உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பாகம் இரண்டு 5. முதலாளி வீடு டத்தோ கிராமட் சாலையில் இடதுபுறம் திரும்பிச் சென்று, வானாயீனா வீட்டுப் படிக்கட்டில் ஏறினான். எதிரே தபால் ஆபீஸ் அருகே நின்ற வாகை மரத்தடியில் ஐந்தாறு தமிழர்கள் - வேட்டிக்காரர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். சாலையில் பெரிய ஆஸ்பத்திரிக்குப் போய்வரும் நோயாளிகள் கூட்டம் மிகுந்திருந்தது. “கருப்பையாண்ணே! கருப்பையாண்ணே!” தடதடவென்று கதவை இடித்தான். தாழ் நீக்கப்பட்டுக் கதவு நகர்ந்தது. மரகதம்...! மலைத்துப் போய் வியப்புடன் பார்த்தான். வலக்கை தாழ்ப்பாள் உயரத்தில் நிலைத்து நிற்க, இடக்கை மார்பின் மீது பதிந்திருந்தது. ஈரமுடி தொங்கிய தலை சற்றுச் சாய்ந்திருக்க, வாய் மலர்ந்து முத்துப்பல் வரிசை மின்னிற்று. அகன்ற விழித்த கண்களில் ஆனந்தம் பொங்கியது. செல்லையாவின் உடல், தலைமுதல் கால்வரையும் புல்லரித்தது. தொண்டை அடைபட்டு, கொஞ்ச நேரம் குரல் எழுப்ப முடியவில்லை. மரகதத்தின் கையைப் பற்ற வேண்டும் என்ற ஆசை மனதை உந்தியது. “மரகதம்!” நெஞ்சாழத்திலிருந்து காதலோசை தேனாய், பாலாய், கனிரசமாய்க் கிளம்பிற்று. கைகள் நடுக்கத்துடன் முன்னே நீண்டன. “வாங்க!” கண்ணை மூடித் திறந்தாள். “அம்மா உள்ளேயிருக்கு. கூப்பிடுறேன்.” மறுவிநாடி ஓடி விட்டாள். உள்ளே நடந்தான். நெஞ்சு திக்குத் திக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. “அம்மா!” என்ற கூவல் உள்கட்டில் கேட்டது. அதைத் தொடர்ந்து மெல்லிய குரலில் ஏதோ சொன்னாள். என்ன இனிமையான குரல்! “வா, செல்லையா, நல்லாருக்கியாப்பா, எப்ப வந்தாய்? உக்காரு... தண்ணிமலையான் புண்ணியத்தில் சண்டை சாடிக்கையெல்லாம் ஒழிஞ்சிருச்சு... உட்காரப்பா... ஒங்க மொதலாளி கைலிக் கடை மொதலியார் வீட்டு வரை போயிருக்காக... அம்மா, மரகதம்! காப்பி போட்டுக்கிணு வாம்மா... ஏன் நிக்கிறாய், உக்காரு.” சப்பாத்தைக் கழற்றிச் சுவரோரம் போட்டுவிட்டு, பெஞ்சு மீது உட்கார்ந்தான். “ஆமா, எப்ப வந்தாய்? இனிமப் பட்டாளத்துக்குப் போக வேண்டாமுல?” “ராத்திரி வந்தேன்.” முன்னரே வந்து விட்டதாகச் சொன்னால் கணக்கு ஒப்புவிப்பது கடினம். “பட்டாளமெல்லாம் அவ்வளவுதான்.” “ராத்திரியே வீட்டுக்கு வரக் கூடாதா, எங்கே போயிருந்தாய்?” “ஜெலுத்தொங்கில்...” “நம்ம மாணிக்கம் வீட்லதானே? ம்... அது ஒரு பிள்ளை... எல்லாம்...” மரகதம் உடலைக் கூனித் தலையைக் குனிந்தவாறு வந்து காபி தம்ளரை வைத்துவிட்டுத் திரும்பிச் சென்றாள். பச்சைப் பட்டுப் புடவையிலும் வெள்ளை