உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 14. ‘போகா விட்டால்’ சிறைக் கோட்டமாகிய குணவாயில் கோட்டத்தில் எள் விழ இடமின்றி வீரர்கள் கூடி விட்டார்கள்; அழுகையும், புலம்பலும் எதிரொலித்தன எங்கும். ‘சேரன், சோழன் இருவரும் இறந்தார்கள்’ என்ற செய்தி காட்டுத்தீப் போல், நகரில் பரவியது. அதன்பின் நகரில் அமைதி உண்டா? ‘உயிரைக் காட்டிலும் மானமே சிறந்தது’ என்று சேரன் சிறைக் கோட்டத்திலேயே உயிர் விட்டான். அவன் உயிர் விட்டதால், பழி மொழிக்கு அஞ்சிய சோழன், தானும் உயிரை மாய்த்துக் கொண்டான்’ - இவ்விதம் செய்தி பரவியது என்றாலும், சேரனைச் சிறைப்படுத்தித் துன்புறுத்தியதால் மனம் பொருமியிருந்த சேர நாட்டு வீரர்கள் பலர் ஒருங்கே கூடிப் பெரும் பூசலிட்டுப் புறப்பட்டார்கள். சேர வீரர்கள் உணர்ச்சி மேலிட்டு பேராரவாரத்துடன் சோழர் படையைத் தாக்கத் துணிந்தார்கள். நள்ளிரவிலே, மக்கள் நிலை தடுமாறினார்கள். வீதிகளெங்கும் வீரர் ஆரவாரித்துப் பூசலிட்டு ஓடித் திரிந்தார்கள். சில கணங்களில், சேர நாட்டு வீரர் படை ஒன்றுகூடியது. சிறைக் கோட்டத்தை நோக்கிச் சென்றது அப்படை. ஆங்காங்கே நிலைப்படையாக இருந்த சோழரின் படை சின்னபின்னப்பட்டுச் சிதறியது. அழுகையும் ஆரவாரமும் நிறைந்த சிறைக் கோட்டத்தில் சேரர் படை ‘கல்’ என்ற ஒலியுடன் புகுந்தது. சிறைக் கோட்டத்தின் நானாபுறங்களிலும் வீரர் புகுந்து, ஆங்காங்கே காவல் காத்து நின்ற சோழ வீரர்களைத் தாக்கித் துரத்தினார்கள்; வாயில் கதவுகளைப் பிளந்து எறிந்தார்கள். அடைப்பட்டிருந்த சேர வீரர்களை விடுதலை செய்தார்கள்; சிறையிலிருந்து விடுதலை பெற்ற வீரர் கூட்டத்திலே, சேரனின் சேனாபதியரான, கங்கனும், கட்டியும், புன்றுறையும், வீர அட்டகாசத்துடன் தோன்றினர். சேனாதிபதியர் மூவரும் ஒன்று கூடி, சேர வீரரின் துணையுடன், அங்கிருந்த சோழ வீரரைத் துரத்தியடித்தார்கள். சிறைக் கோட்டத்தில், இறந்து கிடக்கும் சேரனையும் சோழனையும் பார்க்கப் புகுந்தார்கள். திடீரென்று ஏற்பட்ட மாறுதலைக் கண்டு, அங்கிருந்த புலவரும், மந்திரியரும் ஆச்சரியம் அடைந்தார்கள். கங்கன், கட்டி, புன்றுறை மூவரும் இறந்து கிடந்த சேரனின் உடலத்தைக் கண்டு கண்ணீர் சிந்தினர், “சேரர் குலாதிபனுக்கு இந்நிலை வரவேண்டுமா! இந்நிலையிலா இவனுடலை நாங்கள் காணவேண்டும்! வெற்றி மாலை சூடி இவனை வாழ்விக்கக் கொடுத்து வைத்திலேம்! ஆ! வஞ்சனை செய்த மன்னனும் வாழாமல் இறந்தானே! சோழன் தான் அடைந்த பயன் என்ன? பழிக்கு அஞ்சி, பதற்றம் கொண்டு உயிர் விட்டான்!” சேனாபதியர் மூவரும் இவ்விதம் பிரலாபித்தார்கள். “சேனாபதிகளே! மானத்தைப் பெரிதாக