பாகம் மூன்று

1. தோதான மாப்பிள்ளை

     வீட்டு முகப்பில் பிரம்பு நாற்காலி மீதிருந்த வயிரமுத்துப்பிள்ளை சுருட்டு புகைத்துக் கொண்டிருந்தார். பார்வை, சாலை மீது லயித்திருந்தது. சைக்கிள், கார், ரிக்ஷாக்கள் கிழக்கே விரைந்தன - அலுவலகங்களுக்குச் செல்லும் கிராணிமாருடன், எதிரே, சாலையின் வடபுறம், பச்சைக் கூடாரமாய் நின்ற மரத்தின் அடியில் தமிழர், மலாயர், சீனர்கள் அடங்கிய கூட்டம் ட்ராம் வண்டிக்காகக் காத்து நின்றது. பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்கள் தோளில் தொங்கிய புத்தகப் பையுடன் குதித்தோடினர். இடது பக்கம் ஐந்தாறு வீடுகளுக்கு அப்பால், காபிக் கடையிலிருந்து கிளம்பின சீன இசைத்தட்டு இரைச்சல் காதைத் துளைத்தது. பிள்ளையவர்கள் முகத்தைச் சுளித்தார். சனியன் பிடிச்ச பயக... எப்பப் பார்த்தாலும் இந்தச் சீனங்யளுக்கு ஙொய்ங் புய்ங்கின்னி கத்தித் தொலைச்ச பாடுதான்...

     சுருட்டைக் கையில் எடுத்து வைத்துச் சில விநாடிகள் நோட்டமிட்டார். உதிராமல் ஒட்டி நின்ற சாம்பலை விரல் சுண்டியது. சுருட்டு, பழையபடி வாய்க்கு மாறியது. புகையை இழுத்தார். சீ. என்னயிருந்தாலும் ஊர்ச் சுருட்டு போல வராது. காரமில்லையே, மண்ணு மாதிரி சனியன். சுருட்டுன்னிச் சொல்றதுக்கு தம்பம்பட்டி அசல் ஒண்ணா நம்பர் ராம விலாசம் சுருட்டுத்தான்...

     சுருட்டு மக்கர் பண்ணிற்று. புகை சரியாக வரவில்லை. கன்னங்களை உள்ளிழுத்து ஓசையுடன் உறிஞ்சிப் புகையை வெளியே விட்டார். ம்ம்... சுருட்டு வழிக்கு வந்துவிட்டது. இடைமறித்த காம்பு சாம்பலாகிவிட்டது போலும். ஒரே சீராய்ப் புகை வர ஆரம்பித்தது.

     இடது கை தலையைத் தடவியது. ‘செல்லையாப் பய இப்படி மோசம் பண்ணிப்பிட்டானே. என்னமெல்லாம் நினைச்சிருந்தம், காலிப் பயகளோட சேர்ந்து பட்டாளத்துக்குப் போனதிலயிருந்து கழுதையாப் போனான். நெஞ்சைத் தூக்கிக்கிணு திரியிறானே. இப்படியிருந்தால் இந்தத் தொழிலுக்கு லாயக்குப்படுமா? எதிரி நாலு போடு போட்டுப்பிட்டாலும், வாயை விடாமல் காரியத்திலயில குறியாயிருக்கணும். சப்பான்காரன்னா கர்ப்பங் கலங்கும். அவங்யளப் போயி கொன்னு குமிச்சிருக்கானே, என்ன ஏத்தம், ம்ம்ம்..., அது பத்தாதுன்னி மில்ட்டேரி தொரையப் பிடிச்சி அடிச்சிருக்காங்ய. நாளைக்கு நம்மள்ளாம் எம்மாத்திரம்? ஒண்ணு ஆனாப் போனால் என்னமாச்சும் சொல்ல முடியுமா... இவன் தொழிலுக்கு லாயக்குப் படமாட்டான். டுப்பாக்கி பிடிச்ச பய. டப்பு டுப்புன்னித்தான் புத்தி போகும். இந்த வயசிலயே நானுங்கிற ஆங்காரம் வந்திருச்சே. அதுனாலத்தானே சண்டைக்கிப் பாஞ்சிருக்கான். இங்லீஸ் படையே சப்பான்காரனைக் கண்டு கால் கிளம்பி ஓடுச்சி. நீ என்ன லாடு கிச்சனர் மகன் கெட்டுப் போனாய்... மறிச்சான்னா வெலகிக்கிணு போறது. இல்லாட்டி கால்ல விழுந்து கெஞ்சிக் கேக்குறது. எங்க தாய் பிள்ளையப் போய்ப் பார்க்கணுமினு. நானுன்னி முன்னால நிக்கிறதுக்கு அப்பிடி எத்தினி கோடி சம்பாரிச்சுக் கொடிகட்டிப் பறக்க விட்டிருக்காய். அப்பிடித்தான் நீ என்ன பவுண்தாஸ் சேட்டா, இல்லாட்டி ராசாச் செட்டியாரா...”

