(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

23. ‘விடுதலை’

     எல்லையற்ற குதூகலத்தோடு புலவரையும் மணக்கிள்ளியையும் பின் தொடர்ந்து சென்றான் அத்தி. சிறைக் கோட்டத்தின் வெளி மதிள் வாயிலை அடையும் போது, அத்தி, புலவரைப் பார்த்துக் கேட்டான் மனப் பதற்றத்துடன்:

     “புலவரே, இப்போது எங்கே? எந்த வழி-” புலவர் ஒரு கணம் நின்று அத்தியைக் கைகவித்தார்.

     “பேசாமல் எங்களுடன் வா; எல்லாம் விடியுமுன்பே தெரிந்து விடும்” என்றார் தணிந்த குரலில்.

     “அவள்!-” என்று அத்தியின் வார்த்தை உணர்ச்சியோடு வெளி வந்தது.

     “அவளுந்தான்!-” என்று சொல்லிக் கொண்டே கடுகி நடந்தார். அவர் குறிப்பிட்டபடி அத்தி அதற்கு மேல் பேசவில்லை. மணக்கிள்ளியின் தோளில் கை வைத்துக் கொண்டு கடுகிச் சென்றான்.

     சிறைக் கோட்டத்தின் வெளி மதிலைக் கடந்து, மதிள் புறத்து வாயிலை அடைந்தார்கள். அடைந்த மறுகணமே, வாயில் காவலர் இருவரும் தலை வணங்கி நடுங்கி நின்றார்கள்; அத்தி விடுதலை பெற்று வந்து விட்டதைப் பார்த்தார்கள்; மனம் கலங்கினார்கள்; உடல் நடுங்கினார்கள்; விழி சுழலப் பார்த்தார்கள்; பேச நா எழவில்லை; எனினும் துணிவோடு பேசினார்கள்.

     “இளவரசருக்கு, அடியேம்...”

     உடனே இளவரசன் மணக்கிள்ளி கடுத்த முகத்தோடு பார்த்தான்.

     “அடே! இந்தக் காரியத்தில் உங்களுக்குத் தீங்கு ஒன்றும் நேராது; நேர்ந்தால் நான் இருக்கிறேன்; நம்புங்கள்; விலை மதிப்பற்ற முத்து மாலைகள் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றன; என்னுடைய அபிமானத்திற்கு அறிகுறியாக அவை கொடுக்கப்பட்டன!-” என்றான் மணக்கிள்ளி.

     “கட்டளை! தங்கள் அருள் நிலைபெற்று வாழ்க” என்று பின்னே நடந்து நின்று வணங்கினார்கள். “இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; மறக்க வேண்டாம்;- இவ்விரவு முழுவதும் இப்படியே இருந்துவிட்டு, விடியல் வெள்ளி உதயமானவுடன், நாங்கூர்வேளிடம் ஓடித் தெரிவியுங்கள். “நள்ளிரவில் ஒரு கொள்ளைக் கூட்டத்தினர், எங்களை அடித்துத் தள்ளி மூர்ச்சையாக்கிவிட்டு யவன வீரனையும் கொன்று விட்டு அத்தியை மீட்டுப் போய்விட்டார்கள்’ என்று சொல்லுங்கள், தெரிந்ததா?” என்று இரும்பிடர்த்தலையார் சொன்னார்.

     “அவ்விதமே!”

     “அரசன் கேட்டாலும் அவ்விதமே சொல்க!” என்று கூறிவிட்டு புலவர், மணக்கிள்ளி, அத்தி இருவருடனும் மதிளை ஒட்டிச் செல்லும் வழியே கடுகினார்.

     மதிள்புறத்து வழியாக நடந்து அரண்மனையின் வெளி வாயிலை அடைந்து, கன்னிமாடத்தின் புறமே புகுந்து, இலவந்திகைச் சோலைக்குள் சென்றார்கள். கன்னிமாடத்தைக் கடந்து சோலை வழியே புகுந்து போகையில் அத்தியின் மனம் அடங்குவதாயில்லை; ஆதியை நினைத்து அவலம் கொண்டான். மிடுக்குடன் போய்க் கொண்டிருக்கையில், புலவரை இடைமறித்துக் கேட்டான்.

