பாகம் ஒன்று

2. மரகதம்

     ஆ.சி.வயி. வயிரமுத்துப் பிள்ளையின் வீடு டத்தோ கிராமட் சாலையின் தென்புறத்தில் மஞ்சள் சாயப்பூச்சுடன் நின்றது. ஊர் பார்க்க வந்த மனைவியும் மகளும் தங்குவதற்கென்று அமர்த்திய அந்தக் கட்டடம், யுத்தம் காரணமாகப் பிள்ளையவர்களின் கையிலே நிலைத்து விட்டது.

     செல்லையா நிலைப்படியில் ஏறின போது, கதவு உள்ளே தாழிடப்படும் தருவாயிலிருந்தது. தள்ளிக் கொண்டு நுழைந்தான்.

     “என்ன, யாரு?” கதவைத் தொட்டபடி பேயறைந்தவர் போல் நின்ற சமையலாள் கருப்பையா அலறினார்.

     பெஞ்சுப் பலகையில் உட்கார்ந்திருந்த மரகதமும் காமாட்சியம்மாளும் பதறி எழுந்து, பின்கட்டுக்குள் ஓடினார்கள்.

     “கருப்பையாண்ணே! என்ன, தெரியலையா?” தலையில் இருந்த தொப்பியை எடுத்தான். அடங்கிக் கிடந்த கேசக்கற்றைகள் நெற்றியில் தாவிப் புரண்டன.

     “என்ன செல்லையாண்ணனா! அடி ஆத்தீ, அடையாளமே தெரியலையே! பயந்திட்டோம்ணே... வாங்க, இருங்கண்ணே!” முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் மிளிர்ந்தன. உள்கட்டுக் கதவுக்குப் பின்னால் காமாட்சியம்மாளின் தலை மெதுவாக எட்டிப் பார்த்தது. “செல்லையாவா? மிலிட்டரி தொரை மாதிரியில்ல இருக்கு? முன்னைக்கு இப்ப ஆள் ரெண்டு பங்காத் தெரியுது...” வலக்கை நாடிக்கு ஏறியது.

     “அக்கா, நம்ம செல்லையாண்ணன்! சும்மா வாங்க. நாங்கூட முதல்ல பயந்திட்டேன்” ஓடி ஒளிந்தவர்களுக்குத் தைரியம் சொன்னார்.

     “செல்லையா, வாப்பா. இப்படித்தானா எங்களைப் பயமுறுத்துறது?... எப்ப வந்தாய்?” நாடியில் கைவைத்தவாறு காமாட்சியம்மாள் முன்கட்டுக்கு வந்தார்.

     “இப்பத்தான் வந்தேன். முதலாளி, நாகலிங்கமெல்லாம் எங்கே காணோம்?”

     “உக்காரப்பா, ஒங்க மொதலாளி நியூலயனுக்குப் போயிருக்காக. அவுகள்ளாம் அங்கெ, நம்ம கடையில இருப்பாக. விளக்கு வைக்கிறதுக்கு முன்னாடி வந்திருவாக. உக்காரு செல்லையா.”

     சுவரோரம் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தான். கண்கள் உள்கட்டுப் பக்கம் சென்றன. கதவுக்குப் பின்னால் உடலை மறைத்தவாறு அவனைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த குளிர்ந்த முகம் தெரிந்தது; மறுவிநாடி மறைந்து விட்டது.

     “நீ போயி ரெண்டு வருஷமாச்சே, ஒரு கடிதாசி போடக் கூடாதா? என்னமோ ஏதோன்னு நினைச்சிக்கினே இருந்தேன்... கருப்பையாண்ணே! காப்பி போட்டாங்க.”

     வாயைப் பிளந்தவாறு செல்லையாவி சராய், பிஸ்டல், பூட்ஸ் முதலியவற்றைப் பார்த்து நின்ற கருப்பையா உள்ளே ஓடினார்.

     “அதிகமாகக் கடிதம் எழுதக்கூடாதென்று உத்தரவு. உங்க எல்லோரையும் பற்றி அடிக்கடி விசாரித்துக் கொள்வேன்.”

     உள்ளே மரகதமும் கருப்பையாவும் கிசுகிசுவென்று பேசிக் கொண்டிருந்தனர். செல்லையா பேச்சோடு பேச்சாகப் பார்வையை உள்ளே திருப்பினான். கருப்பையா காபித் தம்ளருடன் நிலைப்படியைத் தாண்டினார். பின்னால் மரகதத்தின் முழு நிலவு வட்ட முகம் மின்னியது. இதென்ன பழைய மரகதம்தானா அல்லது தேவலோகத்துப் பெண்ணா?

     “காப்பியக் குடி, செல்லையா” காமாட்சியம்மாளின் குரல் சொல்லிற்று.

     திடுக்கிட்டுத் திரும்பியவன், காபித் தம்ளரை வாங்கினான்.

     “ஏனப்பா, திக்குத் தெரியாத சீமையில வந்து அகப்பட்டுக்கிணு முழிக்கிறமே, எங்களை விட்டுப்பிட்டு இப்படிப் போகலாமா? நீ இங்கின இருந்தாக்கா மனசுக்கு எம்புட்டுத் தெம்பாயிருக்கும். வடிவேலுதான் போயிட்டான்.” குண்டு வீச்சில் பலியான மகன் நினைவு வந்ததும் காமாட்சியம்மாளின் குரல் கம்மியது; கண்களில் நீர் சுரந்தது.

