![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 25. படைகள் புறப்பாடு புலவரும் அரசிளங்குமரர் இருவரும் மிகுந்த குதூகலத்தோடு மாளிகையை அடைந்து படைகளின் புறப்பாட்டிற்கு ஆயத்தம் செய்தார்கள். அருகில் நின்ற நாங்கூர் வேளுக்குப் புலவர் கட்டளையிட்டார்:- “வேள், நீ இப்போது சென்று போர்ப் பறை கொட்டச் செய்து படைகளைப் புறப்படச் செய்; அரண்மனையின் நிலைப்படைகளைத் தவிர்த்து மற்றப் படைகள் யாவும், மதிள் புறத்துச் சதுக்கத்திலே வந்து சேர வேண்டும்; விரைவில் போய் வருக.” “இன்னும் அரை நாழிகைப் போதில் படைகள் யாவும் ஒன்று சேர்ந்து விட வேண்டும்; சிறிதும் தடை இருப்பது கூடாது. போ, விரைவில்” என்று மணக்கிள்ளியும் கட்டளையிட்டான். “கட்டளை!” என்று கூறி நாங்கூர்வேள் கடுகினான். அவன் மறைந்தவுடன் புலவர் களி வெறி துள்ளும் பார்வையோடு அரசிளங்குமாரர்களுக்குச் சொன்னார்:- “இளங்குமரர்களே! பயம் அடையாமல் என் வார்த்தைகளுக்கு இணங்கி நடந்து கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கை உயர் நிலையை அடையும்; காஞ்சி நகர் தொண்டைமானிடம் அடங்கி விட்டது; உறையூர் நல்லடிக்கோனிடம் அடங்கியது; நீங்கள் இருவர் இருக்கிறீர்கள்! இந் நகரும் என்று கடல் கொள்ளுமோ என்ற நிலையில் உள்ளது; உங்கள் இருவருக்கும் உரியதாக இரு நகரங்கள் வேண்டாமா?” “வேண்டும்! - உறையூரின் உரிமை வேண்டும்” என்று இரு குமாரர்களும் பேசி முடிப்பதற்குள் புலவர் கைகவித்தார். “அதைப் பெறுவது எளிதன்றூ; தொன்று தொட்டு சோழர் குல விளக்காக விளக்கின் நிலைக்களமாக விளங்குவது உறையூர். எவ்வாறேனும் இன்று அந்நகரை அடைந்தாக வேண்டும். இதற்கென்றே நான் யோசித்துச் செய்த முடிவு இது! அத்தியும் ஆதியும் சிராமலைச் சாரலில் தங்கியிருப்பர்; முன்னதாக நீங்கள் யாரேனும் ஒருவர் அங்கே இப்போதே புறப்பட்டுச் சென்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதனுடன் சேர நாட்டின் ஆட்சியையும் அவனுக்கு அளிப்பதாக உறுதி கூறி விட வேண்டும்; நாம் படையுடன் புறப்பட்டு வருவதைக் கண்டு, ஒரு கால் அவன் பயந்து ஓடி விடுவான்! ஆதலால் முன்னதாக அவனுக்கு அறிவுறுத்தி விட்டால் நல்லது... தவிர்த்து சிராமலையின் எல்லையில், நல்லடிக்கோனின் வீரர்கள் இருப்பர். உண்மையை அவர்கள் அறியாமலும், அத்தி - ஆதி அவர்கள் கண்களில் அகப்படாமலும் இருக்கச் சொல்ல வேண்டும். இவ்விஷயங்கள் மிகவும் பிரதானமானவை! நடத்த பின் வருந்துவதில் பயனில்லை...” புலவரின் யோசனையை இருவரும் ஏற்றுக் கொண்டார்கள். பெருவிறற்கிள்ளி முற்பட்டு, “புலவரே, நான் முன்னதாகப் போகிறேன்; தங்கள் கருத்துப் படியே, எல்லாம் சொல்லி விடுகிறேன்; இக் காரியம் செய்ய வேண்டியதுதான்!” என்று கூறி எழுந்தான். அத்தருணம் இடி