சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
செம்பருந்து (Brahminy Kite) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
குமரகிரி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 15 |
(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 26. சிராமலையில் காவிரிப்பூம் பட்டினத்தை விட்டுப் புறப்பட்ட படைகள் காவிரிக்கரை வழியே சிராமலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த புலவர் இரும்பிடர்த்தலையாரின் தலைமையில் தான் படைகள் அணிவகுத்துச் சென்றன. ஒரு புறம் காவிரி நதியும், மற்றொரு புறம் பரந்த வயல் வெளியிடமும் நடுச்சாலையில் செல்லும் படைகளுக்கு எல்லையற்ற குதூகலத்தை அளித்தன. இயற்கையின் அளப்பரிய வனப்பு விசித்திரங்களைக் கண்டு களித்து மிடுக்குடன் சென்றார்கள் சோழ நாட்டு வீரர்கள். காவிரிச் சாலையில் கிழக்கு மேற்காக இரண்டு காத தூரத்துக்கு மேல், சோழ வீரரின் நால்வகைப் படைகளும் அணிவகுத்து எள் விழ இடமில்லாமல் மொய்த்துச் சென்றன. ஆயிரம் ஆயிரமாகப் பலவித ஆயுதங்களுடன் ஆரவாரமிட்டுச் செல்லும் வீரர்களின் படைப் பெருங்காட்சி பார்ப்பவர் உள்ளத்தில் பெரும் பதற்றத்தை உண்டாக்கும் என்பதில் அதிசயம் என்ன? படைகள் போகும் ஆரவாரத்தால், சாலையில் மரங்களில் வாழும் பறவையினங்களும் அஞ்சி ஓலமிட்டு இரிந்து ஓடின. வழியிடையே இயங்கிக் கொண்டிருக்கும் வழிப் போவோர்களும், யாத்திரிகர்களும் ஆங்காங்கே ஓடிப் பதுங்கினார்கள். வானமும் மண்ணும் ஒன்றாகும்படி புழுதிகள் மேலெழுந்து எங்கும் பரவி உருத்தெரியாமல் சூழ்ந்து சுழன்றன. படைகள் மிகுந்த குதூகலத்தோடும் வேகத்துடனும் பெருங்க் கூக்குரலே கேட்டது. நிலம் அதிர்ந்தது; சாலையின் இடம் அதிரும்படிப் படைகள் போவதால், காவிரியாற்றின் ஒரு புறமாக நீர்க் குமிழிகள் புறப்பட்டன. புழுதிப் படலங்கள் ஆற்றின் மேல் பரவி, காவிரியின் இயல்பான செந்நிற நீரை மேலும் செம்மையுறக் கலங்கச் செய்தன. இவ்விதமாகப் படைகள் பலவிதக் காட்சிகள் தோன்ற, மேற்கு நோக்கிப் பல காத தூரம் கடந்து விட்டன. சூரியன் தன் வெம்மை முழுதையும் கக்சிச் சிதறவிட்டு நடுவானத்திற்கு வந்துவிட்டான். கதிரவன் வெம்மையைச் சிறிதும் மதியாமல், சிராமலையை அடைந்து கொண்டிருந்தன, சோழர் படைகள். புலவரின் கட்டளையை எந்தக் காரணத்தாலும் தடைப்படாமல் நிறைவேற்ற வேண்டும் என்று தீவிர உறுதி கொண்டு சென்றார்கள் வீரர். ‘ஆதியையும் அத்தியையும் சிறைப்பிடிக்க வேண்டும் என்று தான் புலவர் படை திரட்டினார்’ என்பது படைவீரர் யாவரும் அறிந்ததே. ஆனால் புலவரும் அரசிளங்குமரர்களும் ஒன்று பேசி முடிவு செய்ததை அவர்கள் சிறிதும் அறியார்கள். அதனால் என்ன? புலவரின் ஆணைக்கு அடங்கி நடக்கும் அவர்களைப் பற்றிக் கவலை ஏன்? தமிழகம் கடந்து அயல்நாடு போக வேண்டும் எனினும் அவர்கள் மனம் கலங்கார்கள். முடிமன்னன் கரிகாலனின் பெருமைக்கே காரணமானவர் அல்லவா? அவர் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ‘நான் முன் நீ முன்’ என்று ஒவ்வொரு சோழ வீரனும் முற்படுவான் என்பதில் சந்தேகம் என்ன? நடு வானத்தை விட்டு மேல் வானத்திலே சாய்ந்து கொண்டிருந்தான் கதிரவன். எனினும் வெம்மை தணியவில்லை; எவ்வளவு வெம்மை மிகுந்திருந்த போதிலும், குளிர்நிறை சோலையும் வாவியும் அருகில் இருப்பன போல் படைகள் அவலமின்றிக் கடுகிச் சென்றன; - ஆம்! - தமிழர் தவப் பயனாகவும், சோழ நாட்டின் ஜீவநதியாகவும் விளங்கும் காவிரி ஒரு புறமும், சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்த குளிர் நிறை மரங்களும் கதிரவனின் வெம்மையைச் சிறிதும் அறிய முடியாமல் செய்தன. படைகளின் குதூகலத்துக்குக் குறைவில்லை; ஆடிப்பாடி ஆரவாரம் செய்து கொண்டு அலைமேல் அலை மோதுவதென படைகள் தாவிச் சென்றன. படைகளின் நானாபுறமும் மேலிடமெங்கும் புலிக்கொடி நெளிந்து விளங்குவதைக் கண்டு போகும் வழியிடையே உள்ள ஊர்களில் வாழ்பவர்கள் மனம் மருண்டு உடல் ஒடுங்கி நின்றார்கள். ‘சோழர் படை எங்கே போகிறது? எந்த நாட்டின் மீது போருக்குப் போகிறதோ? எந்த நாட்டு மக்கள் இந்தப் பெரும் படையால் தாக்கப் படுவார்களோ? ஏனோ பெரும்படை?’ என்று உள்ளம் நொந்து பார்த்தார்கள். அவர்கள் கண்களுக்கு முன்னர் மின்னலின் வேகத்தோடு படைகள் மாறி மாறி எழுந்து மோதிச் சென்றன; சிறிது நாழிகையில், படைகள் சிராமலையையும் (திருச்சிராப்பள்ளி) அணுகிவிட்டன. சிராமலைக்கு முன்னர் ஒரு பெருங்காடு மலையைச் சூழ்ந்து விளங்கியது. அந்தக் காட்டுக்கு மேலிடத்தே வானைத் தொட்டு விளங்கியது சிராமலைக் குன்று. மலை உச்சியைத் தவிர்த்து மற்றப் பகுதிகளெல்லாம் பச்சைப் பசேல் என்று பசுமை பளிச்சிட்டு விளங்கியது. எங்கு பார்த்தாலும் மரங்கள் அடர்ந்தும் பின்னிக் கொண்டும் நின்றன. விர்விர்ரென்று சுழல் காற்று மோதிக் கொண்டிருந்தது. மரங்களிடையே கண்களுக்கும் கருத்துக்கும் இனியதாக இருள் கவிந்து செறிந்து கொண்டிருந்தது. நானாபுறமும் பறவைகள் அணித்தாக, மேலிடமெங்கும் கலகலப்புச் செய்தும், ‘கிரீச்’சிட்டும் சிறகொலி எழுப்பியும் பறந்து திரிந்தன. பலவிதப் பறவைகளின் வர்ண விசித்திரங்கள், அப்பறவைகளின் நானாவிதத் தொனிகள், அவற்றின் இன்பமும் சுதந்தரமும் நிரம்பிய வாழ்க்கை அந்தக் காட்டிற்குள் புகுந்த சோழ வீரர்களுக்குப் பெரு வியப்பை அளித்தன. ஆம்! - முற்றத் துறந்த முனிவருக்கும் உள்ளத்தை மகிழ்விக்கும் இயற்கைக் காட்சி விசித்திரங்களை அந்தச் சிராமலை காட்டினிடையே சோழ வீரர் கண்டார்கள். புகுந்தவுடன் எல்லையற்ற பெருமிதத்தோடு அவர்கள் நானாபுறமும் பார்த்த வண்ணம் மந்தகதியாகச் சென்றார்கள். புலவர் சிராமலையைக் கண்டவுடனே ஆதுரத்தோடு முன்னும் பின்னும் பார்த்தார். மணக்கிள்ளி பரபரப்புற்று நெடுந்தூரம் வரை உற்றுப் பார்த்தான். புலவரும் மணக்கிள்ளியும் மிகுந்த கவலையோடு சுற்றுமுற்றூம் பார்த்தவாறே மந்தகதியாகத் தேரில் சென்றார்கள். சிராமலையின் சாரலையும் படைகள் அடைந்து விட்டன. புலவர் பெருங் கவலை