உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பாகம் இரண்டு 2. ஒரு வேட்டி பிரிட்டிஷ் படை கரையிறங்கிய மறுநாள் காலையில் செல்லையா துயிலெழுந்த போது மணி எட்டே கால். பல் துலக்கியதும் முனியாண்டி கொடுத்த காபியைக் குடித்து விட்டு நாற்காலியில் அமர்ந்தான். “மாணிக்கமும் பழனியப்பனும் எழுந்துட்டாங்களா?” கால்களைத் தூக்கி மேஜை மீது போட்டுக் கொண்டு சிகரெட் பற்ற வைத்தான். “மாணிக்கையா இன்னம் எந்திரிக்கலை. அவரு - செட்டியாரு விடியு முன்னே குளிச்சிப்பிட்டுப் போனாரு.” “கோயிலுக்குக் கிளம்பிட்டான் போலிருக்கு. மாணிக்கம் எப்போது வந்தான்?” “மூணு நாளு மணியிருக்கும், நீங்க குளிக்யலையா?” “சரி, கண்ணாடிப் பெட்டியை எடுத்து வை.” தாழ்வாரத்தில் காலை வெயில் விழுந்து மயங்கியது. எதிர்ப்புறத் தென்னந்தோப்பில் ஐந்தாறு தமிழர்கள் தேங்காய் உரித்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீடுகளில் சீனப் பெண்களின் கீச்சொலி கேட்டது. வடபுறம், நாலைந்து வீடுகளுக்கு அப்பால், ‘சீனக் குழந்தை வைத்தியர்’ கொட்டகையிலிருந்து, ஆண் - பெண் பிள்ளைகள் பலர் சேர்ந்து அலறும் இரைச்சல் வந்து கொண்டிருந்தது. செல்லையா எழுந்து தாழ்வாரத்துக்குப் போய் இருபுறமும் பார்த்தான். தெற்கே, முச்சந்தியில், போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே, ஜீப் வண்டி நின்றது. அதனருகே இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகளும் பத்துப் பதினைந்து சீனர்களும் தென்பட்டனர். குளித்து முடித்து முன்கட்டுக்கு வந்த போது, மாணிக்கம் சாய்மான நாற்காலியில் கிடந்தான். இடக்கை கட்டை விரலும் மோதிர விரலும் நெற்றியை அழுத்திக் கொண்டிருந்தன. வாயில் தொங்கிய சிகரெட்டும் மேசை மீதிருந்த காபி மங்கும் புகைந்தன. “டேய், வேட்டி இருந்தால் எடு.” செல்லையா நாற்காலியில் உட்கார்ந்தான். “முனியாண்டி! என்ன, வயிற்றுக்கு ஏதாவது அகப்படுமா?” “இருக்குது. ஆப்பமும் புட்டும் வாங்கி வச்சிருக்கேன். கறி ஏதாச்சும் வாங்கியாரவா?” “வேண்டாம், பலகாரத்தை எடுத்து வை” மாணிக்கத்தின் பக்கம் திரும்பினான். “டேய், தலையைப் பிடித்துக் கொண்டிருக்கிறாயே, ஏன்?... எங்கே போயிருந்தாய்?” “வி.சி.லாம் - அவன் தான் டர்னர் கம்பெனி வெங்கடாசலம் - அவன் அறையில் பெரிய கொண்டாட்டம்... என்னவோ கேட்டாயே... வேட்டியா? இல்லை... சராய், கைலி நிறையக் கிடக்கும், பார்.” “முதலாளி வீட்டுக்குப் போய்த் தலையைக் காட்ட வேண்டும். அந்நியக் கோலத்தில் போனால் அரண்டு போவார்.” “ஆம். மரகதம் கூட அரண்டு போகும். குண்டஞ்சு வேட்டி, டைமன் துண்டு எல்லாம் கிடைத்த பிறகு புறப்படலாம்.” “போதும், நிறுத்து.” “செல்லையா, நான் ஒன்று சொல்கிறேன், நினைவில் வைத்துக் கொள். குண்டஞ்சு வேட்டியும் டைமன் துண்டும் இனிமேல் உனக்குப் பொருந்தாது. பழைய அடுத்தாள் செல்லையா, கோலாமூடா காட்டில் மறைந்து விட்டான்.” “குழாயும் தொப்பியுமாய்த் திரிய வேண்டியதுதான் என்கிறாயோ?” “ஆம். இனிமேல் செட்டித் தெருவில் கொண்டுவிற்று நீ பெயர் எடுக்கவா? முடியாது.” கீழ் உதட்டைத் துருத்தினான். “அது போகட்டும். கைலிக்குச் சராய் பரவாயில்லை. முன்னொரு முறை குழாய் மாட்டிக் கொண்டு, முதலாளி வீட்டுக்குப் போனாயே? ஓ, அப்பொழுது வானாயீனா அவர்கள் இல்லையோ!” “சரி, குழாயைப் போட்டுத் தொலைக்கிறேன். வீட்டில் முதலாளி இல்லாதிருந்தால் நல்லது. அங்கே, என் பெட்டியில் வேட்டி துணிமணி கிடக்கும்.” “முனியாண்டியை அனுப்பி, எங்காவது வேட்டி வாங்கி வரச் சொல்லவா?” “வேண்டாம், நேரமாகி விடும்... ம், நேற்று வாலாட்டின பயல்கள் சங்கதி என்ன?” ட்ரவுசரைக் கால்களில் கோர்த்தவாறு கேட்டான். “இன்று வாலாட்டம் நின்று விடும். இல்லையேல் வால்களுக்கு ஆபத்து.” “மாணிக்கம், இந்தச் சமயத்தில் ஆத்திரத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது. நீ பாட்டில் புது வம்புகளை விலைக்கு வாங்கி விடாதே.” “ஆகட்டும், உத்தரவு.” “சரி, வரட்டுமா?” அழுக்குத் துணி கூடைக்குள் ஒளித்து வைத்திருந்த பிஸ்டலை எடுப்பதற்காகக் கையை விட்டுத் துழாவினான். “வேண்டாம்.” மாணிக்கம் எழுந்தான். “ஏன்.” “இரும்பு பிடித்தவன் கை சும்மாயிராதென்று சொல்வார்களே, தெரியுமா? பினாங்கை, சிம்பாங் தீகா பாலமென்று நினைத்து விட்டாயானால், தொல்லை.” “வழியில் ஏதாவது...” “ஒன்றும் நடக்காது, போ! அலோர்ஸ்டாலிருந்து புதுச்சரக்குகள் நிறைய வந்திருக்கின்றனவாம். கண்டால், எச்சரிக்கையாக விலகி அட...” “கோலாமூடா?” “டேய், நாம் நினைத்தபடி ஒன்றும் இல்லை. வெள்ளைக்காரனுக்கு உடும்பு கையை விட்டால் போதுமென்று இருக்கிறது. சின்பெங் இப்போது நம் வம்புக்கு வர மாட்டான்; ஏதோ ஆழமான திட்டம் போட்டு வேலை செய்கிறான். வேறு யார் வரப் போகிறார்கள்?” “சரி, வரட்டுமா?” “மரகதத்தைப் பார்த்து இளித்துக் கொண்டு ஒரேயடியாய் உட்கார்ந்து விடாதே. ஆறு மணிக்கு முக்கியமான சங்கதி பற்றிப் பேச வேண்டும். “என்ன சங்கதி?” “மண்ணாங்கட்டிச் சங்கதி. நீ போய்த் திரும்பு. அப்புறம் அதைப் பற்றிப் பேசலாம்.” மாணிக்கம் குளிக்கக் கிளம்பினான். கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|