(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

4. பிரிவு

     சேனாபதிகள் அறுவரும் சேர்ந்து செல்வதைக் கண்டவுடன் கருவூர் நகர மக்கள் பலவிதமாக எண்ணத் தொடங்கினர். கழு மலப் போரில் சேரன் படு தோல்வி அடைந்த செய்தியால், யாவருக்கும் மனம் புழுங்கியது. எந்தக் காலத்தும் போரில் பின்னிடாத சேரநாட்டுப் பெரும்படை, சிறு படையையுடைய செங்கணான் படைக்குப் புறங் கொடுத்து ஓடி வருவதா என்று இருதயம் துடித்தனர். போரில் படைத் தலைமை தாங்கிச் சென்ற சேனாபதிகளை மனத்தால் வைது நொந்தனர். ‘வெற்றிகண்ட சோழன் இனி வெறுமே இருப்பானா? - நம் நாட்டின் மீது மென்மேல் போர்தொடுத்த வண்ணமாக இருப்பானே!’ என்று கலங்கியிருந்தார்கள். அந்நிலையில் அன்று அவ்வீர சேனாபதிகள் அறுவரும் அரசனைக் காணச் செல்வதைக்கண்டு, ‘மறுபடியும் இவர்கள் போர் செய்யக் கருதுகிறார்கள்போல் தோன்றுகிறது. அதனால்தான் இவ்வளவு கடிதாக மனக் கலக்கத்தோடும், தீவிர வேட்கையோடும் போகிறார்கள்; என்ன செய்யப் போகிறார்களோ!’ என்று பல விதமாகப் பேசிக்கொண்டனர். சேனாபதிகள் அரசனின் அரண்மனையை அடைந்தனர்.

     வில்லெழுதிய கொடி உயர் வானத்தில், பறவையின் சிறகென அசைந்துகொண்டிருந்தது. சிற்பத்தின் பேரழகு துளும்பும் எழுநிலை மாடத்தின் முகப்பில், நிலைத் துண்கள் என இரு வில் வீரர் நின்று கொண்டிருந்தனர். இரும்பை உருக்கி வார்த்தாற் போன்ற திண்ணிய உடல் கொண்ட அவ்வீரர் இருவரும் மாடத்தின் வாயிலில், குதிரைகளிலிருந்து சேனாபதிகள் அறுவரும் கீழிறங்குவதைக் கண்டனர். தூண்கள் நகர்வதென இரு பக்கமும் விலகி நின்று வாளை உயர்த்தி வணக்கம் செய்தனர். மத யானைகள் போல் இறுமாந்த பார்வையோடு ஆறு சேனாதிபதிகளும் குதிரைகளை நிறுத்தி விட்டு மிக வேகமாக வாயில் மாடத்துக்குள் புகுந்தனர். அடுத்தாற்போல் உள்ள மண்டபத்துக்குள் புகுந்தனர். பளிங்கு மண்டபத்தின் வாயிலில் நின்ற இருவீரரும், அரசன் தனியே உலவிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள்.

     அத்தி முன்னே புகுந்தான் துணிவோடு; நன்னனும் மற்றவர்களும் அடுத்தாற்போல் தொடர்ந்து சென்றனர். உலவிக் கொண்டிருந்த கணைக்காலிரும்பொறை திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அத்தி, வேலொடு கை குவித்து நிற்பதைக் கண்டான். அவன் பார்வை அத்தியைப் பதற்றம் கொள்ளச் செய்தது. ஆனால், தான் குற்றம் செய்ததற்கு மன்னிப்பு வேண்டுபவன் போல் தலை குனிந்து மௌனமாக நின்றான் அத்தி. சேரவேந்தன் சட்டென்று கட்டிலில் அமர்ந்தான்;

