உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பாகம் ஒன்று 5. மாணிக்கம் பினாங் போலீஸ் மாளிகைக்குத் தெற்கே, கிம்பர்லி தெருவிலுள்ள நான்யாங் ஹோட்டலில் வாசல்களும் ஜன்னல்களும் இறுக்கி மூடப்பட்டிருந்தன. பின்புற வாசலை அடுத்திருந்த மாடிப் படிக்கட்டு ஓரத்தில், மேசை மீது மண்ணெண்ணெய் விளக்கு மங்கலாக எரிந்தது. அருகே கிடந்த மூங்கில் முக்காலியில் லிங்வான், கண் மூடி அமர்ந்திருந்தான். நாடியை உள்ளங்கையில் தாங்கியவாறு முழங்கைகள் மேசையில் ஊன்றி நின்றன. வாயில் ஏதோ ஒரு நாற்றம் பிடித்த சிகரெட் புகைந்தது. இடையிடையே, திடுக்கிட்டவன் போல் கண்களை விழித்துச் சுற்றுமுற்றும் பார்த்தான். அதோடு, சிகரெட்டை வலக்கையில் எடுத்துக் கொண்டு, காறித் தரையில் துப்பிக் காலால் தேய்த்து விட்டான். பிறகு, வாயில் சிகரெட் ஏறியதும் பழையபடி கண்கள் மூடின. பழக்கமான குரல்கள் கூப்பிடுவது கேட்டால், மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று கதவைத் திறந்து விட்டு, மறுபடியும் அதே வேகத்தில் மூடினான். பிறகு, வழக்கமான வரவேற்புரை; “தபே, துவான், என்ன வெகுநாளாய்க் காணோமே?” நான்யாங் ஹோட்டல் தோன்றி 28 ஆண்டுகள் முடிந்து விட்டன. இரவும் பகலும் கதவைத் திறந்து வைத்துச் சளசளவென்று தொழில் நடத்திய காலத்திலும் சரி, இந்த இருட்டடிப்புக் காலத்திலும் சரி, பின்வாசல் வழியாக மாடிக்குப் போன தமிழர்களின் தொகை கணக்கில் அடங்காது. தார்மடி வேட்டியும் மழித்த தலையுமாய் வந்து சைகை காட்டியவர்கள், தட்டு வேட்டியும் வெட்டுக் குடுமியுமாய் வந்து பதுங்கியவர்கள், சராயும் தொப்பியுமாய் வந்து கலவரம் செய்தவர்கள், தட்டுத்தடுமாறிப் படியேறி வந்து வாந்தி எடுத்தவர்கள்; இப்படி எத்தனை எத்தனையோ ஆட்கள்! லிங்வான், வாயில் புகைந்த சிகரெட்டைத் துப்பிவிட்டு, கால்களைத் தூக்கி மேசைமேல் வைத்தான். மூக்கிலிருந்து மெல்லிய குறட்டை ஒலி கிளம்பியது. “லிங்வான்!” காதில் அடிப்பது போல் வெளியிலிருந்து குரல் வந்தது. முக்கி முனங்கிக் கொண்டே எழுந்து போய்க் கதவைத் திறந்தான். “ஆஅஅ! தபே, துவான், தபே, தபே” தலையைச் சொறிந்து நின்றான். மாணிக்கம் சட்டைப் பைக்குள் கையைவிட்டு, சிகரெட் பெட்டியை எடுத்து ஐந்தாறு சிகரெட்டுகளை உருவி நீட்டினான். லிங்வான் இடது கையால் வாங்கிக் கொண்டு நன்றி கூறினான்; “திலிமா கசி துவான், பாஞா திலிமா சுசி.” மாணிக்கம் நெருங்கிச் சென்று, வலது கையை உயர்த்தி மாடியைச் சுட்டினான். மாடியில் இருந்தவர்கள் பற்றி விவரமாகத் தகவல் ஒப்பித்தான் லிங்வான். அவன் கையில் 5 டாலர் நோட்டு ஒன்றைத் திணித்து