உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பாகம் ஒன்று 4. வானாயீனா ஆ.சி.வயி. மார்க்கா லேவாதேவிக் கடை முதலாளியான வானாயீனா என்ற வயிரமுத்துப் பிள்ளை தண்ணீர்மலையான்* கோயிலிலிருந்து ரிக்ஷாவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பிள்ளையவர்களுக்கு ஏறத்தாழ 55 வயதிருக்கும். தார்மடி வைத்துக் கட்டிய குண்டஞ்சு வேட்டியின் தூய வெள்ளை, காலை வெயிலில் மின்னியது. மேலே முட்டை மார்க் பனியனும் டைமன் துண்டும். பரக்கப் பூசிய திருநீறும் சந்தனப் பொட்டும் நெற்றியை அழகு செய்தன. வழுக்கை படையெடுத்திருந்த தலையில் கறுப்புக் கலந்த தலைமுடி ஒட்ட வெட்டப்பட்டிருந்தது.
* தண்ணீர்மலை ஆண்டவன் - பினாங் தண்ணீர்மலையில் கோயில் கொண்டிருக்கும் முருகப் பெருமான். டில்லி மட்டக் குதிரை போல் ஒரே சீராய் ஓடிக் கொண்டிருந்த வண்டி, பிள்ளையவர்களின் வீட்டு முன்னே போய் நின்றது. “வேல்மயிலம்! முருகா!” வண்டிச் சட்டத்தை இறுகப் பிடித்தபடி இறங்கி, ரிக்ஷாக்காரன் பக்கமாய்த் திரும்பிப் பார்த்தார். பிறகு, இடுப்பில் செருகியிருந்த தோல் பணப்பையை வெளியேற்றித் திறந்து, கசங்கி நசுங்கியிருந்த டாலர் நோட்டுகள் இரண்டை எடுத்து நீட்டினார். மெத்தைக்குக் கீழே இருந்த அழுக்குத் துண்டை எடுத்து, முகத்திலும் கழுத்திலும் அரும்பியிருந்த வேர்வையை மாறிமாறித் துடைத்துக் கொண்டிருந்த ரிக்ஷாக்காரன், வலக் கையினால் மூக்கைச் சிந்திவிட்டுக் கையைத் தலையில் தேய்த்தான். பிறகு, இடக்கையை நீட்டிப் பிள்ளையவர்கள் கொடுத்த நோட்டுகளை வாங்கிப் பார்த்தான். மறு விநாடி *வெள்ளிக் கடதாசிகள் பறந்து போய் தெருப்புழுதியில் விழுந்தன.
* வெள்ளி - மலேயா டாலர் “சிப்புலு லிங்கி மோவ்.” பத்து டாலர் வேண்டுமென்று உறுமினான். “ஏண்டா, வேணுமா தடாக்கா? தீக்கா ரிங்கி கசி. பணம் காய்ச்சுத் தொங்குதோ? இனி அம்பே.” இன்னொரு டாலர் நோட்டை நீட்டினான். “தமோவ்.” ரிக்ஷாக்காரன் முகத்தைக் கவனித்தார் வானாயீனா. அசைய மாட்டான் போலயிருக்கே. பன்னிப் பய. நறுக்குத் தெறிச்சாப்புல பேசிக்கிணு ஏறாமல் போனது பிசகு. இந்தச் சீனப் பயக விசயமே இப்படித்தான். நம்ம புத்தியச் செருப்பால அடிக்கணும்... “டேய், இந்தாடா லகி டூவா ரிங்கி கசி. வேணுமா தடாக்கா?” மேலும் இரண்டு டாலர் தருவதாகச் சொன்னார். சீனன் அசையவில்லை. வானாயீனா திரும்பிப் படிக்கட்டை நோக்கி நடந்தார். சீன மொழியில் வைது கொண்டே பின் தொடர்ந்த ரிக்ஷாக்காரன் கையை