உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பாகம் ஒன்று 7. நள்ளிரவில் வெடிமுழக்கம் செல்லையா கோலாமூடா போய்ச் சேர்ந்ததும், மற்ற தமிழ் அதிகாரிகளைக் கூட்டி நிலைமையை ஆராய்ந்தான். உடனடியாக வெளியேற வேண்டும் என்றே எல்லோரும் வற்புறுத்தினார்கள். சரணடையும் யோசனையை ஏற்பார் யாருமில்லை. ஜப்பான் வீழ்ந்து விட்டாலும், மலேயாவில் பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து கொரில்லாப் போர் நடத்த ஏற்பாடு செய்யப்படுமென எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நேதாஜியின் சாவுச் செய்தி பேரிடியாக இருந்தது. நேதாஜி இல்லாமல் இந்திய தேசிய ராணுவத்தை ஒழுங்குமுறையாக நடத்திச் செல்வதோ, கட்டுக்குலையாமல் காப்பதோ இயலாத செயல் என்பது தெள்ளத் தெளிவாய்ப் புலனாகியது. தைப்பிங் வட்டாரத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஐந்து பேர் 19ம் தேதி இரவில் கோல மூடா முகாமிலிருந்து நழுவினார்கள்; மறுநாள் கிளம்பியவர்கள் பத்துப்பேர். அவர்களில் மூவர் 21ம் தேதி கருக்கலில் முகாமுக்குத் திரும்பி வந்து, ஆறாவது மைலில் வழிமறித்துத் தாக்கப்பட்டதாகவும், தாக்கியவர்கள் யாரெனத் தெரியவில்லை என்றும் சொன்னார்கள். மற்ற எழுவரின் கதி என்ன ஆயிற்றென்று அறிய முடியவில்லை. 22ம் தேதி காலையில் தமிழ் அதிகாரிகள் மீண்டும் கூடி ஆலோசித்தனர். எல்லோரும் ஆயுதங்களுடன் ஒரேயடியாக வெளியேறுவதென்று முடிவாகியது. செல்லையா தேவையான கட்டளைகளைப் பிறப்பித்தான். தெற்கே போக வேண்டியவர்களையும், வடக்கே போக வேண்டியவர்களையும் பிரிக்கும் வேலை ராஜதுரையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்துல்காதர், பாசிச எதிர்ப்புப் படை அதிகாரிகளைச் சந்தித்து, அவர்களின் ஆதரவை, வழிமறிப்பதில்லை என்ற வாக்குறுதியைப் பெற முயல வேண்டும். வழியில் ஜப்பானிய அணிகள் உள்ள இடங்களை, ரெஜிமென்ட் அலுவலகத்திலிருந்து தெரிந்து வருவது ‘புல்லு தின்னி’ மணியின் பொறுப்பு. அப்துல் காதர் காட்டிலிருந்து திரும்பியதும், மற்றவர்கள் ஆவலோடு அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆனால் அவன் கூறிய தகவல் ஏமாற்றமளித்தது. எவ்வளவோ முயன்றும் சீனக் கொரில்லாக்களைச் சந்திக்க முடியவில்லை. வழக்கமாக அவர்கள் நடமாடும் இடத்தில் கூட ஆள் அரவமில்லை. இடம் பெயர்ந்து விட்டார்கள் என்று தெரிந்தது. தமிழர்கள் துருவித் துருவி ஆராய்ந்தனர். சின்பெங்கின் வானரப் படை திடுமென மறைந்ததற்குக் காரணம் புலப்படவில்லை. மணி கொண்டு வந்த தகவல் தெளிவில்லாமல் இருந்தது. குபூன் பீசாங் தோட்டத்திலிருந்த ஜப்பானியப் படை இப்போது அங்கே இல்லை. ஈப்போவுக்குப் போயிருக்கலாம். உள்நாட்டுப் பகுதிகளின் நிலவரம் சரியாகத் தெரியவில்லை. பெருஞ் சாலையை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஜப்பானிய அணிகளில் சில தாக்கப்பட்டிருக்கின்றன. ஆயுதங்களைப் பறித்துச் சேர்ப்பதே சின்பெங்கின் இப்போதைய வேலைத் திட்டம் என்று தோன்றுகிறது. செல்லையா நிலைமையை விளக்கினான். தமிழர்கள் வெளியேறுவதற்கு முகாம் கமாண்டர் இசைய மறுக்கலாம். வெளியேறிய பின்பு, பாசிச எதிர்ப்புப் படையினரின் தாக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது; ஜப்பானியரும் வழிமறிக்கலாம். ஆதலால் போருக்குச் சித்தமாகவே வெளியேற வேண்டும். கோல மூடா முகாமிலிருந்த 1040 தமிழர்களில் 560 பேர் வடக்கே இனாங் திக்கிலும் மற்றவர்கள் தெற்கேயும் போக வேண்டியவர்கள். வடக்கே செல்வோர் செல்லையா தலைமையிலும், தெற்கே போக வேண்டியவர்கள் மணி தலைமையிலும் 24ம் தேதி காலையில் கொடி வணக்கம் முடிந்ததும் வெளியேறுவதெனத் தீர்மானிக்கப் பட்டது. இது இவ்வாறு இருக்க, 22ம் தேதி நள்ளிரவில் யாரும் எதிர்பாராத நிகழ்ச்சியொன்று நேர்ந்தது. 