மதித்துச் சேர மன்னன் உயிர் நீத்தான்; நான் பாடுபட்டது பயனில்லையாயிற்று! - சோழனே! பெரும் புகழ் கொண்டான், சேரன் மாய்ந்த துயர் பொறாமல் உயிரிழந்தான். சோழன் அழியவில்லை! சோழனை அடைய இருந்த பழி அழிந்து விட்டது. சோழனின் புகழ் வானையளாவி விட்டது; இனி உலகுள்ளளவும், சோழன் புகழ் மங்காது! இரு பெரு வேந்தர்களும் மானமே பெரிதாக உயிரை மாய்த்துக் கொண்டார்கள்! இவர்கள் புகழ் வாழ்வதாகுக! இவர்களோடு பகையும் பழியும் போவதாகுக! இனி! நீங்களே, இந் நகரைக் காக்கவேண்டும்! சேரன் மகப்பேறு பெறாமலே மாய்ந்தான்! இந்நகரைக் காப்பது உங்கள் கடமை!” என்று பொய்கையார் கூறிக் கொண்டிருக்கையில் ஒரு பேரிரைச்சல் சிறை வாயிலின் வெளியிலிருந்து கேட்டது. அந்த இரைச்சலைக் கேட்டு யாவரும் நோக்கினார்கள் சிறை வாயிலை. ஆ! ஒரு வீரன் தேரிலிருந்து குதித்துக் கர்ச்சித்துக் கொண்டே வருகிறான். அவன் கையில் வாள் மின்னிக் கொண்டிருப்பதை நிழலொளியில் நன்கு காண முடிந்தது. மிக வேகமாக ஏதேதோ சொல்லிக்கொண்டு வந்தவன், சிறைக் கோட்டத்தின் கூட்டத்தையும் ஆரவாரத்தையும் பார்த்து மயங்கித் தயங்கிப் பதறுகிறான். கூட்டத்திற்குப் பின் இருந்து, வாளை உயர்த்தி வீர வாசகம் பேசுகிறான். “விடுதலை! விடுதலை! இதோ விடுதலை நான் அளித்து விடுகிறேன்! சேரனை இங்கே வரவிடுங்கள்! சோழ குலாதிபரே, தாங்கள் சிறையிலிருந்து அவனுக்கு விடுதலை அளித்தால், நான் அவன் உயிருக்கே விடுதலை அளித்து விடுகிறேன்” என்று வீர வாசகம் கூறும் வீரன் யார்? அதிக நாழிகை அவன் அங்கே நிற்கவில்லை. அவனைப் பித்துக் கொண்டவனாகவே யாவரும் அங்கே கருதினார்கள். ஆனால் அவனுடைய வார்த்தைகளையும் வாளை உயர்த்தி நிற்கும் அவன் நிலையையும் கண்டு யாரும் வெறிதே நிற்பார்களா? சேரனை இழந்த துயரத்திலே மூழ்கிக் கிடக்கும் வீரர் கூட்டம், புலிக் கூட்டமெனப் பாய்ந்தது. வெறி பிடித்து நிற்கும் வீரனைக் கட்டிப் பிடித்துச் சிறைக் கோட்டத்திற்குள் இழுத்துச் சென்றார்கள். கங்கன் முதலிய சேனாபதியர் முன்பு கொணர்ந்து நிறுத்தினார்கள். பொய்கையார் திடுக்கிட்டார். வெறி பிடித்த வீரனின் முகத்தைப் பார்த்தார். “நல்லடிக்கோன்!...” என்ற வார்த்தை மட்டும் அவர் வாயிலிருந்து புறப்பட்டது. நல்லடிக்கோன் சுற்று முற்றும் பார்த்தவன் தன் நிலை மறந்தான். கீழே கிடக்கின்ற இரண்டு உடல்களையும் கண்டான். மனம் பதறினான். செங்கணானின் உடல் மீதே சாய்ந்தான். அவன் உடலைப் புரட்டி அசைத்தான். “தந்தையே! தந்தையே!...” கூக்குரலிட்டான். “புலவரே! இது என்ன? அழியப் பாடி விட்டீர்களா? ஆக்கப்பாடும் வன்மை...” என்று