பாகம் இரண்டு

3. முதலில் பிழைப்பு

     பேராக் தெருவில் டத்தோ கிராமட் சாலையை நோக்கி நடந்தான். காலை வெயில் முகத்தில் காய்ந்தது. கீரை, காய்கறிகளைக் காவடி கட்டித் தூக்கி வந்த சீனர்கள், இருபுறமும் தோன்றிப் பாதையில் ஏறினார்கள். தென்னை மரங்களுக்கிடையே தெரிந்த அத்தாப்பு வீடுகளிலிருந்து மலாய்ப் பெண்களின் களங்கமற்ற பேச்சொலி வந்தது. இடையிடையே சைக்கிள்கள், ரிக்ஷாக்கள் விரைந்தன.

     “புக்குள் பிராப்பா, துவான்?” எதிரே, சிகரெட் புகைத்து வந்த மலாய்க்காரி கேட்டாள். மணியைச் சொல்லிவிட்டு நடந்தவன், பைக்குள் கையை விட்டு, சிகரெட் பெட்டியை எடுத்தான்.

     “அண்ணே!” வலப்புறத்துத் தோப்புக்குள்ளிலிருந்து, கைலியும் துருக்கித் தொப்பியுமாய் ஒரு இளைஞன் எட்டி நடந்து வந்தான். திறந்த சிகரெட் பெட்டியைக் கையில் பிடித்தபடி செல்லையா உற்றுப் பார்த்தான். ராமையா! சுங்குரும்பை ‘ரெட்டை மூனா ரூனா’ கடை அடுத்தாள்...

     “ராமையா, எப்பொழுது வந்தாய்? கோலக்கங்சார் முகாமில் நம் ஆட்கள் வெளியேறவில்லையே, நீ மட்டும் வந்து விட்டாயா? இதென்ன இந்தக் கோலம்?”

     “இருபது பேர் வெளியேறினோம். வழியில் சீனப் பயல்களுடன் லேசான தள்ளுமுள்ளு. நாலு பேரைக் காட்டுக்குள் தூக்கிப் போட்டோம். அதுதான், பத்து நாளைக்குத் தலையை மறைத்துக் கொண்டு இப்படி...”

     “இங்கு எங்கே?”

     “அதோ, அந்த வீட்டில்.” தோப்புக்குள்ளிருந்த வீட்டைச் சுட்டிக் காட்டினான். “அபிராமம் ராவுத்தர் - எங்கள் கடைப் பற்று வரவுப் புள்ளி - மலாய்க்காரியைக் கட்டிக் கொண்டு குடித்தனம் நடத்துகிறார். அங்கேதான் இப்போதைக்கு இருப்பிடம்.”

     “அந்த நாலு பேர்தானா, மேற்கொண்டு ஏதாவது...” ராமையாவைக் கூர்ந்து நோக்கிச் சிரித்தான்.

     “அதெல்லாம் ஒன்னுமில்லை, அண்ணே. ராத்திரி ஒரு ஆஸ்திரேலியப் பயல் இடக்குப் பண்ணினான் - மெக்கா லிஸ்டர் ரோட்டில். அவனை ரெண்டு தட்டுத் தட்டி விட்டோம்.”

     “இந்தச் சில்லறை வேலையெல்லாம் வேண்டாம்... எல்லோருக்கும் ஆபத்து. வேறு யாரும் உன்னை - உங்களைப் பார்த்தார்களா?”

     “இல்லை இல்லை. தனியாக மாட்டிக் கொண்டான். ஏண்ணே, நேற்று நம் ஆட்களை அடித்து கடைகளைக் கொள்ளை அடித்தார்களாமே, பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? பெரிய ஆட்கள் எல்லாம் பேசாமல் இருந்தால்...?”

     “அதெல்லாம் முடிந்து விட்டது. பொறுக்கித் தின்னிப் பயல்களின் வேலை. ராமையா, வீண் வம்புகளில் மாட்டிக் கொள்ளாதே. இனிமேல் பிழைப்புக்கு வழி தேட வேண்டும். மேலாளைப் போய்ப் பார்த்தாயா?”

     “இன்னும் போகலை. ஏதாவது ஒரு வேலை... அண்ணே” நெருங்கிச் சென்று காதோடு காதாகச் சொன்னான். “ரெண்டு லைட் மெஷின் கன்னும் பத்து டாமி துப்பாக்கியும் அமுக்கி வைத்திருக்கிறோம். ஜித்ரா ரெஜிமெண்ட் ஆட்கள் ஏராளமாக எறிகுண்டு வைத்திருக்கிறார்களாம்... பினாங்கில் ஒரு நாளைக்காவது தமிழனின் கைவரிசையைக் காட்ட வேணுமண்ணே.”

     “அதெல்லாம் காட்டும்போது காட்டலாம். முதலில் பிழைப்பு, நினைவிருக்கட்டும். எச்சரிக்கையாக இரு... சனியன்களைக் கண்காணாத இடத்தில் ரகசியமாக எறிந்து விடுங்கள்.”

     “இதெல்லாம் சூட்டோடு சூடாய்ச் செய்தால் தான். பெட்டியடியில் போய் உட்கார்ந்து விட்டால், வட்டிச் சிட்டையில்தான் புத்தி போகும்.”

