பாகம் மூன்று

4. பழைய நண்பர்கள்

     தமிழர்கள் தாயகம் திரும்ப வசதி பிறந்து விட்டது. முதலில் விமானப் போக்குவரத்து. நாகலிங்கத்தையும் அழைத்துக் கொண்டு உடனே புறப்பட வேண்டுமென்று வானாயீனா வற்புறுத்தினார். விமானத்தில் பறக்கக் பயமாயிருக்கிறதென்று சொல்லி, ஒரேயடியாக மறுத்து விட்டார் காமாட்சியம்மாள். சில வாரங்களில் கப்பல் போக்குவரத்தும் தொடங்கி விட்டது. சுணங்கக் கூடாதென்று பிள்ளையவர்கள் துடித்தார்.

     “அஞ்சாறு கப்பலைப் பார்த்துக்கிடலாம், பத்திரமாய்ப் போய்ச் சேருதான்னி. இம்புட்டு நாளாய்ப் பிழைச்சுக் கிடந்து, இனிமத் தண்ணிக்குள்ள போயிச் சாகணுமாக்கும்.” மனைவி நிதானமாகச் சண்டித்தனம் செய்தார்.

     கணவனுக்கு வந்த கோபத்தை அளவிட முடியாது. இருந்தாலும் பொறுத்துக் கொண்டார். ‘வாக்குல கெட்ட கழுதையப் போக்குல விட்டுத்தான் திருப்பணும். பொம்பளை, வீம்புக்கு என்னத்தையாவது செய்து விட்டால் என்ன பண்ணித் தொலையிறது, பார்த்துக்கிடலாம்...’

     வானாயீனாவின் நெடுநாள் நண்பரும், கடைவீதியில் பெரிய மனிதருமான சீனி முகமது ராவுத்தர், ‘பாப்பா’வைச் செல்லையாவுக்குத்தான் கட்டிக் கொடுக்க வேண்டுமென்று தலைகீழாக நின்று சொல்லிப் பார்த்தார். பாப்பாவின் தந்தை அசையவில்லை.

     நாகலிங்கத்தை ‘மடக் கழுதை’ என்று ராவுத்தர் வருணித்தார்.

     “ஆமாமா, அப்படியொண்ணும் சூட்டிக்கையான பயல் இல்லைதான்!” என்று வருங்கால மாமனார் ஒத்துப் பாடினார்.

     ராவுத்தருக்குக் கடுஞ்சினம் வந்து விட்டது. விருட்டென்று எழுந்து விடைபெறாமலே போய்விட்டார்.

     கடை லாயர் ‘சங் ஷீலியாங்’கும் பேங்க் ஐயரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். செல்லையா போன்ற மாப்பிள்ளை கிடைப்பதரிது என்று குறிப்பிட்டு, மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்கள். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்தது.

     வீட்டு முகப்பில் வயிரமுத்துப் பிள்ளை உலாவிக் கொண்டிருந்தார். ‘ஊர்ல போயிக் கலியாணத்தை முடிச்சிப்பிட்டு நாமள் மூணு மாசத்தில திரும்பியிரணும். வந்து, சின்னையாவை ஊருக்கு அனுப்பிச்சி வைக்யலாம். அவன் வந்தும் வருசம் ஏழுக்கு மேல ஆகுது. பிள்ளை பிறந்த மறுநாள் வந்தவன். ம்ம்... செல்லையாப் பயலுக்கு வேற ஏதாவது நல்லபடியாய் ஒரு ஏற்பாடு பண்ணிப்பிடணும். முதல்ல, ஊர்ல போயி ஒரு மாசமாவது இருந்திட்டு வரட்டும். ம்ம்... மரகதம் ஊர்ல அவுக ஆத்தாளோட இருந்திட்டுப் போகுது, அதுவும் இங்கின இருந்தாக்கா நாகலிங்கம் பயலுக்குத் தொழில்ல புத்தி போகாது. நாமள் வருறப்ப அவனையும் கையோட கூட்டியாந்திரணும்...’