     “நான் மட்டுமே... இப்படிப் போவதா... கடைமுறையாகவாவது அவளை... காண வேண்டுமே!”

     “உன் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது! இப்போது நீ கன்னிமாடம் போவதானால்! - அவ்வளவுதான்.”

     “அவளும் என்னுடன் -”

     “மெல்லப் பேசு! - இனி இங்கே நிற்கவும் கூடாது! அவளை நீ அடைவாய்! - விரைந்து நட.”

     அத்தியின் மனம் ஆறுதல் பெறவில்லை. ஆதியைக் கண்டு போகவே எண்ணினான். புலவர் பேச்சையும் மதிக்கவில்லை. தயக்கத்தோடு நின்று முன்னும் பின்னும் நோக்கினான்.

     “புலவரே, என் மனம் ஆதியைப் பார்க்க வேண்டுமென்றே விரும்புகிறது; - ஆதுரப்படுகிறது. அவளைப் பார்க்காமல் நான் போகமாட்டேன்; அவளை அடைவதற்காக அல்லவா, நான் மீட்டும் நகர்புகுந்தேன்; இப்போது வெறுமே நான் திரும்புவதா? - அவளை நான் காண்கிறேன்! - ஆசையின் கனியாகிய அவளை ஒருமுறை கண்ணால் கண்டு இன்புற்றால்! - அவள் கண்டத்தொனியின் இன்பத்தை ஒரு முறை நுகர்ந்தால் - அதுவே போதும்! - அவளிடம் நான் விடை பெறுவேன்!-”

     உணர்ச்சி மிகுதியுடன், கரையில்லாக் காதல் பெருக்குடனும் அத்தி பேசிக் கொண்டிருந்தான். அவனை அந்த இடத்தை விட்டு அழைத்துச் செல்வது முடியாது போல் தோன்றியது.

     “அத்தி, வீணே இங்கே நிற்பதால் என்ன நேரும் தெரியுமா? உன் உயிர் ஒவ்வொரு கணமும்...” என்றார் புலவர்.

     “இல்லை! உயிர் போனாலும்...”

     “அவளை நீ இப்போது பார்க்க முடியாது அத்தி!”

     “பார்த்தாலன்றி இவ்விடம் விட்டும் பெயர முடியாது.”

     “அவள் கன்னிமாடத்தில் இல்லை! - நீ என்னுடன் வந்தால் காணலாம்” என்றார் புலவர் தணிந்த குரலில். அத்தி பிரமிப்புற்றான்; ஒரு கணம் விழி சுழல நின்றான்.

     “உண்மையாகவா? இப்போது எங்கே நான் வர வேண்டும்? சிறையிலிருந்து விடுதலை பெற்றேன் - ஆனால் அவள் இருதயத்தில் சிறைப்பட்டுக் கிடக்கிறேன்; அவளுடைய இருதயச் சிறையிலிருந்து விடுதலை பெற விரும்பவில்லை நான்; என் உள்ளத்தைச் சிறைப்படுத்திக் கொண்ட ஆதியை நான் -”

     “என்னிடம் நம்பிக்கை இல்லையா உனக்கு?”

     “தங்களை நம்புகிறேன்; அதனாலேயே கேட்கிறேன்.”

     “அதோ பார், சந்திரன் நடுவானத்தை விட்டுச் சாய்ந்து கொண்டிருக்கிறான். நாழிகையோ ஆகி விட்டது. இன்னும் சிறிது நாழிகைக்குள் காவிரிக் கரைக்குப் போய்விட வேண்டும். காவிரிக்கரையில் உன் காதலியைச் சந்திப்பாய். அல்லாமல், நீ அவளுடன் விடியு முன்பாக இந்நகர் கடந்து போய் விட வேண்டும் - புறப்படு! இனி அரைக்கணமும் இங்கே நிற்கக் கூடாது!”