அலறினான். “நான் ஆக்கப் பாடினேனே யல்லது அழியப் பாட வில்லை! விதி செய்த விளையாட்டு இது! உண்ணத் தண்ணீரின்றி உறுதுயர் செய்ததால் சேரன், மானமே பெரிதாகக் கொண்டு உயிரிழந்தான்; சேரனைச் சிறைக் கோட்டத்திலே மாய்த்த பழி தன்னைத் தொடராமல் சோழனும் தன் உயிரை மாய்த்துக் கொண்டான். இது என் குற்றமல்லவே! நீ சற்று முன் வீர வாசகம் கூறியதில், சேரன் உயிருக்கு விடுதலை அளிப்பதாக அல்லவா குறிப்பிட்டாய்! சேரன் உயிர்க்கு மட்டுமல்ல! சேரன் - சோழன் இருவருக்குமே விடுதலை! இனி உனக்குக் கவலை ஏன்?” என்றார் பொய்கையார். “ஆ! புலவரே! மதி மயங்கினேன்! உறையூரை அணுகியவன், மனம் பொறாமல், திரும்பினேன்! தெய்வம் இந்தக் காட்சியைக் காணவோ என்னைத் திரும்பச் செய்தது? தந்தையின் மனத்தை மாற்ற முயன்றும் முடியவில்லையே என்ற ஏக்கத்தால் மனம் கலங்கித் திரும்பினேன். சிந்தையைச் சிதறவிட்டேன். வீணே தந்தையின் மனத்தைப் புண்படுத்தினேன்! அவ வாழ்வு அடைந்தேன்! உண்மை அறியாமல் பிதற்றினேன்” என்று நல்லடிக்கோன் அலமந்து பிதற்றினான். தந்தையை இழந்த துயரத்தால் மகன் அலறுவதைக் கண்டு ஆற்றாமல், பொய்கையார் அவனைத் தேற்றினார். தந்தையை இழந்த துயரம் நல்லடிக்கோனை மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்கியது. ஆம்! அவன் நினைத்த நினைவென்ன? - இப்போது அவன் கண்ட காட்சி என்ன? ‘என் சொல்லைக் கேட்கவில்லையே! சேரனை விடுதலை செய்தால் பெருந்தொல்லை உண்டாகுமே! எப்படியும் சேரனை விடுதலை செய்தால் கூட, அவன் உயிரைப் போக்கி விடுவோம் முன்னதாக’ என்ற உட்கோளுடன் கடிதாகத் தேரைச் செலுத்தி வந்தவன், தன் தந்தையையே இழந்த காட்சியைக் காண நேர்ந்தது. நல்லடிக்கோனுக்கு இதைவிடத் துயர் வேறு என்ன வேண்டும்? அது மட்டுமா? சிறைப்பட்டுக் கிடந்த கங்கன், கட்டி, புன்றுறை மூவரும் அங்கே சூழ்ந்து நிற்பதைக் கண்டான். அவன் மனம் நெருப்பிடைப்பட்ட தளிரெனக் கருகியது. தான் வென்று அடிப்படுத்திய சேர வீரர்கள் இறுமாந்து சூழ்ந்து நிற்க - வெறும் நிலத்திலே - சிறைக் கோட்டத்திலே தன் தந்தை சேரனுடன் மாய்ந்து கிடப்பது என்றால், அவன் மனம் எவ்விதம் பதறியது என்பதைக் கூறவேண்டுமா? நீண்ட நாழிகை ஆயிற்று. மேல் நடக்க வேண்டியதை செய்யும்படி பொய்கையார் வற்புறுத்தினார். பொழுது விடியச் சிறிது நாழிகை இருந்தது. மேல் நடக்க வேண்டியதைக் கருதி நல்லடிக்கோன் துணிவு கொண்டான். பொய்கையாருடைய தலைமையில் இரு பெரு வேந்தருக்கும், தகுந்த முறைப்படி தகனக் கிரியைகள் ஆயத்தமாயின. சேரனுடைய சுற்றத்தார்களும், சோழனுடைய சுற்றத்தார்களும் அழுது புலம்பினர். விடியற்போதிலே, வேந்தர் இருவருக்கும் கருமக் காரியங்கள் நடந்தன. மறு நாள் பொய்கையாரின் வார்த்தைகளுக்கு இணங்கி, நல்லடிக்கோனும், சேரனின் சேனாபதியர் மூவரும் ஒன்றுபட்டார்கள். வஞ்சி நகரின் ஆட்சியைச் சேனாதிபதியர் மூவரும் கைக் கொண்டனர். நல்லடிக்கோன் அதற்கு மனம் ஒப்பினான். சேரருக்கும் சோழருக்கும் பகைமை நீங்கிவிட்டதை, நகருக்குள் யாவருக்கும் முரசறைந்து உணர்த்தினார்கள். கங்கன், கட்டி, புன்றுறை மூவரிடமும் நல்லடிக்கோன் ஒரு வாக்குறுதி பெற்றான். ‘நம் நட்பு என்றும் மாறுபடாமல் இருக்கவேண்டும். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அத்தியை இந் நகருக்குள் புகவிட வேண்டாம். இதுவே என் விருப்பம். நான் அத்தியை எதிர்க்க நேர்ந்தால் எனக்கு நீங்கள் உதவி புரிய வேண்டும்; அத்திக்கு ஆதரவு தருதலை விட்டு ஒழிக்கவேண்டும்” என்று நல்லடிக்கோன் கேட்டான். “நல்லடிக்கோன், உன் விருப் பம் அதுவானால் அப்படியே செய்வோம். ஆனால் நெடுநாள் நண்பனான அத்தியை... அது கிடக்கட்டும். அப்படி அவனிடம் உனக்குப் பயம் ஏன்? அவன்தான் உனக்கு என்ன தீங்கு செய்துவிட்டான்? முதலில் அதைச் சொல்...” என்றான் கங்கன். “சொல்கிறேன்! ஆனால் நீங்கள் பொறாமைப் படக் கூடாது... ஆனால்...” என்று தடைப்பட்ட குரலோடு பேசினான். “நல்லடிக்கோன்!... என்ன மறைத்துப் பேசுகிறாய்?” “காதலி... இல்லை... அவள் ஒரு கணிகை தானே?” “மருதியையா சொல்கிறாய்?” “ஆம்! அவள்தான்! அவளை என் வசம் ஆக்கிக் கொண்டேன். அவள் இனி என்னை விட்டுப் பிரியாள்...” “என்ன இது? உண்மைதானா? அத்தியை விட்டு உன்னை அவள் எப்படிச் சேர்ந்தாள்? ஆச்சரியமாக இருக்கிறதே!” “அவளை முதலில் இங்கே சிறைப் பிடித்தேன்; அப்புறம் என் மனத்திளும் சிறைப் பிடித்தேன்... அத்தி என்னிடம் கடுஞ்சினத்துடன் போயிருக்கிறான் தெரியுமா?” “எங்கே?” “காவிரிப்பட்டினத்திற்கு! புலவர் இரும்பிடர்த் தலையார் அவனை அழைத்துப் போகிறார். நான் நேற்றிரவு உறையூரிலிருந்து வரும்போதுதான் எதிரில் பார்த்தேன். கரிகாலனிடம் போகிறான் என்றுதான் தோன்றுகிறது.” “தொண்டி நகரை விட்டுப் போய்விட்டானா?’’ “இப்போது அவன் புகார் நோக்கிப் போயிருக்கிறான். எதற்கென்று தெரியவில்லை. அவன் படை கொண்டு வந்தாலும் நீங்கள் எதிர்த்து நிற்கவேண்டும்.” “அவ்விதமே செய்கிறோம்; ஆனால், அந்த நாட்டியக் கணிகை மருதியை நீ நிலையாகப் பெறமுடியாது. அத்தி வம்படியாகிலும் அவளை உன்னிடமிருந்து கொண்டுபோய் விடுவான். அவளைப் பற்றியவரை அவன் உயிரைப் பொருளாகவே மதிக்கமாட்டான். மருதியை நீ விடுதலே செய்வதே மேலான காரியம்; கழுமலப் போரில் எங்களுக்குத் தோல்வி ஏற்பட்டதற்கு