முழக்கம் போல் போர்ப்பறையின் ஓசை கேட்டது; கால் நாழிகைப் போதுவரை, போர்ப்பறையின் முழக்கம் இடையறாமல் கேட்டது. அடுத்த கணமே புலவர் பெருவிறற்கிள்ளிக்குச் சொன்னார்: “நீ, இப்போதே புறப்படு; மதிள் புறத்துப் பெருஞ் சதுக்கத்தில் படைகள் சேர்ந்து கொண்டிருக்கும்; நானும் மணக்கிள்ளியும் தேரில் ஏறிக் கடுகி வருகிறோம்; அத்தியிடம் எல்லாவற்றையும் சொல்லி விடு.” “நான் போய் வருகிறேன்; அத்தியிடம் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு குதிரையிருக்கும் இடம் சென்றான். அரண்மனையில் போர் முரசு முழங்குவதைக் கேட்டு நானா புறமும் ஆரவாரம் கிளர்ந்து எழுந்தது. ‘ஓ’ என்ற இரைச்சலுடன் படைகள் அலை மோதுவதென வீதிகள் வழியே பாய்ந்து சென்றன. படைகளின் ஆரவாரத்தையும், அரண்மனையிலிருந்து படைகள் புறப்பட்டுப் போவதையும் மாளிகையின் சாளரங்கள் வழியே கூர்ந்து பார்த்தார்கள் புலவரும் மணக்கிள்ளியும். அதே தருணம் படைகளின் நடுவே இருள் கிழித்தோடும் மின்னலென வெண்புரவியில் பெரு விறற்கிள்ளி பாய்ந்து சென்றான். புலவரும் குமரனும் குதூகலித்தார்கள். “மணக்கிள்ளி! என் சூழ்ச்சி வெற்றி பெறும். இனி சந்தேகம் இல்லை. அதோ பார்! படைகள் என்ன மிடுக்குடன் பாய்ந்து போகின்றன! என் வாழ்வை நான் பெரிதும் சூழ்ச்சியிலேயே கழித்து விட்டேன். ஆனால் இது போன்ற பெரும் படையைக் கொண்டு போருக்குப் புறப்பட்டது ஒரே முறைதான்...” “எப்போது?” “கரிகாலன் அரசுரிமையில்லாமல் அல்லல் கொண்டு திரிந்தான் அவனைப் பகையரசர் பழிவாங்கத் தருணம் பார்த்திருந்தார்கள்; நான் மதுரையாண்ட பாண்டியன் ‘கருங்கையொள்வாட் பெரும் பெயர் வழுதி’ என்பானைத் துணை கொண்டு இது போன்ற பெரும் படையுடன் பகைவரை அழித்தேன்! நானே படைத்தலைமை ஏற்றுப் போர் புரிந்தேன். பகையழித்தேன்! கரிகாலனுக்குச் சோழ நாட்டின் முடி கவித்தேன்; ஆனால் இன்று என் உடல் தளர்ந்து விட்டது! இப்படையைப் பார்க்கும் போது கண்கள் களி கொள்கின்றன! உள்ளத்தில் உறுதி கிளைத்து நிற்கிறது... வெற்றி பெற ஆதுரம் கொள்கிறது என் தோள்கள்! சோழ பூமியை ஒன்றாக்க வேண்டும் என்ற எண்ணம்... அதுவும் உனக்கே உரியதாக ஆக்க வேண்டும் என்ற நினைவு!-” புலவர் சொல்லுகையில் மணக்கிள்ளி தோள் பூரித்தான்; உளம் களித்தான். “புலவரே இரண்டாகப் பிளவுற்ற சோழ பூமியை ஒன்றாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மிகவும் உண்டு” என்றான். “கரிகாலனின் குமரர் இருவரில் ஒருவர், உறையூரையும், ஒருவர் புகாரையும் பெற்றால் போதுமல்லவா?” “அதை விட வேறு என்ன வேண்டும்? அதற்கு மேல் கரிகாலனின் பரம்பரையல்லவா சோழ குலம்!” என்று புலவர் மொழிந்தார். நாங்கூர்வேள் அத்தருணம் தோன்றினான்: “வணக்கம்! படைகள் அணி அணியாகப் போகின்றன! தாங்கள் புறப்பட வேண்டியதுதான்” என்று