     “புலவரே, தங்கள் உபாயத்தை நான் அறிந்தவன் தான். எனினும் அவளிடம் உள்ள பிரேமையால் தங்களிடம் எதிர்மொழிந்தேன். தங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? -” என்று கூறிக் கொண்டே புலவருடன் புறப்பட்டான்.

     “உனக்கு அவளை அளித்து விட்டோம்! இனி அவளைக் காப்பது உன் கடமை! உன்னையும் விடுதலை செய்தாயிற்று! இனிமேல் தான் பெருங்கேடுகள் இருக்கின்றன” என்று கூறிக் கொண்டே மணக்கிள்ளி அத்திக்கு நம்பிக்கையூட்டினான்.

     மிக வேகமாக மூவரும் இலவந்திகைச் சோலையின் வழியே காவிரிக்கரை நோக்கிப் போனார்கள். இலை நிறைந்த கிளைகள் செறிந்த சோலையூடே, இருளைக் கிழித்தெழும் மின்னலெனப் புகுந்து சென்றார்கள். ‘ஆதியின் சந்திப்பிற்கு’ ஆதுரம் மிகுந்த நெஞ்சினனாய்ப் போனான் அத்தி; தன்னுடைய பெரிய நினைவு நிறைவேறுமா என்ற எண்ணத்தோடு கடுகினான் மணக்கிள்ளி. ‘பகைவர் கூட்டத்தை அழித்து, கரிகாலனுக்கு அரசுரிமை அளித்த எனக்கு அந்தக் காரியங்களைச் செய்ய முடியாமல் போய் விடுமா என்ன? என்னுடைய சூழ்ச்சி என்றாவது வீணாகியிருக்கிறதா?-’ என்று தம் மாய உபாயத்தில் நம்பிக்கை கொண்டவராக முன் சென்றார் புலவர். காவிரிக் கரையை மூவரும் அணுகி விட்டார்கள்.

     இலவந்திகைச் சோலையிலிருந்து காவிரிக்கு மூழ்கப் போவோர்க்கு உரிய நீர்த்துறை அது. அதற்கு அயலில் நேர் மேற்காகச் செல்லும் சாலையில் அம்மூவரும் நடந்தார்கள். அந்தச் சாலையில் அவர்கள் ஏறி நடந்தார்கள் மேற்கு நோக்கி. அந்தச் சாலையின் ஒருபுறம் காவிரி சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. ஒரு புறம் வயல் பரப்புக்கள் காணப்பட்டன.

     சாலையின் இருபுறமும் நெடுக மரங்கள் அடர்ந்து இருந்தனவாதலால், சாலை நடுவில் போவோர் வருவோரை அறிய முடியாமல் இருள் கவிந்திருந்தது. நிலவின் இரண்டொரு கிரணங்கள், இலை, கிளைகளின் இடுக்கு வழியே புகுந்து நடுச் சாலையின் இடத்தே புள்ளி புள்ளியாக ஒளிக் கோலம் இட்டன.

     இருள் மூடிய அந்தச் சாலையில் சிறிது தயக்கத்தோடு மூவரும் நடந்து செல்லுகையில் சற்று முன்னிடத்தே இருவர் பேச்சுக் குரல் கேட்டது. ஒரு சிறு நெருப்புப் பந்தம் ஒன்றும் தெரிந்தது. எனினும் அங்குள்ள வடிவங்களின் தோற்றம் புலனாகக் கூடிய ஒளி இல்லை. ஆனால், அந்தப் பேச்சின் குரல் அவனை வசீகரித்தது. அப்போதே, அத்தியின் உள்ளம் குளிர்ந்தது. அதுவரை அவன் மனம் படபடப்புற்று இருந்தது. பேச்சுக் குரலை உற்றுக் கேட்ட அத்தி, “புலவரே, இது ஆதியின் குரல் அல்லவா” என்றான் ஆவலோடு. ‘அதோடு மற்றோர் குரல் யாருடையது’ என்று கலங்கினான். “இன்னும் சந்தேகமா உனக்கு?” என்றான் மணக்கிள்ளி.