நீட்டினான். டாலர் நோட்டுகள் மூன்றைக் கொடுத்தார். வாங்கிப் பைக்குள் போட்டுக் கொண்டவன், முனங்கியவாறு திரும்பிப் போய்க் கீழே கிடந்த நோட்டுகளைப் பொறுக்கினான். பிறகு கிழக்கு முகமாக வண்டியை இழுத்துக் கொண்டு ஓடலானான். வயிரமுத்துப் பிள்ளை படிக்கட்டில் ஏறிப் போய்க் கதவைத் தட்டினார். “டேய், கருப்பா!” உள்ளே காலடி ஒலியும் தாழ்ப்பாள் நீக்கப்படும் ஓசையும் கேட்டது. கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றார். மரகதம் மீண்டும் கதவுக்குத் தாழ் போட்டாள். “ஏம்மா, அந்தத் தடிப்பய எங்க? ஒங்காத்தா எங்க தொலைஞ்சா?” “அம்மா குளிக்கிதப்பா. கருப்பையாண்ணன் மார்க்கெட்டுக்குப் போயிருக்காரு.” “காலங் கிடக்கிற கிடையில நீ எதுக்குக் கதவைத் தொறக்கிற? ஒங்க ஆத்தாளை வந்து தொறக்கச் சொன்னா என்ன?” “அம்மா குளிக்கிதப்பா.” “ஆமா, குளிச்சிக் கிழிச்சுப்பிட்டா. காலங் கெடக்கிற கெடையில் சின்னப் பொண்ணு எச்சரிக்கையாயிருக்கணும். முந்தாநா, அக்கரையில இப்படித்தான் ஒரு வங்காளிப் பொண்ணு கதவைத் திறந்திருக்கு. ம்ம்... காலஞ் சரியில்லையம்மா, காலஞ் சரியில்லை. ஒங்களை ஊர்ல கொண்டு போய்ச் சேர்த்தாத்தான் எனக்குக் கவலை தீரும்.” அன்பு ததும்பும் கண்களுடன் மகளைப் பார்த்தார். “இந்தாம்மா பிரசாதம்.” “மரகதம் இரண்டு கைகளாலும் பிரசாதத்தை வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொண்டு உள்ளே போனாள். சாய்மான நாற்காலியில் போய் உட்கார்ந்த வானாயீனா, இடது கையால் நெற்றியை வருடியவாறு முகட்டைப் பார்வையிட்டார். ‘இந்தச் சனியன்பிடிச்ச பயக சண்டை எப்ப முடியும்? என்னைக்கிக் கப்பல்விட்டு ஊர்போய்ச் சேருறது? இந்தப் பய செல்லையா இங்கின இருந்தாக்கா, கூடமாட எம்புட்டு ஒத்தாசையா இருக்கும்... மயித்த கழுதையக போயிட்டுப் போகுதின்னால், இவனும் பட்டாளத்துக்குப் போறமுனு போயிட்டானே. என்னமெல்லாம் நினைச்சிருந்தம். ம்ம்! பெரிய பட்டாளத்து நாயக்கர் மகன்னி நெனச்சிருக்கான். தறுதலைப் பய. அன்னக்கி வீட்டுக்கு வந்த பய நம்மளைப் பாத்துவிட்டுப் போவமுனு நெனைக்யலையே. மட்டு மரியாதையில்லாத பய. ஊர்ல சுத்திக்கிணு திரிஞ்ச கழுதையக் கூட்டியாந்து ஆளாக்கி விடுவோம். நம்ம சாதி சனமாயிருக்கான்னு நாம் நினைச்சம்.’ மூடியிருந்த கண்களை இடக்கை விரல்கள் வருடின! இந்த சண்டை சாடிக்கையெல்லாம் எப்ப ஒழியப் போவுது? வருசக் கடோசிக்குள்ள சண்டை முடிஞ்சிறுமுனு மாணிக்கம் பய சொல்றானே... அது ஒரு தறிதலை. மட்டு மரியாதையிங்கிறது நறுவுசாய் இல்லை. அப்பனுக்குப் பிள்ளை இப்படி வந்து பிறந்திருக்கு... பெரிய தொரை மகனாட்டம் டவுசரும் தொப்பியும்... ஆளுகளை மிரட்டுறதும்... நாளைக்கி அவுக பாட்டன் வெள்ளைக்காரன் வந்திருவானே, பழையபடி தோட்டத்தில் வேலை கொடுப்பானா... கருக்கிடை இல்லாத பயக...! செவல்பட்டி சிவலிங்க பண்டாரத்தின் ஏகப் புதல்வனாகப் பிறந்த வயிரமுத்துப் பிள்ளை பதின்மூன்றாவது வயதில் கோட்டையூர் சா.முரு.பழ.முரு. மார்க்காவின் *மாந்தலை கடைக்குப் பெட்டியடிப் பையனாகப் போய்ச் சேர்ந்தார். மேலாள் செட்டியாருக்கு எச்சில் பணிக்கம் எடுத்து வைப்பது, வேட்டி துவைப்பது, சமையலாள் இல்லாத நேரங்களில் கால் அமுக்குவது, பெட்டியடியைத் துடைத்துத் துப்புரவு செய்வது, கருக்கலில் எழுந்து குளித்துவிட்டுத் திருப்புகழ் பாடுவது முதலிய வேலைகளுடன் தொடங்கிய அவருடைய அக்கரைச் சீமை வாழ்க்கை, வழக்கமான பாதையில், தங்கு தடையின்றி, ஜப்பான் சண்டை வரையும் ஒரே சீராய் முன்னேறிக் கொண்டிருந்தது.
* மாந்தலை - பர்மாவில் உள்ள மாண்டலே நகர் வயிரமுத்து ஐந்தாண்டு காலம் பெட்டியடிக்கு இருந்துவிட்டு ஊர் திரும்பினான். கஞ்சிப் பசையுடன் சலவையான கெண்டை வேட்டிக்கு மேல் ‘ஐயாயிரம்’ பட்டுச்சட்டை, கழுத்தில் தொங்கிய கெவிடும், காதிலிருந்த வெள்ளைக் கல் கடுக்கனும், வலக்கை சங்கிலியோடும் விரல்களில் மின்னிய மோதிரங்களோடும் சேர்ந்து பையனைத் தூக்கிக் காட்டின. இவை தவிர, அவன் கொண்டு வந்த ‘ரெங்கோன் மரவை’களும் சீமை ரொட்டிப் பெட்டிகளும் துணிமணிகளும் ஏராளம். அவன் பெயரில் வட்டிபோட்டு வரவாகியிருந்த தொகையும் கடையில் இருந்தது. மூன்று மாத காலம் பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் மகிழ்வித்துவிட்டு, மறுபடியும் பர்மா டாப்புக்குப் பயணமானான் வயிரமுத்து. இந்தத் தடவை அடுத்தாள். மூன்று வருடத்துக்குச் சம்பளம் ‘எச்செலவும் நீக்கிப் *பூவராகன் 251’. சா.முரு.பழ.முரு. மார்க்காவில் அதற்கு முன் யாரும் 18 வயதில் அடுத்தாளாகக் கொண்டு விற்றதில்லை. பையனுக்குச் சரியான இடத்தில் மச்சம் விழுந்திருக்கிறதென்று கிட்டங்கியில் உள்ளவர்கள் பேசிக் கொண்டனர். வட்டிச் சிட்டை போடுவதிலும், ஐந்தொகை எடுப்பதிலும், புள்ளிகளிடம் இம்மி பிசகாமல் வட்டியைக் கறப்பதிலும் வயிரமுத்து காட்டிய திறமை, மேலாள் செட்டியாரையும் பெரிய அடுத்தாள் ‘அத்தறுதி’ முத்துக் கருப்பபிள்ளையையும் வெகுவாகக் கவர்ந்து விட்டது.
