![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 18. சூழ்ச்சி “ஆதி நடந்த காரியம் என்ன? உனக்குக் கேடு சூழ்ந்தவர்கள் யார்? பயமில்லாமல் சொல்; என் மனம் கலங்குகிறது; பேசாமல் இருந்தால் உண்மை எவ்விதம்...” என்று மணக்கிள்ளி மறுகிப் பேசினான். “நீ எனக்கு உதவி செய்கிறாயா?... இப்போதே!...” என்றாள் சிவந்த கண்களுடன். “ஆதி... உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் வார்த்தை வெளிவந்த ஒரு கணத்தில் உன் விருப்பத்தை நிறை வேற்றுகின்றேன்: ஏன் உயிரையே இழக்க நேர்ந்தாலும் அஞ்சவில்லை... என்று கூறிவிட்டு ஆதியின் வார்த்தைகளை எதிர்பார்த்தான். “அவர் நாடு கடத்தப்பட்டார்!...” என்று கூறுகையில் ஆதியின் குரல் தடைப்பட்டது. “யார்?” “ஆடலாசிரியர்!- இப்போதே புறப்பட்டால்தான் அவரை மீட்டு வரமுடியும்! ஆனால் தந்தையின் கட்டளை கொடுமையாக இருக்கிறது!” “அத்தியையா நாடு கடத்தி விட்டார்! இது என்ன விபரீதம்! எனக்குத் தெரியாமலா! ஏன்?” “மருதியென்ற கணிகையிடமிருந்து அவருக்கு ஓலை வந்தது; அதைப் படித்துக் கொண்டிருந்தார்; அதே தருணம் தந்தையும் புலவரும் அங்கே வந்து...” “ஆதி... நீ பயப்படாதே!... காரியம் நடந்தது எப்போது?” “சிறிது நாழிகைதான் ஆகி இருக்கும்; இதற்காகவே உன்னிடம் ஓடி வந்தேன். என்னை உன்னிடம் போகும்படிக் குறிப்பிட்டார்... விரைவில் புறப்படு. இல்லையேல்... நானே போய்விடுகிறேன்... “ஆதி! நீ கவலைப்படாதே! தந்தையின் கட்டளையை நான் ஏற்றுக் கொள்கிறேன். அத்தியை இன்னும் சிறிது நாழிகையில் இங்கே கொணர்கிறேன். நீ இங்கேயே இரு” என்று கூறிவிட்டுக் கையில் வேலை எடுத்துக் கெண்டு புலியேறுபோல் தாவி நடந்தான். ஆதியின் உள்ளம் குதூகலம் கொண்டது. மணக்கிள்ளி புறப்பட்ட அத்தருணம், “நில்! இதில் முறைகேடானது ஒன்றுமில்லை... என்னுடைய கட்டளையை மறுக்காதே!” என்று கூறிக் கொண்டே கரிகாலன் புகுந்தான் அங்கே. அதைக் கேட்டு அஞ்சிப் பதை பதைத்தாள் ஆதி. மணக்கிள்ளி சிறிதும் பயமில்லாமல் கரிகாலன்முன் நின்றான். “தந்தையே! எண்ணித் துணிய வேண்டிய காரியத்தை இவ்வளவு விரைவில் செய்யத் துணிந்தது நேர்மையல்ல! ஆதி - அத்தியின் தொடர்பு நம் நகர் அறிந்ததாயிற்றே! அவன் அற்பமானவனா? அரசகுலத்துக் கான் முளைதானே! எவ்வகையிலும், மற்ற அரசிளங் குமரர்களை விட அவன் தாழ்ந்தவனல்ல! அவன் தொடர்பு ஆதிக்குக் கூடாது என்று எண்ணியிருந்தால், தொடக்கத்திலேயே பிரிவு செய்திருக்க வேண்டும்; பிரிக்க முடியாத ஒன்றை வேறு பிரிப்பது முடியாத காரியம்; பிரியும் பொருள் தாமாகவே பிரியும். ஆகவே, நான் இப்போதே சென்று அத்தியை மீட்டு வருகிறேன். தடை சொல்ல வேண்டாம்!” என்று புறப்பட்டான் மணக்கிள்ளி. “குமரா, நில்! - பதற்றம் காரியத்தைக் கெடச் செய்யும்; எண்ணித் துணிந்ததை இகழ்ந்து செல்வது உன் கடமையா? அத்தியின் தொடர்பை நான் வெறுக்கிறேன்; பழிக்கு அஞ்சுகிறேன் நான்; மாதவியின் காதலில் மயங்கிய கோவலனைப் பார்த்தாயா? - இன்று வரை குலமங்கையான கண்ணகியைக் கண்ணெடுத்தும். பார்க்க