உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 8. வேட்கை வீண் நல்லடிக்கோனுக்கு ஒரே லக்ஷ்யம்! - அது என்ன வென்று சொல்ல வேண்டுமா? மருதியின் சந்திப்பு ஒன்றே அவன் லக்ஷ்யம் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா? வீதி மாறி வீதியைக் கடந்த குதிரை, அரண்மனைக்குள் புகுந்தது; அரண்மனையை வலம்வந்த குதிரை, ‘குமார பவனம்’ என்ற மாளிகையை அடைந்தது; ஆம்! அது தான் நல்லடிக்கோனின் மாளிகை; ‘சித்திரமாடம்’ என்றே பலரும் அழைப்பது உண்டு. நல்லடிக்கோன் குதிரையை விட்டு இறங்கினான்; மாடத்து வாயில் காவலர் வாள்களை உறையில் செருகிக் கொண்டு வணங்கி நின்றார்கள். வேகமாகச் சென்ற நல்லடிக்கோனின் நடை தடுமாற்றம் அடைந்தது. மாடத்தினுள் புகுந்தான். மணிவிளக்குகள் ஆங்காங்கே ஒளியுடன் விளங்கின. அவன் கண்கள் அங்கே நின்ற வீரர்களையும், அரண்மனைச் சேடியர்களையும் மருண்டு நோக்கின; முன்கூடத்தில் சிறிதே நின்றவன், விளக்கின் ஒளியில் மறைந்தும் மறையாமலும் நிற்கும் காவலரையும் சேடியரையும் கண்டபடியே நின்றான். அவர்கள் தலைவணங்கி நின்று, இளவரசனின் வார்த்தைகளை எதிர் பார்த்தார்கள். அதற்குமேல், நல்லடிக்கோன் வாய் திறந்து கேட்டான்: “அவள் எங்கே?-” “மாடத்தின் அந்தப்புரத்தில்...” “அங்கே வேறு யார் இருக்கிறார்கள்?” என்று ஒரு சேடியை நோக்கிக் கேட்டான். “தங்கள் சேடி அம்பை இருக்கிறாள்” “அவள் எப்படி...” “அந்தப் பெண்தானே! - வந்தது முதல் சீறிக் கொண்டிருக்கிறாள். யார் எது கேட்டாலும் பெண் பாம்பு போல் சீற்றத்தோடு அபிநயம் செய்கிறாள். கண்ணீர் விட்டுக் கொண்டே தனக்குள் ஏதேதோ பேசிக் கொள்கிறாள், ஆனால்-” “ஆனால்?- என்ன?” “பூப்போன்ற அவள் தேகம், ஒரே நாளில் வாடி விட்டது. அவளைப் பார்க்கும்போது...” “போதும்... இனி இவ்விடத்தைக் கடந்து எவரும் உள்ளே போகக்கூடாது! பெண்களாயிருந்தாலும்!...” நல்லடிக்கோன், புற்றில் நுழையும் பாம்பென உள் புகுந்தான். இருளும் ஒளியும் மாறி மாறிப் போராடும் அந்த மாடத்தின் பின்புறம் புகுந்தான். அந்தப்புரத்து அறையின் கதவுகள் சிறிதே சார்த்தப்பட்டிருந்தன. அடி மேல் அடி வைத்து அதன் சிறு சந்து வழியே உள்ளே பார்த்தான்; மெல்லிய பஞ்சுகள் பரப்பியதும், பூம்போர்வை விரிக்கப்பட்டதுமான, மஞ்சங்கள் தெரிந்தன. அறையின் நடுவில் மணி விளக்கு ஒன்று மின் மினிபோல் விளங்கியது; ஒருபுறம் பதுமைகள் தாங்கும் சித்திரக் கட்டில்கள் தெரிந்தன; பூங்கொடிகள் ஏந்திய இரு பெண் பதுமைகள் அக்கட்டிலின் இருபுறமும் விளங்கின. சாளரத்திலிருந்து பாய்ந்து அக்கட்டில் மீதும் பெண் பதுமைகள் மீதும் தவழ்ந்து ஒளி வீசின, முழு மதியின் வெண் கிரணங்கள். ஆனால் அவ்வறையில் யாரையும் அவன் காணவில்லை; சப்தம் சிறிதும் கேட்க வில்லை. உடனே நல்லடிக்கோனின் மனத்தில் திகில் உண்டாயிற்று; நன்றாக உற்றுப் பார்த்தான். அறை முழுவதும் கண்களைச் செலுத்தினன்; அவன் மனம் நிலை கொள்ளவில்லை. கதவுகள் மெள்ளத் திறந்தான்: அப்புறம் அவனுக்குத் துணிவு பிறந்தது. அறையில் யாரையும் காணவில்லை. ‘இந்த அறையில் யாருமே இல்லையே! எங்கே அவள் இருக்கிறாள்: அம்பையைக் கூப்பிடலாமா?