     “அத்தி! நீ ஒரு பேடி என்று நான் கருதவில்லை; உன்னுடைய வீரம் இவ்வளவு இழிவானது என்றும் எனக்குத் தெரியாமல் போயிற்று. போருக்குச் சென்ற ஒரு படைத் தலைவன், போரை மறந்து அவன் காதலியுடன் நாட்டிய மாடுதலில் ஈடுபட்டிருந்தான் என்றால், அதைவிட இழிவு வேறு என்ன வேண்டும்? உன்னால் எனக்கு ஏற்பட்ட தோல்வி பொறுக்கமுடியாதது; இந்தத் தோல்வியை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்; கழுமலத்தையும், கணையனையும் பகைவன் கையில் பறி கொடுத்ததை ஒப்பமாட்டேன்; இன்றே, செங்கணான் மீது போர் தொடுக்கிறேன்; வெற்றி பெறாமல் போர்க் களத்தைவிட்டுத் திரும்ப முடியாது! நம் சேனாபதி கணையனையும், அவனுக்கு நாம் அளித்த கழுமல நகரையும் அகப்படுத்திக் கொண்டுவிட்டான் சோழவேந்தன்! ஆகவே, சோழனின் சேனாபதியின் நகராகிய ‘போர் புறத்தை’யும் நாம் கைப்பற்றி, சோழனையும் சிறைப் படுத்த வேண்டும். இந்தப் போருக்கு நீ மருதியை அழைத்துச் செல்ல முடியாது! அந்தக் கணிகை மகளை மறந்துவிடு! உன் நடனத் திறமையெல்லாம் போருக்குப் பின் வைத்துக்கொள்; சேர குலத்தில் உதித்த நீ, போருக்குப் புறங்கொடுத்து ஓடி, ஒரு கணிகையுடன் நாட்டிய மாடிப் பொழுது போக்குவது மானமுடைய செயலா? ஆணாகப் பிறந்த நீ - அரசகுலத்துக் கான் முளையாகிய நீ - ஒரு நகரின் அரசுரிமைக்கு உரிய நீ - காதல் மங்கையாகிய கணிகை ஒருத்தியுடன் திரிவது மதியீனமானதல்லவா!”

     சேரன் கணைக்காலிரும்பொறையின் வார்த்தைகள் அத்தியை மனம் கலங்கச் செய்தன. மருதியைப் பற்றி இழிவாகச் சொல்வதெல்லாம் அவனுக்குக் கோபத்தை உண்டாக்கின. மனம் பதறினான். ‘நாட்டியக் கலையின் உயர்வைப் பற்றி அரசனுக்கு என்ன தெரியும்? அதில் உள்ள இன்பத்தை அரசன் உணரவில்லையே! என்னுடைய நடனத்திலே மதிமயங்காதவர் இவ்வுலகில் உண்டா? மருதியின் நாட்டிய அபிநயத்திலே ஈடுபட்டுப் பரவசம் ஆகாதவரும் உண்டோ! உலகில் நாட்டியத்தின் உயர்வை எடுத்துக்காட்டவே மருதியும் நானும் பிறந்தோமே என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. இந்நிலையில் அவளைக் கணிகை என்பதற்காக இழிவுபடுத்திக் கூறுவது தகுமா? அவளுக்காக யாவற்றையுமே நான் தியாகம் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன் என்பதை அரசன் உணரவில்லையே!’ - என்று தனக்குள் மனம் கொதித்தான்.

