பாகம் மூன்று

2. கருப்பையாவின் தூது

     செல்லையா, காய்கறி மார்க்கெட்டில் அடிக்கடி வீட்டுச் சமையலாள் கருப்பையாவைச் சந்தித்து, அவ்வப்பொழுது முதலாளி வீட்டு நிலவரத்தை அறிந்து வந்தான். சமையலாள் கடைசியாகச் சொன்ன செய்தி, செல்லையாவை அதிரடித்து விட்டது. மரகதத்தை நாகலிங்கத்துக்குக் கட்டி வைக்கப் போவதாக வானாயீனா தீர்மானமாக அறிவித்து விட்டார். கப்பல் விட்டதும் ஊருக்குப் போய்க் கல்யாணம், மனைவியின் எதிர்ப்புக் காரணமாகத்தான் இதுவரை இறுதி முடிவாக எதுவும் சொல்லாமல் இருந்தார். தந்தையின் அறிவிப்பைக் கேட்டது முதல் மரகதம் யாரிடமும் பேசாமல் அழுது கொண்டே இருக்கிறாள்.

     மார்க்கெட்டில், பற்று வரவுப் புள்ளி கன் லிம் கடை முன் நாற்காலியில் அமர்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான் செல்லையா. சுற்றிலும், சீனர்களிடம் தமிழில் விலை பேசும் பெண்களின் கூச்சலும், மலாய்க்காரிகளின் இழுவையான இன்குரலும், சீனப் பெண்களின் ஙொய்ங் புய்ங் இரைச்சலும் கலந்து குழம்பி ஒலித்தன.

     “அட தவுக்கே, உருளகெளங்கு என்ன வெலையிடா... ஓங் கையில பாம்பு புடுங்க... தெராசை நல்லாப் பிடிச்சித் தூக்குடா... அந்தாந்த வெந்தயக் கீரை எம்புட்டுரா?...”

     வியாபாரிகளின் பதிலான சீன மொழியோசை கீச்சிட்டுக் காதைத் துளைத்தது. எப்படியா விலைகள் திகைந்து, பண்டமும் காசும் கை மாறின.

     மேற்கே, கூடையுடன் வந்த சமையலாளின் உருவம் தெரிந்தது. செல்லையா, எழுந்து விரைந்தான்.

     “கருப்பையாண்ணே! என்ன சேதி, மரகதம் நல்லாயிருக்கா?”

     “ம்ஹ்ம்... தங்கச்சி அழுதழுது கண்ணெல்லாம் வீங்கிப் போச்சி. ரெண்டு நாளாய் யார்ட்டையும் ஒண்ணும் பேசலை. அவுகம்மா கும்பிட்டு விழாத குறையாக் கெஞ்சிக் கேட்டுக் கிட்டதுக்கப்புறம், ராத்திரிதான் ஒருவாயி சாப்பிட்டுச்சு... தங்கச்சி உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லச் சொல்லுச்சி.”

     “என்ன சொல்லுச்சி.”

     “காலையில காலையில போயி, தண்ணிமலையானைக் கும்பிட்டுப்பிட்டு வருவிங்யளாம். மொதலாளி மனசு கோணாமல் கொஞ்ச நாளைக்கி, அதுக்காக விட்டுக்குடுத்து நடந்துக்குவிங்யளாம். ‘தினசரி சாமிய வேண்டிக்கிருக்கேன். தண்ணிமலையான் நம்மளைக் கைவிட மாட்டான்னி சொல்லுன்னி தங்கச்சி சொல்லுச்சி.”

     “சரி தண்ணிமலையான் கோயிலுக்குப் போய்த் தினசரி கும்பிடுறேன்... மரகதம் ரெம்ப இளைச்சுப் போயிருச்சா, கருப்பையாண்ணே?”

     “அந்தக் கண்றாவிய ஏண்ணே கேக்குறியக... மொதலாளிக்கு இரும்பிலதான் மனசச் செஞ்சி வெச்சிருக்கு... இன்னிக்குத்தான் தங்கச்சி கொஞ்சம் தெளிச்சியாத் தெரியுது. காலம்பர எந்திரிச்சுக் குளிச்சிப்பிட்டு ரொம்ப நேரம் சாமி கும்பிட்டுச்சு... அது தெய்வப் பிறவியண்ணே! என்னமோ, ஈரமில்லாத மனுசன் வயித்தில வந்து பிறந்திருச்சி.”

     “கருப்பையாண்ணே, மரகதத்தை எப்படியும் பார்த்துப் பேசணும். இல்லாட்டி கிறுக்குப் பிடிச்சிரும் போலருக்கு.”

     “அவசியம் வாங்க. ஒங்க முகத்தைப் பார்த்தா, அது கவலை கொஞ்சம் தீரும். முதலாளி கடைக்கிப் புறப்பட்டப்பறந்தான் அக்கா குளிக்யும். அந்நேரமா வாங்க.”

     “அவசியம் வர்றென் கருப்பையாண்ணே, மரகதத்தைப் பத்திரமாப் பார்த்துக்கங்க, அது பாட்டுக்கு என்னமாவது...”

     “தண்ணிமலையான் இருக்கான். ஒரு கோளாறும் வராதண்ணே. அது மனசு கோணுறாப்புல ஒண்ணு நடந்தால், ஊர்ல மழையேது?”

     “வர்றென், கருப்பையாண்ணே.”

     “சரி, போயித்து வாங்கண்ணே.”

     செல்லையா திரும்பி, பினாங் ஸ்ட்ரீட்டை நோக்கி மெய் மறதியோடு நடக்கலானான். காய்கறி வர்த்தக இரைச்சல் செவியில் படவில்லை. உராய்ந்து சென்ற உருவங்கள் உடலை உறுத்தவில்லை. காலைக் கதிரவனின் சுடரொளியில் கண் கூசவில்லை.

     கூட்டத்தினிடையே தோன்றியும் மறைந்தும் சென்ற செல்லையாவின் உருவத்தை இமை கொட்டாமல் பார்த்து நின்றார் கருப்பையா. ‘ம்ஹ்ம்... மொதலாளி கருமம் பிடிச்ச மனுசன். விடிஞ்சி எந்திரிச்சிப் படுத்துக்கிற வரை பணம் - தொழிலு, பணம், தொழிலுன்னு சாகுறாரே... இப்படி மருமகன் கிடைக்கிறதின்னாச் சும்மாவா இருக்கு. என்னமோ, தங்கச்சி குணத்துக்குச் செல்லையா வந்து கால்ல விழுகுது. நாகலிங்கத்தைத்தானே மொதலாளிக்கிப் பிடிச்சிருக்காம்! அவனும் அவன் மொகரையும், க்ர்ர்ர்...

     காறித் துப்பிவிட்டு, மேற்கே திரும்பி நடந்தார்.