே எனக் கருதுகிறேன்; நம்முடைய காதலில் தேய்வுத் தன்மை இல்லை! வளர்ச்சியின் வீறு ஒங்குவதாகவே நம்புகிறேன். என் இருதய மாகிற நிலைக்களத்திலே, மனம், புத்தி, சித்தம், அகம் என்ற நான்கு பெரிய வியூகங்களுக்கு நடுவிலே தங்களைக் காக்கிறேன். கண்ணீருக்கு இடையே தங்களை முழுக் காட்டுகிறேன். எனக்கு இத்தருணத்தில் பெரும் பகையாக இருப்பவை, என் அழகு, நாட்டியம் இரண்டுமே! நானே விடுதலை பெற முயன்றேன்! - இனியும் முயற்சியை விட்டிலேன்; எனினும் நான் பேதைப்பெண் அல்லவா? தங்கள் உரிமையான என்னை - தாங்கள் விடுதலை செய்யாமல் இருப்பது நேர்மையேதான்! - ஓர் உறுதி மட்டும் கூறுகிறேன்; என்னைக் காத்துக்கொள்ள எனக்குத் திறமை உண்டு. ஆனால், என்னை இந்தச் சிறையிலிருந்து விடுதலை செய்ய, தங்களாலேயே முடியும். எனக்கு நானே தலைவி அல்லவே! எனக்குத் தாங்களே தலைவர்! என் காதல்! என் காதல்! இந்தச் சிறை... பெரும் பகைப் புலன்! இந்தப் பகைப் புலனைத் தீக்கு இரையாக்கி என்னை விடுதலை செய்ய வருக! வருக! என் இன்னுயிர்க் காதல! இத்திருமுகம் கடைக்கணித்த பின், விடங்கியிடமே விடை தந்தருள்க!
தங்கள், அடியாள் மருதி. இவ்வாறு மருதி எழுதிய ஓலையைப் படித்தான் நல்லடிக்கோன். ஆகவே அவனுள்ளத்தில் அமைதி எப்படி நிலவும்? சீறிச் சினந்து பார்த்தான் விடங்கியை. பற்களைக் கடித்து, புருவங்களை வளைத்துக் கோபத்தை வெளிப்படுத்தினான். ஓலையைக் கிழித்துக் கசக்கி நிலத்தில் போட்டு மிதித்தான். “விடங்கி, நீ வேண்டுமானால் உன் உயிரை மாய்த்துக் கொள்! ஆனால் இனி உனக்கு விடுதலையே இல்லை” என்று கூறிவிட்டு, அங்கிருந்த காவலரைப் பார்த்துக் கூறினான்: “அடே இவளுக்கு உண்ண உணவு கொடாமல் வருத்திக் காவல் செய்யுங்கள்! இவள் உயிர் போகும் வரை காவல் மாறுபடக்கூடாது.” இவ்விதம் கூறிவிட்டு நல்லடிக்கோன் அத்தாணி மண்டபம் சென்றான். நல்லடிக்கோனின் வருகையைக் கண்டு வேங்கை மார்பன் முதலிய சேனாபதியரும், மந்திரியரும் எழுந்து தலை வணங்கி நின்றார்கள். வேங்கை மார்பனை மட்டும் தனியே அழைத்துக் கொண்டு மண்டபத்தின் மறைவிடம் சென்றான் நல்லடிக்கோன். மிக விரைவாக ஓலையில் சில வரிகளை எழுதிவிட்டு வேங்கைமார்பனை நோக்கி, “வேங்கை, நம் உண்மை ஒற்றாட்களில் இருவரை அழைத்துவா! காவிரிப்பட்டினம் போகவேண்டும்” என்றான். உடனே வேங்கை மார்பன் சென்று இரு ஒற்றறி வீரர்களை அழைத்து வந்தான். நல்லடிக்கோனே வணங்கி இருவரும் நின்றார்கள். “நீங்கள் இருவரும் இப்போதே சென்று காவிரிப் பட்டினத்தை அடையவேண்டும்; இன்றிரவு புறநகரில் தங்கிவிட்டு விடியற்போதில் நகருக்குள் புகுந்து, தொண்டி நகரின் அதிபதியான அத்தி