     “வேந்தே, தங்கள் கட்டளைப்படி நடக்கச் சித்தமாயிருக்கிறேன்; ஆனால் மருதியை மறக்க முடியாது! நம் தமிழகத்திலே நாட்டியக் கலையை உயிர்ப்பிக்கத் தோன்றியவள் அவள்! அற்பமாக அவளை நினைத்துவிட வேண்டாம். தமிழகத்தின் பண்டைத் தமிழ்க்கூத்தும், ஆரியக் கூத்தும் அவளுக்குத் தெரிந்ததுபோல் வேறு யாருக்கும் தெரியாது! அவள் கணிகையென்றாலும் அனல் போன்ற தூய்மையுடையவள்! என்னைக் கூட நர்த்தனத்திலே வென்று விட்டாள் அவள்! ஆகையால் அவளை இகழ்ந்து கூறுவதை நான் விரும்பவில்லை. ‘யுத்தத்திற்குப் போகும் போது கணிகையரை அழைத்துச் செல்லலாம்’ என்ற நீதியைக் கொண்டு நான் அவளை அழைத்துப் போகவில்லை; அவளைப் பிரிய மனமில்லாமல்தான் முன்பு அழைத்துச் சென்றேன்! இச்சமயம் நான் அவளைப் போருக்குப் போகும்போது அழைத்துச் செல்ல விரும்பவில்லை. ஆதலால் தங்களுக்குக் கவலை வேண்டாம்; யுத்தத்தில் பெருங்கேடு எதுவும் ஏற்படுமானால், அந்தக் கணமே, மருதியைக் காணத் திரும்பிவிடுவேன்; இதுவே என் வேண்டுகோள்!” என்று அத்தி மொழிந்தான்.

     அரசனுக்குச் சிறிதே கோபம் தணிந்தது. மருதியை விட்டுப் போக விரும்பினான் என்பதைக் கேட்டதும், அவனுக்கு மகிழ்ச்சி கூட உண்டாயிற்று; ஏனெனில், அத்தி போர்த் திறமை மிக்கவன் என்பதும், பல போர்களில் வெற்றி அளித்தவன் என்பதும் நன்கு தெரிந்ததுதானே! ஆகவே, இனி நடக்கும் போரில் அத்தியால் வெற்றி நிச்சயம் கிட்டும் என்று குதூகலம் கொண்டான்.

     “அத்தி, உன் மனம் நல்ல வழியிலே மாறியதற்காக மிகவும் மகிழ்கிறேன். உன் மீதிருந்த கோபம் இப்போது எனக்கு இல்லை. இனி, நம் படைகள் புறப்பாட்டிற்கு வேண்டியவற்றைச் செய்க! இன்று இரவே புறப்பட்டாக வேண்டும். நிலவின் வெள்ளொளியிலே குதூகலமாகப் படைகள் போகலாம்! நன்னா? போர்ப்பறை கொட்டச் செய்து, படைகளை ஒன்றாக்குவாயாக!”

     “வேந்தே, இதோ ஆயத்தம் செய்கிறேன்” என்று கூறி நன்னனும் கங்கனும் வெளியேறினர்.

     “கட்டி, புன்றுரை! நீங்கள் நம் படைகளின் அணி வகுப்பை நன்கு அமைத்து, முன்னதாக ஆமிராவதி நதிக் கரையில் கொண்டு நிறுத்துங்கள்!” என்றான்.

     “அவ்விதமே செய்கிறோம்!” என்று வணங்கி விட்டு அவ்விருவரும் விடை பெற்றுச் சென்றார்கள்.

     “ஏற்றை, நமது ஆயுதக் கொட்டில்களைத் திறந்து விட்டு வீரர்களுக்கு ஆயுதங்களை எடுத்துக் கொள்ளச் செய்க!” என்றான் சேர மன்னன்.

     “கட்டளைப்படியே!” என்று ஏற்றையும் அகன்றான்.

     “அத்தி, நீ இந்தப் போரில் என் அருகிலேயே இருந்து வர வேண்டும்; நான் சொல்லும் இடங்களுக்கே நீ போக வேண்டும்; ஆதலால் விரைவில் உன் போர்க் கவசங்களை அணிந்து கொண்டு வந்துவிடு” என்று கட்டளையிட்டான்.

     “தங்கள் விருப்பம் போல் செய்கிறேன்” என்று கூறி விட்டுப் பளிங்கு மண்டபத்தை விட்டு வெளியேறினான் அத்தி. மாடத்தின் வாயிலில் நின்ற தன் வெண் குதிரை மீது ஏறிக்கொண்டு, தன் மாளிகை நோக்கி விரைந்து சென்றான் அத்தி.



மருதியின் காதல் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16