விட்டு, மாணிக்கம் படிக்கட்டில் ஏறினான். மாடி ஹாலில் உடைந்த மேசை ஒன்றின் மீது சுருண்டு கிடந்த ஹோட்டல் முதலாளி பாஞ்சாங், காலடி ஒலியைக் கேட்டுக் கண்ணைத் திறந்தான். “தபே, துவான், தபே, தபே” குதித்து நின்றான். தெற்கு வடக்காகவும் கிழக்கு மேற்காகவும் சென்ற இடைவழியில் மாணிக்கம் மெதுவாக நடக்கலானான். இருபுறமும் வரிசையாக இருந்த பலகைச்சுவர் அறைகளில் பேச்சரவமும் சிரிப்பொலியும் கேட்டது. கதவு சரியாய் மூடப்படாதிருந்த சில அறைகளுக்குள் மங்கலான அலங்கோலக் காட்சிகள் தென்பட்டன. மேற்குக் கடைசியில், முகமூடி போட்ட விளக்கின் கீழே பளிங்கு பதித்த வட்டமேசை கிடந்தது. சுற்றி உட்கார்ந்திருந்த ஆண்களும் பெண்களும் அயர்ந்த கண்களுடன் உளறிக் கொண்டிருந்தனர். புதிய அளைக் கண்டதும் சிறிது நேரம் மேசையைச் சுற்றி அமைதி நிலவியது. பெண்களின் தோள்கள் நெளிந்தன; கண்களும் உதடுகளும் வழக்கமான குறிப்பைத் தெரிவித்துக் குழைந்தன. பயனில்லை. மீண்டும் உளறல் தொடங்கியது. காலியாயிருந்த மூன்றாம் நம்பர் அறையை, பாஞ்சாங்கின் நேரடி மேற்பார்வையில் பையன் சுத்தம் செய்த பிறகு, மாணிக்கம் உள்ளே நுழைந்து படிக்கட்டுப் பார்வையாய் நாற்காலியில் உட்கார்ந்தான். கோப்பி - பால் கலக்காத காபி - கொண்டு வரும்படி கட்டளை பிறந்தது. பாஞ்சாங்கும் பையனும் வெளியே விரைந்தார்கள். ஐந்தாம் நம்பர் அறையில் மாத வாடகைக்கு இருந்த ஜீனம் திடுமென உள்ளே நுழைந்து, மாணிக்கத்தின் கன்னங்களை வருடினாள். “சாயா பூஞா சிந்தா!” தொண்டையிலிருந்து ஆசைக் குரல் கிளம்பியது. “போ வெளியே” உறுமினான். கண்களில் ஏக்கமும் அச்சமும் கூடி ஒளி வீச, அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் ஜீனம், பிறகு, உதட்டைப் பிதுக்கித் தோளைக் குலுங்கியவாறு அழுத்தமான காலடி ஓசையுடன் வெளியேறினாள். “கோபால் வந்தானா?” “கோப்லா... இல்லே.” “கோப்லா மரி கலுசீனி பாவா.” கோபால் வந்ததும் அழைத்து வரும்படி தெரிவித்தான். “பாய்க் துவான்” பாஞ்சாங் திருப்பி நடந்தான். தலையிலிருந்த தொப்பியை எடுத்து மேசைமேல் வைத்த மாணிக்கம், காலை நீட்டிச் சாய்ந்தான். இடது கை தலை முடியைக் கோதிற்று. வலது கையில் சிகரெட் புகைந்தது. பாதி மூடிய கண்களின் பார்வை படிக்கட்டின் மீது பதிந்து நின்றது. ஆண்களும் பெண்களும் - தமிழர், சீனர், மலாய்க்காரர் - ஏறினார்கள்; இறங்கினார்கள். அறைக்குள்ளிருந்து, நடித்தெழும் அவசரக் குரல்களும், அதிருப்தியைக் காட்டும் கோபக் குரல்களும் கிளம்பி வந்தன. மாணிக்கத்துக்கு 24 வயது நடந்து கொண்டிருந்தது. ஒல்லியாய் வளர்ந்திருந்த பொதுநிற உடல், நரம்புக் கட்டுடன் திரண்டிருந்தது. விரிந்த