பாகம் மூன்று

9. அமைதி

     கெக் செங் காபிக் கடைக்குள் நுழைந்த செல்லையா உறக்கத்தில் நடப்பவனாகத் தோன்றினான். கண்கள் ஒடுங்கியிருந்தன. வலக்கை நெற்றியைத் தடவியது.

     கல்லாப் பெட்டி அருகே நின்ற கடைக்காரன், செல்லையாவின் முகத்தைப் பார்த்தபடி எதிரோடி வந்தான்.

     “அத்தாஸ் பீக்கி, தவ்க்கே.”

     படிக்கட்டில் ஏறிப்போய், வடபுற அறையில் நுழைந்து, ஜன்னலோர மேசையை ஒட்டிக் கிடந்த நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான்.

     “அத்தி சக்கிட்கடா?”

     மனம் சரியில்லையா என்று கேட்டவாறு காபி மங்கை மேசையில் வைத்தான் கடைக்கார ஆலிம்.

     செல்லையா கை ஆட்டி, விலகிப் போகும்படி சைகை காட்டினான். ஆலிம் நகர்ந்தான்.

     கைகளை முழங்கைப் படுக்கையாக மேசை மீது வைத்துக் கண்ணை மூடினான். மரகதம் அவன் கால்களைக் கட்டிக் கொண்டு குய்யோ முறையோ என்று அழுதாள். கூந்தல் கட்டுக் குலைந்து பரந்திருந்தது. கண்களிலிருந்து வெள்ளம் போல வந்த சுடுநீர் காலைப் பொசுக்கியது. அப்பால் நின்ற காமாட்சியம்மாள் முன்றானையால் முகத்தை மூடிக் கொண்டு கதறினார்.

     கண்களை விழித்தான். எதிரே இருந்த எல்லாம் கலங்கிக் குழம்பலாய்த் தெரிந்தன. இரண்டு கைகளாலும் கண்களைத் தொட்டான். ஈரம் பட்டுக் கைகள் சிலிர்த்தன. கன்னங்களைத் தொட்டான். அருவி போல் இறங்கி வந்த கண்ணீர் கன்னங்களின் வழியாய்க் கீழே பாய்ந்து சென்றது கண்ணீர்...! என்ன இது, ஏன் இந்தக் கண்ணீர் வெள்ளம். மறுபடியும் கைகளை மேசை மீது வைத்துத் தலையைச் சாய்த்தான். என்னவென்று தெரியாத ஏதோ ஒன்று உடலைத் தாக்கியது. அதன் வேகத்தில் தலை முதல் கால் வரையும் குலுங்கியது.

     ‘மரகதம்! மரகதம்! மரகதம்! அழைப்பது யார்? நானா, என் மனமா? கண்கள் ஏன் நீரைக் கக்குகின்றன. யாருக்காக? மரகதத்துக்காகவா, எனக்காகவா? வினாத் தெரிந்த காலம் தொட்டு இப்படிக் கண்ணீர் சிந்தி அழுதறியேனே, இப்பொழுது ஏன் அழுகிறேன்? என் அகந்தை குலைந்து விட்டதே என்ற பொறாமையா, வயிரமுத்துப் பிள்ளையை வெல்ல முடியவில்லையே என்ற ஆத்திரமா...?

     மனக் குழப்பம் படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தது. மேசை மீதிருந்த தலையைத் தூக்கிக் கண்களைத் துடைத்தான். உலகம் தோன்றியது முதல் எத்தனை செல்லையாக்கள், எத்தனை மரகதங்கள்! என் கண்ணீரால் உலகம் மாறிவிடுமா? மாறாது... இப்படிக் கண்ணீர் சிந்தி அழுத செல்லையாக்கள் எத்தனை பேர்... யாருக்காக, எதற்காக இந்தக் கண்ணீர்? எனக்காக, என் அகந்தைக்காகவே என் கண்ணீர்...

     நான் மரகதத்தை இழந்தேன்; ஆனால் என்னை அறிந்து கொண்டேன். எனக்கும் மரகதத்துக்கும் உள்ள பிணைப்பு எவ்வகைப் பட்டது? அது பிறப்பால் தோன்றியதா? நெருக்கத்தால் உண்டானதா? அறிந்ததால் விளைந்ததா? அது குளிப்பித்து மூழ்கடிக்கும் நீரா? எரித்து நீறாக்கும் நெருப்பா? வருடி வீழ்த்தும் காற்றா? புதைந்து மறைக்கும் நிலமா? பறப்பித்து அழிக்கும் வானமா...? எல்லாம் அகந்தை, அகந்தை, அகந்தை...

     கண்களைத் துடைத்தான், கண்ணீர் நின்று போயிற்று. மனக் கலக்கம் மறைந்தது. பின்னால் அரவம் கேட்டுத் திரும்பினான்.

     இடக்கை தலைமுடியைக் கோதிக் கொண்டிருந்தது. வலக்கையில் சிகரெட் புகைந்தது - “மாணிக்கம்!”

     “செல்லையா!” சிகரெட்டை எறிந்து விட்டு வந்து தோளைத் தொட்டான். “மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை...”

*****