     ஒரு விநாடி கண்ணை மூடித் திறந்தார். கால் விரல்களின் மீது பார்வை சென்றது. வலக் குதிக்காலால் இடக்கால் விரல்களைத் தேய்த்து வருடினார். வாயில் வலக்கோடியில் இறுகப் பற்றியிருந்த சுருட்டுப் புகைந்தது. கை மீண்டும் தலையைத் தடவிற்று. ‘பணம் சம்பாரிக்கிறதின்னாச் சும்மாவாயிருக்கு. பர்மா டாப்புல நான் அடுத்தாளுக்கு இருக்கச்சே, வசூலுக்குப் போன எடத்தில் எத்தினி பர்மாக்காரன் கை நீட்டி அடிச்சிருக்கான். வாயைத் தொறப்பனா... ம்ம்ம்... இந்தப் பயன்னாக்கா பெரிய பட்டாளத்து நாய்க்கராட்டம் பாய்ஞ்சிருவான். பாய்ஞ்சு என்ன செய்ய? நம்ம பணம் தான் போகும். வீரியமா பெருசு. காரியமில முக்கியம் இந்தத் தொழிலுக்கு. அடக்கமில வேணும். நானுன்னி நெஞ்சைத் தூக்கிக்கிணு திரியிறதுக்கு இதென்ன கவர்மெண்டு வேலையா... சப்பான்காரன் சங்கதியவும் மில்ட்டேரி தொரை சங்கதியவும் காமாச்சிகிட்டச் சொன்னா, ‘இப்பவே அடிச்சி விரட்டுங்க’ன்னி ஒத்தைக் கால்ல நிப்பா. பாவம், நாமள் கூட்டியாந்த பிள்ளை, நம்மளால கெட்டதாயிருக்கக் கூடாதின்னி நாமள் பார்க்குறம்...’

     காலடி ஓசை கேட்டது, தலையைத் திருப்பினார்.

     “ஆமா, என்ன ஒரே ரோசனையா இருக்குறியக?” உள்ளேயிருந்து வந்த காமாட்சியம்மாள் வினாவினார்.

     “ஒண்ணுமில்ல... அந்த ஐயர் வீட்டம்மாளுக்குக் கைமாத்து கொடுத்தமுன்னியே, வாங்கிட்டியா?”

     “சும்மா ஏன் போட்டு அரிக்கிறியக? சம்பளம் வந்ததும் தாரமின்னி சொல்லியிருக்கு. ஆமாஅ, எப்பக் கப்பல் விடுவான், எப்ப ஊரு போயிச் சேருறது?” சுவரோரமாய்த் தரையில் உட்கார்ந்தார்.

     “எல்லாம் விரசாய்ப் போயிரலாம். ஊர்த் தபால் வந்திருச்சில, இனிம என்ன... ம்ம்... உங்கிட்ட ஒரு சங்கதி பேசணுமுனு நினைச்சேன், மரகதம் எங்கெயிருக்கு?”

     “பின்கட்டுல என்னமோ படிச்சிக்கினு இருக்காள், ஏன், என்ன சங்கதி?”

     வானாயீனா ஒரு முறை புகையை இழுத்து ஊதிவிட்டுச் சுருட்டைத் தூக்கி எறிந்தார்.

     “காமாட்சி, போட்ருந்த திட்டம் தடம் புரண்டு போச்சுது... இம்புட்டு நாளாய்க் குறி வச்சது ஒண்ணும் இப்படி பிசகினதில்லை.” தொண்டையில் செருமல் கிளம்பியது. “செல்லையாப் பய சரிப்பட மாட்டான். மரகதத்தை நாகலிங்கம் பயலுக்குக் கட்டி வச்சிர வேண்டியதுதான்.”

     “என்ன, என்ன சொல்றியக, ஒங்களுக்கென்ன பித்தா?” காமாட்சியம்மாள் ஆத்திரத்துடன் எழுந்தார்.

     “இந்தா, உக்காரு, சொல்றென். பொட்டச்சியிங்கிறது சரியாப் போச்சில...! சொல்றதைப் பூராக் கேட்காமக் குதிக்கிறியே... ம்ஹம்.”

     காமாட்சியம்மாள் உட்கார்ந்தார். நெஞ்சு துடித்தது.

