பாகம் ஒன்று

8. வெளியேற்றம்

     கோலாமூடா முகாம் கமாண்டர் கரிமுடீன் கான், படை அலுவலகத்தில் உட்கார்ந்து, சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார். வாயிலிருந்து கிளம்பின புகை வளையங்கள் தலையைச் சுற்றிப் படர்ந்தன. அப்பொழுதுதான் காலைக் கொடி வணக்கம் முடிந்திருந்தது. காட்டு யுத்தப் பயிற்சிக்காகக் கிளம்பிச் சென்ற அணிகளின் நடமாட்ட ஒலி, மூடியிருந்த கதவைத் தாண்டி வந்தது. பின்புற ஜன்னலை ஒட்டி நின்ற ஜாத்தி மரத்தில் பறவைகள் சிலம்பின.

     கரிமுடீன்கான் கல்கத்தாவில் கப்பலேறி ஏறக்குறைய ஆறாண்டு காலம் ஆகிவிட்டது. ஜப்பானியப் படைகள் வடக்கிலிருந்து பாய்ந்த ஏழாவது நாளில் ஆயுதங்களை வீசி எறிந்து விட்டுக் கை தூக்கியவர்களில் அவரும் ஒருவர். அவர் சிறைப்பட்டிருந்த காலமும் கொஞ்சமே. ராஷ் பிஹாரி கோஷ் தலைமையில் இந்திய சுதந்திரச் சங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து விடுதலையான இந்திய ராணுவ அதிகாரிகளின் முதற் கூட்டத்தில் கரிமுடீன் கானும் இருந்தார்.

     நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்த கரிமுடீன் கான் மேஜர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். பிறகு கர்னல் - கோலாமூடா முகாமிலிருந்த 7வது கொரில்லா ரெஜிமென்டின் கமாண்டர்.

     முகாமில் அவருக்கு எவ்விதக் குறைவுமில்லை. தனி வீடு, கார், செலவுக்குப் பணம் முதலிய எல்லா வசதிகளும் உண்டு. இருந்தாலும், பர்மாவில் பிரிட்டிஷ் 14வது சேனையின் கை ஓங்கியதிலிருந்து மன அமைதி இல்லாதிருந்தது. ஜப்பான் அடி பணிந்ததும் அது ஒரே கவலையாக மாறிற்று. பிறகு நேதாஜியின் சாவு தாங்க முடியாத அச்சத்தைத் தோற்றுவித்தது.

     கண்ணை மூடிக் கொண்டு புகையை இழுத்தார். பிரிட்டிஷ் படைகள் வந்த பின் நம் கதி என்ன? மீண்டும் பதவி கிடைக்குமா? கிடைக்காது. அப்புறம்...

     சிகரெட்டைக் கையில் எடுத்துக் கொண்டு கண்ணைத் திறந்தார். கதவைத் தட்டும் ஓசை கேட்டது.

     “வரலாம்.”

     லெப்டினன்ட் செல்லையா கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். நிமிர்ந்து உட்கார்ந்தார் கமாண்டர்.

     “ஜே ஹிந்த்?” வந்தனை செய்தான்.

     “ஜே ஹிந்த்!”

     “தங்களின் அனுமதியுடன்...”

     “சொல்லலாம்.”

     “தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும். முகாமிலுள்ள தமிழர்கள் அனைவரும் இப்பொழுது வெளியேறப் போகிறோம்.”

     “என்ன?”

     “தீர்மானமாக முடிவு செய்து விட்டோம்.”

     படைத்தலைவர் ஒரு நிமிஷ நேரம் வாயைத் திறக்கவில்லை. கோபத்தால் உடல் துடித்தது. சிலை போல் அசையாமல் நின்ற லெப்டினன்ட் கூர்ந்து கவனித்தார். கதவுக்கு வெளியே, எதற்கும் துணிந்த தமிழ் அணியொன்று நின்று கொண்டிருப்பது அவர் அகக்கண்ணில் தெரிந்தது. கரிமுடீன் கான் கோழையல்ல. ஆயினும் 7வது கொரில்லா ரெஜிமென்டின் நற்பெயர் கடைசிக் காலத்தில் சகோதரச் சண்டையினால் களங்கமுறுவதை அவர் விரும்பவில்லை.

     “நேதாஜியின் பெயரால் எடுத்துக் கொண்ட விசுவாசப் பிரமாணத்தை மீறப் போகிறீர்களா?”

     “நேதாஜி எங்கே?”

     “ஓஹோ...! கீர்த்திமிக்க நம் படையின் கட்டுப்பாட்டுக்கு உலை வைக்கப் பார்க்கிறீர்கள். இது கொடிய குற்றம்.”

     “பிரிட்டனை எதிர்த்து தொடர்ந்து சண்டை நடத்துவதென்றால் நாங்கள் தயார்... வலியப் போய்ச் சிறைப்பட நாங்கள் விரும்பவில்லை. அதைவிட நல்ல வேலைகள் பல இருக்கின்றன.”