தலை வணங்கினான். “நீ அரண்மனையில் நிலைப்படைகளைக் காவல் காத்திருக்க வேண்டும். படைகளின் தலைமை நான் ஏற்றுக் கொண்டு போகிறேன்” என்றார் புலவர். மாளிகையின் வெளிப் புறத்தில் யாரோ வரும் ஓசை கேட்டது. சட்டென்று திரும்பிப் பார்த்தனர். “புலவரே...” என்று கம்பீரமாகக் கூப்பிட்டுக் கொண்டு கரிகாலன் மாளிகைக்குள் புகுந்தான். புலவர் திடுக்கிட்டார். என்ன சொல்வானோ என்று. கரிகாலன் முகத்தில் துயரமும் கோபச் சின்னமும் தெரிந்தன; புலவர் அவன் முகக் குறிப்பை உணர்ந்து உணராதவர் போல், இள நகை செய்தார். “கரிகால், என்ன விசேஷம்?” “உம்மைப் பார்க்கவே வந்தேன்; படைகள் யாவும் போகின்றனவே! இவ்வளவும் ஓர் அற்ப மனிதனைச் சிறைப் பிடிக்க வேண்டுமா? என் மனம் வெறுப்படைகிறது! அவன் அப்படி வீரனும் அல்ல! ஒரு பெரிய நாட்டின் தலைவனும் அல்ல! அவனுக்குத் துணை புரிபவர்கள் யார் இருக்கிறார்கள்? அவனையும் ஆதியையும் கவர்ந்து சென்ற கள்வர் யார்? சேர நாட்டு வீரர்களா? அல்லது நம் அரண்மனையில் இருப்பவர்களே தானோ! அத்தியின் நண்பர்களான, சேர சேனாபதிகளின் துணை வலியோ! ஆனால் உம்முடைய இந்தப் பெரிய ஏற்பாடு என் மனத்தைக் கலக்குகின்றது. ஒரு சிற்றரசன் - கூத்தாடுபவன் - அவனைச் சிறைப் பிடிக்க இவ்வளவு பெரிய படையா? ஆயிரம் ஆயிரமாக வில்லும் வாளும், வேலும் மின்னலிட்டுப் பின்னிச் செல்கின்ற இந்தப் பெரும்படை, ஒரு பெரிய நாட்டையே கைப்பற்ற வேண்டியதற்கு உதவும், புலவரே! உம்முடைய எண்ணம் என்ன? நான் உம்மாலேயே அரசு பெற்று வாழ்கிறேன்! என் திறமை நீர் அறிந்ததுதான்! நான் உம்முடைய சூழ்ச்சியில் சிக்குண்டேன்! உம்மை எதிர்க்கும் வன்மை எனக்கில்லை என்பது உண்மையே! திண்ணமாக இப்படைகளின் புறப்பாடு எதற்கு? இப்படைகளுக்கு உம்முடைய தலைமை எதற்கு? எந்தக் காரியத்தை எண்ணி இந்த ஏற்பாடு? நான் அறியமுடியவில்லையே! ஆதியின் நினைவால் என் உள்ளம் மாழ்கி விட்டது; மாய்ந்து விட்டது; என் செல்வக் குமரியை இழந்தேன்; இனி அவளை என்று காண்பேன்? அவளை விடுவிக்கும் எண்ணத்தோடு தான் இப்படைகள் புறப்படுகின்றனவா?” என்று கரிகாலன் வாய்மொழிந்தான்; நாத்தளர்ந்தான். புலவரின் பேச்சை எதிர் நோக்கினான்; மாளிகைக்குள் புகும் தருணம் புலவரின் பேச்சை அரைகுறையாகக் கேட்டுக் கொண்டே வந்த கரிகாலன், பெரிதும் புலவரிடம் சந்தேகம் கொண்டான். ஆனால் அவரை எதிர்க்கும் திறமையற்றவனாக நின்றான்; ஆதியின் பிரிவால் அவன் மனம் அளவு கடந்து துயருற்றிருந்தது. கரிகாலன் பேச்சைக் கேட்டு மணக்கிள்ளி திகைத்தான். ‘சூழ்ச்சி தெரிந்து விட்டதோ’ என்று மயங்கினான். ஆதியின் பிரிவால் அவன் மனம் நொந்திருப்பதையும் உணர்ந்தான். ஆனால் புலவர் சிறிதும் அஞ்சவில்லை; நகை செய்தவாறே சொன்னார்:- “கரிகால், முன்பே