பாகம் இரண்டு

9. தாயும் மகளும்

     முன் கட்டில் கிடந்த பெஞ்ச் மீது மரகதம் உட்கார்ந்திருந்தான். ஈரம் காயாத தலைமுடி அள்ளி முடியப்பட்டு முதுகில் தொங்கியது. முகத்திலிருந்து உள்ளங்கால் வரை, மஞ்சள் பொலிவு. நெற்றியில் குங்கும முழுநிலவு செவ்வொளி வீசிற்று. இடப்புறம், ஜன்னல் தட்டில் கிடந்த பழைய தமிழ்ப் பத்திரிகை ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு, முன்னால் பார்த்தாள். எதிர்ப்புறச் சுவரில், முன் சாய்ந்து தொங்கிய நிலைக்கண்ணாடியில் உருவம் தெரிந்தது.

     சிவந்த மேனியை அழகு செய்த நீலப்பட்டுப் புடவையைச் சரி செய்து கொண்டாள். உருண்டு திரண்ட உடலில் இளமை துடித்தது. வலக்கையை உயர்த்திக் கன்னத்தைத் தேய்த்துப் பார்த்தாள். மஞ்சள் ஒட்டியிருந்தது. மீண்டும் கண்ணாடி மீது பார்வையைச் செலுத்தினாள். அடுத்த வீட்டுப் பெண்கள் எல்லோரும் மஞ்சள் பூசிக் குளிப்பதைக் கேலி செய்கிறார்கள். மஞ்சள் இல்லாமல் குளிப்பது அம்மாவுக்குப் பிடிக்காது. வையும்; மஞ்சள் உடம்புக்கு நல்லதாம். பவ்டருக்கு இது பரவாயில்லை. இப்பொழுது நல்ல பவ்டர் எங்கே கிடைக்கிறது? எல்லாம் கிழங்கு மாவுதான்...

     தோளில் தலையைச் சாய்த்தவாறு இடது சென்னியில் விளையாடிய கேசக் கற்றைகளைக் காதுக்குப் பின்னே தள்ளிவிட்டாள். பிறகு பத்திரிகையை விரித்துப் புரட்டி, 18ம் பக்கத்தில், முந்திய நாள் பாதியோடு நிறுத்திய கதையைப் படிக்கத் தொடங்கினாள்.

     விடுமுறையில் வீட்டுக்குச் சென்றிருந்த ராணுவ அதிகாரி மீண்டும் போர்க்களத்துக்குக் கிளம்புகிறார். மகளை இடுப்பில் வைத்திருந்த மனைவி கண்ணீர் விட்டுக் கதறினாள்: “என்னைத்தான் விட்டுப் பிரிய மனம் வந்ததென்றால், இவனையுமா பிரிய மனம் வந்தது?” மரகதத்துக்கு இளகிய மனம். நெஞ்சு உருகிவிட்டது. இடக்கையை மடியிலும் வலக்கையைக் கன்னத்திலும் வைத்தபடி சிந்தனையில் ஆழ்ந்து விட்டாள். செல்லையா நினைவு மின்னல் போல் பாய்ந்து வந்தது. கண்கள் ஒளிர்ந்தன. செல்லையா, வடிவேல், மரகதம் மூவரும் செவல்பட்டி ஊருணிக்கரைப் பிள்ளையார் கோயிலுக்கு முன்னே விளையாடினார்கள்...

     இடது கை கேசத்தை இறுகப் பற்றியது. ‘அவுக ராஜா மாதிரி நடந்து வருகிறதை பார்த்துக்கிட்டு இருந்தாலே போதும். வடிவேலண்ணனும் இவுக மாதிரிதான் நடப்பாக. மணிக்கண்ணனும் தான். மூணு பேரும் ஒரு கூட்டு... அம்மாவுக்கும் அவுக மேல் ரெம்பப் பிரியம். ‘கப்பல் விட்டு ஊருக்குப் போனதும் உங்க ரெண்டு பேரையும் சங்கிலியால் கட்டிப் போடுறேன்’னில சொல்லுது. கட்டட்டும், நல்லா நல்லா அவுங்க முடியாமல் கட்டிப் போடட்டும்...’

     “என்ன பண்றெ மரகதம்! வாயைப் பிளந்துக்கிணு இருக்கியே, என்னடி?” உள்கட்டிலிருந்து காமாட்சியம்மாள் வந்தார்.

     “இந்தா, இந்தக் கதை படிக்கிறனம்மா?”

     “ஆமா, கதை! கதையப் படிச்சிக் கலயக்கட்டர் வேலைக்கிப் போப்போறியாக்கும்... என்னத்தைப் படிச்சாலும் பொட்டச்சி அடுப்பங்கரைக்கித்தானே போகணும்?” கை விரல்களை மகளின் தலைமுடிக்குள் செருகினார்.

