உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பாகம் மூன்று 7. ஒரு பரிசு வெகு காலையில் எழுந்து தண்ணீர்மலையான் கோயிலுக்குப் போய் வருவதும், கடை வேலைகளை முழு மூச்சாய்க் கவனிப்பதுமாகச் செல்லையா நாட்களை ஓட்டி வந்தான். சில சயமங்களில் கோவிலுக்குப் போவதை நிறுத்தி விடலாமா என்று எண்ணுவான். மறுவிநாடி மரகதத்தின் வேண்டுகோள் நினைவுக்கு வந்து விடும். அவள் தன் காலைக் கட்டிக் கொண்டு அழுவது போன்ற மனமயக்கம் தோன்றி நெஞ்சாழத்திலிருந்து நெடிய பெருமூச்சு கிளம்பும். முறையான பயிற்சியால் இறுகியிருந்த உடற்கட்டு மனக்கலக்கத்தால் தளர்ந்து விடவில்லை. ஆனால் முகப்பொலிவு மங்கி விட்டது. ஊடுருவிப் பார்க்கும் ஒளிமிகுந்த கண்கள் ஏக்கத்தில் மிதப்பதற்குக் காரணம், கிட்டங்கியில் உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதைப் பற்றி அவனிடம் பேசத் துணிந்தவர் யாரும் இல்லை. செல்லையாவின் பரம பக்தர்களான பெட்டியடிப் பையன் சேதுவும், கடைச் சமையலாள் சுப்பையாவும் பின்கட்டில் சந்திக்கும் போதெல்லாம், ‘செல்லையாண்ணன்’ மனக் கவலையை எப்படிப் போக்கலாமென்று மும்முரமாக ஆராய்ச்சி நடத்தி வந்தார்கள். “மொதலாளிய வேல் கம்பால ஒரே போடா போட்டுத் தள்ளணும். அந்த அமுங்கிணிப் பய நாகலிங்கம் இருக்கானே, அவனைக் கால் ரெண்டையும் பிடிச்சிக் கரகரன்னிச் சுத்தித் தரையில ஒரே அடியா அடிக்யணும்!” மஞ்சு விரட்டுச் சண்டைகள் சிலவற்றில் பங்கு பெற்றவனான சுப்பையா நடிப்புடன் சொன்னான். சமையல் சிட்டையை வைத்துக் கொண்டு தோண்டி தோண்டிக் கேள்வி கேட்கும் நாகலிங்கத்தை நினைத்தாலே அவனுக்கு உடல் பற்றி எரியும். “ரெண்டு பேரையும் கட்டி வைச்சு டும்டும்னிச் சுடனும். சுப்பையாண்ணே!” கொஞ்ச காலம் பாலர் சேனையிலும், பிறகு இந்திய சுதந்திரச் சங்க நாடகக் குழுவிலும் இருந்து திரும்பிய சேது சொன்னான். “காலக் கொடுமையில கருப்பணசாமி காப்பி குடிச்சாப்புலயில இருக்கு! யானைக்கு வதிலாப் பூனை!” “அக்காளுக்கு சேலை துவைச்சுப் போடக் கூட லாயக்கில்லை. இதில தாலி கட்றாராமுல, மொகரையப் பாருங்க மொகரைய!” “அந்த அமுக்கிணிப் பயலைச் சொல்லி என்னடா பண்ண, நம்ம மொதலாளியச் சொல்லணும். இந்த மனுஷன் வயித்ல வந்து இப்படி மகா லெச்சுமியாட்டம்...” பாதியோடு பேச்சை முடித்துக் கொண்டு சுப்பையா திரும்பினான். சேது பெட்டியடியை நோக்கி விரைந்தான். முன்கட்டிலிருந்து வந்த செல்லையா, மாடிப் படிக்கட்டில் ஏறினான். “சுப்பையா, பழைய வேட்டி சட்டை இருக்கிறது. கொடியில் போட்டு வைக்கிறேன். எடுத்துக் கொள்.” “ஆகட்டுமண்ணே... ம்... நீங்ய?” “வேறு வேலைக்குப் போகிறேன்.” “பெனாங்கில தானே?” “இன்னும் முடிவாகவில்லை.” “ம், நீங்ய... எல்லாத்துக்கும் தண்ணிமலையான் இருக்காண்ணே... எங்களை மறந்திராதிங்யண்ணே!” செல்லையா மேலே போய், முன்புறத்து அறையில் கிழக்கு முகமாகக் கிடந்த நாற்காலியில் அமர்ந்து சிகரெட் பற்ற வைத்தான். எதிர்ப்புறச் சுவரில் வடிவேலின் புகைப்படம் தொங்கியது. அதன் இரு பக்கங்களிலும் வானாயீனா மார்க்காவில் கொண்டுவிற்ற மேலாட்கள், அடுத்தாட்கள், பெட்டியடிப் பையன்கள் அடங்கிய படவரிசை. சில படங்களில் அட்டணைக்காலும் வெற்றி