     “இதுதான் நல்லது. நாலு பேரைப் போல் நாமும் பணங் காசோடு இருப்பதற்கு அதுதான் வழி. சரி, நான் வருகிறேன். எச்சரிக்கையாயிரு.”

     “ஜே ஹிந்த்!” ராமையா ஏமாந்த முகத்துடன் தோப்புக்குள் நுழைந்தான்.

     செல்லையா சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு வடக்கே நடந்தான். மேலே விமானக் கூட்டம் பறந்து சென்றது. அண்ணாந்து பார்த்து விட்டுக் கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்தான். முகாம்களிலிருந்து திரும்பும் தமிழர்களின் கதி என்ன? உழைப்பாளிகள் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம். கடைப் பையன்கள் பாடுதான் கடினம். சுமத்ரா, இந்தோசீனாவிலிருந்து வந்தவர்கள் எப்போது திரும்புவது? அதுவரை அவர்களை யார் காப்பாற்றுவது? ராமையா போன்ற முரடர்களால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படுமோ...

     “செல்லையா!” இடப்புறத்து வீட்டிலிருந்து இறங்கி ஓடி வந்த சாமி, இரு கைகளாலும் செல்லையாவின் தோளைப் பற்றினான்.

     “சாமி! எப்போது வந்தாய்?”

     “நேற்றிரவு, சிம்பாங் தீகா சண்டை பற்றிக் கேள்விப்பட்டேன்...”

     ஆங்கிலத்தில் பொழியலானான்.

     “அதற்குள் தமிழை மறந்து விட்டாயா?”

     “தமிழா? இனிமேல் தமிழ் எதற்கு?... செல்லையா, நம் கனவெல்லாம் பாழாகிவிட்டதே.” தொண்டை கம்மிக் கண்கள் கலங்கின. “டில்லியிலிருந்து நேரே என் பாட்டனார் பிறந்த ஊருக்கு - திருவாடானை - போய்ப் பார்க்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன்...”

     “நாம் தானா எல்லாம், இதோடு உலகம் முடிந்து விட்டதா? நாம் தோற்றால் நம் பிள்ளைகள் வெற்றி பெறட்டுமே... நேதாஜி போனால் காந்திஜி இல்லையா?”

     “காந்தி!... யோசித்துப் பேசுகிறாயா அல்லது... நேதாஜியால் முடியாததை உங்கள் காந்திஜி கிழித்து விடுவாரோ?... மடத்தனமான கூற்று. சரி, அவ்வளவுதான். நான் சொல்கிறேன், குறித்துக் கொள். இந்தியா ஒரு போதும் விடுதலை பெறாது!” வலக்கையை ஆட்டிக் கொண்டு ஆவேசம் வந்தவன் போல் கத்தினான்.

     “சாமி, காந்தியைப் பற்றி உனக்குத் தெரியாது. அவருடைய போக்கே தனி வகை. அந்த மனிதன் திறமையை நம்மைப் போன்ற சிறுவர்கள் மதிப்பிட முடியாது. அதோடு வெற்றி தோல்விக்கு இடம் - பொருள் - ஏவல் என்று இருக்கிறது.”

     “இப்படியே வெறும் பேச்சாய்ப் பேசிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.”

     சில விநாடிகள் ஒருவரையொருவர் பார்த்தபடி பேசாமல் நின்றார்கள்.

     “நேதாஜி திட்டத்தில் என்ன கோளாறு? நமக்கு வெற்றி கிட்டாதது ஏன்?”

     “நேதாஜி திட்டத்தில் இருந்த பெரிய கோளாறு, அவருடைய சாவுதான். அவர் மறைந்த பிறகு, நம்மையெல்லாம் சேர்த்துக் கட்டி மேய்க்கக் கூடிய ஆள் யாரும் இல்லை. கலையாமலிருந்தால் நமக்குள்ளேயே சண்டை வந்திருக்கும்.”

     “இப்படி முடியுமென்று நினைத்தோமா?... சையாம்காரப் பயல் கூட நெஞ்சை தூக்கிக் கொண்டு ‘சுதந்திர நாடு’ என்று சொல்கிறானே!... ம், இதோடு சரி, கையைக் கழுவ வேண்டியதுதான். உனக்குப் பழையபடி செட்டித் தெருக் கொண்டு வேலைதானா, அல்லது...”

     “இனிமேல்தான் யோசிக்க வேண்டும்.”

     “எங்கள் பேங்குக்கு ஆள் எடுக்கப் போகிறார்கள். விருப்பமிருந்தால் சொல். ராஜநாயகத்திடம் சொன்னால் வேலை முடிந்து விடும்.”

     “பார்க்கலாம்.”

     “இன்னும் இரண்டு வாரத்தில் பேங்க் திறந்து விடுவார்களாம். கேஷியர் சொன்னான்... சரி, வருகிறேன். எங்கே போகிறாய்?”

     “முதலாளி வீட்டுக்கு.”

     “ராத்திரி மாணிக்கம் வீட்டுக்கு வருகிறேன். நீ இருப்பாயல்லவா?”

     “ஓ.”

     “சரி” சாமி, இடப்புறத்து வீட்டை நோக்கித் திரும்பி நடந்தான்.