அத்தியேதான் காரணம். அதற்குக் காரணம், நாட்டியக்கணிகை ‘மருதியின் காதல்’. உனக்குத் தான் தெரியுமே?” “அவன் மருதியை இனி அடைய முடியாது. என்னே விட்டுப் பிரியேன் என்று மருதியே வாக்குறுதி அளித்திருக்கிறாள். அவளுடைய வெறும் காதலை-உடல் நலத்தை நான் விரும்பவில்லை! அவளை...” “நீ சொல்வது விளங்க வில்லையே!” “அவளுடைய நாட்டியம் ஒன்றையே நான் விரும்புகிறேன்; அவளுடைய இனிய கண்டத் தொனியிலும், பொற்கொடி போன்ற அவள் மேனி அழகிலும் மனத்தைப் பறிகொடுத்தேன். அவளுடைய அழகுப் பிழம்பை நாளும் நான் கண்டு கொண்டிருக்கவே வாக்குறுதி பெற்றிருக்கிறேன்!...” “நல்லடிக்கோன், அவளைப் பெற்ற நீ பெரும் பாக்கியம் பெற்றாய். ஆனால், திண்ணமாக... அத்தியின் பகை உன்னை அணுகாமல் இராது.” “பகையை அழிக்கத் தருணம் எதிர் பார்க்கிறேன். நம் நட்பிற்கு அறிகுறியாக உறையூர்ப் பங்குனி உத்தர விழாவை இந்நகரில் நடத்துங்கள்! கொங்கர் உள்ளி விழாவை என் நகரில் நடத்துகிறேன். அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் யாவும் செய்தாயின.” “அப்படியே செய்வோம்” என்று விடை தந்தான் கங்கன். நல்லடிக்கோன் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தன் படைகளை ஒன்று சேர்த்து உறையூருக்குப் புறப்பட்டான், மறுபடியும் சேரரின் ஆட்சி தொடங்கியது. கருவூரைக் கைவிட்டு நல்லடிக்கோன், தன் பெரும் படையுடன் உறையூர் நோக்கிக் கடுகினான். தந்தையை இழந்த துயரம் அவன் மனத்தில் ஒரு புறம் தீராத வேதனையை உண்டாக்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவனுடைய முழு அறிவையும் ‘மருதியின் காதல்’ கௌவிக் கொண்டிருந்தது. ஆமிராவதி நதிக்கரை வழியே நல்லடிக்கோனின் தேர் நிலம் அதிர்ச்சி கொள்ளும்படிச் சென்றது. அவனைப் பின்தொடர்ந்து புலிக் கொடி உயர்த்திய சோழர் படை கிளர்ந்து சென்றது. ஆமிராவதியும், காவிரியும் கலக்கும் சங்க முகத்தைக் கடந்த பின்பு - ஏன், கடந்த அக்கணமே - நல்லடிக்கோன் மனம் பதறினான். உறையூர் அணுக அணுக அவன் மனம் எல்லையில்லாத வெறுப்பும் கோபமும் கொண்டது. புலவரால் குத்துண்டு வீழ்த்தப்பட்ட இடத்தைக் கண்டதும் நல்லடிக்கோன் மனம் பதற்றம் அடையாமல் இருக்குமா? தந்தையை இழந்த துயரத்தைக் காட்டிலும் அவன் உள்ளத்தைத் துயர் உறுத்தியது, புலவர் இரும்பிடர்த் தலையாரின் செய்கையும் ஆதியின் நகைப்பும் பேச்சும், அத்தியின் இகழ்ச்சியும் கோபமும் அவனை இடைவிடாமல் துன்புறுத்தின. அவ்வளவும் சேர்ந்து நல்லடிக்கோனை, மருதியின் காதலினின்றும் நிலை பெயரச் செய்ய முடியவில்லை. அவளைப் பற்றியவரை, அவன் ஒரு சிறிதும் உறுதி குலையவில்லை. உறையூருக்குள் புகுந்தான். தந்தையை