     “இனிமேல் ஒன்றும் பயமில்லை. சண்டை சீக்கிரம் முடிந்துவிடும்.”

     “வெள்ளைக்காரன் வந்திருவானா?”

     “யார் வந்தாலும் நமக்கு ஒன்றுதான். சண்டை நின்று, கப்பல் விட்டால் சரி.”

     “ம்ம்... ஆமா, அங்க ஒனக்கு என்ன வேலையப்பா? இடுப்பிலே இருக்கே அதென்ன டுப்பாக்கியா?”

     “ஆமா, பிஸ்டல். ராணுவத்தில் அதிகாரி, லெப்டினன்ட்.”

     “அப்படீன்னா?”

     “பட்டாளத்தில் ஆபீசர் வேலைன்னு சொல்றாங்கள்ள, அது.”

     “ஆப்சரா!” காமாட்சியம்மாளின் வியப்பு, கண்களில் தெரிந்தது. எல்லோரும் சிப்பாயி வேலைக்கிப் போயிருக்கியன்னுல நினச்சென். நம்ம பிள்ளைக ஆப்சர் வேலையிலயும் இருக்காகளா?”

     “ஆமா, கொஞ்சம் பேர், ரொம்ப இல்லை.”

     “ம்... ஆமா, நம்ம கடையிலிருந்து போன முத்துலிங்கம், சேது எல்லாம் எங்கப்பா இருக்காக? ஒண்ணும் தெரியலையே... எங்கெ போயி என்ன அவதிப்படுதுகளோ! ம்... காப்பியக் குடி ஆறுது.”

     “சேது பாலர் சேனையில் இருப்பதாகச் சொன்னார்கள். முத்துலிங்கம் சங்கதி தெரியவில்லை.”

     பர்மாப் போர்க்களத்தில் முத்துலிங்கம் பலியான செய்தியைச் சொல்ல விரும்பவில்லை. காப்பியைக் குடித்துவிட்டு தம்ளரைக் கீழே வைத்தான்.

     “ஆமா, பர்மாச் சண்டைக்குப் போன நம்ம பிள்ளையக கணக்கு வழக்கில்லாமல் செத்துப் போச்சுதுகளாமே, அதுகளைப் பெத்தவுகளுக்கு யாரு பிள்ளை கொடுக்கிறது? இதெல்லாம் நமக்கெதுக்கு? சப்பான்காரனும் வெள்ளைக்காரனும் சண்டை பிடிச்சுக் கெட்டுக் குட்டிச்சுவராய்ப் போகட்டும்; அரசழிஞ்சு அடியோட தொலையட்டும். நமக்கென்ன?” பேச்சு படபடப்பாக வந்தது.

     “சாகப் பயந்தால் முடியுமா? வீட்டில் இருந்தவர்கள் குண்டு வீச்சில் சாகவில்லையா?”

     “ஏனப்பா, உன்னையவும் பர்மாச் சண்டைக்கிப் போகச் சொல்வாரா நேத்தாசி?”

     “உத்தரவு வந்தால் போக வேண்டியதுதான்.”

     “நீ போக வேணாமப்பா, ஒண்ணு ஆனாப் போனால், உங்க ஆத்தாளுக்கு யார் பதில் சொல்றது?”

     “பர்மாவுக்குப் போக வேண்டியிருக்காது. ரெண்டு மாசத்தில் சண்டை முடிந்துவிடும்.”

     “சரி, இதையெல்லாம் கழட்டிப் போட்டுவிட்டு வேட்டிய எடுத்துக் கட்டிக்ய. ஒன் டவுசரையும் தொப்பியவும் பாத்தாப் பயமாயிருக்கு. ஒங்க மொதலாளி பாத்தா அரண்டு போவாரு.” காமாட்சியம்மாளின் முகத்தில் சிரிப்பு அரும்பியது.

     “காலையில் முகாமுக்குத் திரும்ப வேண்டும். இங்கு நிறைய வேலையிருக்கிறது. இப்போ கிளம்பினால்தான் சரியாயிருக்கும்.” எழுந்தான்.

     “நல்லாயிருக்கே, உக்காரு. ரெண்டு வருஷம் காட்ல இருந்த பிள்ளை, நாலு நாளைக்கி வாய்க்கி ருசியாகச் சாப்பிட்டுப் பிட்டுப் போ.”

     “ஒரு நாள்தான் லீவு. இன்னொரு முறை வர்றென்.” வயிர முத்துப்பிள்ளை வருவதற்குள் புறப்படுவதென்று தீர்மானம் செய்துவிட்டான்.

     “காலையில போறதுக்கு இப்ப என்ன? வேலைகளை முடிச்சிக்கிணு சாப்பிட வா. ஒங்க மொதலாளியும் அதுக்குள்ள வந்திருவாரு.”

     “நேரமில்லை. நிறைய வேலையிருக்கிறது.” கும்பிட்டான். “முதலாளியிடம் சொல்லுங்கள்.”

     “மகராசனாய்ப் போய்ட்டு வா. பத்திரமா இருந்துக்க. எங்களை மறந்திராதையப்பா!”

     “கருப்பையாண்ணே, வரட்டுமா?” செல்லையா உள் கதவைப் பார்த்தான். மரகதத்தின் முழு உருவம் தெரிந்தது.

     “ஆகட்டும், போய்த்து வாங்கண்ணே.”

     “வருகிறேன்.” தொப்பியைத் தலையில் வைத்துக் கொண்டு படிக்கட்டில் இறங்கிச் சென்றான்.