சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 27. உறையூர் முற்றுகை |
(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 27. உறையூர் முற்றுகை “அத்தி உன்னுடைய திறமையை உறையூர்ப் போரில் காண்பேன்! நல்லடிக்கோனைக் கொல்வதோ, வென்று சிறைப் பிடிப்பதோ உன் வன்மையில் இருக்கிறது. உறையூரைக் கைப்பற்றி உன் மைத்துனருக்கு அளிப்பது உன் கடமை; சேரநாட்டின் உரிமையை உனக்கு அளிப்பது உன் மைத்துனர் கடமை; அதற்குப் பின் உனக்கும் சோழருக்கும் என்றுமே பகை இராது! ‘ஆதி மணாளன்’ என்று இப்போதே நம் படை வீரர்க்கு முன் உன்னைத் தெரியச் செய்கிறேன். உனக்கும் ஆதிக்கும் காதல் மணம் நடைபெற்றதை ஆயிரக்கணக்கான இந்தப் படை வீரர்க்கு முன் உறுதி செய்கிறேன். இனி உன் மீது கரிகாலன் கோபமோ, வெறுப்போ அடைய முடியாது. நான் எண்ணித் துணிந்த முதல் காரியம் நிறைவேறியது. இன்னும் இரண்டு பெரிய காரியங்கள் உள்ளன. உறையூர், கருவூர் வெற்றிகள் தாம் அவை. ஆனால் உன்னைச் சிறைப் பிடிப்பதாகக் கூறியே இந்தப் பெரும்படைகளுடன் நாங்கள் வந்தோம். கரிகாலன் மட்டும் ஏதோ சந்தேகம் கொண்டு விட்டான். என்னுடைய சூழ்ச்சியை வெல்லும் திறமை அவனுக்கு இல்லை என்பதை நான் அறிவேன், படைவீரர்களுக்குக் கூட இன்னும் உண்மை தெரியாது...” என்று புலவர் அத்தியை நோக்கிக் கூறிக் கொண்டிருந்தார். அருகில் நின்றபடியே அரசிளங் குமரர் இருவரும் ஆதியும் புலவரை உற்றுப் பார்த்து நின்றார்கள். அத்தி வியப்போடு இடைமறித்துப் புலவரைக் கேட்டான். “படை வீரர்களுக்கு ஒன்றுமே தெரியாத நிலையில் நான் எப்படி அவர்களுக்கு முன் வரமுடியும்? சிறைப்பட வேண்டிய நான்...” “புலவருக்கு இது ஒரு பெரிய காரியமா? கரிகாலனை ஏமாற்றி விட்ட இவருக்குப் படை வீரர்களை வசீகரிக்க முடியாதா? இதற்கென்றுதான் பெருவிறற் கிள்ளி முன்னதாக இங்கே அனுப்பப் பெற்றான்!” என்று சாதுரியம் தோன்றச் சொன்னான் மணக்கிள்ளி. “அத்தி, வா! அந்தப் பாறையில் அமர்வோம்; ஆதி, கிள்ளி, வாருங்கள்” என்று புலவர் அருகில் இருந்த பாறைக்குச் சென்று அமர்ந்தார். மற்ற நால்வரும் பின்சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்தார்கள். புலவர் சொல்லலானார்: “அத்தி, உன்னைப் பற்றி இனி நீ கவலைப்பட வேண்டாம். உனக்கும் ஆதிக்கும் காதல் மணம் நடந்ததை இனி கரிகாலன் மறுக்கான்; ஆனால் ஆதியிடம் உனக்கு எவ்வளவு உறுதி வேண்டும் என்பதை நான் சொல்ல வேண்டுமா?” “புலவரே, ஆதி என் உள்ளத்தில் புகுந்தது