-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
gws
எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்
எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank
எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
(நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
எட்டுத் தொகை | பத்துப்பாட்டு | பதினெண் கீழ்க்கணக்கு | ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் | வைஷ்ணவ நூல்கள் | சைவ சித்தாந்தம் | மெய்கண்ட சாத்திரங்கள் | பண்டார சாத்திரங்கள் | சித்தர் நூல்கள் | கம்பர் | ஔவையார் | ஸ்ரீ குமரகுருபரர் | திருஞானசம்பந்தர் | திரிகூடராசப்பர் | ரமண மகரிஷி | முருக பக்தி நூல்கள் | நீதி நூல்கள் | இலக்கண நூல்கள் | நிகண்டு நூல்கள் | சிலேடை நூல்கள் | உலா நூல்கள் | குறம் நூல்கள் | பள்ளு நூல்கள் | அந்தாதி நூல்கள் | கும்மி நூல்கள் | இரட்டைமணிமாலை நூல்கள் | பிள்ளைத்தமிழ் நூல்கள் | நான்மணிமாலை நூல்கள் | தூது நூல்கள் | கோவை நூல்கள் | கலம்பகம் நூல்கள் | சதகம் நூல்கள் | பிற நூல்கள் | தினசரி தியானம்



முன்னுரை

     கடலுக்கு அப்பால் கதை 1956ல் எழுதி முடிக்கப்பட்டது. அது முதல் இதைப் படித்துப் பார்த்த பிரசுர கர்த்தர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், கதை எழுத்தாளர்கள் பலப்பலர். ஆயினும் நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் பரிசு பெறும் வரை இதற்கு அச்சேறும் வாய்ப்புக் கிட்டவில்லை.

     குறிப்பிட்டதொரு காலவரையறையை மனத்திற் கொண்டு அவசர அவசரமாக எழுதியதாலும், பிற்பாடு தேவையெனக் கருதிய திருத்தங்களைச் செய்வதற்குப் போதிய அளவில் தொடர்ச்சியாக ஓய்வு கிடைக்காததாலும் விரும்பும் அளவுக்கு நிறைவாய்க் கதை அமையவில்லை என்று இப்போது என் மனத்தில் படுகிறது. இது இயல்பே.

     இரண்டாவது உலகப் போர்க்காலத்தில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு கடலுக்கு அப்பால் கதை என்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தமிழ்ச் சினிமாக் கொட்டகையாக இருந்த வின்சர் இப்போது புத்துருப் பெற்று ஆங்கிலப் படங்களை மட்டுமே திரையிடும் காப்பிட்டல் ஆக மாறிவிட்டது என்று அறிகிறேன். செட்டி தெருவையும் சூளியா தெருவையும் பினாங்கு ரோட்டையும் பர்மா ரோட்டையும் பழைய உருவில் பார்க்க முடியாது என்பது திண்ணம்.

     பினாங்கில் ஓடுவது டிராம் அல்ல; டிராலி. ஆயினும் அனைவரும் டிராம் என்றே அழைப்பதால் அந்தப் பெயரையே உபயோகித்துள்ளேன். பினாங் செட்டி தெரு கிட்டங்கி வர்ணனை அப்படியே அப்பட்டமாக இல்லாமல் எல்லா ஊர்ச் செட்டி தெருக் கிட்டங்கிகளுக்கும் பொருந்து வகையில் மாற்றப்பட்டிருக்கிறது. செட்டிய வீட்டு ஆள் என்பது ஜாதியைக் குறிக்காது. லேவா தேவித் தொழிலில் சம்பந்தப்பட்டவர் என்பதே அதன் அர்த்தம். இன்னொன்று லேவா தேவித் தொழிலில் ஈடுபட்ட தமிழர்கள் அனைவரும் - இந்தோனேசியாவைப் பொறுத்தவரை வேட்டி கட்டுவோரெல்லாம் செட்டியார்கள் என்பது சீனா, மலாய்க்காரர்களின் நம்பிக்கையாகும்.

     காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது உண்மையாகலின், இந்தக் கதை பற்றி நான் விமர்சிப்பது ஒரு கால் தற்புகழ்ச்சியாக முடியக்கூடும். ஆகவே அந்த வேலையைப் பிறருக்கு விட்டு வைக்கிறேன்.

     நாவலைப் பிரசுரிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் தோற்றதன் விளைவாகப் பிரசுரிக்கும் எண்ணத்தையே மனத்திலிருந்து அகற்றிவிட்ட என்னைக் கடைசி முயற்சியாக நாராயணசாமி ஐயர் நாவல் போட்டிக்கு அனுப்பிப் பார்க்குமாறு வற்புறுத்தி அவ்வாறே செய்ய வைத்தவரான எனது நண்பர் திரு. நா. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

ப. சிங்காரம்
மதுரை
18.12.1963