பாகம் ஒன்று

11. வழியில் ஒரு யுத்தம்

     சிம்பாங் தீகா பாலத்தின் மீது அமர்ந்து வானத்தை நோட்டமிட்டிருந்த மேஜர் இச்சிவாரா சபுரோ, பார்வையைத் தாழ்த்திச் சுற்றிலும் ஒரு முறை நோக்கினான். பிறகு, கைக்கடிகாரத்தின் மீது பார்வை விழுந்தது. மணி 2:11. கீழே ஆற்றின் நீரோட்டம், சுற்றிலும் காட்டின் கிண்ணோசை, நெற்றியைத் தடவினான். மறுபடியும் பார்வை மேலே சென்றது. மேகமற்ற வானில் தாரகைகள் மின்னின. சஞ்சலமுற்ற மனதில் சிந்தனைகள் அலையாடின. இந்த ஈரொட்டு நிலை எப்போது தீரும்... டாய் நிப்பன் பேரரசுக்கு இத்தகைய கேவல முடிவா? தோன்றியது முதல் தோல்வியை அறியாத உதயசூரிய நாடு வெள்ளையரின் காலடியில் மிதிபட்டு நெளிவதை இந்தக் கண்களும் பார்க்க வேண்டுமா? உயிரைத் துரும்பாக மதிக்கும் ‘சாமுராய்’களின் கொடி வழியில் வந்த இச்சிவாரா சபுரோவுக்குத் தன்மானமுள்ள முடிவு கிட்டாதா...?

     தலையைக் குனிந்து, சாவதானமாகக் கால்களைப் பார்வையிட்ட மேஜர், கண்ணோட்டத்தை மீண்டும் மேலே - வான மலர்கள் மீது செலுத்தினான்.

     ஜெனரல் தொமயூக்கி யாமஷித்தாவின் சேனையுடன் வந்து மலேயாவில் காலடி வைத்தவன் சபுரோ. அப்போது சாதாரண லெப்டினன்ட். சிங்கப்பூர் தீவில் முதன்முதலாகத் தாவிக் குதித்த பிளாட்டூன் சபுரோவினுடையதே.

     சுமத்ராவின் கிழக்குக் கரையில் இறங்கிய படையிலும் காப்டன் சபுரோ இருந்தான். பிறகு, பர்மா களத்துக்கு மாற்றப்பட்டான். தாமியோ போர்க்களத்தில் அஞ்சாநெஞ்சத்துடன் போராடி அருஞ்செயலாற்றிப் பெறுதற்கரிய ‘உதய சூரியன்’ பதக்கத்தைப் பெற்றதோடு, மேஜர் ஆகவும் பதவி உயர்வு பெற்றான். பின்னர், தென்மண்டல தலைமைச் சேனாபதி தெராவுச்சி, பர்மாவைச் செலவுக் கணக்கில் எழுதியதைத் தொடர்ந்து, மலேயாவுக்கு மாற்றப்பட்டான் சபுரோ.

     பிலிப்பைன் நாட்டில் அமெரிக்கப் படைகள் கரையிறங்கியதும், அங்கே புறப்படச் சித்தமாகும்படி சபுரோவின் 6வது பட்டாளத்துக்குக் கட்டளை வந்தது. நாள்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் போர்ப் பிரதேசத்துக்குப் போய்ச் சேரும் நேரத்தை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருந்தான் சபுரோ. அந்த நேரம் அணுகவேயில்லை. அந்நிலையில் மாச்சான் காட்டிலிருந்த விமான நிலையத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு 6வது பட்டாளத்திடம் ஒப்படைக்கப் பட்டது.