-அல்லது வேறு எங்கே... ஒன்றும் தெரியவில்லையே; ஓடிப் போய் விட்டாளா? வெளியில் எல்லாரும் காவல் செய்யும் போதா?- இல்லை. பின்புறமாக ஓடியிருந்தால்!-’ என்று பெரும் பயமும் ஏமாற்றமும் கொண்டவனாய் நல்லடிக்கோன் சுற்று முற்றும் பார்த்தான். கட்டில்களும், மஞ்சங்களும், விளக்குகளும், பதுமைகளும் தெரிந்தன; மருதியைக் காணவில்லை; அவளுக்குத் துணையாக இருந்த அம்பையையும் காணமுடியவில்லை; என்ன இது? மருதியைக் காணும் ஆதுரத்தோடு வந்த நல்லடிக்கோன், எதிர்பாராத ஏமாற்றம் அடைந்தான். அவளைப் பற்றி எண்ணாததெல்லாம் எண்ணிவிட்டான்; இருதயம் பிளந்துவிட்டதுபோல் பெருமூச்சுவிட்டான்; அவன் கண்களிலும் கருத்திலும் ஆழ்ந்த ஏக்கம் குடிகொண்டது. நடை தளர்ந்தான்! நிற்க முடியாமல் சோர்வு கொண்டான்; உள்ளம் சோர்ந்ததுதான் - உடனே, நீர் துளித்த கண்களோடு அருகில் இருந்த கட்டிலில் வலிவற்றவன் போல் சாய்ந்தான். ‘மருதி தப்பி ஓடி விட்டாள்!’ என்ற ஏக்கத்தால் பேச்சற்றவனாய், சாளரத்திலிருந்து தவழும் வெண்ணிலவின் இன்பக் கிரணங்களின் உதவியால் தன் சோர்வைத் தணித்துக்கொள்ள முயன்றான். ஆழ்ந்த சிந்தனையிலே அவன் நினைவு ஒன்றியது. அப்படியே அசைவற்றுக் கிடந்தவன் ஏதோ பேச்சுக் குரல் கேட்டுத் திடுக்கிட்டான்; அந்தக் குரலில் அவன் சிந்தனை தோய்ந்தது. இறந்தவன் பிழைத்தது போல் எழுந்து உட்கார்ந்தான். அந்தப்புரத்தின் பின்புறமிருந்து அந்தக் குரல் வருவது தெரிந்தது. ஆம் அது அம்பையின் பேச்சுக் குரல்தான். உடனே நல்லடிகோன் எழுந்து சாளரத்து வழியே நிலாமுற்றத்தை எட்டிப் பார்த்தான். அவன் கண்களுக்கு நிலா முற்றத்தில் அமர்ந்திருக்கும் இரு உருவங்கள் தெரிந்தன. ஒன்று அம்பை-மற்றொன்று மருதியாகத் தான் இருக்கவேண்டும். நல்லடிக்கோனின் உள்ளம் வெறிகொண்டது. உடனே நிலாமுற்றத்துக்குப் போகும் வாயிலை அடைந்தான். கதவுகள் தாளிட்டிருந்ததைத் திறந்தான், பஞ்சில் அடி வைப்பதென நடந்தான். மருதியும் அம்பையும் அமர்ந்திருந்த பீடத்தை அணுகினான். அது வரையிலும்: எங்கோ பார்த்துக்கொண்டு அம்பையின் பேச்சைக் காதில் வாங்காதவள் போல் அமர்ந்திருந்த மருதி, நிலவின் வெள்ளொளியில் தன் அருகிலே ஏதோ நிழல் அணுகுவதை கண்டு ‘ஆ’ என்று திடுக்கிட்டுக் கூவினாள். திரும்பிப் பார்த்தாள் அம்பை. நல்லடிக்கோன் நிமிர்ந்து நின்று, “ஏன், நான்தான்! பயம் வேண்டாம்” என்றான். அம்பை எழுந்து விலகி நின்றாள். “யார்? - ஓ நீங்களா?