உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பாகம் ஒன்று 9. வடதிசை யாத்திரை வடக்கே சென்ற தமிழர்கள் சாலையிலும் அதை ஒட்டியிருந்த ஒற்றையடிப் பாதைகளிலுமாக நடந்து, பிற்பகல் மூன்றேகால் மணி அளவில் புதர் மண்டிக் கிடந்த ரப்பர் தோட்டம் ஒன்றை அடைந்தார்கள். அப்துல் காதரும் ராஜதுரையும் சுற்றிப் பார்த்த போது அடுப்பு மூட்டிய சாம்பல் திட்டுகளும், சிகரெட் துண்டுகளும் காணப்பட்டன. நேற்றோ, முந்தைய நாளோ சின்பெங்கின் ஆட்கள் இங்கே தங்கியிருக்கிறார்கள்... செல்லையா மற்ற அதிகாரிகளைக் கலந்து ஆலோசித்த பிறகு, மாலை 6:30 மணி வரை இளைப்பாறுவதற்குக் கட்டளை பிறப்பித்தான். வகுத்த முறைப்படி காவலர்கள் சுற்றுக்குக் கிளம்பினார்கள். வேவுக்காரர்கள் நான்கு திக்கிலும் புறப்பட்டனர். சமையல் ஆட்கள் வடக்கே கொஞ்ச தொலைவிலிருந்த ஆற்றுக்குப் போய்த் தண்ணீர் கொண்டு வந்து உலை வைத்தார்கள். மாலையில் மறுபடியும் வடதிசை யாத்திரை தொடங்கியது. இரவெல்லாம் நடந்து, மறுநாள் விடிகாலையில் சாலையின் வலப்பக்கத்தில் இருந்த லாலான் புல்வெளியில் போய்த் தங்கினார்கள். ரப்பர்த் தோட்டங்கள் பாழடைந்து கிடந்தன. ஆள் அரவமே இல்லை. ஆயர் மானீஸ் ஆற்றின் வடகரையில் இருந்த ஒரு தோட்டத்தில் மட்டும் ஐந்தாறு தமிழ்க் குடும்பங்கள் இருந்தன. காய்கறிகள் பயிர் செய்து எப்படியோ வயிற்றைக் கழுவி வருவதாக ஒரு கிழவர் சொன்னார். வடக்கே உள்ள தோட்டங்களில் தமிழ்க் குடும்பங்கள் நிறைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். காலை 8:40 மணிக்கு உண்டியை முடித்துக் கொண்ட தமிழ்ப்படை மீண்டும் கிளம்பியது. சுப்பையாவினால் எழுந்திருக்க முடியவில்லை; ஏதோ புலம்பிக் கொண்டிருந்தான். வெட்டுக் காயம் பட்டிருந்த பொன்னம்பலத்தின் முழங்கால் வீங்கி விட்டது; நடக்க முடியவில்லை. இருவரையும் மற்றவர்கள் மாறி மாறித் தோளில் போட்டுக் கொண்டு நடந்தார்கள். வழியிலுள்ள ஊர்களை ஒதுக்கிச் சென்ற தமிழர்கள் 26ம் தேதி கருக்கலில் குளுகூர் பாலத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். வலப்புறத்தில் சேவல் கூவியது. அண்டையில் உள்ள தோட்டங்களின் நிலவரத்தை அறிந்து வருமாறு ஆண்டிச்சாமி தலைமையில் பத்துப் பேரை அனுப்பிவிட்டு, மற்றவர்களைச் சாலையோரத்தில் இளைப்பாறும்படி படைத் தலைவன் உத்தரவிட்டான். கைகளால் காலைக் கட்டிக் கொண்டு தரையில் உட்கார்ந்தான் செல்லையா. இடதுபுறத்தில் அப்துல்காதரும் நாச்சியப்பனும் படுத்தார்கள். “சுப்பையா நிலைமை படுமோசம். பிழைப்பது கடினம்.” பக்கத்தில் வந்து உட்கார்ந்த ராஜதுரை சொன்னான். செல்லையா குந்தி உட்கார்ந்து சுப்பையாவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். நெருப்பாக எரிந்தது. லான்ஸ் நாயக் பிலாவடியான் மடியில் தலைவைத்துக் கிடந்த சுப்பையா