ரவிக்கையிலும் மறைந்திருந்த பின்புறம் தெரிந்தது. சுருண்டு நெளிந்த - ஈரம் காயாத கூந்தல் நுனி முடிச்சுடன் தொங்கிற்று. “காப்பியக் குடியப்பா, ஆறுது.” திடுக்கிட்டுத் திரும்பித் தம்ளரைத் தூக்கினான். “போனதெல்லாம் போகட்டும். இனிமத் தாயாப் பிள்ளையா எல்லாரும் நல்லபடியா இருக்கணும். தண்ணிமலையான் நம்மளையெல்லாம் எப்படி எப்படியோ ஆட்டி வச்சுப்பிட்டான்... ஆமா, வெள்ளைக்காரன் உங்களையெல்லாம் பிடிச்சு அடைக்கப் போறான்னாகளே, அப்படி ஒன்னுமில்லையில?” “அதெல்லாம் ஒன்னுமில்லை. பழைய ஆட்களைத்தான் பிடிச்சு வைச்சுருக்காங்க.” - காபியைக் குடித்துவிட்டுத் தம்ளரைக் கீழே வைத்தான். “செல்லையாண்ணே! கும்பிடுறேன். எப்ப வந்தியக, நல்லாருக்கிறியகள்ள?” கருப்பையா காய்கறிக் கூடையுடன் எதிரே நின்றார். “கருப்பையாண்ணே! இப்பத்தான் வர்றென். நல்லா இருக்கிறியகள்ள?” “தண்ணிமலையான் புண்ணியத்தில ஒண்ணும் குறைச்சல் இல்லையண்ணே. ம். பேசிக்கிணு இருங்க, இந்தா வந்திட்டேன்.” கூடையை இடது தோளில் அணைத்தபடி உள்ளே நடந்தார். “என்னமோ, காலக்கூத்து இப்படியெல்லாம் ஆகிருச்சி. நீ பட்டாளத்துக்குப் போயி பாடாப்பட்டு வந்திருக்காய்... நானும் மரகதமும் தெசை தெரியாத சீமையில் வந்து அவதிப்படுறோம்... சண்டாளி, கண்ணான பிள்ளையவும் பறி கொடுத்தேன்” முன்றானையால் கண்ணைத் துடைத்தார். “சரி, தண்ணிமலையான் விட்டபடி நடக்கட்டும்... குளிச்சிட்டியா இல்லையா?” “குளிச்சிட்டேன். முதலாளி வர நேரமாகுமா? நாகலிங்கம் எங்கே?” “இப்ப வந்திருவாக, நாகலிங்கத்தை நியூ லயனுக்கோ, எங்கெயோ அவுகதான் போகச் சொன்னாக.” கண்கள் செல்லையாவைத் தலை முதல் கால் வரை நோட்டமிட்டன. “ஏனப்பா, சட்டைக்காரனாட்டம் டவுசர் போட்ருக்கியே, ஏன், அழகா வேட்டி கட்டிக்கிடப்படாதா?” “காலையில வேட்டி கிடைக்கல. பெட்டிக்குள் இருக்கும். கட்டிக்கிறேன்” எழுந்தான். “வேல் மயிலம்! முருகா!” வயிரமுத்துப் பிள்ளை மிதியடி ஒளியுடன் உள்ளே நுழைந்தார். “நம்ம செல்லையா வந்திருக்கு.” காமாட்சியம்மாள் கையை நீட்டிச் சுட்டினார். “என்ன, யாரு?” திரும்பினார். பெஞ்சுக்கு முன்னால் நின்றவனைச் சில வினாடிகள் ஏற இறங்கப் பார்த்து விட்டு நாற்காலியில் உட்கார்ந்தார். கீழ் உதடு முன்னால் துருத்தியது. பிறகு செருமல் கிளம்பிற்று. “எப்படாப்பா வந்தாய்...? என்ன விசயம்? இப்பத்தான் இங்கிட்டு வரணுமுனு தோணுச்சாக்கும்” குரல், ‘இப்பத்தான்’ என்ற வார்த்தைக்குத் தனி அழுத்தம் கொடுத்தது. மீசையும் சராயையும் கண்கள் அக்கறையுடன் கூர்ந்து கவனித்தன. “இப்பத்தான் வந்தேன்.” ஏன் வந்தோமென்று