     “அத்தி, ஏன் சஞ்சலம் உனக்கு?” என்று புலவர் சொல்லி விட்டு, “கிள்ளி!-” என்றார்.

     “வாருங்கள்” என்ற குரல் முன்னிடமிருந்து கேட்டது.

     புலவர், அத்தி, மணக்கிள்ளி மூவரும், முன்னே சென்றார்கள். அருகில் சென்றவுடன், பல்லக்கும், குதிரையும், அவற்றிற்கு அருகே, ஆதி, பெருவிறற்கிள்ளி அந்தரி மூவரும், மல்லர்களும் இருந்தார்கள். ஆதியுடன் பெருவிறற்கிள்ளி பேசிய குரலையே, முன்பு அத்தி உற்றுக் கேட்டதாக, பின்னர் அறிந்து கொண்டான்.

     புலவர், முதன் முதல் ஆதியைப் பார்த்தார். அவர் மனம் நெக்குருகியது. அன்பால் அவர் கண்களில் நீர் மல்கியது.

     “ஆதி, உன் காதலன் உன்னிடம் வந்து விட்டான். இனி, நீ கவலைப் பட வேண்டாம். அத்தியுடன் புறப்பட்டுப் போய் விடு. சிராமலையின் அருகில் உறையூர்ச் சாலையில் உங்களை, நான் நாளைக் காலையில் சந்திப்பேன். நான் மட்டுமல்ல! - மணக்கிள்ளி, பெருவிறற்கிள்ளி... அப்போது பார்-” என்றார் புலவர். ஆதி புலவருக்கு முன் வந்தான்.

     “நான் இந்தக் காரியத்தில், தங்களுடைய உதவியால் துணிந்து விட்டேன்! தாங்களே காக்க வேண்டும், தந்தை கோபத்தை-” என்று சொல்லியவாறே தழுதழுத்த குரலுடன் கண்ணீர் பெருக்கினாள். நெருப்புப் பந்தத்தை ஏந்தி நின்ற அந்தரிக்கு அருகில், ஆதியின் முகம் நன்கு தெரிந்தது. சிவந்து பொருமி, கண்ணீர் விடும் அவள் முகத்தை அத்தி கண்டான்.

     ஆதி அத்தியுடன் புறப்படத் துணிந்து விட்டாள். எனினும் அந்நிலையில் அவளால் பொறுக்க முடியாத வேதனையை, அவள் அநுபவித்தாள். ஆற்றாமையால் உணர்ச்சிமிக்குப் பேசத் தலைப்பட்டாள்.

     “நான் என்ன செய்வேன்? நான் செய்வது தவறாகவே கருதக் கூடியது; தந்தையின் மனம் புண்ணுறும்; எல்லை மீறிக் கோபமும், துயரமும் அவருக்கு உண்டாகும்; என்னைப் பெண்ணாகவே மதிக்காத மனநிலையும் அவருக்கு உண்டாகும். ஆனால் நான் என்ன செய்வது? என்னுடைய சுக துக்கத்தை நான் அல்லவா அநுபவிக்கப் போகிறேன்! தெய்வம் துணை செய்ய வேண்டும். நான், அவருக்குத் துயர் விளைத்து விட்டு, இப்படி அவரால் வெறுக்கப்பட்டவருடன் சேரத் துணிந்தது...” என்று துயர் நிறைமொழிகளைக் கூறினாள்.

     புலவர் அவளை ஆறுதல் செய்ய முற்பட்டார்.