முதல் அவள் என்னுடையவளாகி விட்டாள்; தமிழில் தங்களைப் போன்ற புலமையும், நாட்டியத்தில் வசீகரத் திறமையும், பேச்சில் மிகுந்த இனிமையும், கேட்பவர் இருதயத்தைக் கொள்ளை கொள்ளுங் கண்டத் தொனியும், வனப்பு மிக்க மேனியும் கொண்ட இவ்வரசிளங் குமரியைப் பெற்ற நான் பெரும் புண்ணியம் செய்தவனாவேன்; இப் பெண் திலகத்தை எனக்கு அளிக்கப் பெரு முயற்சி செய்த தங்களுக்கு நான் என்றும் கடமையுடையேன். தாங்கள் இதைப் பற்றி என்னிடம் இன்னும் சொல்ல வேண்டுமா? இனி உறையூர்ப் போர் முறையை உறுதி செய்ய வேண்டியதுதான்...” என்று அத்தி கூறினான். அத்தியின் மொழியைக் கேட்டு ஆதி உள்ளம் குளிர்ந்தாள்; புலவரும் அரசிளங்குமரரும் துணையாக இருந்து அவ்விதம் பேசுகையில் ஆதிக்கு ஒருவாறு தைரியம் பிறந்தது. ஆனால் கரிகாலனை நினைக்கையில் அவள் மனம் பதைபதைத்தது. தந்தையை ஏமாற்றத் துணிந்த தன் செய்கைக்குத் தானே வெட்கினாள். அதற்கும் மேலாக ஒரு வித அச்சம் அவள் மனத்தில் தோன்றியது. ‘உறையூரையும் கருவூரையும் கைப்பற்றுவதற்குப் பெரும் போர் நடக்குமே’ என்று தான் கலங்கினாள். உறையூர் அரசன் நல்லடிக்கோனைக் கொல்வதாக அத்தி வஞ்சினம் கூறியதைக் கேட்டு அவள் மனம் மருண்டது. கரூரிலிருந்து காவிரிப்பட்டினம் வரும் போது இடைவழியில் நல்லடிக்கோன் எதிர்ப்பட்டு, புலவரால் குத்துண்டு வீழ்ந்த நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டாள். அவள் மனத்தில் ஏதோ கலக்கம் மூண்டது; அந்தக் கலக்கத்தால் அவள் மெய்மறந்தாள்; மனம் மருண்டாள். “புலவரே, எனக்குத் தோன்றியது...” என்று சொல்லி மேலே பேச முடியாமல் தலைகுனிந்தாள். அத்தியைப் பார்த்துக் கொண்டே அவள் வெட்கம் கொண்டாள் என்று புலவர் தெரிந்து கொண்டார். “ஆதி, நீ என்ன சொல்ல விரும்புகிறாயோ, அதை உடனே சொல்; கவலை வேண்டாம்; வெட்கம் வேண்டாம், அச்சம் வேண்டாம்!” என்றார் புலவர். ஆதி துணிவு கொண்டாள். “வேறு ஒன்றும் புதியதாக இல்லை; இவரை...” “ஏன்? அத்தியைப் பற்றி உன் விருப்பம் என்ன?” “உறையூர்ப் போரில் தனியே போரிட விட வேண்டாம். இவருடன் நானும்...” “ஆதி இனி உனக்குப் பயம் ஏன்? அவன் குன்றாத வீரமுடையவன்! நீ இவனுடன் போவது அவ்வளவு...” “என் மனம் அவரைப் பிரிந்திருக்க இசையாது.” “ஒரே நாளில் உறையூரில் போர் முடிந்து விடும்; இன்றிரவே முற்றுகை...” “இல்லை, இவரைப் பிரிய மனமில்லை. இவருடன் நானும் போர்க்களம் வருவேன்...” ஆதி உறுதியாகப் பேசிக் கொண்டிருந்தாள். அவள் எதற்காக அவ்விதம் சொல்கிறாள் என்பதைப் புலவர் நன்கு