     கரிமுடீன் கான் சற்று நேரம் கதவைப் பார்த்தபடி இருந்தார். பிறகு கனைத்துக் கொண்டு பேசினார். “இந்தச் சமயத்தில் வெளியேறுவது அசல் தற்கொலை முயற்சி. சுற்றியுள்ள காட்டில் மரத்துக்கு மரம் சீனக் கொரில்லாக்கள் இருக்கின்றனர். இப்பொழுது அவர்களிடம் நவீன ஆயுதங்கள் நிறைய உண்டு. எல்லோரும் சேர்ந்திருந்தாலும், அவர்கள் முழு மூச்சாய்த் தாக்கினால் சமாளிப்பது கடினம். தமிழர்கள் வெளியேறுவது முறையல்ல; அதைத் தடுப்பது என் கடமை. மேலும் அனுமதியின்றி வெளியே திரியும் ஐ.என்.ஏ. ஆட்கள் எதிரிகளாகக் கருதப்படுவர் என்று ஜெனரல் நகானோ எழுதியிருக்கிறான். நான் சொல்வது புரிகிறதா?”

     “எல்லாவற்றையும் யோசித்தே முடிவு செய்தோம்.”

     கர்னல் ஏறிட்டுப் பார்த்தார். தடுத்தால் சண்டைதான். புது வேகத்தில் தலைகால் தெரியவில்லை போலும். பத்து மைல் போவதற்குள் புத்தி வந்து விடும் - சீனர்கள் புத்தி புகட்டி விடுவார்கள் - போய்ப் பார்க்கட்டும்...

     “உங்கள் விருப்பப்படியே எல்லாவற்றையும் யோசித்துச் செய்த முடிவின்படி போகலாம். ஆனால் நான் அனுமதி கொடுக்கவில்லை; நினைவிருக்கட்டும். பின்விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு. இன்னொன்று; ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடாது. பதினைந்து நாட்களுக்கான ரேஷன் கொண்டு போகலாம்.”

     “கூடுதலாகக் கொஞ்சம் எறிகுண்டுகளும் விசைத் துப்பாக்கிகளும் தேவை. தளவாடச் சாமான்களும் வேண்டும்.”

     “என்ன?” படைத்தலைவர் உறுமிக் கொண்டு எழுந்தார்.

     செல்லையா அசையாமல் நின்றான்.

     ஒருவரையொருவர் நோட்டமிட்டவாறு நின்றார்கள்.

     லெப்டினன்ட் முகத்தைப் பார்த்தபடியே கரிமூடின் கான் உட்கார்ந்தார். கையிலிருந்த சிகரெட் வாயிலேறியது. செல்லையாவின் நடத்தை ஆத்திரமூட்டினாலும், அவனுடைய நெஞ்சழுத்தம் அவருக்கு வியப்பளித்தது.

     “ஆல் ரைட், கிளியர் அவுட்.”

     செல்லையா வந்தனை செய்துவிட்டுத் திரும்பி வெளியேறினான்.

     1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி, காலை 8:35 மணி.

     7வது கொரில்லா ரெஜிமென்டைச் சேர்ந்த தமிழர்கள் கோலாமூடா முகாமிலிருந்து வெளியேறி, வருங்காலத்தையும் தொழில் துறைகளையும் நோக்கிப் புறப்பட்டார்கள். ஆயுதங்களுடன் பதினைந்து நாள் உணவு ரேஷனும், கோடரி, மண்வெட்டி, சமையல் பாத்திரங்கள் முதலிய தளவாடச் சாமான்களும் அவர்களிடம் இருந்தன.

     செகண்ட் லெப்டினன்ட் சுப்பையாவுக்கு நான்கு நாட்களாகக் கடுமையான காய்ச்சல்; ஹவில்தார் பொன்னம்பலம் முதலிய பதினோரு பேருக்கு வயிற்று வலி, காயம் முதலான சில்லறைத் தொந்தரவுகள். நெடுந்தொலைவு நடக்க இயலாத இந்தப் பன்னிரண்டு பேரும் முகாமிலேயே இருக்கலாமென்று செல்லையாவும் மணியும் சொல்லிப் பார்த்தார்கள்; நோயாளிகள் உடன்படவில்லை.

     தமிழர்கள் சிங்கப்பூர் - அலோர்ஸ்டார் பெருஞ்சாலை போய்ச் சேர்ந்த போது மணி 11:10. அதுவரையில் வழியில் யாரும் தென்படவில்லை. சாலையில் ஏறிய போது, வடக்கேயிருந்து தெற்கே போன ஜப்பானிய லாரிக் கூட்டத்தின் பின் வண்டிகள் தெரிந்து மறைந்தன.

     வடக்கேயும் தெற்கேயும் போக வேண்டியவர்கள் தனித்தனியே இரு அணிகளாகப் பிரிந்தனர். தென்புற அணியின் தலைவன் மணியும், வடபுற அணியின் தலைவன் செல்லையாவும் தற்காலிகக் காப்டன்களாகப் பதவி ஏற்றுக் கொண்டார்கள். பிரியா விடை பெற்ற பின் இரண்டு அணிகளும் நேர் எதிரான திக்குகளில் தத்தம் யாத்திரையைத் தொடங்கின.