* பூவராகன் - மூன்றரை ரூபாய் மூன்றாண்டுகள் கழித்து, சூராதி சூரன் என்ற பெயருடனும் கைநிறையப் பணத்துடனும் வயிரமுத்து ஊர் திரும்பினான். கோட்டையூரில் முதலாளி மூனாரூனாவே அவனை நேரில் அழைத்துக் கிட்டத்தில் இருக்க வைத்து மாந்தலைக் கடை நிலவரம் பற்றி அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தார் என்றால் வேறென்ன சொல்ல வேண்டும்! வயிரமுத்துவின் தந்தை சிவலிங்க பண்டாரமும் தாய் பெருமாயி அம்மாளும் மகனுக்குத் திருமணம் செய்து கண்குளிரக் காண விரும்பினார்கள். பெண் கொடுக்க வந்தவர்களின் தொகை கணக்கில் அடங்காது. பெரிய மார்க்காவில் அடுத்தாளாகக் கொண்டுவிற்று, சாமானுக்கும் பெருந்தொகை வாங்கி வந்தவன் அல்லவா, வயிரமுத்து! இன்னொரு கணக்குப் போய்விட்டு வந்துதான் திருமணம் என்று வயிரமுத்து ஒரேயடியாகச் சொல்லிவிட்டான். ஐந்தாவது மாதத்தில் பூவராகன் 651 எனச் சம்பளம் பேசிக் கொண்டு கப்பல் ஏறினான். இந்தத் தடவை மலாய் டாப்புக்கு. பினாங்குக் கடைக்குச் சரியான அடுத்தாள் வேண்டுமென்று, மூனா ரூனாவுக்குக் கடிதத்துக்கு மேல் கடிதம் வந்து கொண்டிருந்தது. வயிரமுத்துவே தோதான ஆள் என்று அவர் முடிவு செய்தார். வயிரமுத்து பினாங்குக் கடையில் மூன்றாண்டு காலம் நற்பெயருடன் கொண்டுவிற்று விட்டு ஊர் திரும்பினான். நாலாவது மாதத்தில் அவனுக்கும் நச்சாந்துபட்டி பழனிச்சாமி பண்டாரத்தின் மகள் செல்வி காமாட்சிக்கும் சீரும் சிறப்புமாய்த் திருமணம் நடந்தேறியது. பிறகு, ஓராண்டு காலம் இல்லறம் நடத்திவிட்டு, மறுபடியும் பினாங்குக் கடையில் கொண்டுவிற்கக் கிளம்பினான். இந்தக் கணக்கருக்குச் சம்பளம் பூவராகன் 851. வயிரமுத்து நாகப்பட்டினத்தில் கப்பலேறிய போது காமாட்சிக்கு நிறைசூல். கணக்கை முடித்துக் கொண்டு ஊர் திரும்பின போது மூன்று வயது மகன் முருகேசன் குதியாட்டம் போட்டு வீட்டை அதிரடித்துக் கொண்டிருந்தான். வயிரமுத்துவின் கொண்டுவேலை செட்டியாருக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. மேலாள் முதல் சமையலாள் வரை எல்லோரும் அவனுடைய திறமையைப் போற்றிப் புகழ்ந்தனர். செட்டியார் யோசித்தார். ‘மூவாருக்கு அம்புட்டும் உருப்படாத பயகளாப் போயிக் கடையக் கழுதைப் புரட்டாக்கிப்பிட்டாங்யளே... இந்தப் பயலை மேலாளுக்கு அனுப்பிச்சிப் பார்த்தால் என்ன... வயசு காணாது. நம்ம ஆளுகளும் கர்ருபுர்ரும்பாக, ம்ம், இருக்கட்டும், அனுப்பிச்சிப் பார்ப்பம்...’ செவல்பட்டி சிவலிங்க பண்டாரத்தின் மகன் வயிரமுத்து ‘நேத்துப் பயல்’ - கோட்டையூர் சா.முரு.பழ.