வில்லையாம் அவன்! - அதே போல், அத்தியின் காதலியாக ஒரு கணிகை உறையூரில் இருக்கிறாள்; இவனுடன் பல நாள் இருந்தவன் - இப்போது இவனை வெறுத்து விட்டு, செங்கணான் மகன் நல்லடிக்கோனிடம் மயங்கிக் கிடக்கிறாளாம். கணிகையால் வெறுக்கப்பட்ட களியல்லவா அத்தி! - அவன் ஆதிக்கு எவ்வகையில் ஏற்றவனவான்? அந்தக் கணிகை அத்திக்கு வெறுப்புடன் ஓலை எழுதியிருக்கிறாள்; அதில், ஆதியையும் அத்தியையும் விபரீதமாகப் பிணைத்துப் பழிமொழிகளை வரைந்திருக்கிறாள்! அதைக் கண்டது முதல் என் மனம் பதறுகிறது; என் மகளாகப் பிறந்த இவள் அவனை அடைவது எனக்கு விருப்பத்தை அளிக்காது; அந்தக் கூத்தனை, இந்தப் புலவரின் வாய்மொழிக்காகவே இவ்வளவு காலம் வெறுக்காமல் இருந்தேன், இன்று ஓலையைப் படித்த பின்பு - நாட்டிய அரங்கில், அவன் ஆதியுடன் பழகிய விதமே என்னை இவ்வளவு கோபம் கொள்ளச் செய்தது...” கரிகாலனின் வார்த்தைகளைக் கேட்டு மணக்கிள்ளி, சிறிதும் மனம் மாறவில்லை; வார்த்தைகளில் தொனித்த உட்பொருளை உணர்ந்து கொண்டான். ஆதியின் உள்ளம் மறுகியது; ‘மணக்கிள்ளி நின்று விடுவானோ’ என்று பயந்து சோர்ந்தாள். “தந்தையே! - தாங்கள் சொல்வன யாவும் உண்மையே! ஆனால் தாங்கள் கொண்ட முடிபு நேர்மையன்று. குற்றம் எதுவுமே நிகழவில்லை! தொடர்புடைய பொருள்...” என்று கூறுகையில் கரிகாலன் இடைமறித்து, “என் கட்டளையை மாற்றுவதில் பயனில்லை” என்றான். “நான் சொல்கிறேன்: இதில் குற்றம் இல்லை! - ஆதிஅத்தி இருவரிடமும் குற்றம் இல்லை; அவ்விருவருடைய நட்பையும் இந்நகரில் யாவரும் அறிவார்கள்; இந்நிலையில் நீ செய்த காரியம் பொருத்தமில்லாதது... நேர்மையில்லாதது என்றே மதிக்கப்படும்; மணக்கிள்ளி சொல்வதுபோல் தொடர்புடைய பொருள்கள் இரண்டும் தூயன! - அவற்றின் தொடர்பில் குற்றம் காண்பது, காண்பவரிடமுள்ள குற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்?” என்றார் புலவர். “எனக்கு... விருப்பம் இல்லாததைச் செய்வதிலோ, சொல்வதிலோ - உங்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கிறது. காரணம் தெரியவில்லை... எது நேர்ந்தாலும்...” என்று கரிகாலன் பேசி முடிப்பதற்குள், மணக்கிள்ளி புறப்பட்டான். “தந்தையே... வருகிறேன்!” என்று கூறிவிட்டு மின்னலென மறைந்தான். “கிள்ளி! கிள்ளி!!” என்று கூவினான் கரிகாலன். அவன் மறைந்து வேறு வழியே போய் விட்டான். மாடத்தின் வெளிமுற்றத்தில் குதிரையின் கால்குளம்புச் சத்தம் கேட்டது. சாளரத்தின் வழியே யாவருடைய பார்வையும் சென்றன. மிக வேகத்தோடு குதிரையில், ஒரு வீரன் போய்க் கொண்டிருந்தான். ‘மணக்கிள்ளியே அவ்வீரன்’ என்பதை உணர்ந்து கரிகாலன் மனம் கலங்கினான். ஆதியின் உள்ளம் குதூகலம் கொண்டது. புலவரும் பெருவிறற் கிள்ளியும் புன்னகை செய்தார்கள். கரிகாலனுக்குச் சினம் மூண்டது. கண்கள் சிவக்கப் பார்த்தான்; “என் கட்டளையை இகழ்ந்து செல்வது! நான் பணிந்து செல்வது! முடியாது! புலவரே, அத்தி இந்நகருக்குள் புகுந்தால்... என் வாக்குறுதியை