கொண்டார். தேரில் நின்றபடியே தம் பார்வையைப் பல பகுதியிலும் பரக்கச் செலுத்தினார். “மணக்கிள்ளி... உருவம் கண்களுக்குத் தெரிகிறதா?” என்று கேட்டபடியே எங்கும் நோக்கினார். “இல்லையே... இன்னும் சிறிது தூரம் போய்ப் பார்க்க வேண்டாமா?...” என்று மணக்கிள்ளி சொல்லிக் கொண்டே மேலும் பார்த்தான். மலைச் சாரலில் வலப்புறமாகத் தேரைச் செலுத்திச் சென்றார்கள்; படைகளும் பின் தொடர்ந்தன. போகும் வழி குறுகியதாக இருந்ததால் படைகளின் அணிவகுப்பும் இறுக்கப்பட்டு, வேகமும் தணிந்தது. சாலையின் மேற்குத் திக்கை நோக்கியவாறே புலவரும் மணக்கிள்ளியும் தேரைக் கடுகச் செலுத்தினார்கள். தேர் வேகமாகப் போகும் முழக்கம் மலைப்பக்கமாக எதிரொலித்தது; அதே தருணம் மேல் புறமிருந்து ஒருவிதச் சத்தம் மட்டும் கேட்டது; புலவரும் அரசிளங் குமரனும் உற்றுக் கேட்டார்கள்; குதிரையின் குளம்படிச் சத்தமே அது என்பதை இருவரும் உணர்ந்தனர். சிறிது நாழிகையில் எதிர்ப்புறமாக ஒரு குதிரையின் உருவம் தெரிந்ததைப் புலவர் கண்டார். அவர் மனத்தில் சந்தேகம் மூண்டது; உற்றுப் பார்த்தார்; மணக்கிள்ளியும் வியப்போடு நோக்கினான். “கிள்ளி, அதோ வரும் உருவம்!” என்றார் புலவர். “ஆம், பெருவிறற்கிள்ளிதான்! மிகுந்த சோர்வோடு வருகிறான்... இவ்வளவு மந்த கதியாக...” என்றான் மணக்கிள்ளி. பெருவிறற்கிள்ளி தனியே வருவதைக் கண்டு புலவர் திடுக்கிட்டார். சரேலென்று தேரை நிறுத்தினார். பின்னே வந்து கொண்டிருந்த படைகளைக் கையால் கவித்துத் தடை செய்தார். அவ்வளவிலே திடுக்கிட்டவாறே படை வரிசைகள் ஒன்றோடு ஒன்று மோதி நிலையாக நின்றன. எதிர்பாராத நிகழ்ச்சியைக் கண்டு படை வீரர் பதற்றம் கொண்டார்கள். ஆனால் அடுத்த சிறிது நாழிகையில் பெருவிறற் கிள்ளி மிக வேகத்துடன் குதிரையைச் செலுத்தி, புலவரிடம் வந்து சேர்ந்தான். ஆம்! அவனே தான். புலவர் அவனை உற்றுப் பார்த்தார், தேரில் நின்ற வாறே, மேற்குத் திக்கிலிருந்து கிள்ளி குதிரையில் கடுகி வந்ததையும், புலவரிடம் வந்துவிட்டதையும் பின்னே நின்றவர் கண்டு கொண்டார்கள். உடனே ஆரவாரம் மிகுந்தது; ‘கிள்ளி எங்கிருந்து வருகிறான்? எங்கே போயிருந்தான்? இது என்ன விசித்திரமாக இருக்கிறது? ஒரு கால் புலவர் முன்னதாக அனுப்பியிருந்தாரா?’ என்று அவர்கள் பலவிதமாக யோசனை செய்தார்கள். குதிரையிலிருந்து பெருவிறற்கிள்ளி நிலத்தில் குதித்தான். உடனே, மிக விரைவாக அமைதியுடன் நின்ற புலவரிடம் வந்தான். கைகுவித்து வணங்கினான். அவன் சொல்லப்போகும் செய்தியை ஆவலோடு எதிர்பார்த்தார்கள் புலவரும் மணக்கிள்ளியும்; அந்நிலையில் பின்னே நின்ற பெரும் படைகள் சிறிதே முன் வந்து புலவரிடம் நிற்கும் பெருவிறற் கிள்ளியை ஒரு புறமாகச் சூழ்ந்து கொண்டார்கள். புலவர் கண்களால் கிள்ளியைக் குறிப்பிட்டார். உடனே சிறிது கவலையோடு அவனைப் பார்த்தார். அவன் முகத்தில் கவலைக்குறி இல்லாததைக் கண்டு ஒருவாறு ஆறுதல் பெற்றார். “கிள்ளி!... அவர்கள் இருக்குமிடம் தெரிந்ததா? அவர்களைக் கொண்டு