முரு. மார்க்கா மூவார் கடைக்கு மேலாளாகக் கொண்டுவிற்கப் போனது மலேயா லேவாதேவி உலகத்தையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது. “என்ன சூரனாயிருந்தாத்தான் என்னங்கிறேன், நேத்துப் பய! என்னயிருந்தாலும் மூனாரூனா இப்படிப் புது மாதிரியாய்...” வயிரமுத்து கப்பலேறின வேளையோ என்னவோ, ரப்பர் விலை மளமளவென்று ஏறியது. அத்துடன் போட்டி போட்டுக் கொண்டு ஆதாய வரவு ஏடும் விரிந்தது. இதற்கிடையே, தலைமகன் முருகேசன் காய்ச்சலில் மாண்டு போனான் என்று தந்தி வந்தது... “ஏதோ, கொடுத்து வைச்சது அம்புட்டு தான். அதது தலையெழுத்துப்படி நடக்குது.” பிள்ளையவர்கள் முன்னிலும் மும்முரமாகத் தொழிலைக் கவனித்தார். மூன்று ஆண்டுகள் கழித்து, புது மேலாளாகக் ‘கத்தரிக்காய்’ குமரப்ப செட்டியார் வந்து சேர்ந்தார். கணக்கை முடித்துப் பார்த்ததும், எல்லோரும் மூக்கில் விரலை வைத்தார்கள். அந்தக் கணக்கில் அவ்வளவு ஆதாயம்! மூவார் கடையில் அப்படி மிச்சம் கட்டமுடியுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நாகப்பட்டினத்தில் இறங்கிய வயிரமுத்துப் பிள்ளை வழக்க முறைப்படி நேரே கோட்டையூருக்குப் புறப்பட்டார். வழியில் ‘கொண்டுவிற்றது போதும், இனிமேல் சொந்தத்தில் தொழில் நடத்த வேண்டியதுதான்’ என்று அவர் மனம் தீர்மானித்து விட்டது. மேல்துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு முதலாளியின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிட்டார். எழுந்திருக்கச் சொல்லி, வழக்கம்போல், கப்பல் பயணம் பற்றி ஆதரவாக விசாரித்தார் முதலாளி. மேலாள் தனது ஆவலை அடக்க ஒடுக்கமாக வெளியிட்டார். மூனாரூனா ஒரு நிமிஷம் ஒன்றும் பேசாமல், மேலாளின் முகத்தை உற்று நோக்கினார். ‘ம்ம், சூட்டிகையான பயல், மூவார் கடையிலயே இப்படி மிச்சம் கட்ற பயல் எத்தினி நாளைக்கிக் கொண்டுவித்துக்கினே இருக்கப் போறான். நம்மகிட்ட விசுவாசமாயிருந்த பய. நம்மளை வச்சு மேல் வந்ததாயிருக்கட்டும்...’ “ம்ம். நல்லாச் செய்யி. பத்து வெள்ளி வரைக்கி நடப்புல கொடுத்து வாங்கச் சொல்லி எழுதுறேன். மேக்கொண்டு வேணுமுனாக்கா எழுது. தோது போல செய்துக்கிடலாம். தண்டாயுதபாணி கிருபையில எல்லாம் நல்லபடியா நடக்கும், ம்ம்.” ‘கோடையிடியன்’ என்ற பட்டம் பெற்ற கோட்டையூர் மூனா ரூனாவின் அளவிட முடியாத உதவி வயிரமுத்துப் பிள்ளைக்குக் கிடைத்துவிட்டது. பத்து வெள்ளி என்ற பத்தாயிரம் டாலர் உதவி, பினாங் ஆ.சி.