     சாலைக்கு வெகு தொலைவில், விமான நிலையம் தோன்றுவதற்கு முன் ஆள் நடமாட்டத்தை அறியாத கன்னிக்காட்டின் நடுவே, மாச்சான் முகாம் இருந்தது. காட்டினூடே, வளைந்து வளைந்து சதுப்பு நிலங்களைக் கடந்து சென்ற பாதைதான் - அதுவும் புதிதாக உண்டானது - மாச்சான் தளத்துக்கும் வெளி உலகத்துக்கு மிடையே இருந்த தரைத் தொடர்பு.

     மேஜர் இச்சிவாரா சபுரோ, மாச்சான் முகாமுக்குப் போனது முதல் இன்று வரையும் நிம்மதியாக உறங்கியதில்லை. சின்பெங்கின் கொரில்லாக்கள் எந்நேரம் தாக்குவார்கள் என்று கணிக்க முடியாது. தாக்கப்படும் நேரத்தில் அவர்களுடன் பொருதினால்தான் உண்டு. மறுநிமிஷம் மறைந்து விடுவார்கள். ஆயிரம் துருப்புகளைக் கொண்ட சபுரோவின் பட்டாளம் தேய்ந்து சுருங்கிக் கொண்டிருந்தது. புது ஆட்களோ, தளவாடங்களோ வந்து சேரவில்லை. சோற்றுப் பஞ்சம் தலை விரித்தாடியது. அந்த நிலையில் செப்டம்பர் 14ம் தேதி, ஜப்பான் அடிபணிந்த செய்தியும், ஈப்போவிலுள்ள 12வது டிவிஷன் தலைமையகத்தில் போய் மேலுத்தரவு பெறுமாறு கட்டளையும் வந்தன.

     திடலில் விமானங்கள் வந்திறங்கி வெகுகாலமாகி விட்டது. அங்கிருந்த விமானப்படைச் சிப்பந்திகளும் மூன்று மாதத்துக்கு முன்னரே வெளியேறி விட்டனர். அப்படியிருந்தும், சபுரோவின் பட்டாளம் அதுவரையும் மாச்சான் காட்டில் நிறுத்தப்பட்டு நாள் தவறாது உயிர்ப்பலி கொடுத்து வந்ததற்கு வடக்கு மலேயா சேனாபதியின் ஞாபகமறதிதான் காரணமாக இருக்க வேண்டும்.

     ஜப்பானியப் பட்டாளம் சிங்கப்பூர் - அலோர்ஸ்டார் நெடுஞ்சாலையை நோக்கிக் கிளம்பியது. செப்டம்பர் 14ம் தேதிக்குப் பிறகு இரு தரப்பாரும் சண்டையை நிறுத்த வேண்டுமென்று உடன்பாடு ஏற்பட்டிருந்த போதிலும், சீனக் கொரில்லாக்களின் தாக்குதல் ஓயவில்லை. நடுக்காட்டில் சிக்கிக் கொண்ட இந்த ஜப்பானிய அணியை ஒழித்துவிட்டு ஆயுதங்களைக் கைப்பற்றுவதென்று அவர்கள் முடிவு செய்திருந்தார்கள். நெடுகிலும் சண்டை நீடித்தது. காயமடைந்த ஜப்பானிய வீரர்கள் ‘ஹரகிரி’ செய்து, வயிற்றைக் கிழித்துக் கொண்டு மாண்டார்கள். வலது கையில் பட்டாக்கத்தியும் இடது கையில் பிஸ்டலுமாய் முன்னே நடந்த மேஜர் இச்சிவாரா சபுரோ, வழிநடையின் போது, உயிருடன் ஊர் திரும்புவதில்லை என்று முடிவு செய்தான்.