     “உன்னால், கரிகாலனுக்குத் துயர் உண்டாகாத வகையில் நான் பார்த்துக் கொள்கிறேன்; கவலை வேண்டாம்; நான் நினைத்துச் செய்த காரியம் வீண் போகாது; கரிகாலனை மனம் மகிழச் செய்கிறேன்; இனி அதிக நாழிகை இங்கே தங்குவது நேர்மையன்று” என்று சொல்லி அவள் கையைப் பற்றினார்; அயலில் கண்ணீர் துளும்ப நின்ற அத்தியையும் பார்த்தார்; அவனை நோக்கி, “அத்தி, இங்கே வா!” என்றார். புலவரின் பக்கத்தில் அத்தி அகம் குழைந்து தலை பணிந்து சென்றான். அவன் கையோடு ஆதியின் தளிர்க்கரத்தைச் சேர்த்து அருள் மொழி கூறினார். அந்நிலையில் ஆதி - அத்தி - யின் இருதயப் பொம்மலை எடுத்துரைக்க இயலுமா? -

     “அத்தி, இவளை நீயே இனி காப்பாற்ற வேண்டும். நாளைக் காலையில் உன்னைச் சிராமலைச் சாரலில், உறையூர்ச் சாலையில் சந்திக்கிறோம்; அதுவரை, ஆதியுடன் நீ அங்கே தங்கியிரு; இதோ நிற்கும் குதிரை, நீயும் ஆதியும் போவதற்கு ஆயத்தமாக இருக்கிறது. சிராமலைச் சாலையை விட்டுச் சிறிதும் நீங்கள் முன்னே போகாமல் இருக்க வேண்டும். நாங்கள் ஆயத்தமாக நாளைக் காலையில் வந்து விடுகிறோம்; வேறு ஒன்றும் உனக்கு இப்போது சொல்ல விரும்பவில்லை. நான் சொல்வது போய் செய்” என்றார் புலவர்.

     “தங்கள் கட்டளை!” என்று சொல்லியவாறே ஆழ்ந்த பெருமூச்சு விட்டான் அத்தி. அடுத்த கணமே, ஆதியும் அத்தியும் புலவரைக் கை குவித்து வணங்கிப் புறப்பட்டார்கள்.

     “அத்தி, ஆதி நீங்கள் மனம் கலங்காமல் போய் இருங்கள். நாங்கள் நாளைக் காலையில் சந்திப்போம்” என்று மணக்கிள்ளியும், பெருவிறற் கிள்ளியும் ஆறுதல் மொழி சொன்னார்கள். அவ்வார்த்தைகளைக் கேட்டு, புன்னகை செய்தவர்களாய், ஒருவாறு துணிந்த நெஞ்சுடன், குதிரையிடம் அணுகினார்கள்.

     “தயங்காமல் புறப்படுங்கள்; நாழிகை ஆகி விட்டது” என்றார் புலவர்.

     போர் வீரனான அத்தி குதிரையில் சரேலென்று முன்னதாக ஏறிக் கொண்டான்; போர்த் தொழில் பழகிய வீரப் பெண்ணணங்காகிய ஆதியும், அஞ்சாமல் அத்தியின் முன் அமர்ந்து கொண்டாள். ஆம்! - புலவர் இரும்பிடர்த்தலையார், ஆதிக்குப் பயில்விக்காதது என்ன இருக்கிறது? கரூரிலிருந்து சிவிகையில் வரும் தருணம், எதிர்ப்பட்ட நல்லடிக்கோனை வாள் கொண்டு எதிர்க்க முற்பட்ட வீர மங்கையல்லவா அவள்! எனவே குதிரையில் அவள் அவ்வளவு எளிதாகவும், துணிவுடனும் ஏறி, அத்தியிடம் அமர்ந்து கொண்டது ஒரு வியப்பல்லவே! அத்தியிடம் கொண்ட ஆராக் காதலின் விளைவல்லவா எல்லாம்! நர்த்தனப் பிரியனான அத்தியிடம் கொண்ட தீராக் காதலால், அவள் எந்தக் காரியத்தையும் செய்ய முற்பட்டு விட்டாள்!

