உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பாகம் ஒன்று 12. ஐந்து ஜாத்தி மரங்கள் சிப்பாங் தீகா பாலத்துக்கு அரை மைல் வடக்கே, வலப்புறத்தில், சாலைக்குச் சிறிது தள்ளி, நீள் சதுரமான ஒரு பொட்டல். அதன் வட கடைசியில் ஐந்து ஜாத்தி மரங்கள் சேர்ந்து நின்றன. அவற்றின் கீழே குழி வெட்டி, அதில் சடலங்களை அடுக்கி மூடினார்கள். மணி 5:10. கீழ்வானம் வெளுத்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் இருந்த காட்டில் இனம் தெரியாத பறவைகள் வகைவகையாய்க் கரைந்தன. “இஸ்லாமியத் தமிழர் அறுவருக்காக லெப்டினன்ட் அப்துல் காதர் தொழுகை நடத்துவார்.” அப்துல் காதர் முன்னே சென்று, மேற்கு முகமாய் மண்டியிட்டுத் தொழுகை நடத்திவிட்டுத் திரும்பினான். “யாருக்காவது திருப்புகழ், தேவாரம் தெரியுமா?” “திருப்புகழ் தெரியும்.” சுமத்ரா லேவாதேவிக் கடை ஒன்றிலிருந்து வந்த சங்கப்பன் முன்னால் அடி எடுத்து வைத்தான். “பாடு, குரலை உயர்த்த வேண்டாம்.” சங்கப்பன் கை கூப்பி நின்று பாடினான்:
“கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து - மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து - மிகவாடி...” தோள்களில் துப்பாக்கியை மாட்டியவாறு புதைகுழியைச் சுற்றிலும் கை கூப்பி நின்ற தமிழர்களின் மெய் சிலிர்த்தது. கண்கள் நீர் சொரிந்தன. காட்டுக்குள்ளிலிருந்து வந்த ஈரக் காற்றில் முகம் சில்லிட்டது. ஜாத்தி மர உச்சியில் காவலிருந்த ஆண்டிச்சாமி, கீழ் விளிம்பில் இனம் தெரியாத ஆட்கள் நிற்பதாக, பறவைக் குரலில் எச்சரிக்கை கொடுத்தான். செல்லையை முகத்தைத் திருப்பாமல் ஓரக் கண்ணால் பார்த்தான். இடப்புறம் பொட்டல் விளிம்பில் ஆறு பேர் நின்றார்கள். முன்னால் நின்றவன் தமிழன் போல் இருந்தது. மற்றவர்களுக்கு மங்கோலிய முகம். அவர்கள் கையில் விசைத் துப்பாக்கிகள் தென்பட்டன. எதிர்பாராத காட்சியால் மயங்கிய மனம், ஒரு விநாடியில் தெளிவடைந்தது. சின்பெங்... எக்குத்தப்பான இடம்... திருப்புகழ் தொடர்ந்து முழங்கிற்று: “உகரபடமேல்... மருகோனே... வருவோனே... பரவை மனை மீதிலன்று...” செல்லையாவின் பார்வை முன்னால் சென்றது. எதிரே நின்ற ராஜதுரையும் அப்துல்காதரும் அழையா விருந்தினரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவரின் பார்வையும் திரும்பிச் செல்லையாவின் முகத்தில் விழுந்தது. ஆறு கண்களும் சந்தித்து நிலைமையை விளக்கிப் புரிந்து கொண்டன. திருப்புகழ் வெகு விரைவாய் அழுகையாக மாறிக் கொண்டிருந்தது.
“பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று பழநிமலை மீதில் நின்ற பெருமாளே.” சங்கப்பன் பாட்டை முடித்துக் கொண்டு கண்ணைத் துடைத்தான். “ஈமச் சடங்குகள் முடிந்தன.” செல்லையா கிழக்கே திரும்பி, இடது கையை மடித்து முதுகில் அணைத்தவாறு நடந்தான். “நீங்கள் யார்? இங்கே உங்களுக்கு என்ன அலுவல்?” சிலைபோல் நின்ற காட்டு ஆசாமிகளின் எதிரே போய்க் கேட்டவனின் மலாய்க் கேள்வி, காலைச் சூழலில் மணி நாதம் போல் ஒலித்தது. “பாசிச எதிர்ப்புச் சேனையைச் சேர்ந்த செக்ஷன் லீடர் டி.கே. முத்துவேல். இது எங்கள் பிரதேசம்.” முன்னால் நின்றவன் ஆங்கிலத்தில் விடையளித்தான். “அப்படியா! உங்களுக்கு என்ன வேண்டும்?” தமிழில் கேட்டான். “அதை உரிய சமயத்தில் சொல்வேன்.” தொடர்ந்து ஆங்கிலத்தில் பதில் வந்தது. “நல்லது, நீங்கள் தமிழரா அல்லது ஆங்கிலேயரா?” கேள்வியில் சாடல் வாடை வீசியது. “ஐயாம் ஏ காம்யுனிஸ்ட்.” வலக்கையை மடக்கிக் கொண்டு முத்துவேல் உறுமினான். அழையா விருந்தினர் புதைகுழியை நோக்கிப் போய் வந்தனை செய்துவிட்டுத் திரும்பினார்கள். “உங்களுக்கும் எங்களுக்குமிடையே எவ்விதச் சச்சரவும் இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.” செல்லையாவின் முகத்தை நோக்கியபடி, பாசிச எதிர்ப்புச் சேனை செக்ஷன் லீடர் கூறலானான். “இது எங்களின் 3வது படை வட்டாரம். சுற்றிலும் இரண்டு பட்டாளங்கள் வளைந்து நிற்கின்றன. நண்பன் என்ற முறையில் சொல்கிறேன். இனிமேல் உங்களுக்கு இந்த ஆயுதங்கள் தேவையில்லை. கொடுத்து விட்டுச் செல்லுங்கள்.” “அட்ல செப்பண்டி! அஅஅஆஆஆ...” என்ன காரணத்தாலோ, எப்பொழுதோ கேட்ட அந்தத் தெலுங்கு வார்த்தைகள் அப்போது செல்லையாவின் வாயிலிருந்து குதித்தன. தொடர்ந்து அடக்க முடியாத சிரிப்பு. பக்கத்திலிருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். “அட்ல செப்பண்டி! அதென்ன, தமிழ்தானா? இதுவரை கேட்டதில்லையே!” முத்துவேல் முதன்முறையாகத் தமிழில் பேசினான். முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றி மறைந்தது. பின்னால் நின்ற சீனர்கள் விஷயம் புரியாமல் விழித்தார்கள். “அதுவா?... அது...” இடப்புறத்தில் செடிகொடிகள் விலகிச் சலசலக்கும் ஒலி கேட்டது. எல்லோர் பார்வையும் அந்தத் திக்கில் திரும்பிற்று. ஒல்லியாய் வளர்ந்து, மகிழ்ந்த முகத்துடனிருந்த சீன இளைஞன் எட்டி நடந்து வந்தான். பின்னால் சுமார் 20 பேர் வந்தார்கள். முத்துவேலின் அணி விறைத்து நின்று வந்தனை செய்தது. “லிம் கியூ. காப்டன், ஆன்ட்டி பாசிஸ்ட் பீப்பிள்ஸ் ஆர்மி.” வந்தவனின் வலது கை நீண்டது. “செல்லையா, காப்டன், இண்டியன் நேஷனல் ஆர்மி.” இருவரும் கை குலுக்கினார்கள். “சிம்பாங் தீக்கா பாலம் நல்லா போட் போட்டீங்கல், எக்சலண்ட் வர்க். நல்லா வேலே, என் வேவு ஆல்கல் ஆக்ஷன் எலாம் பாத்ரார்கல். ரியல் பிளிட்ஸ்க்ரீக். நல்லா போட் போட்டீங்கல்.” செல்லையாவின் கையைக் குலுக்கியவாறு கொச்சைத் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசினான். “தாங்க்யூ காப்டன்.” லிம் கியூவும் அவனுடன் வந்தவர்களும் புதைகுழிப் பக்கம் திரும்பி வணக்கம் செலுத்தினார்கள். “ஹவ் மெனி, எத்ன் ஆல்?” “இருபத்திரண்டு.” “வெரி சீப், வெரி வெரி சீப், நல்லா போட் போட்டீங்கல். எக்சலன்ட் வர்க்.” நாவில் ரகரம் சரியாக வந்தது. மலேயாவில் பிறந்து வளர்ந்தவன் என்று செல்லையா முடிவு செய்தான். லிம் கியூ, ஒரு விநாடி செல்லையாவையும் மற்றத் தமிழர்களையும் நோட்டமிட்டான். “இப்பொழுது தொழில் முறையில் பேசலாம், ஹ்ங்?” ஆங்கிலத்தில் கேட்டான். கம்பீரமான முகம் புன்முறுவலில் மிதந்தது. லிம் கியூ சராய் பைக்குள் கையைவிட்டு ‘555’ டின்னை எடுத்துத் திறந்து நீட்டினான். செல்லையா ஒரு சிகரெட்டை உருவி எடுத்தான். முதலில் செல்லையாவுக்கு நெருப்பை நீட்டி விட்டு, லிம் கியூ தன் சிகரெட்டைப் பற்ற வைத்தான். புகைத்து ஊதினர். லிம் கியூ உதட்டுப் பிடியிலிருந்த சிகரெட்டை விரல்களால் பற்றி எடுத்தான். வாயிலிருந்த மாசில்லாத ஆங்கிலம் கிளம்பியது. “ஜப்பானியரின் கொடுங்கோன்மை ஒழிந்து விட்டது. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது அது சிற்றெறும்பு. இனிமேல்தான் ஆசிய இளைஞர்களுக்கு - குறிப்பாகப் போர்ப்பயிற்சி பெற்ற தமிழர்களுக்கு முக்கியமான வேலை இருக்கிறது. இந்தியாவிலிருந்தும் மலேயாவிலிருந்தும் ஆசிய - ஆப்பிரிக்க நாடுகள் அனைத்திலிருந்தும் வெள்ளையரை அறவே விரட்டியடிக்க வேண்டும்... பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிப்பதற்கு மலேயாதான் சரியான தளம். நாம் ஒன்று சேர்ந்து போராடினால், பிரிட்டனின் அடிவாரத்துக்கே வேட்டு வைக்கலாம். முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் எங்களிடம் குறைவு. ஐ.என்.ஏ. வீரர்களும் எங்களுடன் சேர்ந்தால், மாபெரும் சேனை ஒன்றை அமைத்து உலகைக் கிடுகிடுக்க வைக்கலாம். உங்கள் கருத்து என்ன?” லிம் கியூவின் அன்புக்கும் நட்புறவுக்கும் நன்றி தெரிவித்து விட்டுச் செல்லையா கூறினான். “நாங்கள் முதலில் பழைய தொழில் துறைகளுக்குத் திரும்ப வேண்டும். மற்றவை பிறகு. தவறாக நினைக்க வேண்டாம்.” “அப்படியா! சரி. வீணாகப் போகும் உங்கள் ஆயுதங்களைக் கொடுத்து விட்டுப் போனால் என்ன?” “ஆயுதங்கள்? அது சிக்கலான விஷயம். நன்கு ஆராய்ந்து தான் முடிவு செய்ய வேண்டும். அப்படிச் செய்வதற்கும் இப்போது சூழ்நிலை சரியாக இல்லை.” “ஓ!” கண்கள் குறுகின. “வலுக்கட்டாயமாய் ஆயுதங்களைப் பறிக்க நான் முடிவு செய்வதாக வைத்துக் கொள்வோம், அப்புறம்?” “சுட்டுப் பார்க்க வேண்டியதுதான்.” “கூடவே கூடாது, அது தவறு. பெருந்தவறு. நண்பர்கள் எப்போதுமே தகராறுகளைப் பேசித் தீர்க்க வேண்டும். கருத்துப் பாங்காகவே வலுக்கட்டாயம் பற்றிக் குறிப்பிட்டேன். தவறாக நினைக்க வேண்டாம். சிம்பாங் தீகா ஜப்பானியரிடமிருந்து ஆயுதங்கள் ஒன்று தவறாமல் கிடைத்தன... அவர்களைத் தாக்க திட்டமிட்டிருந்தேன். நீங்கள் முந்திக் கொண்டீர்கள்.” “எப்படியும் ஆயுதங்கள் உங்களுக்குக் கிடைத்து விட்டன... ஜப்பான் வீழ்ந்த பிறகு நமக்குள் சச்சரவுக்கு இடமில்லை. முகாம்களிலிருந்து வெளியேறிச் செல்லும் ஐ.