இருந்தது. “பட்டாளத்தில் இருந்தால், நெனச்ச நெனைப்பில் வரப் போக முடியுமா? ம்... உங்களுக்குக் காப்பி போட்டாறவா?” முதலாளி - அடுத்தாள் சந்திப்பு நேரம் சரியில்லை என்று காமாட்சியம்மாளுக்குப் பட்டது; பேச்சை வேறு திசையில் திருப்பி விட நினைத்தார். “வேண்டாம்” வெடுக்கென்று பதில் கிளம்பியது. செல்லையா பக்கம் திருமினார். “ஏன்டாப்பா நிக்கிறாய்? அப்படி உக்காரு.” வழக்கமான முதலாளி - அடுத்தாள் உரையாடல் முறையில்தான் வானாயீனா பேசினார். ஆனால், முன்பெல்லாம் கடினச் சொற்களோடு விரவி வந்த உள்ளன்பு இப்போது தென்படவில்லை. செல்லையா, பெஞ்சு மீது சம்மணம் கூட்டி உட்கார்ந்தான். மடங்கிய சராய் இடுப்பையும் முழங்கால்களையும் சுண்டி இழுத்தது. “ஆமாம் கப்பல் எப்ப விடுவானாம், கேட்டுப் பாத்தியகளா?” அடுப்பு வேலைகளை அப்புறம் கவனித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்த காமாட்சியம்மாள், சுவரோரம் தரையில் உட்கார்ந்தார். “கப்பலா? அதுக்கு இன்னும் நாளாகும்!” முகத்தைச் சுளித்தார். சமையல் கட்டுக்குப் போகாமல் மனைவி சண்டித்தனம் செய்வது ஏன் என்று நன்றாகத் தெரிந்தது. கோபம் பொங்கிற்று. தொழில் துறையில் ‘பொட்டச்சிகள்’ தலையிடுவது அவருக்கு அறவே பிடிக்காது. “அந்த வங்கி ஐயர் வீட்டம்மாவுக்கு என்னமோ கைமாத்துக் கொடுத்தமுன்னியே - அதைக் கேட்டு வாங்கியா, போ. வெள்ளி தேவையிருக்கு!” மனைவியின் முகத்தைப் பார்க்காமல் கடுகடுப்பாகச் சொன்னார். “இப்பப் போனா ஐயர் இருப்பாரு. அப்புறம் போறென்... ம். இன்னைக்கு என்ன கறி வைக்யணும்?” “என்னத்தையாவது வச்சுத் தொலை, போ.” செல்லையா தரையைப் பார்த்தபடி இருந்தான். கோபத்தில் நெஞ்சு குமுறியது. ஏன் வந்தோம் என்று எண்ணித் தன்னைத்தானே நொந்து கொண்டான். வானாயீனா மார்க்காவை விட்டல் வேறு கதியில்லை என்ற நிலையில் அவன் இல்லை. ஆனாலும் அவசரப்பட்டுப் பழைய தொடர்பை அறுத்துக் கொள்ளக் கூடாதென்று உள்மனம் கூறியது. தொடர்பு அறுந்து விட்டால், மறுபடியும் ஒட்ட முடியுமா...? மரகதம்! முதலாளி வயசில் பெரியவர், வேலை கிடைக்காமல் ஊரில் திரிந்த போது அழைத்து வந்து வேலை கொடுத்தவர். “கொண்டுவிக்கிறதுக்கு வந்தால், கொண்டுவிக்கிறதோட இருக்கணும். நம்பிக் கூட்டியாந்தவனை நடுத்தெருவில் விட்டுப்பிட்டுப் பட்டாளத்துக்குப் போறதும், பெரிய பட்டாளத்து நாயக்கர் மகன் மாதிரி டப்புடுப்புன்னித் திரியிறதும்... ஆமா அஅ, யாரைக் கேட்டிக்கிணு போனாய். ம்?... எசகுப் பிசகாய் ஒண்ணு ஆனாப் போனா, ஒங்கப்புக்கு நான்ல சவாப் சொல்லணும்? கொஞ்சம் கூடக் கருக்கிடை இல்லையே...” அட்டணைக்கால் போட்டிருந்தவரின் வலது