அறிந்து கொள்ள முடியவில்லை. எனினும் ஆதியிடம் அவருக்கு இருந்த அளவு கடந்த அன்பு அவள் சொல்லை மறுக்க முடியவில்லை. ஆதியின் அறிவுக் கூர்மையை அவர் நன்கு அறிந்தவராதலால் அதற்கு மனம் ஒப்பினார். “ஆதி, உன்னைப் பெருவிறற்கிள்ளியுடன் இங்கேயே தங்கியிருக்கச் செய்யலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் உன் விருப்பம் மாறாக இருக்கிறது. போர்க்களத்தின் முன் அத்தியுடன் இருப்பதற்கு நீ துணிவு கொண்டது முதலில் என் மனத்தில் வியப்பை உண்டாக்கியது; ஆனால் போர்த்தொழில் பழகிய நீ இக்கொடும் போரில் முன் நிற்கத் துணிந்ததை நான் பாராட்டுகிறேன்.” “ஆதியின் விருப்பத்துக்குத் தாங்கள் மனம் ஒப்புகிறீர்களா?” என்று அரசிளங்குமரர் இருவரும் கேட்டனர். “ஆம்! அத்தி, ...உன் விருப்பம் என்ன?” என்று புலவர் சொன்னார். “ஆதியின் விருப்பத்தை மறுக்க நான் யார்? அரசிளங்குமரியின் கட்டளையை நான் மறுத்துச் சொல்ல முடியாதே!” என்று ஆதியையும் புலவரையும் மாறி மாறிப் பார்த்துச் சொன்னான் அத்தி. ஆதி நாணத்தால் உடலும் உள்ளமும் சிவந்தாள். புலவர் நகை செய்தார். ஆதி குறுக்கிட்டுப் பேசலானாள்: “உறையூர் மீது போருக்குப் புறப்படுவது, அந்நகரை நம் வசம் ஆக்க வேண்டிய காரணம் ஒன்று தானே!” “ஆம்! வேறு என்ன? ஆனால் நல்லடிக்கோனை அழித்த பின்பே அந்நகர் நம் வசமாகும்” என்றார் புலவர். “நல்லடிக்கோனைப் பழி வாங்குவது என் நோக்கம் என்பதும் ஒரு காரணம்.” அப்போது தான் ஆதி விழி மருள அவனைப் பார்த்தாள். “அவனைப் பழி வாங்குவதற்குக் காரணம்...” என்றாள். “காரணம் பொதுவானது!... உனக்குத் தெரியாதா!” என்றான் அத்தி. “அத்தி... அது ஆதியால் அறியப்பட்டது தானா?... நீங்கள் இருவரும் பேசுவதில் ஏதோ உண்மை தெரிகிறது” என்றார் புலவர். “தாங்களும் அறிந்ததுதான்” என்று அத்தி ஏதோ தயக்கத்தொட்டு சொன்னான். அவன் உள்ளத்தின் அடியில் பதுங்கிக் கிடந்த உணர்ச்சியே அவ்விதம் பேசச் செய்தது. ஆனால் உணர்ச்சியை அடக்கி உண்மையை மறைக்கத் தொடங்கினான். அவன் சொல்ல முயன்றதை அவன் உள்ளம் தடை செய்தது. உணர்ச்சி மிகுதியால் வெளிப்பட முயன்ற உண்மையை, அவன் உள்ளம் மறைத்து விட்டது. உடனே அதற்கு வேறு காரணம் கூற முற்பட்டான். “சேரனைச் சிறையிலேயே மாளச் செய்த கொடுமை அவனையே சாரும். இன்னும் பல கொடுமைகளுக்கு அவன் பொறுப்பாவான்; அவனைப் பழி தீர்ப்பது என் நோக்கம்.” அத்தியின் பேச்சில் மறைந்திருக்கும் உண்மையை ஆதி ஒருவாறு தெரிந்து கொண்டாள். அவன் பேச்சை