     ஜப்பானியப் படை இரவு 11:35 மணி அளவில் சிம்பாங் தீகா பாலத்தை அடைந்தது. விடியும் வரையில் இளைப்பாறுவதற்கு உத்தரவு பிறப்பித்தான் மேஜர். சின்பெங்கின் கொரில்லாக்கள் மீண்டும் எதிர்ப்பட்டால் அவர்களை விடாமல் பற்றித் தொடர்ந்து மடிய வேண்டும், இல்லையேல் பிரிட்டிஷ் படை வரும் வரையில் காத்திருந்து அதனுடன் மோதி மாண்டு, கீர்த்தி மிகுந்த தன் முன்னோர்களிடம் ‘மாசில்லாத சாமுராய்’ வீரனாகப் போய்ச் சேர வேண்டும் என்று விரும்பினான்.

     வானைப் பார்த்திருந்தான் சபுரோ. சீனர்களுடன் சண்டையிட்டுச் சாவதை விட வெள்ளையர்களுடன் மோதி மடிவது எவ்வளவோ மேல். திடுக்கிட்டு வலப்புறம் திரும்பினான். ஓடி வந்த லெப்டினன்ட் கோபயாமா தெரிவித்தான், “தெற்கிலிருந்து கூட்டம் வருகிறது. சுமார் 100 ஆட்கள். இனம் தெரியவில்லை.”

     “சோதெஷ்யோ!” குதித்து நின்றான். கட்டளைகள் பறந்தன.

     “இந்தோ, இந்தோ கொக்குமின் குன்தெசு” லெப்டினன்ட் ராஜதுரையும் மற்றும் ஐந்து தமிழர்களும் முன்னே வந்தனர்.

     “இந்தோ!... இந்தோ கொக்குமின் குன் தெசு?” சபுரோவின் வாய் முனங்கியது. எதிரே நின்றவர்களை உற்றுப் பார்த்தான். இந்திய தேசீய ராணுவம் பற்றி அவன் கேள்வியுற்றிருந்தான். விவரமாக எதுவும் தெரியாது. இந்தியா - பர்மா எல்லையில் அவனுடைய பட்டாளம் இருந்த முனையில் இந்திய தேசிய ராணுவ அணி ஒன்று கூட இருக்கவில்லை. எதிர் வரிசையிலோ பிரிட்டிஷ் - இந்திய படை இருந்தது. அதனால் ஜப்பானியருக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் அதிகம்.

     ராஜதுரை, தப்பும் தவறுமாக ஜப்பானியத்தில் சொன்னான்: “நாங்கள் மலேயாத் தமிழர்கள். பிரிட்டனை எதிர்த்துப் போராடுவதற்காக நேதாஜி நிறுவிய ‘இந்தோ கொக்குமின் குன் தெசு’வில் சேர்ந்தோம். பிரிட்டிஷ் படைகள் முதல் தேதியன்று பினாங்கில் கரையிறங்குகின்றன. அதற்குள் சட்டை மாற்றிக் கொண்டு, பழைய தொழில்துறைகளுக்குத் திரும்பும் நோக்கத்துடன் விரைந்து கொண்டிருக்கிறோம். நிலைமை தெளிவானதும் பிரிட்டனை எதிர்த்து மீண்டும் போர் நடத்துவதற்கான திட்டமும் எங்களிடம் உண்டு. நாங்கள் நேதாஜியின் தொண்டர்கள்; பிரிட்டனின் எதிரிகள்; டாய் நிப்பனின் நண்பர்கள். இப்பொழுது, எங்கள் படை முகாமிலிருந்து முறைப்படி விடுவிக்கப்பட்டு பினாங்குக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.”

     மேஜர் சபுரோவின் மனம் குழம்பியது. இவர்கள் நேதாஜியின் இந்தோ கொக்குமின் குன் தெசு சிப்பாய்கள் என்பதை எப்படித் தெரிவது...? ஒருவேளை மவுண்ட்பேட்டன் முன்கூட்டியே பிரிட்டிஷ் இந்தியப் படைகளை இறக்கி விட்டிருப்பானோ...

     “உங்கள் படை முகாமிலிருந்து வெளியேறி இந்த வழியாகச் செல்ல, வடக்கு மலேயா ஜப்பானிய சேனாபதி அனுமதிச் சீட்டு கொடுத்திருக்கிறாரா?”