     “அவஞ் சங்கதி ஒனக்குத் தெரியாது. சொல்லக் கூடாதின்னு இருந்தென். மில்ட்டேரி தொரை ஒருத்தரைப் பிடிச்சி அஞ்சாறு பயக அடிச்சிருக்காங்ய. அதில இவனும் சேர்ந்தவனாம். போலீஸ்ல கூட்டிப் போயி விசாரிச்சிருக்காக. எப்படியோ தப்பிச்சிக்கினான்.”

     வானாயீனா ஏறிட்டுப் பார்த்தார். மனைவி வாயைத் திறக்கவில்லை.

     “இந்தா, நான் சொன்னது காதில விழுந்துச்சா?”

     “எல்லாம் விழுந்துச்சு. வெள்ளைக்காரனை அடிச்சா, அவன் சும்மா விட்ருவானாக்கும்? யாராவது சொல்றதைக் கேட்டுக்கிணு என்னமாவது சொல்லாதியக.”

     “சரித்தான், அவனக் கெடுக்கிறதுக்கு நீ ஒருத்தி போதுமே! இன்னொண்ணு தெரியுமா?... இவன் பட்டாளத்திலயிருந்து வரச்சே, சப்பான்காரங்ய மறிச்சாங்களாம். இந்தப் பயக கூடி அம்புட்டுச் சப்பான்காரனையும் கொன்னு குமிச்சிருக்காங்ய! எப்படியிருக்கு, பாத்தியா?... பண்டாரம் வீட்ல பெறந்த பய செய்யிற வேலையா இது?”

     “போதும் நிறுத்துங்க. ஊரா வீட்டுப் பிள்ளைப் பூதிப் பிடியாத் தூத்தாதியக. சப்பான்காரன் நம்ம பிள்ளையகளைக் கொல்ல வந்தாக்கா, இதுக கையக் கட்டிக்கிணு சும்மாயிருக்கணுமாக்கும்?”

     “என்ன!... என்னமோ தெரிஞ்சவளாட்டம் பேசுறியே, ரெம்பக் கண்டுபிட்டியோ நீயி?”

     “எல்லாந் தெரியும். அந்தக் கிராணி வீட்டம்மா சொல்லுச்சு. நம்ம பிள்ளையக செஞ்சதில என்ன குத்தமாப் போச்சாம்?”

     கால்களைத் தொங்கவிட்டு உட்கார்ந்திருந்த வானாயீனா, வலது காலைத் தூக்கி இடது துடைமேல் போட்டார். அடக்க முடியாத சினத்தால் உடல் துடித்தது. பார்வையால் எரித்து விடுபவர் போல் மனைவியை உற்று நோக்கினார். அரை நிமிஷம் கழிந்தது.

     “இந்தா, கூதறைக் கழுத, என்ன ஒளர்ற? இவனை நம்பித் தொழில ஒப்பிச்சா, ஏழு நாள்ல எல்லாத்தையும் தீத்துப்பிட்டுப் பரதேசம் போயிருவான். நெஞ்சைத் தூக்கிக்கிணு வாரது போறதைப் பார்க்குறாயில...? என்னமோ, பூர்வ சென்மத்தில செய்த புண்ணியம், கடையும் கண்ணியுமாயிருக்கம். அடக்க ஒடுக்கமாப் பேர் வெளிய தெரியாமல் இருந்துக்கிணு காரியத்தைப் பார்த்தாவுல நீடிச்சி நிக்யும்...”

     “எம் மகன் இருந்தான்னாக்கா செல்லையாவாட்டம் அவனும் பட்டாளத்துக்குத்தான் போயிருப்பான். அவன்...” குரல் கம்மியது. சேலைத் தலைப்பால் கண்ணைத் துடைத்தார்.