     “இதில் நல்ல கதை ஒண்ணு இருக்குதம்மா.”

     “நல்ல கதை, கெட்ட கதை, என்னமாச்சும் காமா சோமான்னி பேப்பர்காரன் போட்டு விட்டிருப்பான்... தலை அப்படியே ஈரமா இருக்கேம்மா, முத்தத்தில நின்னு கொஞ்சம் ஒணத்தினால் என்ன? எல்லாம் அவசரந்தான்.” விரல்கள் தலையை வருடன.

     “ஆமா, எல்லாம் ஒணந்திருச்சி, போ” தாயின் மார்பில் முகத்தைப் புதைத்தாள்.

     “நீயும் ஒண்ணு. ஒங்க அண்ணனும் ஒண்ணு. காப்பி கொண்டாரத்துக்குள்ள பந்து விளையாட நேரமாச்சின்னு குதிப்பான்.” குரல் மெலிந்தது. கண்களில் நீர் துளித்தது.

     “அம்மா, இனிம விரசாய் ஊருக்குப் போயிரலாம்மா. இப்ப நிறையக் கப்பல் வருதாம். இன்னம் ஒரு மாதத்தில ஆள் ஏத்திக்கிட்டுப் போவாகளாம்...”

     “ஆ...அமா, மயிபாலன்பட்டி மாடு மேய்க்கிப் பழுக்குக சாகப் போறதுமில்லை; நம்ம மகன் வேலைக்கிப் போப்போறதுமில்லை. ம், இன்னிக்கி நாளைக்கின்னி நாலு வருஷம் பறந்திருச்சி.”

     “இப்பத்தான் சண்டை நின்னு போச்சேம்மா, ஜப்பான்காரன் தான் தோத்துப் போயிட்டான்ல.”

     “சப்பான்காரன் தொலைஞ்சா இன்னொரு மறுக்கோளிப் பய குண்டு போட வருவான். வேலையத்த பயக மல்லுக் கட்டப் போக, என் கண்ணான பிள்ளையப் பறி கொடுத்தென்.” துக்கம் தொண்டையை அடைத்தது. மகளின் தலை மீது கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தன.

     மரகதம் மெதுவாக எழுந்தாள். காமாட்சியம்மாள் முன்றானையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, மரகதத்தின் முகத்தைப் பார்த்தார்; மகளின் நீர் தேங்கிய கண்களைத் துடைத்தார்.

     “ஏம்மா, எதுக்கு இந்த நஞ்சு போன சேலையக் கட்டின. வேற சேலைய எடுத்துக் கட்டக்கூடாதா?”

     “இதுதாம்மா எனக்கு நல்லாயிருக்கு.”

     “உனக்கு எதுதான் நல்லாராது? சாக்குத் துணியக் கட்டிக்கினாலும் புதுப் பொண்ணாட்டமாய்த்தான் இருக்கும்.” மகளுக்கு கண்ணேறு கழித்தார். “கப்பலாளுக கிட்டச் சொல்லி உனக்கு எப்படியாவது அஞ்சாறு காஞ்சிவரம் சேலை தரவழைங்கன்னி ஒங்கப்பாட்டச் சொல்லீருக்கேன்.”

     “இப்ப எதுக்கம்மா, ஊர்ல போயி வாங்கிக்கிடலாம்ல?”

     “போடி கிறுக்கச்சி! இங்கயிருந்து நரிக்குறத்தியாட்டமாப் போயி எறங்குவியாக்கும்?”

     “ஊருக்கு யாராரு போறதம்மா, எல்லாருந்தானே?”

     “எல்லாருந்தான், உங்கப்பா இன்னும் ஒண்ணும் திட்டமாச் சொல்லலை. சரிவர முத்தத்தில நின்னு கொஞ்சம் தலைய ஒணத்திக்ய.”

     கதவைத் தட்டும் ஓசை கேட்டது. காமாட்சியம்மாள் போய்த் தாழை நீக்கினார். காய்கறிக் கூடையுடன் வந்த கருப்பையா, நாலைந்து தமிழ்ப் பத்திரிகைகளை நீட்டினார்.

     “செல்லையாண்ணன் கொடுத்தாரு. கப்பலடியில் வாங்கினாராம்.”

     இரண்டு கைகளையும் நீட்டிப் பத்திரிகைகளை வாங்கிக் கொண்டாள் மரகதம். தாயின் கை மகளின் தோளிலும் மகளின் கை தாயின் இடுப்பிலுமாக உள்கட்டை நோக்கி நடந்தார்கள்.