முறுவலுமாக இருந்த வானாயீனாவின் உருவம் தெரிந்தது. முதலாளியும் மேலாளும் நாற்காலியில் இருந்தார்கள். வானாயீனாவின் மேல் துண்டு வல்லவட்டாகத் தோளை அணி செய்தது. மேலாளின் துண்டு நாற்காலியில் தொங்கிற்று. பின்னால், மேல் துண்டுகளை இடுப்பில் கட்டியிருந்த அடுத்தாட்கள் வரிசையாக நின்றனர். முன்னே - தரையில் பெட்டியடிப் பையன்கள் வாயை இறுக்க மூடிச் சம்மணம் கூட்டி உட்கார்ந்திருந்தனர். சிகரெட் புகையை இழுத்து ஊதியவன், புகைத் திரையினூடாகப் பார்வையைச் செலுத்தினான். இடப்புறம் மூன்றாவது படத்தில் அள்ளி முடித்த கொண்டையும் கடுக்கனுமாய்க் காட்சி அளிப்பவர் சிராவயல் காசிலிங்கம்பிள்ளை. பெரிய அடுத்தாளாக இரண்டு கணக்கு கொண்டு விற்றவர்; வட்டிச் சிட்டை போடுவதிலும் ஐந்தொகை எடுப்பதிலும் எம்டன். அதே போல், கணக்கை ‘இழுத்துக் கட்டுவதிலும்’ கோப்பன். வசூல் பணத்தில் ஒரு பகுதியை ஆர்கால் ரோட்டுப் பாப்பாத்தியிடம் கொடுத்து விட்டு வெகுநாளாய்க் கணக்கில் கோக்குமாக்கு வேலை செய்து வந்தார். கடைசியில் அகப்படப் போகும் தருணத்தில் இரவோடு இரவாக ஓடிவிட்டார். என்ன ஆனாரோ, யாருக்கும் தெரியாது. வடிவேலின் படத்துக்கு வலப்புறத்தில், பால்வடியும் முகத்தோடு கெவுடு தரித்து நிற்பவன், பள்ளத்தூர் அருணாசலம்; பெட்டியடிக்கு இருந்து விட்டுப்போய், அடுத்தாளாக வந்த மூன்றாவது மாதத்தில் எக்குத்தப்பாய் ‘சீக்கு’ வாங்கிவிட்டான். சமையலாள் பெரியாம்பிள்ளையின் ‘பத்தவைப்பு’ காரணமாய்க் குட்டு உடைந்து, அடுத்த கப்பலில் விரட்டுப்பட நேர்ந்தது. இப்பொழுது தேவகோட்டை வெள்ளையனூருணிக் கரையில் சோற்றுக் கடை வைத்திருப்பதாகக் கேள்வி. அதே படத்தில் சுருட்டை முடியுடன் உட்காந்திருக்கும் பெட்டியடிப் பையன் தான் ‘விட்டல்’ சாமிநாதன். ஊரில் பெரிய இடத்துக் கைம்பெண் ஒருத்தியுடன் ‘செனேகிதமாகி’ டம்பாச்சாரி போல் திரிகிறானாம். அடுத்த படத்தில வட்டக்குடுமியும் முக்குவாளியுமாய் நிற்பவன் ஆத்தங்குடி நாகசாமி. இப்போது, மதுரை நாடகக்காரி ஒருத்தி வீட்டில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். வலப்பக்கம் கடைசியாக உள்ள படத்தில் எலிக்குஞ்சு போல நிற்கும் அடுத்தாள் கண்டனூர் சுயம்புலிங்கம் பிள்ளை. வானாயீனாவிடம் ஒரு கணக்கு இருந்துவிட்டு, சுமத்ராவுக்குப் போய் மைடானில் சொந்தத் தொழில் ஆரம்பித்தார். ‘பத்து கொடுத்துப் பதினைந்து - பதினைந்து நாள் தவணை’ என்ற அடிப்படை விதிமுறையுடன் கடை தொடங்கி, நூறு கொடுத்து நூத்தி முப்பது - பத்து மாதம் தவணை’ என்ற அளவுக்கு லேவாதேவியை விரித்துத் தொழில் நடத்தி ரூபாய் மூன்று லட்சம் திரட்டி ஜப்பான் சண்டை தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னதாக, அவ்வளவு பணத்தையும் பக்காவாக ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார். சிகரெட்டை நசுக்கி, சுவரோரம் இருந்த மரப்பெட்டிக்குப் பின்னால் போட்டான். பார்வை மீண்டும் புகைப்படங்களின் மீது திரும்பியது. ‘இவர்கள் பிறந்த நாட்டிலேயே இருந்திருந்தால்?... பெரும்பாலும், தீராத வறுமையிலேயே உழன்றிருப்பார்கள். சுயம்புலிங்கம் பிள்ளையால் மாதம் இருபது ரூபாய் சம்பாதிக்க முடியுமா...? வசதி என்பது