என்.ஏ. ஆட்கள் பற்றி உங்கள் கொள்கை என்ன?” “ஐ.என்.ஏ. ஆட்கள் விவகாரத்தில் தலையிடக் கூடாதென்று எல்லா அணிகளுக்கும் கட்டளை வந்திருக்கிறது - சின்பெங்கின் நேர் உத்தரவு.” “நல்லது. ஆயினும், ஆயுதவேட்டை எண்ணத்துடன் சிலர் தாக்குதலில் ஈடுபடலாம்.” “அப்படி நடக்காது. உங்களுடன் என் ஆட்களை அனுப்புகிறேன். ஹ்ங், ஆயுதங்களை என்ன செய்யப் போகிறீர்கள்? வீணாக எங்காவது எறிந்து விட வேண்டாம்.” “எறியவா? நல்ல விலை கிடைக்குமே, எதற்காக எறிவது? கோலப்பிறையில் துப்பாக்கிக்கும் ராணுவ உடைக்கும் நல்ல கிராக்கி இருப்பதாகக் கேள்வி.” “ஆ! யூ அசல் செட்டி.” லிம் கியூ கலகலவென்று சிரித்தான். இருவரின் கைகளும் ஏக காலத்தில் நீண்டு ஒன்றையொன்று உறுதியாகப் பற்றின. பாசிச எதிர்ப்புப் படையினர் ரொட்டியும் தேநீரும் கொண்டு வந்து கொடுத்தார்கள். பசியாறிய தமிழர்கள் மாலை வரை இளைப்பாறிய பின், 6:45 மணியளவில் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். வழிநடைத் தேவைக்காக நிறையத் தேயிலை, ரொட்டி, சிகரெட், பால் டின்கள் கொடுக்கும்படி லிம் கியூ உத்தரவிட்டான். சற்று நேரத்தில் அவை வந்து சேர்ந்தன. தமிழ்ப்படை, மீண்டும் வடக்கு நோக்கிப் புறப்பட்டது. சீனக் கொரில்லாக்கள் பத்துப் பேர் லெப்டினன்ட் ஒருவன் தலைமையில் உடன் சென்றார்கள். கோலப்பிறைக்கு மூன்றாவது மைலில் ஒரு ரப்பர் தோட்டத்தில் தமிழர்கள் உடை மாற்றிக் கொண்டனர். சீன லெப்டினன்ட், மஞ்சள் காகிதத்தால் மூடிக் கட்டிய பொட்டலம் ஒன்றைச் செல்லையாவிடம் நீட்டினான். அதில் பிரிட்டிஷ் 10 டாலர் நோட்டுக் கத்தைகளும், ஜப்பானிய 1000 டாலர் நோட்டுக் கத்தைகளும் இருந்தன. பிஸ்டல் தவிர மற்ற ஆயுதங்களும் தளவாடங்களும், ராணுவ உடைகளும் சீன லெப்டினன்டிடம் ஒப்படைக்கப் பட்டன. பாசிச எதிர்ப்புப் படைக் கொரில்லாக்கள் விடை பெற்றுக் கொண்டு மரங்களிடையே மறைந்தார்கள். ஏற்கெனவே பிரிந்து சென்றவர்களுக்கென்று பிரிட்டிஷ் நோட்டுகளாக ஒரு தொகையைத் தனியே வைத்துக் கொண்டு, மீதமுள்ளதைச் செல்லையா பகிர்ந்தளித்தான். அலோர் ஸ்டார் பக்கம் போக வேண்டியவர்கள் கோலப்பிறையில் தங்கி விட்டனர். செல்லையாவும் மற்றும் 33 பேரும் நாட்டுப் படகில் ஏறிப் பிற்பகல் 4 மணிக்குப் பினாங் போய்ச் சேர்ந்தார்கள். கடற்கரையில் அவர்களை எதிர்பார்ப்பவன் போல் மாணிக்கம் நின்றான். இடது கை தலைமுடியைக் கோதிக் கொண்டிருந்தது; வாயின் வலக்கோடியில் சிகரெட் புகைந்தது. கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|