     அந்தக் காட்சியைக் கண்டு, புலவர், மணக்கிள்ளி, பெருவிறற்கிள்ளி மூவரும் குதூகலம் கொண்டார்கள். அந்தரி, வியப்புற்று நிலை சோர்ந்தாள். குதிரையும் புறப்பட்டது. “போய் வாருங்கள்! உங்கள் வாழ்க்கை நிலைபெறுக” என்று புலவர் வாய்மொழி கூறினார். அன்பு கனிந்த மொழிகளைக் கேட்டு அத்தியும் ஆதியும் குறுநகையால் தம் பெரும் மகிழ்வைத் தெரிவித்தனர். நிலவின் ஒளிக்கிரணங்கள் குதிரை மீது இருக்கும் இரு காதலர் முகத்திலும் திளைத்து விளையாடின.

     “சிராமலையில், உங்கள் வருகையை எதிர் பார்க்கிறோம்” என்று கூறிவிட்டு அத்தி, குதிரையைச் செலுத்தினான். குதிரை கடுகியது; அடுத்த சில கணங்களில் குதிரை மேற்கு நோக்கி நெடுந்தூரம் போய் விட்டது. குதிரையின் குளம்படிச் சப்தமும் சிறிது நாழிகையில் அடங்கியது. புலவர் ஆழ்ந்த அமைதியோடு, மணக்கிள்ளியைப் பார்த்தார்.

     “மணக்கிள்ளி, என்னுடைய நோக்கம் ஒருவாறு நிறைவேறி விட்டது; இன்னும் முழுவதும் முடிந்த பாடில்லை; இனிமேல் தான் மிகுந்த யோசனையோடு காரியத்தைச் செய்ய வேண்டும்; இரண்டு பெரிய காரியங்களில் ஒரு காரியம் வெற்றி யுற்றதாகவே சொல்லி விடலாம்; ஆனால் நீண்ட காலமாக என் உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் ஓர் அரிய எண்ணம் இனியே நிறைவேறியாக வேண்டும். நீயும், பெருவிறற்கிள்ளியும் பிறந்த அந்நாளிலேயே என் அரிய எண்ணம் முளைத்து வளர்ச்சி பெற்றது; அத்தி - ஆதியின் காதல் மணம் நிரைவேறுவதில்தான், அந்த எண்ணமும் நிறைவேறப் போகிறது; ஆனால் உலகம் போற்றும் எண் தோளீசனான சிவபெருமானுக்கு எழுபது மாடக் கோயில்கள் எழுப்பிய செங்கணான், கரிகாலனின் உயிர்த் தோழனாக இருந்ததால் என் எண்ணம் நிறைவேற வகையில்லை. இன்றோ, எதிர்பாராத தருணம் வாய்த்திருக்கிறது... கரிகாலனின் ஆட்சி தமிழகம் எங்கும் சென்று நிலைபெற்றிருக்கிறது! தமிழகத்தின் நூற்றுக் கணக்கான குறு நிலமன்னர்கள், பேரரசர்கள், வீரர்கள் - யாவரும் கரிகாலனின் ஆட்சிக்கு அடங்கியவர்களே! - குமரி முதல் வேங்கடம் வரை, கரிகாலன் ஆக்ஞைக்கு அடங்கியவையே! வட புலத்து வாழும் பெருநில வேந்தர்கள் கூட கரிகாலனுக்குத் தலை பணிகிறார்கள். வடபுல வேந்தர் செருக்கை அழித்த பின்னரே, காஞ்சி நகரில், கரிகாலன் புகுந்து அந்நகரை, இந்நகர் போலவே நிருமாணித்தான்; ஆனால் இந்நகர் - பொன்னாடன்ன இப்பெரு நகர் ஒருநாள் கோள் பட்டு மறையும். அதன் பின், நம் சோழர் குலச் செல்வன் கரிகாலனின் வழியினருக்கு - உனக்குப் பின் வழி வழியாக - உங்கள் பரம்பரைக்கே அரசு கட்டில் இருக்க இடம் வேண்டுமே! ‘உறையூர்’ ஒன்றே அதற்கு உற்ற இடம் அல்லவா! பழம் பெருமையையுடைய உறையூரை நீங்கள் மறக்க முடியுமோ? - இதைக் குறித்தே நான் நெடுநாட்களாகச் சிந்தித்து வருகிறேன். காவிரியின் வளம் செழித்து விளங்கும் அந்நகர் உங்கள் வாழ்விற்கு ஏற்ற இடம். அதிகம் நான் என்ன சொல்வேன்? நீங்கள் இருவரும் இவ்விஷயத்தில் நான் சொல்வது போல் செய்யுங்கள்” என்று புலவர் கூறிச் சிறிதே அந்தேரியைப் பார்த்து நின்றார்.