புலம்பிக் கொண்டிருந்தான். “ம்மா... கூதலம்மா... ம்மா... நடுக்குதம்மா... இருட்டும்மா... ம்... விளக்கைப் பொருத்தம்மா... ம்ம்மா...!” “சுப்பையா! சுப்பையா!” “ம்மா... விளைக்கைப் பொருத்தம்மா... ம்... ம்... ம்... இருட்டம்மா... ம்மா...” செல்லையா எழுந்து, ஐந்தடிக்கு அப்பால் பெட்டிப் பாம்பு போல் சுருண்டு கிடந்த பொன்னம்பலத்தின் அருகே போய்க் குனிந்தான். “பொன்னம்பலம்! பொன்னம்பலம்!” பதில் இல்லை. பழைய இடத்தில் போய் உட்கார்ந்து, குடுக்கையை எடுத்துத் தண்ணீர் குடித்தான். பிறகு தலைக்கடியில் கையை வைத்து மல்லாந்து படுத்தான். கருநீல வானில் வெள்ளி மலர்கள் சிதறிக் கிடந்தன. மேற்கு விளிம்பில் பிறைமதி தொங்கியது. மென்காற்றில் மரக்கிளைகள் சலசலத்தன. மல்லாந்து படுத்திருந்தவனின் மனம் குழம்பித் தடுமாறியது. யாருக்காக, எதற்காக இந்தக் காட்டில் வந்து கிடக்கிறோம்? சுப்பையாவும் பொன்னம்பலமும் இப்படி அவதிப்பட வேண்டிய தேவை என்ன? வெள்ளையர், ஜப்பானியர், சீனர் இவர்களெல்லாம் யார்? தமிழர்களுக்கும் அவர்களுக்குமிடையே உள்ள உறவு முறை என்ன? ஒருவரை ஒருவர் விரட்டி வேட்டையாடி மாய்வது ஏன்? இதெல்லாம் வேரூன்றிய பகையின் விளைவா அல்லது இன்றைய தேவையின் மலர்வா? என் வாழ்க்கையில் குறுக்கிடும் தெராவுச்சி, சின்பெங், மவுண்ட்பேட்டன் இவர்களெல்லாம் யார்? இவர்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? விடுதலை என்றால் என்ன? யாருக்கு யாரிடமிருந்து, எதற்கு எதிலிருந்து, எங்கிருந்து எங்கே செல்ல... பின்னால் செடி கொடிகள் விலகும் ஓசை கேட்டது. உறையிலிருந்த பிஸ்டலை உருவியவாறு எழுந்தான். புதருக்குள்ளிருந்து ஒரு உருவம் கிளம்பி வந்தது. “கொரில்லாக்கள் நடமாடியிருக்கிறார்கள்” நாச்சியப்பன் வந்து உட்கார்ந்தான். “ம்... யாரும் தென்படவில்லையே!” “தென்மேற்கு மூலையில் ராத்திரி அடுப்பு எரிந்திருக்கிறது.” எதிர்ப்புறம், சிறிது வடக்கே காட்டுக்குள்ளிருந்து ஆட்கள் வந்து சாலையில் ஏறினர். “ஆண்டிச்சாமி வருகிறான்” நாச்சியப்பன் எழுந்தான். “எச்சரிக்கையாக இருங்கள்” செல்லையா கட்டளையிட்டான். “இவர் டெவான் தோட்டத்துப் பெரிய மண்டூர் ஐயாக்கண்ணு. இவர் பூச்சிமுத்து மண்டூர். மற்ற இருவரும் இவர்களுடன் வந்தவர்கள்” ஹவில்தார் ஆண்டிச்சாமி அறிமுகம் செய்து வைத்தான். “கும்பிடறமுங்க” தோட்டத்திலிருந்து வந்தவர்கள் கை கூப்பினர். “ஜே ஹிந்த்! அவர் உங்களிடம் எல்லா விவரமும் சொல்லியிருப்பார். நாங்கள் வடக்கே வெகு தொலை போக வேண்டும். வழியில் சிலரை விட்டுச் செல்ல நினைக்கிறோம். நீங்கள் எத்தனை பேரை வைத்துக் கொள்ளலாம்? கூடுதலாக இயலாதென்றாலும், உடல் நலிவாயிருக்கும் இரண்டு பேரையாவது வைத்துக் காப்பாற்றுங்கள். தமிழனுக்குத் தமிழன் என்ற முறையில் கேட்கிறேன். தட்டாமல் ஒப்புக் கொள்ள வேண்டும்.” “அப்படியெல்லாம் அந்நியமாய் நினைச்சுப் பேசாதீங்கையா. எத்தனை பேர்னாலும் எங்க பிள்ளைகளைப் போல