நெற்றிக்கு மேல், கரிய முடி தலையோடு ஒட்டிச் சீவப்பட்டிருந்தது. தடித்த உதடுகள் சிகரெட் புகையால் கருத்திருந்தன. அவனை அழகன் என்று சொல்ல முடியாது. ஆனால், கவர்ச்சி குறித்து ஐயமே இல்லை. போகிறபோக்கில் ஒருமுறை பார்த்தவர், “இவன் யார்?” என்ற கேள்விக்குறியுடன் இரண்டாவது முறை திரும்பிப் பார்க்குமாறு செய்யக் கூடியது அவனுடைய கம்பீரமான தோற்றம். சுங்குரும்பை என்ற புக்கித் மெர்த்தாஜத்தில் சில்லரையாக லேவாதேவித் தொழில் நடத்தி வந்த சருகணி சுப்பையாபிள்ளை என்ற சுப்பையா கோனாரின் தலைமகன் மாணிக்கம். அவனை மலேயாவுக்கு அழைது வந்து, முதலில் சுங்குரும்பையிலும் பிறகு பினாங் நகரிலும் படிக்க வைத்தார் சுப்பையாபிள்ளை. பினாங்கில் படித்தபோது, வானாயீனா மார்க்கா கடையில் உண்டிக்கும் உறைவிடத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார். பையன் சீனியர் கேம்பிரிட்ஜ் பரீட்சை தேறியதும், அவனை சா.ராம.மார்க்காவில் சேர்த்து ஆளாக்கி விட வேண்டுமென்று தந்தை விரும்பினார். ஆனால் பையனுக்கோ வட்டித்தொழில் வேம்பாகக் கசந்தது. தந்தை என்னென்னமோ சொல்லிப் பார்த்தார். மகன் மசியவில்லை. கடைசியில் லாயர் வன்னியசிங்கம் சிபாரிசினால் தானாமேரா ரப்பர் தோட்டத்தில் கிராணி வேலை கிடைத்தது. ஜப்பானியப் போர் தொடங்குவதற்கு இரண்டு வாரம் முன்னால், மூன்று மாதத்தில் திரும்பும் நோக்கத்துடன் கப்பலேறிய சுப்பையா பிள்ளை, யுத்தம் காரணமாகத் திரும்ப முடியாமல் போயிற்று. இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்த மாணிக்கம், சிங்கப்பூர் ஆபீசர்ஸ் ட்ரெய்னிங் ஸ்கூலில் பயிற்சி பெற்றான். இரண்டு கைகளிலும் பிஸ்டல்களைப் பிடித்து ஏக காலத்தில் வெவ்வேறு குறிகளைச் சுடுவதில் வல்லவனாய் விளங்கிய அவனுக்கு, அங்கேதான் ‘இரட்டைக் கையன்’ என்ற பட்டப் பெயர் கிடைத்தது. 7வது கொரில்லா ரெஜிமென்ட்டில் சிறிது காலம் சேவை செய்தபின், செக்யூரிட்டி சர்வீஸ் அதிகாரியாக பினாங் பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தான். கடிகாரத்தைப் பார்த்தான், அரை மணி நேரம் ஆகிவிட்டது. இந்தப் பயலை இன்னும் காணோமே. யுத்தம் நின்று நான்கு நாளாகியும் எவ்வித உத்தரவுமில்லை. நேதாஜி எங்கிருக்கிறாரென்று தெரியாது. நாளைக்கு ஈப்போவில் கூட்டம் என்ன முடிவு செய்யலாம்...? கோபாலும் மலாய்க்காரி ஒருத்தியும் ஒருவர் மேல் ஒருவர் உராய்ந்தவாறு படிக்கட்டில் ஏறி வந்தார்கள். பொன்னையாவும் இன்னொரு மலாய்க்காரியும் பின் தொடர்ந்தனர். மல்லிகைப் பூவும், மலிவு விலை அத்தர் மணமும் கலந்த வாடை மூக்கைத் துளைத்தது. மாணிக்கம் கைக்குட்டையை எடுத்து மூக்கின் மேல் வைத்து