     “வடக்கு மலேஜா ஜப்பானிய சேனாபதி? அவர் அனுமதிச் சீட்டு எதற்கு? ம்... அது இப்பொழுது கைவசமில்லை.”

     “ஒ ஒ ஒ, சோதெஷ்யோ!” உறுமினான். “ஆயுதங்களையும் உணவுப் பொருட்களையும் என்னிடம் இப்படைத்து விட்டுப் போங்கள். இன்றேல், டாய் நிப்பன் ராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாவீர்கள்.”

     “டாய் நிப்பன் சாம்ராஜ்ய ராணுவத்துடன் மோதும் நோக்கம் இந்தத் தமிழ்ச் சிறுவர்களுக்குக் கொஞ்சம் கூட இல்லை... மேஜர் சான் கிருபை கூர்ந்து, நாங்கள் வடக்கே செல்ல அனுமதி கொடுக்க வேண்டும். ஆயுதமின்றிப் போனால் சீனக் குரங்குகள் கடித்துத் தின்றுவிடும்.”

     “முடியாது, உடனே ஆயுதங்களை ஒப்படைக்கிறீர்களா, அல்லது...”

     “மேஜர் சான் கிருபை கூர்ந்து அனுமதி...” ராஜதுரை மின்னல் வேகத்தில் கீழே சாய்ந்தான். அதே விநாடியில் அவன் பிஸ்டல் முழங்கியது. டும். மேஜர் இச்சிவாரா சபுரோ சுருண்டு விழுந்தார். ‘பன்சாய்’.

     ராஜதுரையுடன் நின்றவர்கள் தாவி, எறிகுண்டுகளை வீசிவிட்டுக் கீழே விழுந்து புரண்டார்கள். டம்ம்... டடம்ம்ம்... இருபுறமும் காட்டுக்குள் நின்றோரின் விசைத் துப்பாக்கிகள் அலறின. டட்டட் டர்ர்ர்ர்ர் டடட்டர்ர்ர்ர். தெற்கே சற்றுத் தள்ளி நின்றவர்கள் பாய்ந்தோடி வந்தனர்.

     ஜப்பானிய வீரர்கள் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை. கடைசிவரை சுட்டுக் கொண்டே வீர முழக்கத்துடன் செத்து விழுந்தார்கள். பன்சாய்! பான்சாய்! பான்சாய்! காயம்பட்டுச் சாய்ந்தவர்கள் ஹரகிரி செய்து - கத்தியால் கிழித்துக் கொண்டு மாய்ந்தார்கள்.

     கால் மணி நேரத்தில் சண்டை முடிந்து விட்டது.

     சிம்பாங் தீகா போர்க் களத்தில் பலியான தமிழர்கள் 22 பேர். முப்பது பேருக்குக் குண்டு பட்டிருந்தது. நல்லவேளையாக, அவர்கள் அனைவரும் நடந்து செல்லும் நிலையில் இருந்தார்கள். பிலாவடியானின் ஆட்கள், தளத்தில் கிடந்த தமிழ் உடல்களைக் கொண்டு வந்து சேர்த்தனர். காயம்பட்டவர்களுக்கு அவசர அவசரமாக மருந்து கட்டி முடித்ததும், உடல்களை என்ன செய்வதென்று ஆலோசனை நடந்தது. எரிப்பது ஆபத்தான வேலை; புதைக்க வேண்டியதுதான்.

     புதைகுழி வெட்டுவதற்கு அங்கே தோதான இடமில்லை. வசதியான இடத்தை விரைவில் தெரிந்தெடுக்கும்படி வேவுக்காரர்களுக்குக் கட்டளை பிறந்தது.

     களப்பலியான தோழர்களின் உடல்களோடு தமிழ்ப் படை மீண்டும் வடமுகமாய் விரைந்தது.