-” என்று கோபம் ததும்பும் தொனியில் கேட்டு மௌனமாக நின்றாள் மருதி. நல்லடிக்கோன் சிறிது பயம் கொண்டே நின்றான் அவள் பேச்சைக்கேட்டு. “அம்பை, இவ்விடம் ஏன் அழைத்து வந்தாய்?” என்று கேட்டான் சிறிது சினத்துடன். “இவள் அழுகை நிற்கவே இல்லை: ஆறுதலுக்காக நிலா முற்றத்தில் அமர்ந்து...” “அழுகைக்கு ஆறுதல் நான் சொல்கிறேன்; நீ அறையில் போய் இரு.” அம்பை தலைகுனிந்து விரைவாக அறைப்புறம் சென்றாள். மருதி அசைவற்று நின்றாள். மந்திரத்தால் கட்டுண்ட பாம்புபோல் போகச் செயலற்று நின்றாள். அவள் அழகு அவனை ஒவ்வொரு கணமும் அலைத்தது. நிர்மலமான அந்த நிலவில் அலங்காரம் செய்யப் பெற்ற நிலாமுற்றத்தில் நாட்டிய மங்கை - மருதி துயரத்தால் - சோகத் தீயால் மனம் வெதும்பி நின்றாள் - அது மட்டுமா? - தன் மனவுறுதியை நிலைகுலையச் செய்யும் நோக்கத்தோடு நிற்கும் அரசிளங்குமரனை எரித்து விடுபவள் போல் கனல் விழித்து வெறுப்போடு-கவலை யோடு நின்றாள். அதே நிலா முற்றத்தில் நிலவின் இன்பக் கிரணங்களை நுகர்ந்து மருதியை அணுக முடியாமலும் அவளைவிட்டு அகல முடியாமலும் நிற்கும் நல்லடிக்கோன் வேட்கைத் தீயால் மனம் கொந்தளித்தான்; அவன் உள்ளத்தில் மருதியின் அழகுப்பிழம்பு இன்பமெனப் புகுந்து நிலைபெற்ற போதிலும் அவன் இருதயத்தைத் தீப்பிழம்பெனச் சூழ்ந்து எரித்துக் கொண்டிருந்தது. இருவரும் செயலற்ற தன்மையால் சிறிது நாழிகை மௌனமாக நின்றார்கள். நல்லடிக்கோன் கலங்கிய தன் அறிவை உறுதி செய்து கொண்டு பேசலானான். “மருதி, உன்னை இங்கே கொணர்ந்ததில் உனக்கு என் மீது கோபம் இருக்கு மென்பது எனக்குத் தெரிந்ததுதான். உண்மையில் உன்னை நான் முழு மனத்துடன் நேசிக்கிறேன்...” என்று கூறியவன், சட்டென்று ஏதோநினைவு வந்தவன் போல் வேகமாக, “ஆமாம் ‘உன் தாய்’ என்றாயே, அவள் எங்கே...” என்று சந்தேகத்தோடு கேட்டான். அதுவரையும் பேசாதிருந்த மருதி சட்டென்று நகைத்து விட்டாள். அந்த நகையில் இகழ்ச்சி தொனிப்பதைக் கேட்டு நல்லடிக்கோன் வெட்கமடைந்தான். எனினும் அந்தக் கிழவியைப்பற்றி அறிவதிலே அவன் மனம் ஆதுரம் கொண்டது. “ஐயா கவலைப்படவேண்டாம்; அவள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் தொண்டி நகர் போய்க்கொண்டிருப்பாள். இன்னும் இரண்டு தினங்களில் தொண்டி நகர் அடைந்து என் காதலரைச் சந்திப்பாள்; சந்தித்து என் நிலையை அவருக்குச் சொல்லுவாள்; என்னைப் பிரிந்து கலங்கும் அவர் மனமும் ஆறுதல் பெறும். விரைவிலேயே என் காதலர் என்னைச் சந்திப்பார்; நீங்கள் வெற்றி மாலை சூடிய வீரர் என்றாலும், என்னை மீட்பதிலே என் காதலர் மகா வீரர் என்று அறிந்து கொள்ளுங்கள். உங்களைப்போல், தகுதியற்ற காரியத்தைச் செய்யும் அற்ப மனிதனல்ல அவர்! என் உயிருக்காக என் உடலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்வார் அவர்; நாட்டிய அரங்கில் என்னுடன் நடமாடுவதில் நிபுணர் என்பது மட்டுமன்று! - போர் அரங்கிலும் வீர நடனம் ஆடுவதில் புகழ் பெற்றவர். இப்போது என்னை அவரிடமிருந்து பிரித்துவிட்ட போதிலும், மிக விரைவில் நான் அவரைச் சேர்வேன். உங்கள் முயற்சி வீண் என்பதை உணர்ந்து கொண்டு அமைதியாகப் போய்ச் சேருங்கள்.” நல்லடிக்கோன் திக்பிரமை கொண்டு