பாதம் துடித்தது. தரையைப் பார்த்திருந்த செல்லையா வாயைத் திறக்கவில்லை; மரகதத்தைப் பற்றிய எண்ணங்கள் மனதில் அலையடித்தன. காமாட்சியம்மாள் கணவனின் முகத்தைப் பார்த்தபடி இருந்தார். “ம்ம்... ஒண்ணும் சரியில்லை. நினைக்கிறது ஒண்ணு, நடக்கிறது ஒண்ணாயிருக்கு. கைக்கு உதவியாயிருப்பாயினு நினைச்சிக்கிணு இருந்தேன்... ம்ம்.” கண்கள் மூடின. இடக்கை நாடியைத் தடவியது. ‘இவன் இனிமேல் தொழிலுக்கு லாயக்குப் படமாட்டான். பட்டாளத்துக்குப் போயி டப்பு டுப்புன்னித் திரிஞ்சு பழகின பய. சூட்டிக்கையான பய, பேர் சொல்வானின்னு நெனைச்சம். நெனைச்சதுக்கு ஏறுமாறாயிருக்கு. கொஞ்ச நாளைக்கி வச்சிருந்து பெத்தவன் கையில் சேர்த்துப்பிட்டா, அப்புறம் பிராப்தப்படி நடக்கட்டும்...’ “கடையில் பழையபடி தொழில் ஆரம்பிச்சி...” செல்லையா மெதுவாக இழுத்தான். மனம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பணிந்து போவதுதான் நல்லது. வேண்டாமென்றால், அவராக வாய்விட்டுச் சொல்லட்டும்... “ம்ம்... கடையில?” “இல்லை, கடையத் துப்புரவு பண்ணிக்கிண்ணி வச்சாக்கா...” செட்டித் தெருப் பேச்சுமுறை, உரிய ஏற்ற இறக்கம், விரித்தல் குறைத்தலுடன் சரளமாக வந்தது. “ம்ம்?” பிள்ளையவர்களின் வலக்கை நெற்றியைத் தடவியது. ‘நாகலிங்கம் பய அங்கிட்டு என்னமோ அடிபிடியாக் கிடக்குது; ஒரு மாசம் போனாதான் கடை கண்ணித் திறக்கலாமுன்னானே. அதொரு கூதறைக் கழுத. இவன் இப்பவே திறக்கலாமுங்கிறான். சரி, கடையை ஒழுங்கு பண்ணி வைக்கிறதும் நல்லதுதான்... இவன் சூட்டிக்கையான பயல். ஒரு வருசம் ஊர்ல போய் இருந்துபிட்டு வந்தான்னா திருந்தியிருவான். ஆனாக்கா இந்தத் தொழிலுக்கு லாயக்கில்லை. வருசக் கணக்காய் அவுத்துவிட்ட கழுதை மாதிரி திரிஞ்சதில உடம்பு நிமுந்திருச்சி. மீசையும் டவுசரும் சைங்காரப் பயலாட்டம்...’ “ம்ம், சரி, சாவிய எடுத்துக்கிணு போயி எப்படி இருக்குதின்னிப் பாரு. இப்ப நல்ல நேரமில்லை. சாப்பிட்டுப்பிட்டு மதியத்துக்கு மேல போனாப் போதும். அந்தப் பய நாகலிங்கத்தையும் கூட்டிக்கிணு போ.” “அவரு... சீனா...” “மேலாளா? பத்து நாளாக் காச்சல், நியூலயன்ல அவுகண்ணன் கூட இருக்கான்” காலைத் தொங்கவிட்டுச் சாய்ந்தார். “ம்ம்... இத்தினி வருசமாப் பட்டாளத்தில கொண்டு வித்தியே, என்ன மிச்சம், இந்த டவுசர்தானா?” செல்லையா பதில் சொல்லவில்லை. “ஆஅமா, கடையில கொண்டு வித்தவுகள்ளாம் என்னத்தைக் கிழிச்சாக. சப்பான் நோட்டுகளை மூட்டை போட்டு கட்டி வச்சதுதான் மிச்சம். என்னமோ, அதது லெவிதப்படி நடக்குது. அன்னக்கி