உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பாகம் ஒன்று 6. ஈப்போ கூட்டம் ஈப்போ முகமது காசிம் பலசரக்குக் கடைக்குள் செல்லையா நுழைந்த போது மணி 9:20. நைந்து போன மல்வேட்டி - வெள்ளைச் சட்டை - விபூதிப் பூச்சுக் கோலத்தில் இருந்தவனை வாசலில் நின்ற பழனியப்பன் வரவேற்றான். “வாங்க சேனா. மாவன்னா இப்ப வந்திருவாக. நீங்க மேல போயி இருங்க.” “அப்பச் சரி, நான் மேல போயி உக்கார்ந்திருக்கேன்.” படிக்கட்டில் ஏறி, மாடியின் முன்புறப் பெரிய அறைக்குள் புகுந்தான். வலக்கோடியில் மேசை மீது உட்கார்ந்திருந்த நெல்சன் இலைப்பச்சை நிறக் கைலி கட்டி, சட்டையும் கோட்டும் அணிந்திருந்தான். தலையில் மலாய்த் தொப்பி. அடுத்திருந்த நாற்காலியில் கோலாலம்பூர் செக்யூரிட்டி செர்வீஸ் லெப்டினன்ட் கே.கே. ரேசன் - கார்மேக வேளார் மகன் கதிரேசன் - முகட்டை நோக்கிச் சிகரெட் புகையை ஊதியவாறு சாய்ந்து கிடந்தான். கீழே பாயில் படுத்திருந்தவன் சாமி. இடப்புறம் ஆறு பேர் சீட்டு விளையாடினார்கள். மொட்டைத் தலையும் துளசி மாலையுமாக இருப்பவன் லெப்டினன்ட் துரைச்சாமி. தாடிக்காரன் கோலாக்கங்சார் அதிரடிப் படையைச் சேர்ந்த ‘மின்னல்’ முத்தையா. பழுப்பு நிறச் சட்டை அணிந்திருந்த குழந்தை முகக்காரன்தான் லெப்டினன்ட் சொக்கலிங்கம். ஜப்பானிய அதிகாரி ஒருவனை நடுத்தெருவில் பட்டப்பகலில் சுட்டுக் கொன்றுவிட்டு மாயமாய் மறைந்த சூரன். ‘மருவே செறிந்த குழலார் மயக்கி...’ என்று முனங்கியபடி சீட்டை எறிந்தவன் சுங்கைசிப்புட் நாகப்பன். 55-60 வயது வியாபாரி ஒருவரும், சுமார் 45 வயதுள்ள தோட்டக்காட்டு ஆள் ஒருவரும் மற்றவர்களுடன் சரிக்குச் சரியான அரட்டை அடித்தவாறு விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். “ஜே ஹிந்த், செல்லையா, ஹவ் டு யு டு?” நெல்சன் மேசையிலிருந்து குதித்தான். “டாமில் பேசு மேன், இப்படீன்னா ஊர்ல போயி எப்டி ஸ்பீக் பண்வே?” ரேசன் கடிந்தான். “டாமில் பேசினது போதும். இங்கிலீஷ் பேசுங்கோ.” படுத்திருந்த சாமி கோபத்தோடு எழுந்தான். புதிதாகத் தமிழ் படித்து விரைவாகத் தேர்ச்சி பெற்ற அவனுக்குக் கதம்பப் பேச்சு கட்டோடு பிடிக்காது. நெல்சனும், ரேசனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிச் சிரித்தார்கள். புதியவர்களைச் செல்லையாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான் முத்தையா. ஒருவர் கோலக்கங்சாரில் புடவைக் கடை வைத்திருந்தார். மற்றவர் நல்லையா, லங்க்காட் தோட்டத்துப் பெரிய மண்டூர். சுவரில் தொங்கிய கடிகாரம் 10 அடித்தது. மாணிக்கம் செருமிக் கொண்டே வந்து பாயில் அமர்ந்தான். “எல்லாம் கிட்டத்தில் வாருங்கள்.” நெருங்கிச் சென்று உட்கார்ந்தனர். “ஜப்பான் 14ம் தேதியன்று துப்பாக்கியைக் கீழே போட்டு விட்டது. ஆனால் இதுவரையும் நமக்கு முறையா தகவல் வரவில்லை. முதல் தேதி அல்லது மறுநாள், பிரிட்டிஷ் படைகள் பினாங்கில் கரையிறங்குகின்றன. நேதாஜியிடமிருந்து எவ்வித உத்தரவையும் காணோம். இந்த நிலையில், ஐ.என்.