நின்றான், அவள் பேச்சைக் கேட்டு. “மருதி, உன் உபதேசமும், உன் காதலர் பிரபாவமும் ஒரு புறமிருக்கட்டும்; எல்லாம் எனக்குத் தெரிந்தவைதாம்: ஆனால் ஒன்றுமட்டும் சொல்கிறேன்... அந்தக் கிழவி எப்படி இவ்விடம் விட்டுப் போனாள்? உண்மைதானா அது?” “இளவரசே, இவ்வளவு நாழிகை தாங்கள் அதைப் பற்றி ஏன் மறந்தீர்கள்? அவள் இந்நகர் எல்லைக்கே வரவில்லை. நடு வழியிலேயே என் விருப்பப்படி, பல்லக்கிலிருந்து இறக்கப்பட்டு அனுப்பப்பட்டு விட்டாள்; தெரிந்ததா?” “என்ன தைரியம் உனக்கு? மருதி, உன் யோசனைக்குப் பல்லக்குத் தூக்குபவர்கள் உடம்பட்டார்களா?” “ஐயா, என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? தங்கள் விருப்பத்திற்கு உரியவள் நான் என்பதைத் தெரிந்து கொண்ட பின்பும், அவர்கள் என் யோசனையை மறுப்பார்களா?” “மருதி, இன்னொரு முறை சொல் அந்த வார்த்தையை. கணிகைக்குரிய சாகஸம் உன்னிடம் முழுவதும் தெரிகிறது! - ஆனால் என் விருப்பத்துக்கு நீ உரியவள்! ஆம்! அது உண்மைதான் மருதி, உன் அழகு என்னை இவ்வளவு ஆதுரப்படுத்தும் என்றும் கனவிலும் கருதவில்லை; ஆனால் உன்னைக் கண்டது தொடங்கி நான் ஒன்றும் இல்லாத உள்ளம் உடையவன் ஆனேன்.” மருதி வெடி நகை செய்தாள். மணிக்குரலின் ஒலியெனக் கேட்டது அவள் சிரிப்பு. திகைப்புற்று அந்தச் சிரிப்பின் கருத்தை உணராமல் நின்றான் அவன். “ஐயா, என் வார்த்தைகளை நன்றாக ஆராயாமல் மேலே பேசிக்கொண்டே போகிறீர்களே! என் காரியம் ஆவதற்காக, அவ்விதம் அவர்களிடம் கூறினேன்! இதில் தாங்கள் குதூகலப்படுவதற்கு ஒன்றுமே இல்லையே! வீணே ஏன், ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள்? உண்மையில் நான் சாகஸம் உடையவள் தான்; அது கணிகையருக்குத்தான் உரியது என்று எண்ண வேண்டாம். எந்தப் பெண்ணும் தன் மனவுறுதியை - தன் கற்பைக் காத்துக்கொள்ள எவ்விதச் சாகஸத்தையும் செய்ய முற்படுவாள்; அது அவர்களுக்கு இயல்புதான்: சாகஸம் என்பது பெண்களின் பிறவிக்குணம்; உங்களைப் போன்ற நெறி தவறிய ஆடவர்களை ஏமாற்றுவதற்கென்றே - உங்கள் போன்றோரால் ஏற்படும் துன்பங்களைக் கடப்பதற்கு என்றே, என் போன்ற அபலைகளான பெண்களுக்கு இவ்விதச் சாகஸத்தை அளித்திருக்கிறார் கடவுள். அபலைகளான பெண்களை ஏமாற்றி அவர்களுடைய லக்ஷ்ய வாழ்வை சிதைக்க முயலும் புருஷர்களை அடக்குவதற்கு, ‘சாகஸம்’ என்ற ஒரு சக்தியைத் தான் எங்களுக்கு அளித்திருக்கிறது தெய்வம். இது ஓர் அதிசயம் அல்ல!-” என்று மருதி கூறினாள். நல்லடிக்கோன் சித்தம் கலங்கினான். மருதியின் மொழி அவன் மனத்தை மாறச் செய்தது. ஆழ்ந்த சிந்தனை எழுந்தது அவன் உள்ளத்தில்; இவள் சிறைப்பட்ட செய்தியை அத்திக்கு உணர்த்தவே அந்தக் கிழவியை அனுப்பியிருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான்; ‘மருதியின் சாகஸச் செயல்’ கண்டு அவள் மொழி கேட்டு உள்ளம் கலங்கினான். ‘இவள் அற்பமானவள் அல்ல! கணிகையர்க்கு உரிய குணம் இவளிடம் சிறிதும் இல்லை. காதல் ஒன்றே இவள் லக்ஷியமாகக் கருதுகிறாள்; அதுவும் அந்த நர்த்தனப் பிரியனான அத்தியின் பிரேமையில் சிக்கிய இவளை வேறு பிரிப்பது முடியாதென்றே தோன்றுகிறது. ஆனால் என் கைக்கு கிட்டிய கனியை நான் இழந்துவிடுவதா? இதை விட அவமானம் வேறு என்ன வேண்டும் எனக்கு?