போன கள்வர்கள் அகப்பட்டார்களா? நீ எங்கெல்லாம் சுற்றிப் பார்த்தாய்? உண்மை தெரிந்ததா...” - புலவர் இவ்விதம் பதற்றமாகப் பேசினார். சுற்றி நிற்கும் படைவீரர் சிறிதும் தம் சூழ்ச்சியை உணராதவாறு பேசினார். பெருவிறற் கிள்ளியும் அதற்குத் தகுந்தவாறு மறுமொழி சொல்லலானான்: “புலவரே, இதுவரையில் அதே காரியமாகத்தான் சுற்றி விட்டு வருகிறேன்...” என்று கூறித் தயங்கி நின்றான். “கிள்ளி, அதைப் பற்றித் தனியே யோசிக்க வேண்டும்; இனி... படைகள் யாவும் இங்கேயே பாசறை அமைத்துக் கொண்டு தங்கியிருக்கலாம்...” என்றார் புலவர். உடனே மேற்கொண்டு சொல்வதற்குத் துணிவில்லாமல் யாவரும் பின்னடைந்தனர். படை வீரர் யாவரும் சிராமலைச் சாரலிலேயே தங்குவதற்காக வேண்டிய வேலைகளில் முற்பட்டார்கள். புலவர், அரசிளங்குமரர் இருவருடன் தேரை விட்டு இறங்கி, சாலை வழியே மேற்கு நோக்கி நடந்தார்கள். சிறிது தூரம் போனவுடன் புலவர் பேச்சைத் தொடங்கினார்; “எங்கே அவர்கள்?” என்று முதலில் ஆதுரத்தோடு கேட்டார். “சிறிது தூரத்திற்கு அப்புறம் இருக்கிறார்கள்; மலையின் மேல் பாறை ஒன்றின் மறைவிடத்தில் தங்கியிருக்கிறார்கள்; ... ஆனால்... விரைவிலேயே...” என்றான் பெருவிறற்கிள்ளி. “இருக்கட்டும்; முதலில் அந்த இடத்திற்குப் போன பின்பு தான் எல்லாம் முடிவு செய்ய வேண்டும்; நம் சூழ்ச்சி, படையினருக்குச் சிறிதும் தெரியக் கூடாது. தெரிந்தால் மேற்கொண்டு நமக்குக் காரியங்கள் நிறைவேறாது அதற்காகவே அப்படிக் கேட்டேன்...” என்று சொல்லிக் கொண்டே புலவரும் மணக்கிள்ளியும், பெருவிறற்கிள்ளி காட்டிய வழியே கடுகிச் சென்றார்கள். “அப்படியானால் இப்போது என்ன செய்வது? எப்படியும் சூழ்ச்சி...” என்று புலவரைப் பார்த்தான் மணக்கிள்ளி. “என் சூழ்ச்சி ஒரு நாளும் வெளிப்படாது; காரியம் முடியும்வரை சிறிதும் வெளிப்படாது...” என்று சொல்லிக் கொண்டே நடந்தார் புலவர். “இவ்வழியே ஏறிப் போகவேண்டும்...” என்று வழிகாட்டிச் சென்றான் கிள்ளி. புலவரும் மணக்கிள்ளியும் பின் தொடர்ந்தார்கள். மிக எளிதாக மலை மீது ஏறிச் சென்றார்கள். சிறிது தூரம் சென்ற அளவிலே, யாரோ இருவர் பேச்சுக் குரல் - ‘ஆம்! - ஆதி, அத்தியின் பேச்சுக் குரல்தான்’ கேட்டது. மனதில் கிளர்ச்சியுடன் மூவரும் குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் சென்ற திக்கில் உள்ளே குடையப் பெற்ற ஒரு பாறைக்குள், இரண்டு கற்சிலைகள் என்று சொல்லும்படியாக ஆதி - அத்தி அமர்ந்திருந்தார்கள். அந்தக் காட்சியைக் கண்டு உள்ளம் பூரித்தனர், மூவரும்; புலவர் எல்லையற்ற மகிழ்வு கொண்டார். ஆதியும் அத்தியும் புலவர் அரசிளங் குமரர் - இருவரையும் சந்தித்த அளவிலே மெய் மறந்தார்கள். தலை குனிந்த ஆதி மலைப் பாறையில் பார்வையைச் செலுத்தினாள். அவள் முகம் மட்டும் அல்ல! - அவள் உடலே வெட்கத்தால் சிவந்து குழைந்தது. அத்தி ஆதுரத்தோடு புலவருக்கு முன் வந்து, அவரை வணங்கினான். புலவர் களிப்புடன் அவனைத் தழுவிக் கொண்டார். உடனே