     வடிவேலின் நினைவு கிளர்ந்ததன் விளைவாய்ப் பிள்ளையவர்களின் மனம் இளகிக் குழம்பியது. ‘ஆமா, அவனும் நிமுந்த பயதான் - சாம்பல் நிற டுவீடு சராய் - வெள்ளைப் பாப்ளின் சட்டை - பழுப்பு வண்ணத் தொப்பி - ஆங்கிலோ சைனிஸ் பள்ளி மானவன் நின்றான். அகன்ற நெற்றிக்குக் கீழ் வளைந்த புருவ அணைப்பில் மான் கண்கள். ‘கண்ணு ரெண்டும், *வினாக, அச்சாய், என்னையாட்டந்தான். கண்ணு அவுகாத்தாளுக்கு மாதிரி. ஆளு லெச்சணத்தில குறைச்சலா, படிப்பில குறைச்சலா... கிளாசுக்கு கிளாசு முதல் பிரேசு வாங்குனானே. இல்லை, வேணுமுங்கிற மட்டுக்கு பணங்காசு இல்லியா, காணிகரை வீடு வாசல் இல்லியா... எல்லாந்தான் இருந்துச்சு. ஆயுசு இல்லாமல் போச்சே. பூர்வ சென்மங்கள்ள என்ன பாபம் பண்ணினமோ, யார் வீட்டுப் பிள்ளைய வதைச்சமோ, படுபாவிப் பய போட்ட குண்டுல ஒத்தைக்கொரு மகன் மாய்ஞ்சு மண்ணாய்ப் போனான். கலியாணம் காச்சி பண்ணி ஒரு நல்லதைப் பொல்லதை அனுபவிக்யல... ஊர்ல படிச்சிக்கிணு இருந்தவனை இங்கெ என்னத்துக்குக் கூட்டியாந்தேன். ஆத்தாக்காரி பிள்ளைய விடமாட்டமுனு அழுகையாய் அழுது கத்தினாளே. ம்ஹ்ம்... விதி யாரை விட்டுச்சு... பாசக் கயிறு இழுக்குறப்ப என்ன நினைச்சு ஏங்குனானோ, ஐயோ! கிட்டத்தில் தாய் பிள்ளை இருந்துச்சா, என்னன்னிச் சொல்றதுக்கு... குண்டுக்குள்ளயும் தீக்குள்ளயும் இவன் போயித் தூக்கிக்கிணு ஓடியாராட்டி ஒடலையும் பார்த்திருக்க மாட்டம். எல்லாத்தோட எல்லாமாச் சேர்த்துப் போட்டு எண்ணெய ஊத்தி எரிச்சிருப்பாங்ய...”

     பனித்திரை மூடிய கண்களின் பார்வை, மனையாள் தலைக்குமேல் சுவரில் முட்டி நின்றது. மகன் நினைவில் கனிந்து உருகிய மனதில், என்ன காரணத்தாலோ செல்லையா மீது ஆத்திரம் பொங்கலாயிற்று.

     “காமாச்சி, இவன் சரிப்பட மாட்டான். அரும்பாடுபட்ட நெலநாட்ன தொழில் வெட்டியாய் அழிஞ்சி போயிரும்.” படபடப்பாகச் சொன்னார்.

     “சுத்திச் சுத்தி ஏன் பேசுறியக. இன்னன்னிச் சொல்லி விடுங்க.”

     “மரகதத்தை நாகலிங்கம் பய கையில பிடிச்சுக் கொடுத்துர வேண்டியதுதான். நம்ம வகையில வேற தோதான பயக இல்லை. அடக்கமான பய, சொல்றதைக் கேட்டுக்கிணு கிடப்பான்.”

     “ஏன், அவன் ஒங்களுக்கு என்ன தீங்கு பண்ணினா?... உறங்குறப்ப பெரிய கல்லாய்த் தூக்கிப் போட்டுக் கொன்னுபிடுறதுதானெ? என் மகனைக் கூட்டியாந்து படிக்ய வைக்கிறமுனு குண்டுல கொன்னியக; இவ தலையில கல்லைத் தூக்கிப் போட்டு கொன்னுபிடுங்க...” மனம் குமுறியது. ஆனால் வார்த்தைகள் நிதானமாய் மென் குரலில் வந்தன.

     பிள்ளையவர்களுக்கு மனைவியின் மனநிலை தெரியும் மரகதத்தின் ஆசையும் தெரிந்ததுதான். இடக்கை நெற்றியைத் தடவியது. ‘இதென்ன வெறுங் கலியாண வெசயமா, பொட்டச்சிக யோசனைப்படி நடந்துக்க? நாளைக்கித் தொழிலு என்ன ஆகுறது?’

     “எனக்கு உள்ளார வேலெ கெடக்கு” காமாட்சியம்மாள் எழுந்து உள்ளே போனார்.

     “சரி, போ. அப்புறம் பேசிக்கிடலாம்.”

     பெஞ்சு மேல் உட்கார்ந்திருந்த மரகதம், கைகளால் முகத்தை மூடியபடி கேவிக் கேவி அழுதாள். மகளின் கைகளை நீக்கிக் கண்ணீரைத் துடைத்தார் காமாட்சியம்மாள். நெற்றியில் விழுந்திருந்த முடியை இடக்கை ஒதுக்கியது.

     “வாம்மா” மகளைத் தன் உடனோடு அணைத்தபடி சமையல் கட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்.

     “அம்மா!” மகள் திடுமெனத் திரும்பித் தாயின் கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டு, முகத்தை மார்பில் புதைத்து விம்மினாள். தாயின் கண்களிலிருந்து கசிந்து கன்னங்களின் வழியாய் உருண்டு சொட்டிய துளிகள் மரகதத்தின் தலையுச்சியில் சிந்தி, இருண்டடர்ந்திருந்த அளகத்தில் மறைந்தன.