வயி. வயிரமுத்துப் பிள்ளை லேவாதேவிக் கடையின் தேவைக்கேற்பக் கூடிக் குறைந்து கொண்டிருந்தது. வானாயீனா மார்க்காவில் டாலர் மழை பொழியத் தொடங்கியபின், வானாயீனா முதலாளி ஊரில் ஒரு வருடமும் மலேயாவில் ஒரு வருடமுமாகக் காலம் கழித்து வந்தார். பிஞ்சில் உதிர்ந்த தலைமகனுக்குப் பிறகு, மூன்று புதல்வர்களும் கடைக்குட்டியாக மரகதவல்லி என்ற புதல்வியும் பிறந்தார்கள். அவர்களில் சுந்தரலிங்கமும் சிவலிங்கமும் ஒரே நாளில் வைசூரிக்குப் பலியாகி விட்டனர். மிஞ்சியிருந்த ஒரே புதல்வனான வடிவேலை - காமாட்சியம்மாளின் புலம்பலைச் சட்டை செய்யாமல் - பினாங்குக்கு அழைத்துப் போய்ப் படிக்க வைத்திருந்தார் பிள்ளையவர்கள். பள்ளிப் படிப்புடன் தொழில் முறையையும் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவர் விருப்பம். பணம் கொழிக்கும் மலேயாவை, ஒருமுறை பார்க்க வேண்டும் என்று காமாட்சியம்மாள் துடித்துக் கொண்டிருந்தார். அந்தச் சாக்கில் அருமை மகன் வடிவேலுவின் பக்கத்தில் போய் இருக்க வேண்டும் என்பதே அம்மையாரின் உள்நோக்கம். சீமையில் நடந்த சண்டை மலேயாவுக்கும் வந்து விடலாமென்று கணவர் பயமுறுத்தினார். “அப்ப என் மகனை ஏன் அங்கெ வச்சிருக்குறியக. இப்பவே போயிக் கூட்டியாங்க!” என்று காமாட்சியம்மாள் கதறினார். பரீட்சை எழுதப் போகும் சமயத்தில் மகனின் படிப்பைக் குலைப்பதற்கு வானாயீனா இணங்கவில்லை. ‘வெள்ளைக்காரன்கிட்ட மோதுறதுக்கு ஜப்பான்காரப் பயலுக்குக் கிறுக்குப் பிடிச்சிருக்கா. என்ன’ என்று மனதைத் தேற்றிக் கொண்டு, மனைவியுடனும் மகளுடனும் பினாங் போய்ச் சேர்ந்தார். வடிவேலின் பரீட்சை முடியும் வரையில் குடும்பத்தார் தங்கியிருப்பதற்காக டத்தோ கிராமட் சாலையில் ஒரு வீட்டையும் அமர்த்தினார். 1941 டிசம்பர் 7ல் ஜெனரல் தொமயூக்கி யாமஷித்தாவின் படைகள் வடக்கிலிருந்து மலேயாவுக்குள் பாய்ந்தன. 11ம் தேதி பினாங் நகரம் ஜப்பானிய விமானங்களின் குண்டு வீச்சுக்கு உள்ளாயிற்று. பினாங் மக்கள் முதன்முறையாக ஜப்பானியக் குள்ளர்களின் கைவரிசையைக் கண்டனர். கண்டவர்களில் சிலர் மண்ணோடு மண்ணாகி விட்டார்கள். அவர்களில் ஒருவன் வானாயீனாவின் ஏக புத்திரன் வடிவேல். அரும்பாடுபட்டு வளர்த்த தொழில் சீர்குலைந்து விட்டதே என்று கூட வானாயீனாவுக்குக் கவலை இல்லை. மதுரைக் கீழமாசி வீதியில் கடைகளாகவும், பெரியாற்றுப் பாசனத்தில் வயல்களாகவும் நான்கு லட்ச ரூபாய் சொத்துகள் இருந்தன. 6ம் தேதி சாட்டர் வங்கியில் எடுத்த ரொக்கம் 22 ஆயிரம் டாலர் கைவசம் இருந்தது. இருந்து என்ன செய்ய? வடிவேலை இழந்து விட்டோமே. மகளையும் மனைவியையும் யுத்த காலத்தில் இங்கு அழைத்து வந்தோமே என்ற கவலை அவரை உள்ளும் புறமும் அரித்துக் கொண்டிருந்தது. பிள்ளையவர்கள் பித்துப் பிடித்தவர் போல் சாய்மான