12:16 மணி அளவில் கோலா மூடா முகாம் செவிடுபடும் வெடி முழக்கத்தில் அதிர்ந்தது. அதிகாரிகளும் சிப்பாய்களும் தூக்க மயக்கம் முற்றிலும் கலையாதவர்களாய், வெடியோசை கேட்ட திசையை நோக்கி ஓடினார்கள். மேல்புறத்தில், முள்கம்பி வேலிக்கு அப்பாலிருந்து விசைப் பீரங்கிகள் சுட்டன; எறிகுண்டுகள் தாவி வந்து வெடித்தன. ஐ.என்.ஏ. வீரர்கள் திருப்பிச் சுடத் தொடங்கியதும் வெளியிலிருந்து வந்த வெடிமுழக்கம் நின்றுவிட்டது. அந்நேரத்தில் எதிரியைப் பின்பற்றிக் காட்டுக்குள் போவது சரியல்ல - போக வேண்டிய தேவையில்லை - என்று கர்னல் கரிமுடீன்கான் முடிவு செய்தார். இது சின்பெங்கின் மிரட்டல் நடவடிக்கை என்பதும் சண்டை பிடிக்கும் நோக்கம் கொரில்லாக்களுக்கு இல்லை என்பதும் நன்கு தெரிந்தது. காவலர் தொகை இரட்டிக்கப்பட்டது. மற்றவர்கள் ஆயுதபாணிகளாய்ப் படுத்துக் கொள்ளச் சென்றனர். மறுநாள் காலையில் ஹவில்தார் ஆண்டிச்சாமியை அழைத்து, காட்டுக்குள் சென்று சீனக் கொரில்லாக்களைச் சந்தித்து வரும்படி சொல்லியனுப்பினால் செல்லையா. இரண்டு மணி நேரம் கழித்துக் காட்டிலிருந்து திரும்பிய ஆண்டிச்சாமி, யாரும் தென்படவில்லை என்று தெரிவித்தான். செல்லையாவுக்கு அன்று முழுவதும் ஒன்றுமே ஓடவில்லை. வெளியேறும் திட்டத்தைக் கைவிடலாமா என்று பலமுறை எண்ணினான். அதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. முடிவு என்னவென்று தெரியாத நடவடிக்கையில் இறங்குவது சரியா? கமாண்டர் தடுத்தால் என்ன செய்வது? சண்டை போட்டு வெளியேறலாமா? வழியில் ஜப்பானியரின் எதிர்ப்பையும் சீனரின் தாக்குதல்களையும் சமாளிக்க முடியுமா...? ஆள்சேதம் அதிகம் ஏற்படுமே. அந்த தடிப்பயல் மாணிக்கம் இருந்தால் வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் எதையாவது சொல்லித் தொலைப்பான். பிரிட்டிஷ் படை வருவது வரை காத்திருந்து சிறைப்பட்டால் உயிர்ச்சேதத்தைத் தடுக்கலாம். சிறைப்பட்டால் எப்போது மீள்வது? பினாங்குக்குப் போய் மரகதத்தை என்று பார்ப்பது? இப்பொழுது மரகதத்தை நினைப்பது முறையல்ல; இது யுத்த விவகாரம். இரவில் மணியும் அப்துல் காதரும் வந்தார்கள். செல்லையா தன் ஐயங்களை வெளியிட்டான். “இனிமேல் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. திட்டப்படி காலையில் வெளியேற வேண்டும்” இருவரும் உறுதியாகச் சொன்னார்கள். அத்துடன் செல்லையாவின் மனம் திடம் பெற்றது. செல்லையாவின் தூக்கம் ஒரே கனவு மயமாக இருந்தது. வழியில் சீனர், ஜப்பானியர் பிரிட்டிஷார் எல்லோரும் சேர்ந்து தமிழ்ப் படையை எதிர்த்தார்கள். எதிர்ப்பை முறியடித்துக் கொண்டு படை முன்னேறியது. டில்லியில் லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று தமிழ்ப் படையை வரவேற்றனர்... செவல்பட்டியில் முத்துச்சரங்கள் தொங்கிய மணப்பந்தலில் மரகதத்தின் கழுத்தில் மாலையிடப் போனான் செல்லையா... நேதாஜி வந்து தடுத்தார்... செல்லையா திடுக்கிட்டு எழுந்தான். என்ன இது? கண்ணைக் கசக்கியவாறு சுற்றுமுற்றும் பார்த்தான். பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|