புலவர் அவ்வளவாக மதிக்கவில்லை. அதற்குக் காரணம் வேறு. ‘ஆதி - அத்தியின் நட்பு என்றுமே குலைவுறாது. அவர்கள் காதல் நிறைவுடையது. ஆகவே இனி அத்தியின் மனப்போக்கு எவ்வகையிலும் மாறாது. அத்தியைக் கொண்டு அவன் பகைவனான நல்லடிக்கோனை வெல்வதே தக்க உபாயம். நல்லடிக்கோனைப் பழிவாங்குவதில் அத்தி பின்னடையான்; உறையூர் நம் வசம் ஆனால் கரூர் எளிதில் நம் வசமாகும் என்பதே புலவரின் முடிவு; ஆனால் அதைப் பற்றி ஆதி சிந்திக்கவில்லை. அவள் மனம் வேறு ஏதோ நுண்ணிய ஓர் உண்மையை ஆராய்ந்தது. “நான் தங்களுடன் வருவதில் தங்களுக்கு விருப்பம் உண்டா?” என்றாள் ஆழ்ந்த பார்வையோடு. “ஏன், இப்படிக் கேட்கிறாய்? எனக்கு அதனால் என்ன?...” என்றான் அத்தி. “அவ்விதமானால் நான் வருவேன்...” என்றாள். ஆதியின் வார்த்தைகள் அத்தியின் மனத்திலும் ஏதோ ஓர் உண்மையை நினைவுறுத்தியது. ஆதி - அத்தி இருவரின் பேச்சுக்களைப் பற்றிப் புலவர் ஒன்றும் அறிந்து கொள்ளாமல் சொன்னார்: “அத்தி, உன்னுடன் ஆதியும் வருகிறாள். உனக்குத் துணை செய்வாள். உன்னைப் பிரிய மனமில்லாமல் வருகிறாள்! வேறு ஒன்றும் இனி பேசுவதற்கில்லை. வாருங்கள் படைகள் இருக்குமிடம்!” என்று புலவர் புறப்பட்டார். “விரைவில் புறப்பட வேண்டும்; நம் படைகள் வந்திருப்பதை ஒற்றர்கள் நல்லடிக்கோனுக்கு உணர்த்தியிருப்பார்கள்! இனி வீண் பொழுது போக்காமல் புறப்பட வேண்டும்” என்றான் பெருவிறற்கிள்ளி. “ஆம், ஓடிச் சென்ற ஒற்றர்கள் நம் படை வருகையை உணர்த்தியிருப்பார்கள்; ஒரு வேளை துணைக்குச் சேரர் படையை அவன் விரும்புவான். சேரர் படையும் வருமானால் பெரிதும் சிரமம் உண்டாகும். இன்னும் சிறிது நாழிகையில் புறப்படுவதுதான் நல்லது” என்றான் அத்தி. “இப்போதே புறப்பட்டு விடலாம்; இனி என்ன தடை இருக்கிறது? படைகளுக்குச் சொல்லி விட்டால் அப்புறம் புறப்பட வேண்டியதுதான்” என்றார் புலவர். புலவருடன் நால்வரும் மலைப்பாறையை விட்டு இறங்கி, படைகள் இருக்குமிடம் சென்றார்கள். சாலையில் கீழ்மேல் புறமாக நெடுந்தூரம் வரையில் படைகள் தங்கியிருந்தன. மிகவும் நீண்ட நாழிகைக்குப் பின்னர் புலவரும் அரசிளங்குமரரும் வருவதைக் கண்டு வீரர்கள் குதூகலமும் வியப்பும் கொண்டார்கள்; அவர்கள் கண்களுக்கு, புலவருடன் நால்வர் வருவது தெரிந்து. மிக அணிமையில் புலவர் வந்தவுடன் அவரைப் பின்பற்றி ஆதி, அத்தி, அரசிளங்குமரர் முதலிய நால்வரும் வருவதைக் கண்டு துணுக்குற்றார்கள். காவிரிப்பட்டினத்திலிருந்து கடுகி