ஏ. தமிழர்கள் என்ன செய்வதென்பதை ஆராய்ந்து முடிவு செய்யவே இங்கு கூடியிருக்கிறோம்...” சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு மாணிக்கம் மேலே பேசினான். “இதற்கிடையே, அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை நான் சொல்ல வேண்டியிருக்கிறது. கேட்டதும் திகைப்பும் அச்சமும் ஏற்படலாம். இப்பொழுதுதான் நெஞ்சுறுதியும் தன்னம்பிக்கையும் மிகமிகத் தேவை. நேதாஜி நேற்று சைகோனிலிருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அந்த விமானம் பார்மோசாவில் உள்ள டைஹோக்கு விமான நிலையத்தில் நொறுங்கித் தீப்பிடித்தது. நேதாஜியை இனிமேல் பார்க்க முடியாது...” “என்ன! என்ன!” கேட்டிருந்தோர் திடுக்கிட்டு அலறினார்கள். கண்கள் அகல விரித்து மாணிக்கத்தின் முகத்தை நோக்கி நிலைத்து நின்றன. “என்ன, என்ன சொன்னாய்?” ஆங்கிலத்தில் சீறிய நெல்சன், தள்ளாடிக் கொண்டே எழுந்து பிஸ்டலை உருவினான். “நெல்சன்! ஸ்டெடி ப்ளீஸ்... ஸ்டெடி, நெல்சன்” ரேசன் தாவிப் பாய்ந்து பிஸ்டலைப் பறித்துச் சராய்ப் பைக்குள் போட்டுக் கொண்டான். அவன் தோள் மீது தலையை வைத்துக் கொண்டு குழந்தை போல விம்மி விம்மி அழுதான் நெல்சன். “நேதாஜி... நேதாஜி! கொன்று விட்டார்களே... நேதாஜியை ஜப்பான்காரர்கள் கொன்று விட்டார்களே” தலையில் கையை வைத்துக் கொண்டு செல்லையா அலறினான். படிக்கட்டில் ஏறி வந்த பழனியப்பனுக்கு மாணிக்கம் சைகை காட்டினான். கதவு அடைபட்டது. நெல்சனை அணைத்திழுத்துக் கொண்டு போய் நாற்காலியில் உட்கார வைத்து, வாயில் சிகரெட்டைச் செருகிப் பற்ற வைத்து விட்டான் ரேசன். நெல்சனின் கண்கள் எதிர்ப்புறச் சுவரை ஊடுருவி, இன்னதென்று தெரியாத எதையோ பார்த்துக் கொண்டிருந்தது. நல்லையா மண்டூர் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு ஓசையின்றி அழுதார். புடவை வியாபாரியும் சாமியும் சிலைபோல் அமர்ந்திருந்தார்கள். கண்கள் தாரைதாரையாக நீரை வடித்தன. “நேத்தாஜி... நேத்தாஜி!” மற்றவர்கள் முனகினார்கள். கூடியிருந்தவர்களின் மனம் படிப்படியாக அமைதி பெற்றது. அடுத்தாற்போல் இனி என்ன செய்வதென்ற கேள்வி எழுந்தது. “நள்ளிரவுக்கு மேல் எனக்குச் செய்தி கிடைத்தது. நேதாஜி இருந்தால் அவருடைய கட்டளைகளுக்குக் கட்டுப்படுவது நம் கடமை. அவர் மாண்டுபோனதால்...” “நேத்தாஜியைக் கொன்றது ஜப்பானியரே” மாணிக்கத்தின் பேச்சை இடைமறித்தான் செல்லையா. “இல்லை, கொல்ல வேண்டிய தேவை என்ன? நேதாஜியிடம் தெராவுச்சி உண்மையான அன்பு கொண்டிருந்தான்.” “இதில் ஏதோ சூது இருக்கிறது. பழைய ராணுவ அதிகாரிகளோ, ஜப்பானியரோ செய்த வேலை போல் தெரிகிறது” துரைச்சாமி உறுமினான். “ஏன் இன்னும் அறிவிக்கவில்லை? சூது இல்லாதிருந்தால் ஒளிப்பு ஏன்?” லெப்டினன்ட் சொக்கலிங்கத்தின் குழந்தை முகம் கேட்டது. “நேதாஜியுடன் கர்னல் ஹபிபுர் ரஹ்மானும் இருந்தார். அவருக்கும் கடுங்காயமாம். எவ்விதச் சூதும் இல்லை என்பதே என் கருத்து. இந்தச் சமயத்தில் செய்தி வெளியானால் கொந்தளிப்பு ஏற்படுமென்று நினைக்கிறார்களோ என்னவோ... எப்படியும் இன்றோ, நாளையோ அறிவித்துத்தான் ஆக வேண்டும்” நிதானமாகப் பேசினான் மாணிக்கம். “செத்துப் போனார் என்று எப்படித் தெரியும்? எங்காவது மறைந்திருந்தால்?” “கெம்பித்தாய் மேஜர் இச்சியாமா சொன்னான். அதை நம்புகிறேன்.” “ஆமா, இச்சிம்மா