மூடினான். வந்தவர்கள் படிக்கட்டுத் தலைப்பை அடைந்தனர். கோபாலிடம் மூன்றாம் நம்பர் அறையைச் சுட்டிக்காட்டி மாணிக்கம் கூப்பிட்டதாகத் தெரிவித்தான் பாஞ்சாங். மங்கையின் தோள் மீதிருந்த பொன்னையாவின் கை கீழிறங்கியது. கோபால் ஏதோ சொன்னான். பொன்னையாவும் மலாய்க்காரிகளும் அந்தப்புரத்தை - பின்புறம் தனியே இருந்த பெரிய அறையை - நோக்கி நடந்தார்கள். “ஜே ஹிந்த், லெப்டினன்ட்!” கண்களை மேலேற்றி, உதட்டைத் துருத்தி முறுவல் பூத்தவாறு வந்து உட்கார்ந்தான் கோபால். “நீ ஏன் இன்னும் ஓடி ஒளியவில்லை? கெம்பித்தாய் ஆட்களைத் தீர்த்துக் கட்டுவதுதான் சின்பெங்கின் முதல்வேலை.” “பினாங்கை விட்டுப் போக மனம் வரவில்லையே...! முதல் தேதிதான் மவுண்ட் பேட்டன் வருகிறான்; பார்த்துக் கொள்ளலாம்.” மேசை மேல் கிடந்த பெட்டியை எடுத்து, ஒரு சிகரெட்டை உருவிப் பற்ற வைத்தான். “உன்னை இன்று கட்டாயம் பார்க்க வேண்டுமென்று இச்சியாமா சொன்னான்.” “அவனை எப்பொழுது பார்த்தாய்?” “எட்டு, எட்டரை மணி இருக்கும்.” “ஏதாவது முக்கிய விஷயமாக இருக்குமா, வெறுங்கதை பேசவா?” “கதையா! சரண்டர் நாளிலிருந்து கோம்பை நாய்போல் எரிந்து விழுகிறான்.” “இப்பொழுது எங்கிருப்பான், நியூ பீச்சில் பார்க்கலாமா?” “அங்குதான் வரச் சொன்னான். நேற்று என்னைத் தனியே அழைத்து, பிரிட்டிஷ் நோட்டாக 300 டாலர் கொடுத்தான்; எங்காவது அயலூரில் போய்க் கொஞ்ச நாள் தலைமறைவாயிருக்கும்படி யோசனை சொன்னான்.” “நல்ல யோசனை. ஐ.என்.ஏ. ஆட்கள் விஷயத்தில் சின்பெங் தலையிட மாட்டான் என்று தெரிகிறது. கெம்பித்தாய் விவகாரம் வேறு. வெறும் மொழிபெயர்ப்பு வேலை என்று என்னதான் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்... நேதாஜி எங்கிருக்கிறார், தகவல் உண்டா?” “சிங்கப்பூரில் இருப்பதாக உள்ளூர் கெம்பித்தாய்க்குத் தகவல். ஆனால் நேற்று விமானப்படை கேப்டன் ஒருவன் வந்திருந்தான். நேதாஜியும் கர்னல் ஹபீபுர் ரஹ்மானும் பேங்காக்கில் இருக்கிறார்கள் என்றான். அதற்கு மேல் கிண்ட முடியவில்லை.” “கோபால், நாளைக்கு ஈப்போவில் நம் ஆட்கள் கூட்டம்... நிலைமை படுமோசமாக இருக்கிறது. இன்று மட்டும் சுமார் இருநூறு கொரில்லாக்கள் பினாங்கில் இறங்கியிருக்கிறார்கள்.” “14ம் தேதி முதல் சண்டையை நிறுத்தும்படி ஜப்பானிய ராணுவத்துக்கு உத்தரவு. அதே போல் சின்பெங்குக்கும் தாக்கீது போயிருக்கிறதாம். இருந்தாலும் காட்டுப் பகுதிகளில் தொடர்ந்து மோதல் நடக்கிறது.” “முடிந்த வரையில் துப்பாக்கி சேர்ப்பதில் சின்பெங் முனைந்திருக்கிறான். நாளை ஈப்போ கூட்டத்துக்கு எல்லா முகாம்களில் இருந்தும் பிரதிநிதிகள் வருகிறார்கள். இப்பொழுது முதல் வேலை, முகாம்களில் உள்ள நம் ஆட்களை வெளியேற்றிச் சட்டை மாற்றுவதுதான்... நீ நாளையே கோலாலம்பூருக்குப் புறப்படு. அங்கு கே.