இல்லை, என்ன நேர்ந்தாலும் இவளை விடுதலை செய்வதில்லை; இவளை இப்படியே உயிரிழக்கச் செய்தாலும் செய்வேன்; உயிருடன் இனி இவளை அத்தியின் கையில் கொடேன்! என் விருப்பத்துக்கு இணங்காத இவளை - என்னே வெறுக்கும் இவளை - யாரும் விரும்ப முடியாதபடி செய்துவிடுகிறேன்’ என்று பலவிதமாக அவன் எண்ணினான். அவன் அப்போது நினைவு தடுமாறினான் என்றே சொல்லவேண்டும். அடுத்த கணமே மருதி அவன் தடுமாற்றத்தை மிகுதிப்படுத்திவிட்டாள் தன் பேச்சால். “ஐயா, தாங்கள் எந்த முடிவு கொண்டு என்னைத் தங்கள் மாளிகையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள்? இவ்விதம் அடைத்து விட்டமையால், என்னை உங்களுடையவளாக எண்ணி விட்டீர்களா? நான் இங்கே அகப்பட்டு விட்டபோதிலும், என் உள்ளத்தை அகப்படுத்த முடியாது. என் காதலர் வசம் உரிமையான என் நெஞ்சத்தை இனி வேறு பிரித்துவிடுவது என்பது விதியாலும் இயலாத காரியம்! தன்னைக் காத்துக் கொள்ள வகையும் வன்மையும் இல்லாத பெண் உலகத்தில் மானமுடன் வாழமுடியாது; ஆனால் என் போன்றவர்களுக்கு அவ்வித வன்மையும் தகைமையும் இயற்கையாகவே அமைந்துவிட்டன. நெறி தவறிய மனிதர்களிடம் அகப்பட்ட கற்புடைய பெண்கள் தம்மைக் காத்துக்கொள்ள எவ்விதச் சாகஸத்தையும் செய்வார்கள் - தம் உயிரைத் தியாகம் செய்தாகிலும், தம்மைக் காத்துக்கொள்வார்கள்: யாருக்கும் அஞ்ச மாட்டார்கள். ஆனால் தன்னைக் காத்துக்கொள்ள எண்ணாத எந்த மங்கையும் எந்தச் சமயத்திலும் எவ்விதப் பழிமொழிகளுக்கும் சார்பாக நிற்பார்கள். உலகில் கற்புடைய பெண்களே, தைரியமும் சாகஸமும் வாய்ந்தவர்களாக விளங்குவார்கள். ஆதலால், நான் தங்களிடம் அகப்பட்டு விட்டதால், என்னை இழந்து விடமாட்டேன்; தாங்கள் அவ்வளவு அற்பமாகக் கருதி ஏமாற்றமும், வருத்தமும் அடையவேண்டாம்; விருப்பமிருந்தால் என்னை விடுதலை செய்யுங்கள்.” சிறிதும் அச்சமில்லாமல் மருதி கூறிய மொழிகள் நல்லடிக்கோனுக்கு வியப்பை உண்டாக்கின; மனம் மாறியதால் உண்டான துணிவு அவனைக் கோபமும் தாபமும் கொள்ளச் செய்தது. “மருதி நீ நாட்டியம் ஆடுவதில் நிகரற்றவள் என்ற புகழ் மட்டும் எனக்கு தெரிந்திருந்தது; இன்று, பேச்சிலும் நீ நிகரற்றவள் என்பதை அறிந்தேன்; உன் பேச்சைப் போலவே, உன் செய்கையும் நிகரற்றதாகவே இருக்குமெனக் கருதுகிறேன். ஆனால் கற்பைப்பற்றி பேசுகின்ற, நீ ஒரு கணிகை என்பதை நினைவில் வைத்துக்கொள்...” “இளவரசரே, கற்றறிந்த மூடரல்லவா, இவ்விதம் பேசுவார்கள்! கணிகை என்றால் கற்புநெறி தவறியவள் என்று கொள்வது அறிவுடையோர்க்கு அழகல்ல. குலமங்கையரிலும், நெறிதவறியவர் உண்டு: கணிகையரிலும் கற்பு நெறி