நான் சொன்னேன்; அப்போதே முடிவு செய்திருந்தால் இவ்வளவுக்கு நேர்ந்திராதல்லவா? இவ்வளவு படைகளுடன் புறப்பட வேண்டியும் நேர்ந்திராது தான்! இனி என்ன செய்ய முடியும்? அத்தி அற்பமானவன் அன்று.” “புலவரே, என்ன சொல்கிறீர்? முன்பே என்ன செய்ய வேண்டியது?” “அத்திக்கு அவளைக் கொடுத்து விட்டிருந்தால் இன்று அவனும் மதிக்கத் தக்கவனாக இருப்பான்; ஆதியின் விருப்பமும் நிறைவேறியிருக்கும்; அறிவில் முதிர்ந்த பெண் அவள்; - அவள் விரும்பித் துணிந்த காதலனை அடைந்து விட்டாள்; ஊழ்வினை அந்தக் காதலர்க்குத் துணை செய்தது; இப்போதும் அவ்விருவரையும் பிரிக்க முடியாதுதான்; - ஆனால் உன் கண்களுக்கு முன்னர் அந்தக் காதலர்களைக் கொணர்ந்து நிறுத்துகிறேன்; இதில் சந்தேகமில்லை - இந்தப் பெரும் படையுடன் நான் புறப்படுவதற்குக் காரணம் வேறில்லை; -அத்தியை நான் அறிந்தது போல் யாரும் அறிய முடியாது. அவன் வீரரில் வீரன்; அறிஞரில் அறிஞன்; மானத்தில் சிறந்தவன். மேம்பட்ட வாழ்வு கொண்டவன்; ஈடில்லாத நர்த்தனச் சிறப்புடையவன்; அழகின் நலம் எல்லாம் அமையப் பெற்றவன்! இன்ப மொழியால் யாவரையும் வசீகரிக்கும் இயல்புடையவன்; சேர நாட்டுக்கே முடிமன்னனாக விளங்கப் போகிறவன்! உன் பெரு மதிப்புக்கு இலக்காக விளங்க வேண்டியவன். அவனை - நீ இகழ்ந்து விட்டாய்! வெறுத்து விட்டாய்! ஆனால் நீயே அவனை மதிக்கும் நாள் வரும்.” “புலவரே, உமது கொள்கையிலிருந்து எப்போதுமே நீர் பின்னடைவதில்லை. உம்மால்...” “கரிகால், விரைவிலேயே நீ மனம் களிக்கும் செய்தியைக் கேட்கப் போகிறாய்! இன்று இப் படையின் புறப்பாட்டால் பெரும் பயன் உண்டாகப் போகிறது. இனி நாழிகை ஆகிவிட்டதால் புறப்படுகிறோம். நீ கவலையில்லாமல் இருப்பிடம் போ!... நாளைக் காலையில் நீ கேட்கப் போகும் செய்தியை...” “புலவரே, எல்லாம் உமது மாயம்! எனக்கு ஒன்றும் புலப்படவில்லை! இனி உம்முடைய கருத்தின்படியே செய்வதில் நான் குறுக்கிட்டுப் பயனில்லை...” புலவர் நகை செய்தார். அவர் விழிகளில் சூழ்ச்சியின் வெற்றித் திறம் பிரதிபலித்தது. “தந்தையே, நான் போய் வருகிறேன். ஆதி - அத்தியை மீட்டுக் கொண்டு வருகிறோம். தங்கள் மனம் களிக்கும் காரியங்களையே நாங்கள் செய்யப் போகிறோம். தங்கள் கவலைக்குக் காரணம் ஒன்றும் இல்லை. போய் வருகிறோம்!” என்றான் மணக்கிள்ளி. “போய்வா! புலவரின் சூழ்ச்சியில் உட்புகுந்து விட்ட உன்னை நான் தடுத்து என்ன பயன்? உன் விருப்பம் போல் போய்வா! ஆதியை மட்டும் நான் காண வேண்டும்; ஆனால் அந்தக் கள்வன் அத்தி மீது என் மனம் எல்லையற்ற வெறுப்புக் கொண்டிருக்கிறது...” என்று அரசன் கூறுகையில் புலவரும் மணக்கிள்ளியும் புறப்பட்டார்கள். “கரிகால், நீ போகலாம்; என் நோக்கம் நீ அறியாதவனல்ல! போய் வருகிறோம்” என்று கூறிவிட்டு