என்பவன் கரிகாலன் அரண்மனையில் இருக்கிறானா என்று அறிந்து கொள்ளுங்கள்; இருக்கிறான் என்று தெரிந்தால், இந்த ஓலையை எப்படியேனும் அத்தியிடம் சேர்ப்பிக்க வேண்டும். இந்த ஓலை யாரிடமிருந்து வந்தது என்று யாரேனும் வினவினால், மருதி என்ற நாட்டிய மங்கை உறையூரிலிருந்து அனுப்பினாள் என்று கூறுங்கள். அத்தி கேட்டாலும் அவ்விதமே சொல்லுங்கள். வேறு யாரிடமும் இவ் ஓலையைக் கொடாதீர்கள். இதைக் கொடுத்த பின் அத்தி மறுமொழி என்ன சொல்கிறான் என்று நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். அவன் ஓலை எழுதிக் கொடுத்தால் வாங்கிக் கொண்டு விரைவில் இவ்விடம் வந்து சேரவேண்டும்” என்று கட்டளையிட்டான் இளவரசன் நல்லடிக்கோன். “இளவரசர் கட்டளைப்படியே போய் வருகிறோம்” என்று கூறி, ஓலையை வாங்கிக் கொண்டு அவ்விருவரும் புறப்பட்டார்கள். இரு குதிரைகள் மீதும் இரு ஒற்றாட்கள் அமர்ந்து, காவிரிப்பட்டினம் நோக்கிக் கடுகினார்கள். அவ்வீரர் இருவரும் சென்ற அளவிலே நல்லடிக் கோனின் மனத்தில் ஒரு குதுகுதுப்பு உண்டாகியது. உடல் பூரித்தான். ஆம்! மருதி எழுதிய ஓலையைக் கிழித்து எறிந்து விட்டு, தான் ஓர் ஓலையை வரைந்து அத்திக்கு அனுப்பியதிலே, அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை உண்டா? அவன் செய்த காரியத்திலே அவனுக்கு உண்டான உவகைக்கும், வியப்புக்கும் ஆறுதலுக்கும் எல்லையில்லைதான். ஒரு பெரிய காரியத்தைச் செய்து விட்டதாக இறுமாப்புற்றான். இறுமாப்பின் வெறி மிக்கு, களிதுளும்ப வேங்கை மார்பனைப் பார்த்தான். “வேங்கை, மருதி என் வசமாகி விட்டாள் இனி! எனக்கு அவளைப் பற்றி இனி கவலை இல்லை; இனி எந்தக் காலத்தும், மருதி அத்தியைக் காண முடியாது. அத்தி மருதியை மறந்தே விடுவான். மருதிக்கு என்னையின்றி வேறு துணையில்லை - பற்றுக்கோடு இல்லை. நீயே எல்லாவற்றையும் பார்க்கப் போகிறாய். விரைவில் உள்ளி விழாவுக்கு ஏற்பாடு நடக்கட்டும்” என்று நல்லடிக்கோன் சொன்னன். வேங்கை மார்பன் திடுக்கிட்டான். வியப்போடு பார்த்தான். ‘தந்தையை இழந்த துயரம் இவனைச் சூழவில்லை. மருதியின் காதல் வலையில் அகப்பட்டு விட்டான். இவனுக்கு இனி மீட்சி இல்லை. நான் சொன்னலும் கேளான். இவன் அனுப்பிய ஓலையில் என்ன எழுதியிருக்கிறானோ! - அத்தி கரிகாலனிடம் போயிருந்தால் ஏதோ படைப் பலம் பெறவே போயிருக்க வேண்டும். என்ன நேருமோ இனி? நாட்டிய மங்கை மருதியை மிக அற்பமானவளாக இவன் கருதி விட்டானே! இளமையின் செருக்கில், மதி நுட்பத்தை இழந்து விட்டான்! மருதியால் நேரப் போகும் துன்பத்தை இவன் அறியவில்லையே!’ என்று தனக்குள் சிந்தித்தான். “இளவரசே, என்ன யோசனை இது! உள்ளி விழா நடக்கட்டும். மருதியைப் பற்றித் தாங்கள் அப்படி, நம்பி விடக்கூடாது. தாங்கள் சொல்லுவதுபோல் அத்தி புகாரில் இருப்பானேயானல் ஏதோ காரியம் இருக்க வேண்டும். கரிகாலனின் உதவிபெற்று நமக்குப் பெருந்தொல்லை கொடுப்பானோ என்று எண்ணுகிறேன்; இந்நிலையில் தாங்கள் மருதியைப் பற்றித் தவறாக நினைப்பது...” என்று கூறுகையில் நல்லடிக்கோன் கை குவித்தான். “வேங்கை, நீ சொல்வது விசித்திரமாக இருக்கிறது! நீ ஒரு சேனைத் தலைவன் அல்லவா? - உனக்கு அத்தியிடம் அவ்வளவு அச்சமா? நான் என்ன செய்திருக்கிறேன் தெரியுமா? சேர நாட்டுக்குள், அத்தி புகாதபடி காவல் செய்திருக்கிறேன்; சேரநாட்டின் ஆட்சி இப்போது, கங்கன், கட்டி, புன்றுறை மூவரிடமும் அகப்பட்டிருக்கிறது. எப்போது வேண்டுமானலும், அத்தியை எதிர்ப்பதற்கு, அவர்கள் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்; அவர்கள் கூட மருதியைப்பற்றி அளவில்லாமல் சொன்னர்கள். ஆனால், அவ்வளவும் மருதியிடமுள்ள என் காதலை மிகுதியாக்கி விட்டது. மருதியின் மதிப்பும் முன்னிலும் மிகுதியாகி விட்டது; அவளை மறப்பதென்பது முடியாத காரியம்; அது போலவே அத்தியையும் மறக்கமுடியாது. எத்தருணத்திலும் அவன் தொல்லை உண்டாக்கலாம்: ஒருவேளை அடங்கியும் போய்விடலாம்; எப்படியும், அவன் மருதியைக் காண மாட்டான்!... மருதியை அவன் அடைவது முடியாத காரியம்” என்று சொன்னான். அதற்கு மறுமொழி தரவில்லை அவன் மௌனமாக நின்றான். “வேங்கை, அவை கிடக்கட்டும்! நான் சொல்வதை விரைவில் ஆயத்தம் செய்; கொங்குநாட்டு வீரர்களை விடுதலை செய்து யாவருக்கும், புதிய ஆடைகளும் அணிகளும் வழங்கி, உள்ளி விழாவுக்குரிய ஏற்பாடு நடக்க வேண்டும். மருதியின் நாட்டியத்திற்காகப் பொது மன்றத்தில் நாட்டிய அரங்கு அலங்கரிக்கச் சொல்!” என்று கட்டளையிட்டான். “தங்கள் விருப்பம்போல்!” என்று சொல்லிவிட்டு வேங்கை மார்பன் மண்டபத்தை விட்டு வெளியேறினான். நல்லடிக்கோன் குதூகல நடையுடன் - முக மலர்ச்சியுடன், குமாரபவனம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றான். குமாரபவனத்துக்குள் நல்லடிக்கோன் புகுந்த தருணம், சிலர் உறங்கிக் கொண்டும், சிலர் பேசிக் கொண்டும் இருந்தார்கள்; விளக்குகள் மட்டும் குன்றாத ஒளியுடன் சுடர் விட்டு விளங்கின. விரைவில் அந்தப்புரத்தை நோக்கி நடந்தான். மாடத்தின் வாயிலில் நின்றான், கதவுகள் சிறிதே சார்த்தியிருந்தன. சாளரத்தின் வழியே நிமிர்ந்த தலையுடன் பார்த்தான். முன்பு இருந்த விளக்கின் ஒளி காணப்படவில்லை. மாடத்தின் ஒருபுறம் மட்டும், சிறிய சுடர் விளக்கு விளங்கியது. அதன் சுடரொளியால் அவ்வறை முழுவதையும் நன்கு காண