வந்ததால் சோர்வுற்றிருந்த அவர்களெல்லாரும், ஆதி - அத்தியின் காட்சியால் உடல் பூரித்தார்கள். ‘ஓ’ என்று ஆரவாரமிட்டு ஒருவர் முன் ஒருவராக முன் வந்து கூடினார்கள். யாருக்காக, அவ்வளவு பெரூம் படையுடன் அவர்கள் கடுகி வந்தார்களோ, யாரைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று அவர்கள் அரசனால் ஆக்ஞையிடப் பெற்றுத் தேடி வந்தார்களோ அந்த இருவரும் அகப்பட்டு விட்டார்கள். ஆகவே அவ்வீரர் அடைந்த பெரு மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. வானும் நிலமும் ஒன்றானாற் போல் மெய் மறந்து அவர்கள் புடை பெயர்ந்தார்கள். புலவர் முன் படை வீரர் கூடி விட்டார்கள். உடனே புலவர் அவர்களைக் கை கவித்துச் சொன்னார்: “படை வீரர்களே, நீங்கள் வந்த காரியம் இன்னும் நிறைவேறவில்லை; இப்போது, நீங்கள் யாரைச் சிறைப் பிடித்துக் கொண்டு போக வேண்டி வந்தீர்களோ, அவ்விருவரும் தாமாகவே நம்மை அடைந்து விட்டார்கள். ‘ஆதி - அத்தியை, உறையூர்ச் சோழ வீரர் சிலரும் சேர நாட்டு வீரர் சிலரும் சேர்ந்தே நம் நாட்டை விட்டுக் கொண்டு போனார்கள். நம் இளவரசர் பெருவிறற்கிள்ளி பின் தொடர்ந்து சென்றதால் இம்மலைச் சார்பில் இருவரையும் விட்டுப் போய்விட்டார்கள். ஆனால் நம் அரசருக்குத் துரோகம் செய்ய முற்பட்டவர்கள் ஓடி விட்டார்கள். ஆகவே உறையூர் மீதும் சேர நாட்டின் தலைநகரான கரூர் மீதும் போர் தொடுத்து, நாம் வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டும்; நாம் செய்ய வேண்டியது இவ்வளவே. நம் அரசரிடம் பேரபிமானம் கொண்டு விளங்கும் அத்தியிடம் நாம் கருணை பாராட்டுவோம்; ஆதியின் மன விருப்பம் போல் அத்தி அவள் வாழ்க்கைத் துணைவனாகி விட்டதை நாம் ஏற்று ஆசி கூறுவோம். இனி விரைவில் உறையூரை முற்றுகையிட்டு வென்று அதன் பின் கரூரையும் கைக்கொண்டு வெற்றி பெற்ற பின், ஆதி அத்தி இவ்விருவரின் காதல் மணத்தைக் காவிரிப்பூம்பட்டினத்தில் பெரு மண விழவாக நம் அரசன் முன்னர் சிறப்பாகக் கொண்டாடுவோம். ஆதி - அத்தி இருவரின் சந்திப்பால் நீங்கள் குதூகலம் கொண்டு விளங்குகிறீர்கள் என்பதை உங்கள் ஆரவாரத்தால் அறிந்தோம். ஆகவே இப்போதே உறையூர் நோக்கி நீங்கள் புறப்படுவீர்களாக!” புலவரின் வார்த்தைகள் படை வீரருக்குப் பெருமிதத்தையும் வியப்பையும் அளித்தன. எதிர்பாரா விதமாக ஆதி அத்தியின் சந்திப்புக் கிடைத்து விட்டதையும் அதற்கு மாறாக இரண்டு பெரிய நாடுகளிடம் போர் செய்ய வேண்டி நேர்ந்திருப்பதையும் கண்டு அவர்கள் பலவிதமாக