தவறாதவர் உண்டு; குலமங்கையரின் கற்பைக் காட்டிலும் கணிகையரின் கற்பு மதிக்கத்தக்கது என்பதும் அறிஞர் அறிவார்கள்.” “கணிகையரைப் பற்றி இகழ்ந்து கூறாத கவிஞர் இல்லை. கணிகையர்க்கு இயல்பு உடலை விற்றல். அது முடிந்த முடிபு! நீ அறிந்ததில்லை போலிருக்கிறது. நீ எவ்வளவு தான் கூறினாலும், உன்னைக் குலமங்கையர் கற்புடையவளாகக் கருதமாட்டார்கள்; உன்வார்த்தைகளும் வெறும் சாகஸச் சொற்களாகவே எனக்கு புலப்படுகின்றன.” “கவிஞன் கற்பனையில் உயர்வு தாழ்வே இல்லை! உண்மைக் கவிஞன் கற்புடைய கணிகையைப் புகழவும் செய்வான்; கற்பு நெறி தவறிய குலமங்கையரை இகழவும் செய்வான். அதைப்பற்றி முடிவுகூறத் தங்களுக்கு வன்மை இல்லை.” “மருதி, நீ காணும் கனவு பொய்; நீ எண்ணியபடியே உன் காதலனை நீ அடைய முடியுமா? அதற்குத் தைரிய முண்டா உனக்கு?” “சந்தேகம் இல்லை; முடியும்! அப்போது தாங்கள் என்னை அறிந்து கொள்வீர்கள்.” “அத்தியை நீ காண முடியாமலே செய்து விடுகிறேன்; என் வேட்கையை வீணாக்கிய உன் வாழ்நாளை வீணாக்குகிறேன். என் மனத்தைக் கலங்க வைத்த உன் அழகை - இளமையை அத்தி நுகர முடியாமல் செய்து விடுகிறேன்; இது என்னால் முடியும். என்னை வெறுத்து - என் மனத்தில் கிளைத்த வேட்கையைச் சிதைத்த உன்னைப் பழிக்குப் பழி வாங்காமல் விடேன். எவ்வளவு ஆதுரத்துடன் உன்னை அணுகினேனோ அவ்வளவும் விணாகி விட்டது. என் வேட்கையைத் தணிக்காத உன் அழகும் இளமையும், இனி அத்திக்குப் பயன்படா! அவனுக்குப் பயன்படாமல் செய்வதே என் வேட்கையைத் தணிக்கத் தகுந்த உபாயம்; இந்த மாளிகையே உனக்கு இனி வாழ்நாளைக் கழிக்க ஏற்ற இடம். நெறி தவறுபவன் நான் அல்ல: சோழர் குலத்தில் பிறத்த ஒருவன் இவ்விதம் பழிமொழியைப் பெற மாட்டான்; உன்னைத் தொட்டு மனம் குளிராவிடினும் நாள்தோறும் உன்னைக் கண்டு களி கொள்கிறேன்: நள்ளிரவாகிவிட்டது; நான் போய் வருகிறேன். அமைதியாக நீ தூங்கலாம்” என்று. உணர்ச்சி மேலீட்டால் பேசினான். மருதி சிறிதும் அஞ்சவில்லை. எவ்விதமேனும் அவனிடமிருந்து தப்புவதற்கான உபாயத்தை ஆராய்ந்தாள். ‘நெறி தவறித் துன்பம் செய்யான்’ என்று ஒரு வித ஆறுதல் கொண்டாள். “ஐயா, உங்கள் வேட்கை வீண் என்பது முக்காலும் உண்மை! போய் விடுங்கள்: நான் அமைதியாக உறங்குகிறேன்” என்று மருதி கடிந்து கூறினாள். “உன் வாழ்நாள் வீண்” என்று கூறிக்கொண்டே நல்லடிக்கோன் வெறுப்போடு மாளிகைக்குள் புகுந்தான். ‘என் வாழ் நாள் வீண்! என் வாழ்நாள் வீண்!’ - என்று சொல்லிக் கொண்டே, மருதி இருதயம் விம்மி அழுதாள். நல்லடிக்கோன் உருவம் மறைந்தவுடன் அவள் துயரம் பொங்கி எழுந்தது, நிலா முற்றத்தில் நின்றபடியே தாரை தாரையாகக் கண்ணீர் சிந்தினாள். வானப் பரப்பில் உலாப் புறப்பட்ட முழு வெண்மதியும், நிலா முற்றத்தைச் சூழ்ந்து விளங்கிய முல்லைக் கொடிகளும், மருதியின் நிலையைக் கண்டு ‘கொல்’ லென்று சிரிப்பன போல் தோன்றின. அழகுணர்ச்சியும், ரஸிகத் தன்மையும் தோய்ந்த