முடியாதுதான் என்றாலும், நல்லடிக்கோனின் கண்களுக்கு மருதியின் உருவம் மட்டும் தெரிந்தது. மருதி கட்டிலில் சாய்ந்திருந்தாள். அம்பை நிலத்தில் அமர்ந்திருந்தாள். இருவரும் மௌனமாக இருந்தனர்; நல்லடிக்கோன் உற்றுப் பார்த்தான் மருதியின் முகத்தை. அவள் கோபம் தணிந்திருக்குமோ என்று அறிய எண்ணினான், துணிவுடன், வாயில் புறம் வந்து கதவுகளைத் திறந்தான். மெள்ள நடந்து கட்டிலை அணுகினான். சரேலென்று, எடுத்த தலையுடன் எழுந்து அமர்ந்தாள் மருதி. பரபரப்புடன் எழுந்து அம்பை அகலச் சென்றாள். “ஏன், எதற்கு வந்தீர்கள்” என்று கேட்டபடி மருதி அவனை மருண்டு பார்த்தாள். “விடங்கி... எங்கே?” - என்று கேட்டான் நல்லடிக்கோன். “அவள் போய்விட்டாள்! - அவளைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்? அவள் இங்கே இருப்பதில் உங்களுக்குத் தான் விருப்பமில்லையே!” “அதற்காக அனுப்பி விட்டாயா?...உண்மையாகவா?” “ஆம்! உண்மைதான். தங்கள் விருப்பம்போல் அனுப்பிவிட்டேன்; இனி, நீங்கள் க வ லைப் பட வேண்டாம்! என் வினை! தனியே காலத்தைப் போக்குகிறேன்! அம்பை இருக்கிறாள்!” என்று தாழ்ந்த குரலுடன் கூறினாள். மருதியின் வார்த்தைகளில் வெம்மை இல்லை என்று அறிந்தான் நல்லடிக்கோன். அவன் வார்த்தைகளின் உண்மை-பொய்யை உணர்ந்தவன். தனக்குள்ளே நகை செய்து கொண்டான். அப்போது அவனுக்கு உண்டான ஆனந்தத்திற்கு எல்லை உண்டா? “மருதி, எவ்வளவுக்குக் கோபம் அப்போது உனக்கு வந்தது! என்னை வெளியே போகும்படி கட்டளையிட்டது நியாயமா? விடங்கி இங்கே வருவதும், போவதும், என்னை அறியாமலே நடக்கின்றன. இதிலிருந்தே, உனக்கு எவ்வளவுக்கு உரிமை கொடுத்திருக்கிறேன் என்பதை அறிந்து கொண்டாயா! உனக்கு இவ்வளவு உரிமை கொடுத்தது எதற்காக என்றுதான் தெரியுமா? உன் விருப்பம்போல் இங்கே எல்லோரும், என் கட்டளையைக்கூட மதிக்காமல் நடந்து கொள்கிறார்கள்! உன் பொருட்டு நான் யாரையும்...” என்று கூறுகையில் மருதி இடைமறித்துப் பேசினாள். “என்ன உரிமை எனக்கு அளித்தும் என்ன? இந்த அலங்கார மாளிகையில் நான் இருந்தும் - இதை யாரும் ‘சிறை’ என்றுதானே சொல்கிறார்கள்! நான் சிறைப்பட்டுத்தானே கிடக்கிறேன். எனக்கு விடுதலை உண்டா? - என்றேனும் ஒரு நாளைக்கு எனக்கு விடுதலை கிட்டுமா? நான் இம்மாளிகையை விட்டு வெளியே நட மாட முடியுமா?” - என்றாள் மருதி. “ஏன்? - அப்படியெல்லாம் சொல்லாதே மருதி! விடுதலை வாழ்வுடன் என்னிடமே நீ வாழ விரும்புகிறாயா?” என்றான் நல்லடிக்கோன். “இப்போதுபோல்.” “இதுவே போதும்! - இனி நீ விடுதலை பெற்றவள்தான். ஆனால் எப்படியிருந்தும் என் உரிமையாகவே நீ கருதப்படுவாய்!” “உரிமை! உரிமை!! நான் யாருக்கு