     செட்டித் தெருவில் கொஞ்சங் கொஞ்சமாய்க் கலகலப்புக் கூடியது. வட்டிக்கடை மாமூல் வரன்முறைகள் படிப்படியாய் நடப்புக்கு வரலாயின. பெட்டியடிப் பையன்கள் கைப்பெட்டிகளுக்குப் பின்னால் விறைத்த முதுகினராய்ச் சம்மணம் கூட்டி, இறுகிய வாயுடன் கொலுப் பொம்மைகள் போல் அமர்ந்திருந்தனர். அடுத்தாட்கள், பழைய அண்டிமன் சீட்டுகளைப் புரட்டிப் பொறுக்கி எடுத்துக் கொண்டு வசூலுக்குப் போய் வந்தார்கள். முதலாளிகள் பளிங்குத் திண்ணைகளில், வெல்வெட் திண்டுகளை அணைத்துப் புரளலாயினர். “ஏஎன், இந்தா வந்திட்டேன்!” எனும் சமையல்காரர்கள் குரலில் பணிவு மிகலாயிற்று.

     ஊருக்கு எழுதிப் பழைய பத்திரிகைக் கட்டுகளை வரவழைத்துப் படித்தனர். உற்றார் உறவினரிடமிருந்து வந்த கடிதங்களை ஒருவருக்கொருவர் படித்துக் காட்டி மகிழ்ந்தார்கள். ஆதாணிப் பட்டி வட்டகையில் கொட்டுக் கொட்டென்று ஏழு நாள் மழை கொட்டி, ‘நாரை பறவாத நாற்பத்தாறு மடைக் கண்மா’யில் ஒரு நாளும் இல்லாத திருநாளாய் மறுகால் போனதும், சூரங்குடி ஐயனார் கோயில் பெரிய கோபுரம் உச்சிப் பொழுதில் கடகடவென்று இடிந்து விழுந்ததும், சின்னமங்கலம் மஞ்சு விரட்டில் ஏரியூர் மயிலைக் காளையிடம் வல்லாளன்பட்டி ஐயன் குத்துப்பட்டு அறம்புறமாய் வீழ்ந்ததும், அரும்பெரும் நிகழ்ச்சிகளாக மீண்டும் மீண்டும் பேசி வியக்கப்பட்டன.

     செல்லையா நாள் தவறாமல் தண்ணீர்மலையான் கோயிலுக்குப் போய் வந்தான். புருவக் கோடுகளிடையே பட்டும்படாத சிறு பொட்டாக இருந்து வந்த திருநீறு, நாளடைவில் நெற்றி முழுவதும் எப்போதும் பரவி நிற்கலாயிற்று. இளமை வெறியும் ஆர்வத் துடிப்பும் மிகுந்து விளங்கிய முகத்தில் இப்போது சோர்வுக் களை படர்ந்து கொண்டிருந்தது.

     கருப்பையா மாறலில் வெள்ளிக்கிழமையன்று மரகதத்துக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பினான். அதற்குப் பதிலாக வாய்வழிச் செய்தியுடன் மறுநாள் சமையலாள் வந்தார்.

     ‘உங்கள் காலில் விழுந்து கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். எனக்குக் கடிதம் எழுத வேண்டாம். என்னைப் பார்க்கும் முயற்சியும் வேண்டாம். இனிமேல் நம்மால் ஆவது ஒன்றுமில்லை. தண்ணீர்மலையான் விட்டபடி நடக்கட்டும்.’

     தோல்வியின் விளைவாய் இங்கும் அங்கும் சிதறிப் போன இந்திய தேசிய ராணுவ நண்பர்கள் ஒருவர் இருவராய்த் திரும்ப்ப் பழைய - புதிய பிழைப்புத் துறைகளில் ஈடுபடலாயினர். பர்மாவில் சிறைப்பட்டுத் தாயகம் சென்று விடுதலையானோர் தகவல் தெரிவித்தார்கள். இந்தோ - சீனா, இந்தோனேசியா முதலிய நாடுகளிலிருந்து வந்து படையில் சேர்ந்தவர்கள் பழைய பிழைப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

     மாணிக்கம் பழையபடி தானா மேரா எஸ்டேட் வேலையை ஏற்றுத் தமிழாராய்ச்சியிலும், ‘கவலையற்ற’ வாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தான்.