நினைவில் வைத்துக் கொள்வானல்லவா!” என்றான் சீற்றத்தோடு. ஆதி மோதுண்ட தளிரென நடுங்கிச் சாம்பினாள். புலவர் அமைதியாகச் சொன்னார்: “கரிகால உனக்குப் பெருமை அளிக்கும் காரியத்தில் நீயே வருத்தப்படுவது நேர்மையா? - கோபம் கொள்வதுதான் நியாயமா? நீ நினைத்தால்...” “புலவரே, எல்லாம் உம்முடைய சூழ்ச்சி! இல்லையேல் இவ்வளவுக்கு ஒன்றும் நடந்திராது; என்ன நேர்ந்தாலும், நான் என் கட்டளைப்படியே செய்வேன்...” “அப்படியானல், என்னையும்...” என்று கூறி முகத்தைக் கைகளால் புதைத்துக் கொண்டாள் ஆதி; அவள் அழுகையில் விம்மும் குரல் மட்டும் கரிகாலனின் உள்ளத்தைத் தொட்டது. சரேலென்று ஆதியை அணுகிக் கொண்டே, “ஆதி!... உன் அறிவுக்குத் தெளிவு உண்டாகவில்லையா? - உனக்கு நன்மையையே நாடும் என்னிடத்தில் நம்பிக்கை பிறக்கவில்லையா?” என்று சொன்னான். “நான் அறிவுத் தெளிவுடன் இருக்கிறேன்” என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு ஓடினாள் ஆதி. கரிகாலனும் பின் தொடர்ந்தான். “ஆதி! ஆதி!!” என்று அவன் அழைக்கும் குரலை அவள் மதிக்கவில்லை. அவளுடைய கன்னி மாடத்தை நோக்கி விரைந்து ஓடினாள். புலவரும், பெருவிறற் கிள்ளியும் மாளிகையின் வாயிலில் நின்று, மணக் கிள்ளியின் வரவை எதிர்பார்த்தார்கள். அரண்மனையை விட்டு வெளியேறிய மணக் கிள்ளி, அரச வீதி வழியே குதிரையில் கடுகிச் சென்றான். அத்தி எங்கே போயிருப்பானே என்று அவன் அஞ்ச வில்லை. அவன் போயிருக்குமிடத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லை; காவிரிப்பட்டினத்தின் எல்லைப்புறத்தை நோக்கிக் கடுகினான். எல்லைப்புறத்தையும் அடைந்து விட்டான். புறமதிளின் காவலரிடம் வினவினான். அவர்கள் குறிப்பிட்டபடி காவிரிக்கரை நோக்கிச் சென்றான். காவிரிப்பட்டினத்தின் எல்லைப்புறமாக காவிரிக்கரை வழியே மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள் ஒரு சிறு கூட்டத்தினர். அந்தக் கூட்டத்தைக் கண்டவுடன் மணக்கிள்ளி குதிரையைக் கடிதாகச் செலுத்தினான். குதிரை மிக விரைவில், அந்தக் கூட்டத்தை அணுகியது. குதிரைக் குளம்படியின் சத்தம் கேட்டு, அந்தக் கூட்டத்தினர் சிறிதே நின்று திரும்பிப் பார்த்தார்கள். குதிரை அந்தக் கூட்டத்தை அணிமையில் அடைந்ததும் நின்றது. மணக்கிள்ளி நிலத்தில் குதித்தான். “அத்தி!” என்று கேட்டுக் கொண்டே முன் வந்தான். திடுக்கிட்டார்கள் மற்ற யாவரும். கரிகாலனால் அனுப்பப்பட்ட காவல் வீரர்கள், சரேலென்று விலகிக் கொண்டார்கள். மணக்கிள்ளியை உற்று நோக்கியபடியே அத்தி பிரமித்து நின்றான். அத்தியின் அருகில் சென்று அவன் தோள்களில் கை வைத்து புன்னகையோடு பார்த்தான் மணக்கிள்ளி. “கிள்ளி! இது என்ன? உன் தந்தையின் கட்டளையை நீ அறிந்திருப்பாய்! நான் கட்டளைக்குத் தலை வணங்கி வந்துவிட்டேன். ஆனால், இனி இவ்வெல்லையை விட்டுப் போக எண்ணவில்லை. ஆதியை என் மனம் மறக்கும் வரை யான் இவ்வெல்லையைக் கடந்துபோக முடியாது; எப்படியும் அவளை மீண்டும் சந்திப்பதாக உறுதி கொண்டுள்ளேன்; உன்னிடமே சொல்லிவிட்டேன்! நீ எங்கே போகிறாய்?...” என்றான் அத்தி, அவன் பேச்சில் களங்கம் இல்லை; அச்சம் இல்லை பணிவு இல்லை; உறுதி இருந்தது; உணர்ச்சி பிரதிபலித்தது. தூய்மையின் ஒளி அவன் முகத்தில் பரவியிருந்தது. மணக்கிள்ளி அத்தியின் வார்த்தைகளைக் கேட்டு அவசமானான். ஆதியிடம் தீவிர காதல் உடையவன் என்பதைக் கண்டு கொண்டான். “அத்தி, உன்னைப் பார்க்கவே நான் இங்கு வந்தேன். வேறு காரியமில்லை. உனக்காக ஆதி உயிர் வாழ்கிறாள் என்பதை நான் உணர்வேன். என் தந்தையின் கட்டளையை நான் முன்னதாக அறியவில்லை; நான் அறிய நேர்ந்திருந்தால் இவ்வளவு நேர்ந்திருக்காது; ஆதியின் வார்த்தைகளைக் கொண்டே நிகழ்ந்ததை இப்போது அறிந்தேன். உன்னிடம் அவளுக்குள்ள அன்பையும் தீவிர காதலையும் இன்றே அறிந்தேன்; அவளை மணப்பதற்காக நூற்றுக்கணக்காக அரசிளங்குமரர் இந்நகரில் வந்து தங்கி இருக்கிறார்கள்; எனினும் உனக்கே ஆதி உரியவள். தந்தையின் கட்டளை ஒருபுறம் இருக்கட்டும். நீ அதற்கு மனம் வருந்தாமல் என்னுடன் வா!” என்றான். அத்தி ஆச்சரியத்தால் ஒரு கணம் வாய் பேசாமல் இருந்தான். மணக்கிள்ளியின் முகத்தை உற்றுப் பார்த்தான். “மணக்கிள்ளி, உன் வார்த்தைகள் என்னைத் திகைக்கச் செய்கின்றன. உண்மையில் நீ கூறுவது...” என்று பேச்சை நிறுத்திக் கொண்டு மீட்டும் அவனை உறுதியாகப் பார்த்தான். “என்னிடம் உனக்கு நம்பிக்கையில்லையா? இப்போதே புறப்படு! உனக்குக் குறை எதுவும் உண்டாகாமல் காத்துக் கொள்கிறேன்” என்றான் மணக்கிள்ளி. அத்தி ஒருவாறு உறுதி செய்து கொண்டான். ‘ஆதியின் பெரு முயற்சியே, இவன் என்னைத் தேடி வந்திருக்கிறான்’ என்று தெளிவு கொண்டது அவன் மனம். உடனே அத்தியின் பார்வை நல்லடிக்கோனின் தூதுவர் மீதே சென்றது. “ஒற்றர்களே! நல்லடிக்கோனிடம் சென்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள்; விரைவில் பழிக்குப் பழி வாங்குவதாகச் சொல்லுங்கள்” என்றான். “அப்படியே சொல்கிறோம்” என்று கூறி விட்டு ஒற்றர்கள் ‘தலை தப்பியதே’ என்று விடைபெற்றுச் சென்றார்கள். அத்தி ஒற்றர்களிடம் நல்லடிக்கோனுக்குச் சொல்லியனுப்பிய செய்தியைக் கேட்டு மணக்கிள்ளி வியப்புற்றான். “அத்தி, நல்லடிக்கோனுக்கும் உனக்கும் ஏன் அவ்வளவு பகை” என்றான் மணக்கிள்ளி. “அவன் பெரிய சூழ்ச்சி செய்து விட்டான்! அந்தச் சூழ்ச்சியே இன்று நான் கரிகால் வேந்தரால் நாடு கடத்தப்பட்டதற்குக் காரணம். அதைப் பற்றி விரிவாக மாளிகைக்கு வந்து சொல்கிறேன்” என்றான் அத்தி. “ஆமாம்! அப்படியே பேசுவோம்” என்று கூறி விட்டு மணக்கிள்ளி குதிரைமேல் ஏறிக் கொண்டான். அத்தியும் அவன் பின் ஏறிக் கொண்டான். மணக்கிள்ளியின் கட்டளைப்படி காவல் வீரர் திரும்பிச் சென்றார்கள். அரசனின் கட்டளையை அவர்கள் நினைத்தார்கள் என்றாலும், அரசிளங்குமரனுக்கு மாறாக அவர்கள் என்ன செய்ய முடியும்? மணக்கிள்ளியின் குதிரையில் அத்தியும் ஏறி அமர்ந்து செல்வதைக் கண்டு யாவரும் வியப்புற்றார்கள். ‘கரிகாலனின் கட்டளை என்னாவது?’ என்று காவல் வீரரின் உள்ளம் கலங்கியது. |