கே. ரேசனைப் பார். வேண்டிய உதவிகளைச் செய்வான்.” “பினாங்கிலேயே இருந்தால் என்ன?” “சீ, மடையா! முதல் தேதி என்னென்ன கூத்து நடக்கப் போகிறதோ, யார் கண்டது? வீண் சச்சரவுக்கு இடம் கொடுக்கக் கூடாது.” “சரி, நாளைக்கே புறப்படுகிறேன்” கோபால் எழுந்து, அறைக்குள் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தான். “ஜப்பானுக்கு இந்தக் கதி வரலாமா? அணுகுண்டு வீசியிராவிட்டால் இன்னும் நூறு வருஷம் சண்டை பிடிப்பார்களே!” “அதெல்லாம் கதை. யுத்தம் நடத்த வெறும் வீரம் போதாது. எடுக்க எடுக்கக் குறையாத அளவில் ஆயுதத் தளவாடங்களும் பொருள் வளமும் தேவை.” “இருந்தாலும் இந்தக் கதி...” பட்டுத் துணிச் சரசரப்புடன் கூடிய கால் நடை ஓசை காதில் விழுந்தது. மல்லிகை மணம் கிளம்பிற்று. கோபாலுடன் வந்த - வாட்ட சாட்டமாய் - திரண்டுருண்டு வளர்ந்திருந்த - மலாய்க்காரி அறைக்குள் நுழைந்து நின்றாள்; கண்கள் சுழன்றன. “ஆப்பா இனி, கிசுகிசுசக்காய்?” அழகிய வாயிலிருந்து இனிய நாதம் வந்தது. மாணிக்கம் திரும்பினான்; கண்கள் எரித்து விடுபவை போல் மலாய்க்காரியை நோக்கின. கோபால் கையை ஆட்டி, வெளியே போகும்படி சைகை காட்டினான். வந்தவள் சில விநாடிகள் மாணிக்கத்தை நோட்டமிட்டாள். பிறகு, உதட்டை மடித்து அழகு காட்டிவிட்டு வெளியே நடந்தாள். “யாரிவள். புதிதாய்க் கிளம்பியவளோ?” “பர்மா ரோட்டில் அகப்பட்டாள். புதுச்சரக்கு போல்தான் தெரிகிறது.” “சரி சரி. இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தச் சனியனெல்லாம் வேண்டாம்” எழுந்தான். “கோலாலம்பூர் சேர்ந்ததும் தகவல் அனுப்புகிறேன். ஜே ஹிந்த்.” கோபால் அந்தப்புரத்தை நோக்கி விரைந்தான். மாணிக்கம், அறையிலிருந்து வெளியேறிப் படிக்கட்டில் இறங்கினான். பாஞ்சாங் பின் தொடர்ந்தான். “எட்டாம் நம்பர் அறையில் யார்?” “ஈப்போ சீன வியாபாரி. கூட இருப்பவன் கிலிங். மன்னிக்கவும் தமிழ்ப் பெண் - கிழவி. பதினைந்து வருஷமாக இருவரும் வந்து கொண்டிருக்கிறார்கள். வியாபாரி நல்ல மனிதர். ஒரு வம்புக்கும் போகமாட்டார்.” “வயதான ஆளா?” “முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும்.” “முகத்தில் அம்மைத் தழும்பு இருக்கிறதா?” “இல்லை.” மாணிக்கம் வாசலை நோக்கி நடந்தான். லிங்வான் கதவைத் திறந்தான். தெருவில் இறங்கியவன், கெம்பித்தாய் மேஜர் கெனியோச்சி இச்சியாமாவைப் பார்க்க விரைந்தான். கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|