     கையில் ஏந்திய நெருப்புப் பந்தத்தோடு, புலவரை வியப்பால், விழிகள் மலரப் பார்த்தாள் அவள்.

     “தாங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதன் படியே நடந்து கொள்கிறோம். எங்கள் விருப்பமும் அதுவே” என்று மணக்கிள்ளியும் பெருவிறற்கிள்ளியும் சொன்னார்கள். அதற்கு மேல் புலவர் சொன்னார்.

     “‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்க’ என்ற உலக வசனத்தை இப்போது நாம் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது; முதலில் இன்னும் இரண்டு நாழிகை கழிந்த பின்பு, அந்தரியாலும், சிறைக் காவலராலும் அரண்மனையில் செய்தி பரவும்; அதன் பின், கரிகாலன் அத்தி மீது கடுஞ்சினம் கொண்டு, அவளை அகப்படுத்தி வெல்வதற்குப் படையுடன் புறப்படுவான்; ஆகவே படையுடன் நாம் புறப்பட்டு விடுவோம். கரிகாலனுக்கு வாக்குறுதி கொடுத்து ஆறுதல் செய்து விட்டுப் படைகளுடன் நாமே. உறையூர் நோக்கிப் புறப்படுவோம்; அதன் பின் காரியத்தை எளிதில் முடித்துக் கொள்ளலாம். அத்திக்குச் சேர நாட்டு அரசுரிமையை அளிப்பதும் நம் கடமை! - ஆகவே இரண்டு பெரிய போர்களுக்கு நாம் நாளைக் காலையில் ஆயத்தமாக வேண்டும். ‘அத்தியைச் சிறைப் பிடிப்பதே நம் நோக்கம்’ என்பதைக் கரிகாலனுக்கு தெளிவுறுத்தி விட்டால், படைகளுடன் நாம் புறப்பட்டு விடலாம். என் யோசனை உங்களுக்குப் புலனாயிற்றல்லவா?”

     புலவரின் யோசனையை அரசிளங்குமரர் இருவரும் அறிந்து குதூகலத்தால் துள்ளிக் குதித்தனர். புலவரின் உபாயத்தைக் கண்டு பிரமிப்புற்றார்கள்.

     “புலவரே, தங்கள் யோசனை அற்புதமானதன்று; இந்த யோசனைப்படியே காரியம் நிறைவேறுமானால், வேந்தர் எல்லையற்ற குதூகலம் கொள்வார்; தாங்கள் எண்ணித் துணிந்த காரியம் வீணாகாது! எங்கள் வாழ்வுக்கு உயர்வும் நிலையும் அளிக்கும் தங்களுக்கு நாங்கள் எழு பிறப்பும் கடமைப்பட்டிருக்கிறோம். தங்களுடைய இந்த உபாயத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும்; தாங்கள் இருக்கையில் வெற்றியில் சந்தேகமே இல்லை எங்களுக்கு! இனி அதிகம்...” என்று மணக்கிள்ளி வாய்மொழிந்து புலவரைப் புன்னகையோடு பார்த்தான்.