வச்சுப் பார்த்துக் கிடுறோம். என் மகன் ஒருத்தன் நேத்தாசி கூடச் சேர்ந்து பர்மாவுக்குப் போயிருக்கானுங்க” பெரிய மண்டூர் உணர்ச்சி பொங்கக் கூறினார். “ஐம்பது பேரை விட்டுப் போகலாமென்று நினைக்கிறேன். பக்கத்துத் தோட்டங்களில் பகிர்ந்து வைத்துக் கொள்ளுங்கள்.” “ஆகட்டுமுங்க. கிட்டத்தில் ஏழெட்டுத் தோட்டமிருக்கு. பிரிச்சு விட்ரலாம். இங்கெ சீனன் தொந்தரவு ஒண்ணும் கிடையாதுங்க. எங்க பயகளே அவனுகளோட காட்ல திரியிறானுக. வெள்ளைக்காரன் வந்தாலும் பயமில்லை. நாங்க பார்த்துக்கிடுறோம்.” சுப்பையா, பொன்னம்பலம் முதலிய 50 பேரைச் செல்லயா தெரிந்தெடுத்தான். அடைக்கலம் புகவிருந்தோர், தோள் மூட்டைகளை அவிழ்த்து, அவற்றில் பத்திரமாக வைத்திருந்த வேட்டி சட்டைகளை எடுத்து அணிந்து கொண்டார்கள். பொன்னம்பலத்துக்கும் சுப்பையாவுக்கும் மற்றவர்கள் உடை மாற்றம் செய்தனர். நோய்வாய்ப் பட்டிருந்தவர்கள் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிவித்ததோடு பினாங்கில் தனது முகவரியையும் மற்றும் மூன்று முகவரிகளையும் செல்லையா தெரிவித்தான். மண்டூர்களோடு வந்த இருவரும், சுப்பையாவையும் பொன்னம்பலத்தையும் தோளில் தூக்கிக் கொண்டார்கள். “செலவைப் பற்றி யோசிக்க வேண்டாம். பினாங் போய்ச் சேர்ந்ததும், பணத்துக்கும் துணிமணிகளுக்கும் ஏற்பாடு செய்கிறேன்.” “ஒண்ணும் யோசிக்காதீங்க. எல்லாம் நாங்க பார்த்துக்கிடுறோம். மத்த பிள்ளைகளையும் கரை சேருங்க. எல்லாத்துக்கும் தண்ணிமலையான் இருக்கான்.” விடைபெற்றுச் சென்றோரைப் பார்த்தபடி மற்றவர்கள் சற்று நேரம் மௌனமாய் நின்றார்கள். தமிழ்ப்படையின் வடதிசை யாத்திரை மீண்டும் தொடங்கிற்று. பிற்பகல், சாலைக்குக் கிழக்கே வரிசையாக இருந்த தோட்டங்களில் 160 பேர் சட்டை மாற்றி விடப்பட்டார்கள். அன்று பொழுது சாய்வதற்குள் சமைத்து, வயிறார உண்டு இளைப்பாறிய பின், மாலை 7 மணிக்கு தமிழ் வீரர்கள் வடமுகமாய் நடந்து செல்லலானார்கள். சிங்கப்பூர் - அலோர்ஸ்டார் பெருஞ்சாலை அநாதையாய்க் கிடந்தது. இருபுறமும் மரங்கள் மண்டிய, ஆள் அண்ட முடியாத காடு. இடையிடையே பாம்புகள் ஊர்ந்தன. காட்டுப் பூனைகள் பாய்ந்தோடின. இனம் தெரியாத விலங்குகளும் இராப் பறவைகளும் அலறின. காட்டின் கிண்ணோசை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. திடுமென இருபுறமிருந்து பரிந்த தோட்டாக்கள் தலைக்கு மேல் பறந்து சென்றன. “ஒற்றை வரிசை! ஒற்றை வரிசை!” அதிகாரிகள் அவரவர் அணிகளை நடைப்போக்கிலேயே போருக்குச் சித்தப்படுத்தினார்கள். மீண்டும் தோட்டாக்கள் தலைக்கு மேல் பறந்து சென்றன. “முதல் அணியும் கடைசி அணியும், மரமட்டத்துக்கு மேல் திசை மாற்றி மும்முறை சுடுங்கள். முதல் அணி வலப்புறம்.” தமிழ்ப் படையின் துப்பாக்கிகள் முழங்கின. பிறகு ‘எதிரி’யின் துப்பாக்கிக் குரல் கேட்கவில்லை. கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|