என்னவென்றே அறியாத பட்டிக்காட்டுப் பையன்கள் எத்தனை பேர் வட்டித் தொழில் காரணமாய் நாள்தோறும் குளிக்கவும், சலவை உடுப்பு அணியவும், சுவைத்து உண்ணவும் பழகியிருக்கிறார்கள்! இந்தத் தொழிலுக்கு வரும் ஒவ்வோர் ஆளையும் வைத்து ராமநாதபுரம் ஜில்லாவில் வயிறு கழுவும் ஆட்கள் எத்தனை பேர்! இது அப்படியொன்றும் கொடுமையான தொழில் அல்லவே. இங்கு வட்டிக்குக் கடன் வாங்கித் தொழில் நடத்தும் சீனர்கள் வட்டித் தொகையைப் போல் பன்மடங்கு நிகர லாபம் சம்பாதிக்க முடிகிறதே... “செல்லையாண்ணே!” வீட்டுச் சமையலாள் கருப்பையா முன்னால் நின்றார். “கருப்பையாண்ணே!” கருப்பையா, மடியை அவிழ்த்துக் காகிதப் பையை எடுத்து நீட்டினார். வாங்கிப் பிரித்தான். பூ வேலை மிக்க மஞ்சள் நிறப் பட்டுக் கைக்குட்டை இருந்தது. மூக்கில் வைத்து மோந்தான். மல்லிகை - தேங்காய் எண்ணெய் - மஞ்சள் - சோப்பு மணக் கலவையான பெண் வாடை வீசிற்று. ஒரு மூலையில் செல்லையாவின் விலாசம் - ‘கு.செ.’ பச்சை நூலால் பின்னியிருந்தது. “பைக்குள்ள வச்சுக்கங்க, தங்கச்சி குடுக்கச் சொல்லுச்சி. இதை அது நெனைவா வச்சிருப்பிங்யளாம்.” “ஆகட்டும்.” மடியை அவிழ்த்துப் பொட்டலமொன்றை எடுத்து நீட்டினார். “லட்டு, சாப்பிடுங்க. தங்கச்சி கைனால செஞ்சது.” “சரி, அப்புறம் சாப்பிடுறென்” பொட்டலத்தைப் பிரித்தான். மூன்று லட்டுகள் இருந்தன. மறுபடி மூடினான். “இப்பச் சாப்பிடுங்க. நீங்ய மூணையும் சாப்பிடுறதப் பாத்துக்கிணு வந்து சொல்லணுமினு தங்கச்சி சொல்லிச்சு.” லட்டுகளைப் பிட்டுத் தின்றான். மரகதம் பக்கத்தில் நின்று கொண்டு ஆதரவுடன் வயிற்றைத் தடவுவது போன்ற மன மயக்கம் உதித்தது. “நான் வருறண்ணே! உங்களை எப்படித் தனியா சந்திச்சி இதைச் சேக்குறதினு நினைச்சுக்கினே வந்தென்... தங்கச்சி ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லச் சொல்லுச்சி.” “என்ன?” “மனசைக் கலங்க விடாமல், உடம்பைப் பத்திரமாப் பாத்துக் கிடுவிங்யளாம். சனியும் பொதனும் தவறாமல் எண்ணெய் தேய்ச்சு முழுகணுமாம். சீரெட்டு ரெம்பக் குடிக்யாமல் குறைச்சுக் கிடுவிங்யளாம். கால்ல விழுந்து கேட்டுக்கிறேன்னு சொல்லச் சொல்லுச்சி.” “ஆகட்டும், சரியின்னு சொல்லுங்க” குரல் நடுங்கியது. அவன் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தார் சமையலாள். “மரகதம் எப்படியிருக்கு? ரெம்ப எளச்சிப் போச்சா?” “அத ஏண்ணே கேக்கறிங்ய! தாயும் மகளும் படுற பாட்ட நெனச்சா, ம்ம், நான் வர்றென்.” “கருப்பையாண்ணே, பழைய வேட்டி சட்டை இருக்கு. சேதுப் பயலிடம் கொடுத்து வைக்கிறேன். வாங்கிக்கங்க.” “ம்... நிங்ய?” “வேறு வேலைக்குப் போறென்.” “செல்லையாண்ணே!... இந்தச் சண்டாள மனுசன் ஒங்களையும் தங்கச்சியவும் உயிரோட கொல்றாரே!” “ஒண்ணும் வருத்தப்படாதீங்க... தெய்வம் விட்டபடி நடக்கட்டும்.” “நீங்ய எங்கின இருந்தாலும் நல்லாயிருக்கணும்... தண்ணிமலையான் எல்லாத்தையும் பார்த்துக்கிணுதாண்ணே இருக்கான். சாமிக்கிக் கண்ணிருந்தா கேக்கட்டும். இல்லாட்டி, பொயித்துப் போகுது.” கருப்பையா கும்பிட்டுவிட்டுப் படிக்கட்டை நோக்கிக் கலங்கிய கண்களுடன் நடந்தார். கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|