     வெற்றி வீரனாய் டில்லிச் செங்கோட்டைக்குள் புகுந்த பின், பாட்டனார் பிறந்து வளர்ந்த திருவாடனைக்குப் போக எண்ணியிருந்த சி.பி. சாமி மீண்டும் பேங்க் வேலைக்குத் திரும்பிக் கறுப்புத் துரையாக மாறிவிட்டான்.

     தென்பாண்டி நாட்டித் தாய் - தந்தையருக்குப் பிறந்தும், தமிழ் தெரியாத நெல்சன் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளான்.

     யுத்த காலத்தில் கோலாலம்பூர்ப் பெரும் புள்ளிகள் சிலரைப் பகைத்துக் கொண்டே கே.கே. ரேசன் இப்போது பேங்காக் நகரில் காலந்தள்ளுகிறான்.

     எள் என்றால் எண்ணெய் கொண்டு வரும் ராஜதுரை மது அரக்கனின் கைப்பொம்மையாகி விட்டான்.

     ‘புல்லு தின்னி’ மணி - கடைசி வரை விடாப்பிடியாகச் சைவ நெறியைக் காத்த அந்தப் பிராமண வீரன் - சிங்கப்பூர் ஹார்பர் போர்டில் வேலை பார்க்கிறான்.

     அப்துல் காதரும், பழனியப்பனும் சொந்தக் கடை முதலாளிகள்...

     செல்லையாவின் நினைவுப் பாதையில் பளிச்சென்று ஒரு வீரன் தென்பட்டான்.

     பாண்டியன்! ஆஅஅ! மாவீரன், தமிழறிஞன், அவனும் மாணிக்கமும் கிண்டலும் தர்க்கமுமாய்த் தமிழ் ஆராய்ச்சி நடத்துவதை நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே. இந்தோனேசியாவுக்குத் திரும்பியிருக்கிறானே. மீண்டும் அவனைப் பார்க்க முடியுமா? அங்கு வாளா இருப்பானா? மாட்டான். புரட்சிப் படையில் சேருவது திண்ணம். அவன் ரத்தத்திலேயே புரட்சி கலந்து போயிருக்கிறது. நாற்பத்திரண்டில் மெடானிலிருந்து படகில் சரக்குப் போட்டு வந்து சீனி முகமது ராவுத்தர் கடையில் இறங்கியிருந்தான். அவனும் அப்துல் காதரும் பினாங்கு ஸ்ட்ரீட்டில் நடந்து வந்த பொழுது, கடைக்கு முன்பாக முதல் முதலில் பார்த்தேன். எல்லோருமாகப் படையில் சேர்ந்து சிங்கப்பூர் ராணுவ அதிகாரிகள் பள்ளியில் பயிற்சி பெற்றோம். பிறகு மெடான் செல்வதற்காக பேங்காக்கிலிருந்து திரும்பியவனைப் பார்த்தேன். அதற்கிடையே... கோத்தபாலில் ரகசியப் பள்ளியில் சிறப்புப் பயிற்சி பெற்றான். ஜாராங்கில் படைப் புரட்சிக்குத் தலைமை தாங்கி முகாமைக் கைப்பற்றி, சில பெரிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றினான். பெயரைக் கேட்டதுமே எதிரிகள் கிடுகலங்கும் கெம்பித்தாய் மேஜர் சடாவோ யாமசாக்கியை விரட்டிச் சென்று தீர்த்துக் கட்டினான். சுந்தரத்துக்கு மாரடைப்பு. அவனையெல்லாம் இனிமேல் பார்க்கப் போகிறேனா? எந்த ஊரான்? சின்னமங்கலம் சின்ன மங்கலம். எல்லோரும் எங்கெங்கோ தத்தம் மனத்துக்கு ஒட்டிய வேலைகளுக்குச் சென்று விட்டனர். நான் ஒருவன் தான்...