எழுதினவன் அழிச்செழுதப் போறானா?” காமாட்சியம்மாள் நடுமைக் குரலில் சலித்தவாறு செல்லையா பக்கம் திரும்பினார். “ஒம் பெட்டி சாமானெல்லாம் மேவீட்ல இருக்குதப்பா, போயிப் பாரு.” செல்லையா முதலாளி முகத்தைப் பார்த்தான். “மொதல்ல போயி இந்தச் சனியனைக் கழட்டிப் போட்டுப்பிட்டு வேட்டியக் கட்டிக்ய. வம்பு தும்பு ஒண்ணுலயும் மாட்டிக்கிடாம, நாம உண்டு நம்ம தொழில் உண்டுன்னு இருக்கணும். ஆமா, சொல்லிப்பிட்டேன். சரி போ” மீசை மீது பார்வையைச் செலுத்தியவாறு முதலாளி உத்தரவிட்டார். செல்லையா மாடிப் படிக்கட்டில் ஏறினான். காமாட்சியம்மாள் சமையலறையை நோக்கி விரைந்தார். படிக்கட்டில் ஏறின அடுத்தாளை வயிரமுத்துப்பிள்ளை இமை கொட்டாமல் பார்த்தார். வளைந்து நிமிர்ந்து முறுக்கேறியிருந்த உருவம் அவர் மனதில் இன்னதென்று விவரிக்க இயலாத கிளர்ச்சியைத் தோற்றுவித்தது. வடிவேலின் நினைவு கிளம்பி எண்ணத்தைக் குழப்பிற்று. வயிரமுத்துப் பிள்ளை சிறுவயது முதல் ‘செட்டிய வீட்டுத் தொழிலில்’ இரண்டறக் கலந்து வளர்ந்தவர். பெட்டியடிப் பையனாகவும் அடுத்தாளாகவும் இருந்த காலத்தில், வந்தவர் போனவர்க்கெல்லாம் அடங்கி ஒடுங்கி நடந்து ‘பதவுசான பய’ என்ற பெயர் பெற்றார். புதிதாக எதையும் செய்வதென்ற பழக்கமில்லாமல், முன் வழக்கப்படியும் மேலாவில் உள்ளவர்கள் சொன்னபடியும் செய்து பழகி ஆளானவர் வானாயீனா. ஆதியில், மேல்துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு லேவாதேவித் தொழிலில் புகுந்தார். அடுத்தாளான பின், துண்டு இடது கைப்பிடிக்கு உயர்ந்தது! அப்புறம், மேலாளான பிறகு, முழங்கை மடிப்பில் சிறிது காலம் தொங்கிப் பின், பட்டும் படாமல் தோளைத் தொட ஆரம்பித்தது. வானாயீனா மார்க்கா முதலாளியான பிறகுதான், மேல் துண்டு தோளில் நன்கு படிந்து இருபுறமும் தொங்கத் தொடங்கிற்று. இவ்வாறு படிப்படியாக, முறை தவறாமல், மாற்றம் துலக்கமாய்த் தென்படாதவகையில் முன்னேறி வந்தவர் பிள்ளையவர்கள். கடையில் தீபாவளிக்குச் சுட வேண்டிய பலகார வகைகளுக்கு, கடந்த ஆண்டு தீபாவளிச் சிட்டையைப் பார்த்து, அதிலுள்ளபடியே தாக்கீது பிறப்பிக்கும் வழிமுறையில் வந்த வானாயீனா, அடுத்தாள் செல்லையாவின் நடை உடை பாவனைகளைக் கண்டு வெகுண்டதில் வியப்பிற்கு இடம் ஏது? வயிரமுத்துப்பிள்ளை கண்களை மூடி, விரலால் இமைகளை வருடினார். “அடக்க ஒடுக்கம் கொஞ்சங்கூட இல்லையே. மீசையும் டவுசரும் நெஞ்சைத் தூக்கிக்கிணு நடக்கிற நடையும்... சாட்டர் வங்கிப் பெரிய தொரையின்னி நினைப்பு போலயிருக்கு, அடக்கமில்லாத கழுதையக.” கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|