உரிமை? அந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்பதையே இன்னும் நான் அறியவில்லை!” “அது கிடக்கட்டும்! நாளைக்கு மறுநாள் ‘உள்ளி’ விழா தொடக்கம்! நீ அப்போது விடுதலையுடன் நடமாடப் போகிறாய்! உன் நாட்டியத்தைக் காண மக்கள் ஆதுரப்படுகிறார்கள்! இப்போதுதான் சேர நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் பகை நீங்கிவிட்டதே! ஆகவே, வஞ்சிமா நகரிலிருந்தும் மக்கள் கூட்டம் வரும். உன் புகழ் வானை அளாவப் போகிறது; உன் புகழால் என் புகழ்...” “உள்ளி விழா! தந்தையை இழந்த துயரத்தை மறந்துவிட்டீர்கள்! விழாக் கொண்டாட்டத்திற்கு ஆதுரப் படுகிறீர்கள்! உலகில்..” “எல்லாம் உன் பொருட்டுத்தான்! உள்ளி விழாவே உன் பொருட்டுத்தான்; உன் நாட்டியம் நடக்கப் போவதை நகரத்தில் முரசறைந்து தெரிவிக்கச் செய்து விட்டேன். உன் நாட்டியத்திற்காக, சித்திர அரங்கு அமைக்கச் சொல்லிவிட்டேன். உன் விருப்பம்போல் எது வேண்டுமானாலும்...” “என் விருப்பம் என்ன? தங்கள் விருப்பம் போல் நாட்டியம் ஆட ஆயத்தமாக இருக்கிறேன்; ஆனால் கருவூரிலிருந்தும்... வருவார்களா? இப்போது சேர நாட்டு ஆட்சி யாரிடம் இருக்கிறது?...” என்று கவலையோடு கேட்டாள். அவள் மனம் அத்தியை நினைத்தது. “கருவூரிலிருந்து யாவரும் வருவார்கள்! உன் நாட்டியம் நடக்கப் போவதை அங்கும் தெரிவிக்கச் செய்து விட்டேன்; இப்போது சேனாபதிகளின் கையில் ஆட்சி இருக்கிறது!” “சேனாபதிகளா? அவர்கள் யார்?” “அத்தி எங்கோ ஓடிவிட்டான்! - கங்கன், கட்டி, புன்றுறை மூவரும் ஆட்சியைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.” அத்தியைப்பற்றி அவன் சொல்லியவுடன் மருதி திடுக்கிட்டாள். “யாருக்குப் பயந் து ஓடிவிட்டார்? - தங்களுக்காகவா?” “ஆம்! இனி அவன்...” என்று நல்லடிக்கோன் சொல்லத் தொடங்கினான். மருதி சிறிது கோபமும் நகைப்பும் தோன்றக் கூறினாள்: “அவர் கருவூரில்தான் இருக்கிறார்! அவர் இருக்குமிடம் எனக்கல்லவா தெரியும்! நீங்கள் அறியவில்லை!..” இரும்பிடர்த்தலையாரின் மாளிகையில் அத்தி இருப்பதாக அவளிடம் விடங்கி கூறியதையே அவள் மறைமுகமாகச் சொன்னாள். மருதியின் முகத்தில் வெறுப்புத்தன்மை தோன்றுவதைக் கண்டு நல்லடிக்கோன் சட்டென்று, “நான் போய் வருகிறேன்” என்று கூறினான். உடனே அந்தப்புர மாளிகையைவிட்டு வெளியேறினான். அத்தியின் நினைவோடு மருதி கட்டிலில் அமர்ந்தாள். ‘உள்ளி விழாவில் நான் நாட்டியம் ஆடுகிறேன் என்றால் அவர் நிச்சயம் வருவார்! அப்போது அவர் கருவூரில் இருப்பதும் இல்லாததும் தெரிந்துவிடும்; பார்ப்போம்!’ என்று சிந்தித்து ஆறுதல் செய்து கொண்டாள் மருதி. |