     செல்லையாவின் நினைவிலிருந்து அகன்று போன சிலர் சற்றும் எதிர்பாராத வகையில் பினாங் ரோடிலோ, நியூ பீச்சிலோ எதிர்ப்படுவார்கள். ஒரு நாள் கெக் செங் கடையில் காபி குடித்துக் கொண்டிருந்த போது, பாசிச எதிர்ப்புப் படை காப்டன் லிம் கியூ வந்தான். அதே அப்பாவி முகம்; கள்ளங் கபடமற்ற முறுவல்; நெஞ்சாழ நம்பிக்கையுடைய அழுத்தமான பேச்சு. ஆயுதத் தளவாடங்கள் கிடைத்தால் வாங்கித் தரும்படி கேட்டான். செல்லையா கையை விரித்தான். “ஆயுதங்களோடு வெளியேறிய இந்திய தேசிய ராணுவத்தினர் குறைவு. கொண்டு வந்த சிலரும் ஆயுதங்களை எங்கெங்கோ எறிந்து விட்டார்கள்.” பாசிச எதிர்ப்புப் படையில் சேர்ந்து அடிமைப்பட்டிருக்கும் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறும்படி லிம் கியூ அழைத்தான். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து மலேயாவில் மாபெரும் போர் தொடங்கப் போகிறதென்றும் சொன்னான். சண்டை சச்சரவு கசந்துவிட்டதென்று சொல்லி ஒரேயடியாக மறுத்து விட்டான் செல்லையா.

     லிம் கியூவைப் பார்த்த மறுநாள் வின்சர் கூத்து மேடையில் இன்ஸ்பெக்டர் குப்புசாமியைச் சந்தித்தான். சிம்பாங் தீகா பற்றிக் கேட்டார். கூறினான். திடுமென ஆவேசம் வந்தவர் போல் செல்லையாவின் தோளைப் பற்றிக் கொண்டு, “எ டாமில் ரோமல்! எ டாமில் ரோமல்!” என்று கத்தினார். புகழ்பெற்ற ஜெர்மன் ‘மின்னல் போர்’ சேனாபதி ரோமலுக்கு சமமான வீரன், தீரன், ஆரன் என்று அலங்காரச் சொற்களைத் தாராளமாகப் பயனித்து, விஸ்கிக் குரலில் என்னென்னவோ கூறினார். அருகில் நின்றோர் வியப்புற்றுப் பார்த்தார்கள்.

     காட்சி முடிந்ததும் இருவரும் மேல்மாடியில் இருந்த சீன ரெஸ்டாரன்டுக்குப் போனார்கள். அவர் பீர் பருகினார். செல்லையா காபி குடித்தான். படிக்கட்டில் இறங்கி வரும் போது பேச்சோடு பேச்சாக, முந்திய நாள் கெக் செங் கடையில் லிம் கியூவை அவன் சந்தித்தது பற்றிக் குறிப்பிட்டார். பிறகு, “சின் பெங் கும்பலுடன் அறவே தொடர்பு கூடாது. இது உனக்கு எனது வேண்டுகோள் - எச்சரிக்கை!” என்று காதோடு காதாகச் சொல்லிவிட்டுப் போனார்.

     மரகதத்தின் நினைவு வந்து உறுத்தும் போதெல்லாம் செல்லையா தன்னைத் தானே நொந்து கொள்வான். ‘பினாங்குக்கு ஏன் வந்தேன்? ஊரிலேயே இருந்திருக்கக் கூடாதா?’ மரகதத்தை மணக்கும் வாய்ப்புக் கிட்டாதென்று உள் மனம் கூறியது. எதிர்பாராத வகையில் நன்முடிவு ஏற்படலாமென்ற நம்பிக்கையும் இடையிடையே சுடர்விட்டுத் தோன்றிக் கொண்டிருந்தது.