ஆதியிடம் சென்று அவள் கூந்தலைத் தடவி, புன்னகையுடன், “ஆதி, இப்போது கவலை இல்லையே! இனி உனக்குப் பயம் என்ன? உன் தந்தை கரிகாலனைப் பற்றிக் கவலைப்படுகிறாயா...?” என்று கேட்டார். சிறிது நாழிகை மனக்கிளர்ச்சியால் வாய் பேசாமல் இருந்த அவள், நீர் துளும்பும் விழிகளுடன் புலவரைப் பார்த்தாள். புலவரும் சிறிதே மனம் நெகிழ்வுற்றார். ஆதியின் துயரத்தைக் காணச் சகியாதவர் அல்லவா? “அவர் துயரத்திற்கும் கோபத்திற்கும்...” என்றவள் மேலே பேசவில்லை. “நீ ஏன் இன்னும் வருந்துகிறாய்? எல்லாம் இனி நன்மையாக முடியும். இனிச் சில நாட்கள் நீ மன உறுதியுடன் இருக்க வேண்டும். இல்லையேல்...” என்று புலவர் கூர்ந்து பார்த்தார் ஆதியை. “தங்கள் விருப்பத்துக்கு இணங்கியே தான், நான் இந்தக் காரியத்தில் துணிவு கொண்டேன். இனியும் தங்கள் கட்டளைபடி நடப்பேன். தங்களுடைய சந்திப்பால் எனக்கு மனக்கவலை நீங்கியது...” என்று ஆதி உறுதிமொழி சொன்னாள். உடனே புலவர் அத்தியைப் பார்த்தார். அவர் பார்வையால் அத்தியின் மனம் குதூகலம் அடைந்தது. “புலவரே, தங்கள் சூழ்ச்சியை என்ன என்று சொல்வேன்?... தாங்கள் என் பொருட்டுச் செய்த காரியங்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்?...” என்று கண்ணீர் துளும்பக் கூறினான். “அத்தி, இன்னும் எவ்வளவோ இருக்கிறது. உன்னுடைய உறுதியும் அதற்கு வேண்டும்; நானும் மணக்கிள்ளியும் மட்டும் வரவில்லை. பெருவிறற்கிள்ளி எல்லாம் சொல்லியிருப்பானல்லவா? முதலில் உறையூர் முற்றுகை இன்றிரவு...” என்று புலவர் கூறிவிட்டு எங்கோ உற்றுப் பார்த்தார்; மூவரும் அந்தத் திக்கை நோக்கினார்கள். அவர்கள் இருந்த பாறைக்கு மேல்புறமாக மரங்கள் அடர்ந்த புதரில் யாரோ திடுதிடுவென்று ஓடுவது போல் ஓசை கேட்டது. சரேலென்று புலவர் அந்த வழியே ஓடினார். மணக்கிள்ளியும் ஓடினான். “ஆ!... காரியம் கெட்டு விடும் போல் தெரிகிறது. அதோ ஓடுகிறார்களே இருவர்! அவர்கள் ஒற்றறிபவர்கள்! நான் ஏதோ பேசிவிட்டேன். இனி அவர்களைப் பிடிப்பது முடியாத காரியம். உறையூர் ஒற்றர்கள் தான் அவ்விருவரும்...” என்று சொல்லிக் கொண்டே புலவர் ஒரு கணம் அசைவற்று நின்றார். பெருவிறற்கிள்ளி, புலவர் பேச்சைக் கேட்டு ஓடி வந்து, ஒற்றர் ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டான். “புலவரே, உறையூர் ஒற்றர்கள் இந்த மலைச்சாரலில் இருக்கிறார்கள். நான் அவர்களை அணுகவொட்டாமல் இன்று முழுவதும் மறைந்து இருந்து வந்தேன். எப்படியோ, அவர்கள் கண்டு கொண்டார்கள் போல் இருக்கிறது. இனி விரைவில் காரியத்தை முடிக்க வேண்டும்...” என்றான். “அத்தி, இன்றிரவே உறையூரை முற்றுகையிட்டு நம் வசமாக்கிக் கொள்ள வேண்டும்; உறையூரை நாம் கைக் கொண்டால்... நிச்சயம் கருவூர் உன்னைச் சேர்ந்து விடும். படைகள் ஆயத்தமாக இருக்கின்றன; உன் உறுதி வேண்டும். என்ன?” என்றார் புலவர். “நல்லடிக்கோனை வாளுக்கு விருந்தாக்குவது என் கடமை” என்றான் அத்தி பதற்றத்துடன். |