நாற்காலியில் அமர்ந்திருப்பதும், காமாட்சியம்மாளும் மரகதமும் புலம்பி அழுவதும் வெகுநாள் நீடித்தது. பிரிட்டிஷ் ராணுவம், பிப்ரவரி 15ல் ஜெனரல் யாமஷித்தாவிடம் அடிபணிந்தது. மலேயா முழுவதிலும் டாய் நிப்பன் கொடி பறக்கலாயிற்று. செட்டித் தெரு என்ற பினாங் ஸ்ட்ரீட் அடியோடு மாறிவிட்டது. அடுத்தாள்களில் பலர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து விட்டனர். வழக்கமான ‘லவுண்டர்’ வாடைக்குப் பதிலாகப் பலசரக்கு மணம் கமழத் தொடங்கிற்று. வெல்வெட் திண்டுகளை அணைத்தவாறு முதலாளிகள் புரண்டெழுந்த பளிங்குத் திண்ணைகளில் மிளகாய், புளி மூட்டைகள் அடுக்கப் பட்டிருந்தன. “என்ன வட்டி?” என்ற ஓயாத கேள்வி, “என்ன விலை?” என்று மாறிவிட்டது. மேல்துண்டை எடுத்துக் கையில் பிடித்தபடி முதுகைக் கூனிக்கொண்டு, சொற்களை எடைபோட்டுப் பேசும் அடுத்தாட்கள், இப்பொழுது சராய்ப் பைக்குள் கையைத் திணித்தவாறு நெஞ்சை நிமிர்த்தி உறுமுகிறார்கள். லேவாதேவித் தொழில் நின்றுவிட்டதற்காகத் தன்னை நம்பி அக்கரைச் சீமைக்கு வந்த ‘பிள்ளை’களை நடுத்தெருவில் விட்டு விடலாம் என்ற எண்ணம் வானாயீனா மனதில் ஒருபோதும் உதிக்கவில்லை. யுத்தம் முடியும் வரையில் காமாசோமா என்று காலத்தைக் கடத்தி விட்டால், பிறகு பெற்றோரிடம் பிள்ளைகளை ஒப்படைத்து விடலாம் என்று நினைத்திருந்தார். நிலைமை சிறிது தெளிவடைந்ததும், பற்று வரவுப் புள்ளி சுவாட்லின் மாறலில் சுமத்ரா தீவிலிருந்து தேயிலை, சாம்பிராணி, புகையிலை முதலிய பண்டங்களை வரவழைத்து, செட்டித் தெருக் கிட்டங்கியிலேயே வைத்து வியாபாரம் செய்யலானார். பையன்களில் சிலர் நேதாஜி படையில் சேர்ந்து விட்டார்கள். சிலர் சொந்த வியாபாரம் செய்வதற்காக விலகிச் சென்றனர். கடைசியில், ‘கூதறைகளான’ மேலாள் சின்னையா பிள்ளையும், அடுத்தாள் நாகலிங்கமுமே மிஞ்சினார்கள். மற்றவர்கள் போனதைக் கூடப் பிள்ளையவர்கள் அவ்வளவாகச் சட்டை செய்யவில்லை. செல்லையா போனதுதான் வருத்தமாக இருந்தது; அவனை முன்னேற்றி மருமகனாக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தார். வானாயீனா கண்ணைத் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தார். “ஏய் காமாட்சி! என்ன, சாப்பிடலாமா?” “இந்தா, ஒரு நிமிஷம், நீங்ய கால் மொகத்தைக் கழுவுங்க.” “வேல் மயிலம்! முருகா” எழுந்து கதவுத் தாழ்ப்பாளைக் கூர்ந்து பார்த்து விட்டு உள்ளே நடந்தார். கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|