இழந்து மகன் வரும் காட்சியை, ஆரவாரமின்றி மௌனமாகக் கூடி நின்று கண்டனர் உறையூர்ப் பெருமக்கள். கடல் கிளர்ந்து எழுந்தாற் போன்ற கூட்டம் எங்கும் காணப் படினும், அலையடங்கிய கடல்போல் அமைதியாக நின்று தம் துயரத்தை வெளிப்படுத்தினா்கள் யாவரும். நல்லடிக்கோன் யாவரையும் சோர்ந்த முகத்துடன் ஏறெடுத்துப் பார்த்தவாறே அரண்மனைக்குள் புகுந்தான். செங்களுன் இறந்ததற்கு அறிகுறியாக எங்கும் மங்கள வாத்தியங்களின் ஒலி அவிந்தது. ஆரவாரம் அழிந்தது. குதூகலம் குறைந்தது; அமைதி நிலவியது. நல்லடிகோன் மிகுந்த ஆதுரத்தோடு, தன் ‘குமார பவன’த்தை நோக்கிச் சென்றான். உள் புகுந்தான். சேடியர் வழிவிட அந்தப்புரத்தை அடைந்தான். வட்டவடிவுள்ள கட்டிலில் பொன் பதுமை கிடப்பதெனக் கிடந்தாள் மருதி. நல்லடிக்கோன் வருகையைக் கண்டு அம்பை எழுந்து நின்றாள். சிலைபோல் கிடந்தாள் மருதி. நல்லடிக்கோன் வியப்பால் பிரமித்து நின்றான். மருதியின் பக்கத்திலிருந்து விடங்கி, பாம்புபோல் தலையெடுத்துப் பார்த்தாள். “விடங்கி! நீ எப்படி இங்கே வந்தாய்?” என்று கேட்டான். “இந்த மாளிகை வழியாகத்தான்!” என்று துணிவோடு விடங்கி கூறினாள். “இவளை உள்ளே விட்டவர் யார்?” என்று பற்களை நெறுநெறெனக் கடித்தான் அம்பையைப் பார்த்து. “தாங்கள் இல்லாத சமயம்...” என்று கூறிக் கொண்டே தலை குனிந்தாள் அம்பை. இப்படி நல்லடிக்கோனும் அம்பையும் கேட்டுக் கொண்டிருக்கையில் மருதி நெருப்புப் பிழம்புபோல் மேனி சிவந்து, இளந்தளிர்போல் துடித்து தன் செவ்விதழ்களைப் பற்களால் அதுக்கித் தன் கோபத்தை வெளிக் காட்டினாள். அவள் மேனி முற்றும் கோபத்தால் நடுங்கியது. நல்லடிக்கோன் அதைக் கண்டான். மனம் கலங்கி வாய்பேசாமல் மருதியைப் பார்த்தான். “எங்களுக்கு விடுதலை இல்லையா?” என்றாள் விடங்கி. “இல்லை! என்றுமே இல்லை!! என் உயிருக்கு என்று விடுதலையோ, அன்றுதான் மருதிக்கும் விடுதலை!” என்றான் பேரிரைச்சலிட்டு. “இப்போது, தாங்கள் இவ்விடத்தை விட்டுப் போகாவிட்டால், இதோ இம் மணிமாலையைக் கொண்டு என் உயிரை மாய்த்துக்கொள்வேன்! போய் விடுங்கள்!” என்று சுடு சொற்களைக் கூறி, தன் மார்பில் அணிந்திருந்த மணி மாலை மீது கையை வைத்தாள் மருதி. நல்லடிக்கோன் உண்மையிலேயே பயந்துவிட்டான். சட்டென்று அவ்விடம் விட்டுப் புறப்பட்டான். “இப்போது போய் விடுகிறேன்; ஆனால் வாக்குறுதியை மறக்க வேண்டாம்” என்று கூறிக் கொண்டே அந்தப்புரத்தை விட்டு நல்லடிக்கோன் வெளியேறினன். சீற்றம் தணிந்து விடங்கியின் மடியிலே தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள் மருதி: அவள் கண்கள் நீரைச் சுரந்தன. |