கிழிச்சாரு; இவர் அதைத் தைச்சாரு.” மாணிக்கம் எழுந்து, சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு குறுக்குமறுக்காக நடக்கத் தொடங்கினான். “சரிசரி, நடக்க வேண்டியதைப் பேசுங்கப்பா” நாகப்பன் தலையிட்டான். “நேதாஜி இறந்து போனதால், இனி நம் விருப்பப்படி நடந்து கொள்ளலாம். முதல் வேலை, நம் ஆட்களை எல்லாம் சட்டை மாற்றுவது; யுத்தக் கைதிகளாகப் பிடிபட்டால் எவ்வளவு காலம் அடைத்து வைப்பார்களோ, எங்கே கொண்டு போய் அவிழ்த்து விடுவார்களோ தெரியாது!” மாணிக்கம் உட்கார்ந்தான். “உடனே வெளியேற வேண்டும்” செல்லையா உறுதியாகச் சொன்னான். “எல்லாரும் ஒரேயடியாக வெளியேற வேண்டியதில்லை. ஐந்தும் பத்துமாக உருவிக் கொள்ளலாம். முதலில் பினாங்கில்தான் கரையிறங்குகிறார்கள். அங்கு என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். பழைய ஆட்களைப் பிடிப்பது உறுதி. நம் ஆட்களிலும் கை வைத்தால் தகவல் அனுப்புகிறேன். பிறகு ஒரேயடியாய் வெளியேறலாம்.” “பழைய ஆசாமிகள் தடுத்தால் என்ன செய்வது?” “என்ன செய்வதா! செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். சச்சரவில்லாமல் வெளியேற வசதியுள்ள முகாம்களிலிருந்து இப்போதே வெளியேறலாம். வெளியேற்றத்தை ஜப்பானியரும் தடுக்கக் கூடும். நம்மையும் சேர்த்து ஒப்படைப்பதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களாம்.” “ஓ, அப்படியா!” “சரி, நேரமாகிறது. ஒரு முடிவு செய்து கொள்ளலாம். இன்று முதல், ஐந்து பத்தாகச் சிப்பாய்கள் நழுவலாம். ஆனால் அதிகாரிகள் கடைசி நிமிஷம் வரையில் முகாம்களிலேயே இருக்க வேண்டும். சூழ்நிலைக்கேற்ப ஆயுதங்களுடனோ, இல்லாமலோ கிளம்பலாம். கட்டுப்பாட்டை அமல் நடத்துவது அதிகாரிகள் பொறுப்பு.” “சின் பெங்?” நாகப்பன் முன்னே குனிந்தான். “பாசிச எதிர்ப்புக் கொரில்லாக்களுக்கும் நமக்கும் தகராறு கிடையாது - அதாவது கிடையாதென்று பாவனை. அவர்களின் கை ஓங்கி விட்டால் நாம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துத்தான் போக வேண்டும். அகப்படும் ஆயுதங்களைச் சுருட்டுவதற்காகச் சின்பெங்கின் ஆட்கள் வழிமறிக்கலாம். கூடியவரை அந்தக் குரங்குகளின் வம்பைத் தவிர்க்க வேண்டும்.” “வம்புச் சண்டை கூடாது; அப்படித்தானே?” மின்னல் முத்தையா கேட்டான். “ஆம். எப்பொழுதுமே சண்டைகளைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாதென்றால் முதலில் சுட வேண்டும். அரைகுறை வேலை அறவே கூடாது.” வலது கையை உயர்த்தியவாறு எழுந்தான். “கோலா மூடா ஆட்கள் உடனே கிளம்பப் போகிறோம்” எழுந்து நின்ற செல்லையா அறிவித்தான். “காலத்தை முடிவு செய்வது உங்கள் பொறுப்பு. பதற்றம் கூடாது. சேதமின்றி வெளியேறுவதே கெட்டிக்காரத்தனம்.” மற்ற முகாம்களின் பிரதிநிதிகள் தோது போல் நடந்து கொள்வதாகத் தெரிவித்தார்கள். வெளியேறிச் செல்வோருக்கு வேண்டிய உதவிகள் செய்யுமாறு, தோட்டங்களில் உள்ள தமிழர்களுக்குச் செய்தி அனுப்புவதாக நல்லையா மண்டூர் கூறினார். ஒருவருக்கொருவர் விடை பெற்றுக் கொண்ட பின், ஒவ்வொருவராகப் படிக்கட்டில் இறங்கிச் சென்றார்கள். கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|