எண்ணிப் பேராரவாரம் செய்து புலவர் விருப்பத்துக்கு இணங்கிப் புறப்பட்டார்கள். புலவர், ஆதி, அத்தி, அரசிளங்குமரர் ஐவரும் தேரில் ஏறிக் கொண்டார்கள். படைகள் புறப்பாட்டிற்கு, முரசு கொட்டியது; போர்ப்பறை முழங்கியது; பகைவர்கள் செவிகள் செவிடுபடும்படியாக பலவித வாத்தியங்கள் சேர்ந்து கோஷணை செய்தன. சிராமலைச் சாலையின் அகன்ற இடமெங்கும் அடை வீரர் வரிசை வரிசையாக நின்று படைகளைப் புறப்பட விட்டார்கள். புலவரின் தேர் கடுகியது; அவரைப் பின் தொடர்ந்து அத்தி - ஆதியின் தேர், அரசிளங்குமரர் தேர் முதலியன தொடர்ந்து கடுகின. சிராமலைச் சாரலை விட்டுப் படைகள் சென்ற சிறிது நாழிகையில், சூரியன் மேல்புறம் சாய்ந்தான். படைகளும் கடிதாக மேற்கு நோக்கிப் பாய்ந்தன; மலையின் அடர்ந்த காடு அகன்ற பின்பும் சாலையின் இடமெல்லாம் பெரிய மரங்கள் இருபுறமும் வரிசையாக இருந்தன. மாலைக் காலத்து இருள் மிக எளிதாகச் சாலை எங்கும் கவிந்து கொண்டது. ஆனால் சிறிது நாழிகையில் வெண்ணிலாவின் கிரணங்கள், மரங்களின் சிறு இடுக்குகள் வழியே சாலையிடமெங்கும் சிறிது சிறிதாக ஒளியைப் பரப்பின. மின்னல் வேகத்தோடு பாய்ந்தோடிய படைகள் உறையூர்ச் சாலையை அடைந்து விட்டன. சாலையை அடைந்த உடனே அந்த எண்ணற்ற பெரும் படைகள் உறையூரின் வெளி மதிளை நோக்கிப் பாய்ந்தன. மதிளுக்குச் சிறிது தூரத்தில் புலவர் படை போய்க் கொண்டிருந்தது. போய்க் கொண்டிருந்த சாலையில் புலவர் படை நாலுபுறமும் சூழ்ந்து சென்றது. புலவர் படைக்கு எதிராக, வெளி மதிள் வாயிலிலிருந்து மிக வேகத்தோடு இரு குதிரை வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். எதிர்பாராத விதம் புலவர் படை நாலுபுறமும் சூழ்ந்து போகவே வேறு வழியின்றி எதிர் வந்த இரு குதிரை வீரரும் சரேலென்று குதிரையைத் திருப்பி மதிலுக்குள் புக முற்பட்டார்கள். உடனே புலவரின் தேர் அந்தக் குதிரை வீரரைப் பின் தொடர்ந்தது. அடுத்த கணமே, புலவர் படையிலிருந்த நான்கு குதிரை வீரர்கள் கடுகி முன் சென்று, இரு குதிரை வீரர்களையும் மதிளுக்குள் புகவொட்டாமல் வளைத்துக் கொண்டார்கள். புலவரின் தேரும் அந்தக் குதிரை வீரர் இருவரின் முன் சென்று நின்றது; அடுத்தாற் போல் புலவர் படை நாலு புறமும் ஒருங்கே மதிள் வாயிலில் சூழ்ந்து கொண்டன. புலவரும் அரசிளங்குமரரும் தேரிலிருந்து குதித்து, வளைத்துக் கொள்ளப்பட்ட இரு குதிரை வீரரிடம் அணுகினார்கள். குதிரையிலிருந்த இரு வீரரும் அஞ்சிப் பதைபதைத்துக் கீழே குதித்தார்கள். |