     “தங்களுடைய யோசனையின் சிறப்பால் சோழ நாட்டின் அரசுரிமை முற்றும் எங்களுக்கு உரிமையாகிறது. பிளவுள்ள நிலப்பரப்பு - வேறு வேறான சோழ பூமி - இனி ஒன்றாகப் போகிறது; எங்களுக்கே உரிமையாகப் போகிறது. இதை விடப் பெரிய - ஒப்பற்ற காரியம் வேறு என்ன இருக்கிறது; வேந்தரால் வெறுக்கப்பட்ட அத்திக்கு, சேரநாட்டு ஆட்சி கிடைத்து விட்டால் அவனை இகழ்ந்த வேந்தரும் ஏத்தும் நிலை உண்டாகும் அல்லவா? - ஆனால், இந்த இரண்டு காரியங்களுக்காகவும் எவ்வளவோ பாடுபட்டாக வேண்டும்!” என்றான் பெருவிறற்கிள்ளி.

     “அந்தச் சேர சேனாதிபதிகள் மட்டுமல்ல! - நல்லடிக்கோன் மட்டுமல்ல - பாண்டியனும் எதிர்த்து வந்தாலும் அவர்கள் அனைவரையும் எதிர்த்துப் புறங்காட்டி ஓடச் செய்யும் படை வன்மை நம்மிடம் இருக்கிறது; இப்போதே வேண்டுமானாலும், இன்னும் ஒரு நாழிகைப் போதில் படைகளை ஒன்று சேர்த்துப் புறப்பட்டு விடலாம்...” என்று மணக்கிள்ளி சொன்னான்.

     புலவர் இளமுறுவலோடு இருவரையும் கையமர்த்தி விட்டு, அந்தரியைப் பார்த்துச் சொன்னார்:

     “அந்தரி, நீ இப்போதே, இந்தப் பல்லக்கில் புறப்பட்டுச் சென்று இலவந்திகைச் சோலை வழியே புகுந்து கன்னிமாடத்தை அடைய வேண்டும். அங்குள்ள சேடியரிடம் நீ சொல்ல வேண்டியது; ‘சோலையில் ஆதியுடன் நான் விளையாடிக் கொண்டிருக்கையில் யாரோ சிலர் சூழ்ந்து கொண்டு ஆதியை மட்டும், தூக்கிப் போய் விட்டார்கள்; நான் முடிந்த வரை பின் தொடர்ந்து சென்றும் அவர்களைப் பின் தொடர முடியவில்லை. காவிரிக்கரை வழியே மேற்கு நோக்கி அவர்கள் ஓடி விட்டார்கள். நான் ஓடி வந்து விட்டேன்’ என்பதே; புறப்படு, அரசன் உன்னைக் கேட்ட போதும் இவ்விதமே சொல்” என்று கட்டளையிட்டார்.

     “அப்படியே! இது குறித்துத் தாங்கள் கவலைப்பட வேண்டாம்; நான் போய் வருகிறேன்” என்று பல்லக்கில் புகுந்து அமர்ந்து கொண்டாள் அந்தரி.

     அடுத்தாற் போல் சிவிகை தூக்கும் மல்லர்களுக்கும் புலவர் ஒரு கட்டளையிட்டார்.

     “அடே, நீங்கள் இலவந்திகைச் சோலை வரை அந்தரியைக் கொண்டு விட்டு மணக்கிள்ளியின் மாளிகைக்கு மறைந்து வந்து விடுங்கள், போகும் வழியைப் பார்த்துப் போங்கள்.”

     “கட்டளைப்படியே!” என்று மல்லர் தலைவணங்கி விட்டுப் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு இலவந்திகைச் சோலை நோக்கிக் கடுகினார்கள்.

     அவர்கள் சென்ற பின் புலவர், அரசிளங்குமரர் இருவருடன் அரண்மனை நோக்கி விரைந்து நடந்தார். விடியற்காலையில் தாம் செய்யப் போகும் காரியங்களுக்காக அவர் தீவிர யோசனையுடன் நடந்தார். தம்முடைய நோக்கம் நிறைவேறுவதை உள்ளிட்டு, விடியல் வெள்ளியின் உதயத்தை எதிர்பார்த்தபடியே அரண்மனையை அடைந்தார்கள் மூவரும்.



மருதியின் காதல் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25