மருதியின் உள்ளத்தில், நிலாக் காட்சியும், முல்லை நகையும் பெருங் கொந்தளிப்பை உண்டாக்கின. நர்த்தன கலா நிபுணனான ஆட்டனத்தியின் நினைவால் அவள் மெய் சோர்ந்தாள்; ‘அவர் எங்கே போயிருப்பாரோ! அவரை விடங்கி கண்டாளோ, இல்லையோ! நான் இங்கே அகப்பட்டுக் கொண்டதை அவர் எப்படி அறிவாரோ! இந்த மூர்க்கனின் கையில் அகப்பட்ட நான் எவ்விதத்திலும் தப்ப முடியவில்லையே! ஐயோ! என்னைப் பிரிந்து அவர் வாழ்வாரா? இல்லை, என்னைத் தேடி... எங்கெல்லாம் அவர் அலைகிறாரோ! அவர் மனம் எவ்வளவுக்கு நொந்து விட்டதோ!’ - என்று இவ்வாறு சிந்தித்தாள் மருதி. நல்லடிக்கோனின் இரக்கமில்லாத சிந்தைக்கும், அவன் வார்த்தைகளுக்கும் அவள் அடிமையாவதா? ‘இவனிடமிருந்து எப்படியேனும் தப்பிவிட வேண்டும்! ஆனால், எப்படி? இவன் வார்த்தைகள் மிகுந்த கொடுமையுடையவனாகத் தெரிகிறதே! தெய்வமே!-’ என்று மனம் இடிந்தாள். மிக வேகமாக அப்போது அவளை நோக்கி ஓர் உருவம் ஓடி வந்தது; மருதி திடுக்கிட்டு உற்றுப்பார்த்தபடியே பின்னே நடந்தாள். அந்த உருவம் அணுக அணுக, மருதியின் மனப் பயம் அகன்றது, நல்லடிக்கோனின் சேடி, அம்பையின் உருவம் அது. “மருதி, பயப்படவேண்டாம்! நான்தான் வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே அம்பை, அவளை அணுகினாள். “அம்பை, எனக்கு என்ன பயம்? என் உயிர் என்னிடம் இருக்கிறது. எந்தச் சமயத்தில் என் கற்புக்குக் கேடு வரும் என்று தோன்றுகிறதோ, அப்போதே என் உயிரைப் போக்கிக் கொள்வேன்.” “அப்படியானால், ஏன் வீணாக இப்போது விம்மி விம்மி அழுதாய்? அவ்வளவு துணிவுள்ளவள் உனக்கு மனத் துயரம் ஏன்?” “அம்பை, நாம் வாழப்பிறந்தோமா? சாகப் பிறந்தோமா? வாழ்வில் கற்புநெறி தவறாத உயர்ந்த காதலைப் பெற்று வாழ்வது பெண்களுக்குக் கடமை, இல்லையேல் உயிரைத் தியாகம் செய்வதே நெறி.” “மருதி, உன்னுடைய முதிர்ந்த அறிவும், சிறந்த ஒழுக்கமும் உறுதியான மனப்பான்மையும் எனக்கு வியப்பை உண்டாக்குகின்றன. நான் உன் மீது உண்மையாக இரக்கம் கொள்கிறேன்...“ என்று கூறிச் சுற்று முற்றும் பார்த்தாள். “என்ன பார்க்கிறாய்?” என்று கூறிக்கொண்டே மருதியும் சுற்றிலும் நோக்கினாள். அவள் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை. “என் வார்த்தைகள் பிறருக்குக் கேட்குமோ என்று பார்த்தேன். அதோ அந்த முல்லைச் செடிக்குப் பின் அமர்வோம் வா” என்று மருதியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள். மருதிக்கு வியப்பு மேலிட்டது. ‘இவள் என்ன சொல்லப் போகிறாள்?’ என்று ஆதுரத்தோடு சென்றாள்: முல்லைச் செடியின் அருகில் மருதியும் அம்பையும் அமர்ந்தார்கள். “மருதி, இளவரசர் கோபமாகப் பேசினாரே என்று எண்ணாதே!...” என்று பேசத் தொடங்கினாள் அவள். மருதிக்குக் கோபம் மூண்டது. ‘அவனுக்கு என்னை அடிமையாக்க எண்ணி இவள் பேசுகிறாளோ’ என்று சந்தேகம் கொண்டாள். “போதும், உங்கள் இளவரசர் பிரதாபத்தை எடுத்துக்கூறவா என்னை இங்கே அழைத்தாய்?” என்று கடிந்து கூறினாள். “மருதி, இல்லை! என்னை அப்படி எண்ணாதே! உனக்கு நன்மையைத்தான் சொல்கிறேன். அதற்குள் கோபப்படுகிறாயே! இதோ பார். உன்னுடைய குணத்தை அறிந்துதான் நான் சொல்கிறேன்.” “அப்படி என்ன சொல்லப் போகிறாய்? எனக்கு ஒன்றும் வேண்டியதில்லை. இவ்விடத்தை விட்டுத் தப்ப முடியுமானால் அதுவே போதும்; அதற்கு வழி இருந்தால்...” என்று பேச்சை நிறுத்தினாள். “வழி இல்லாமல் என்ன? நான் சொல்கிறேன் கேள். இளவரசர் இளகிய இயல்புடையவர். அவர் மனம் மகிழ்ச்சி கொண்டால் எளிதில் அவரை ஏமாற்றி விடலாம்; ஏனோ, தெரியவில்லை. பெண்களைத் தலை நிமிர்ந்து பார்க்காதவர் உன் அழகிலே மயங்கிவிட்டார், கெட்ட எண்ணம் உடையவரல்ல! நீ கணிகைதானே என்று எண்ணிவிட்டார். உன் பேச்சில் இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை அவருக்கு! நீ அவரை வெறுத்தால் உன் காரியம் நடவாது...” “நீ என்ன சொல்கிறாய்? அவர் சொல்படி நடக்க வேண்டுமென்றா சொல்லுகிறாய்?” “இல்லையே மருதி, அவ்விதம் சொல்வேனா நான்! நீ உன்னைக் காத்துக் கொள்வதன்றி, இவ்விடம் விட்டு வெளியேற வேண்டுமானல், அவரை உன்வசம் ஆக்கிக் கொள்ள வேண்டும்.” “சீ! இதுதான் உன் உபாயமோ! என்ன பிதற்றுகிறாய்?” “மருதி, ஏன் இப்படி வெறுப்படைகிறாய்? உனக்கு நன்மையைச் சொன்னால்...” “எது எனக்கு நன்மை என்பது எனக்குத் தெரியாதா? உன் உபாயம் எனக்கு ஏற்றதல்ல.” “உன் பேச்சில் இவ்வளவு வேகம் ஏன்?” “நீ சொல்வதற்கு அர்த்தம் என்ன? அவரை - அந்தக் காமவெறி பிடித்தவரை என் வசம் ஆக்குவது என்றால் என்ன; அது எப்படி முடியும்?” “தப்பான முறையில் நீ அவரை அணுகும்படி நான் சொல்லவில்லை! அவர் நாட்டியத்திலே அத்தியந்த பிரேமையுடையவர் என்பதை நீ தெரிந்து கொள்ளவில்லையே! உன்னை அகப்படுத்தியதற்குக் காரணம் உன்னுடைய நாட்டியத்தை...” “என்ன?” “உன்னுடைய நாட்டியத்தைக் கண்டு ரஸிப்பதற்காக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. வெறும் காம வேட்கை கொண்டு உன்னைப் பிடித்து வரவில்லை...” “அம்பை, நீ பேசுவது என்னவோ, சாதுர்யமாக இருக்கிறது. ஆனால் அவர் பேச்சில் எவ்வளவு விஷம் நிரம்பியிருந்தது!” “நீ ஒரு நாடகக் கணிகை என்ற நினைப்பே, அவ்விதம் அவரைப் பேசத் தூண்டியது, வேறு ஒன்றும் இல்லை; உலகில் கணிகையருக்குக் கற்பு நெறி இல்லையென்பது வெளிப்படை யல்லவா? ஆகவே அவர் மீது கோபப்படுவதில் பயன் என்ன? நீ இவ்வளவு உறுதியுடையவள் என்று நான் முதலில் கருதவில்லை; இப் போதுதான் அறிந்தேன். உண்மையில் உன் விருப்பத்தை மீறி அவர் உன்னை அணுக மாட்டார். சோழ குலத்தில் பிறந்த அவர் நெறி தவறாதவர்...” “ஏன், வீணாக என்னவெல்லாமோ பேசுகிறாய்? என் நாட்டியத்திலே அவருக்குப் பிரேமை இருந்தால் நான் இங்கே அடிமையாகக் கிடக்கவேண்டுமா? நீ சொல்வது விசித்திரமாக இருக்கிறது!” “மருதி நீ விடுதலை அடைவதற்கு உபாயம் இது ஒன்றுதான், வேறு வழியில்லை...” |