நடந்தார் புலவர். கரிகாலன் அதற்கு மேல் பேசவில்லை. நாங்கூர் வேளை அழைத்துக் கொண்டு கரிகாலன் தன் மாளிகை நோக்கிச் சென்றான். புலவரும் மணக்கிள்ளியும் அம்மாளிகையைக் கடந்து அரண்மனை வாயிலை அடைந்தார்கள். வாயிலில் நின்ற படியே, படைகளின் போக்கைக் கண்டார்கள். ஆயத்தமாக நான்கு குதிரைகள் பூட்டப் பெற்று நின்ற தேர் மீது ஏறி அமர்ந்தனர், இருவரும். அடுத்த கணத்தில் அரண்மனை வாயிலை விட்டு தேர் ‘கடகடகட’ என்று முழக்கிட்டுக் கடுகியது. எண்ணற்ற படைகள் அலைமேல் அலையாக எழுந்து மோதி மதிள் புறத்தை அடைத்துக் கொண்டிருந்தன. அரச வீதி வழியே தேர் கடுகிச் சென்றது. படைகள் முன்னே போவதையும், அதைப் பின் தொடர்ந்து மணக்கிள்ளியும் புலவரும் தேர் மீதே போவதையும் கண்டு ஜனங்கள் வியப்பு மிக்கவர்களாய்ப் பலவாறு பேசிக் கொண்டார்கள். அரச வீதியைக் கடந்து நகர்ப் புறத்து மதிளையும் கடந்தது படைகள். பின் தொடர்ந்த தேரும் மதிளைக் கடந்து வெளி வாயிலை அடைந்து நின்றது. படைகள் முறையே சேனைத் தலைவர்களால் அணி வகுக்கப்பட்டு விளங்கின. எங்கு நோக்கினும் வீரர் கூட்டம் கூட்டமாக அணிவகுத்து நின்றார்கள். படைகளின் அணிவகுப்பை, மணக்கிள்ளியும் புலவரும் பார்த்த வண்ணம் நடந்து சென்றார்கள். வில் தாங்கிய வீரர் கூட்டம், வாள் எடுத்த மறவர் வரிசைகள், வேல் பிடித்த கடுந்திறல் மொய்ம்பினர் தொகுதிகள், இன்னும் பல்வேறு படைகள் தாங்கிய வீரர்கள் ஆங்காங்கே பின் வரிசையில் அணிவகுத்து நின்றார்கள். அவர்களை அடுத்து முன்னதாக, பாரசீக நாட்டுக் குதிரைகளில் ஈட்டியுடன் விளங்கினார்கள் வீரர்கள்; குதிரைப்படைகளின் வரிசைக்கு முன்னதாக யானைப் படைகள் நின்றன. ஒவ்வோர் யானைக்கும், மூன்று வீரர்கள் தற்காத்து வேல் தாங்கி நின்றார்கள். யானைப் படைகளின் முன் வரிசையில் தேர்ப் படைகள் அணிவகுத்து நின்றன. தேரின் முன் தட்டுக்களில் மூவர் வீரரும், இரு சகடங்களுக்கும் இரு வீரரும், பின்னே இரு வீரர்களுமாக, தேர் ஒன்றுக்கு ஏழு வீரர்கள் காத்து நின்றார்கள். பல ஆயிரம் வீரர்களும், யானைப்படை, குதிரைப்படை, தேர்ப் படைகளும் நெடுந்தூரத்துக்குப் பரவி அணிவகுத்து நிற்பதைக் கண்ட பின், படைகள் புறப்பாட்டுக்கு ஆயத்தம் செய்தனர். மணக்கிள்ளியும் புலவரும் தேரில் ஏறிக் கொண்டு தேர்ப் படைக்கு முன்னர், தேரைச் செலுத்திச் சென்றார்கள். புலவரின் கட்டளைப்படி படைகள் புறப்பாட்டுக்கு முரசு முழங்கியது. படைகள் ஆரவாரத்துடன் புறப்பட்டுக் கடுகின. புலவரின் தேர் அம்பெனச் சென்றது. மிக வேகமாகப் படைகள் காவிரிச் சாலையில் பாய்ந்து மேற்கு நோக்கிக் கடுகின. காவிரியின் சாலையில் நெடுந்தூரத்துக்கு, சோழர் படை நிறைந்து, காவிரிக்கு எதிராகச் செல்லும் ஓர் ஆறு என்று சொல்லும்படி மேற்கு நோக்கிப் பரந்து சென்றது. |