உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பாகம் இரண்டு 4. அன்று நடந்தது வடமுகமாய் நடந்து கொண்டிருந்தான். மடங்கிய இடது கை முதுகோடு ஒட்டியிருந்தது. வலது கையில் சிகரெட் புகைந்தது. முதலாளி என்ன சொல்வார்? ‘யாரைக் கேட்டுக்கிணு பட்டாளத்துக்குப் போனாய்?” என்று சீறுவார்... கண்டபடி கத்துவார். ‘வேலையில்லாமல் திரிந்தவனை அழைத்து வந்தேனே; இதுதான் உன் நன்றியோ’ என்பார். மரகதம்? போன தடவை முகத்தைக் கூடச் சரியாகப் பார்க்க முடியவில்லை... காமாட்சியம்மாள்... பாவம்! வடிவேலைப் பறிகொடுத்த துயரம் ஒரு நாளும் தீராது... செவல்பட்டி குருசாமி பிள்ளை என்ற குருசாமி பண்டாரத்தின் மூன்றாவது புதல்வனாய் 1922ல் பிறந்தவன் செல்லையா. அவனுடைய தந்தையும் வயிரமுத்துப் பிள்ளையும் மாண்டலே சா.முரு.பழ.முரு. கடையில் ஒரே சமயத்தில் அடுத்தாட்களாக கொண்டு விற்றவர்கள். இருவருக்கும் ஒரே ஊர்; ஒரே இனம். குருசாமி பிள்ளை கல்யாணம் செய்து கொண்டதோடு, கப்பல் ஏறுவதில்லை என்று முடிவு செய்து, ஊரில் சிறிய புடவைக்கடை வைத்து நடத்தி வந்தார். மூத்த மகன் பர்மாவுக்கும், இரண்டாவது பையன் சுமத்ராவுக்கும் போய் வந்து கொண்டிருந்தார்கள். மூன்றாவது மகனை ‘கவர்மெண்டு’ வேலையில் வைத்துப் பார்க்க விரும்பிய தந்தை, அவனை மதுரைக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். உயர்நிலைப் பள்ளியில் படிப்பு முடிந்ததும், கல்லூரியில் சேர வேண்டுமென்று மகன் தலைகீழாக நின்றான்; செல்வநிலை இடம் கொடுக்கவில்லை. ஆகவே, வேலைக்கு மனுப் போட்டுக் கொண்டும், கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்தும் காலங்கழித்து வந்தான். அப்பொழுதுதான் வானாயீனாவின் பார்வை பையன் மீது சரியாக விழுந்தது. ஆள் வாட்டசாட்டமாக இருக்கிறான். கோண எழுத்தும் படித்தவன். இழுத்துப் போட்டு வைத்தால் பலவகைகளிலும் தோதாயிருக்கும்... விருப்பத்தைக் குருசாமி பிள்ளையிடமும் தெரிவித்தார். வேப்பமரத்துக் கடை குருசாமிபிள்ளை சம்பாத்திய விஷயத்தில் சோப்ளாங்கி என்றாலும், உலக நடப்புத் தெரிந்தவர். மரகதத்துக்கு மாப்பிள்ளை தயாரிக்கிறார் வானாயீனா என்பதைப் புரிந்து கொண்டார். பெருமையினால் நெஞ்சு விரிந்தது. நம்ம சாதி சனத்தில் இவனைப் போல் எத்தனை பயல் இருக்கான்? படிப்பு, அழகு, ஒழுக்கம், அதோடு குடும்பம் எல்லாம் ஒண்ணுபோலச் சேர்ந்துக்கிணு இப்படி எவன்கிட்ட இருக்குது... வட்டித்தொழிலில் செல்லையாவுக்கு நாட்டம் இல்லை. எனினும், தந்தையின் சொல்லைத் தட்ட முடியாமல், உடன்பட்டு வயிரமுத்துப் பிள்ளையுடன் 1939ல் நாகப்பட்டினத்தில் கப்பல் ஏறினான். பினாங்குக் கடையில் சின்னையா பிள்ளை என்ற சின்னையா அம்பலம் மேலாள். செல்லையா தவிர நான்கு அடுத்தாட்கள். அவர்களில் நாகலிங்கம் முதலாளிக்குத் தூரத்து உறவு. பெட்டியடிப் பையன்கள் இருவர். வானாயீனாவின் ஒரே மகனான வடிவேல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். முதலாளியின் மனைவியும் மகளும் ஊர் பார்க்க வந்திருந்த சமயத்தில்தான், ஜப்பான் யுத்தம் தொடங்கியது. பினாங் நகரைத் தாக்கிய ஜப்பானிய விமானங்களின் குண்டுவீச்சுக்குப் பலியான நூற்றுக்கணக்கான தமிழர்களில் ஒருவன் வடிவேல். ஒரு பெரிய விமானம் மிகத் தாழ்வாய்ப் பறந்து சென்றது. அண்ணாந்து பார்த்தபடி நடந்தான். டிசம்பர் 11ம் தேதி காலை. சிக்கந்தர் கடையில் காபி குடித்துக் கொண்டிருந்தான். டுடும்ம்ம்... டுடும்ம்ம்... திடுமெனக் கிளம்பிய வெடி முழக்கம் காதைப் பிளந்தது எல்லாம் கிடுகிடுத்து நடுங்கின. தரை புரள்வது போல் இருந்தது. முடிவு காலம் வந்து விட்டது. இனிமேல் உயிரோடு போய் அம்மாவையும் தங்கச்சியையும் பார்க்க முடியாது. டுடுடும்ம்ம்... டுடுடும்ம்ம்... எங்கே பிறந்து எங்கே வந்து சாகிறோம்... விசை பீரங்கிகள் முழங்கின. டட்டட்டர்ர்ர்... டட்டர்ர்ர்... மேசையடியில் முழங்காலிட்டு, நெஞ்சுக்கும் தரைக்கும் இடையே கைகளை வைத்து விழுந்து கிடந்தான். தரை அதிர்ந்தது. உடல் நடுங்கியது; உள்ளம் துடித்தது. கொஞ்ச நேரத்தில் குண்டு வீச்சு நின்று விட்டது. எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான். யாருமே இல்லை. மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள்... எங்கே போகிறோம், என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் எதிரும் புதிருமாய் ஓடி முட்டிப் புரண்டு அலறினார்கள்... டத்தோ கிராமட் சாலையில் முதலாளி வீடு திறந்து கிடந்தது. ‘ஆறுமுகச் சந்தி சிக்கந்தர் கடையில் இருந்தேனே, இங்கு எப்படி வந்தேன்?’ மரகதமும் காமாட்சியம்மாளும் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார்கள். வானாயீனா பித்துப் பிடித்தவர் போல் நாற்காலியில் சாய்ந்து கிடக்கிறார். “செல்லையா! வடிவேலு எங்கப்பா? ம்... ம்... ம் இப்பத் தானே கடைக்கிப் போறமுனு பிள்ளை போச்சு ம்... ம்ம்... ம்.” “அண்ணே! எங்கண்ணே போயிட்டிக, ம்... ம்... ம்... அண்ணே! ம்... ம்... ம்.” “ஒண்ணும் பயப்படாதியக, நான் ஓடிப் போய் பார்த்திட்டு வர்றென். சாங்கு ஊதினால், கையை நெஞ்சுக்கு அண்டக் கொடுத்துப் படுத்துக்கிடணும்.” தெருவில் இறங்கித் தலைதெறிக்க ஓடினான். இடது உள்ளங்கை நெற்றியைத் தடவியது. வாயில் புகைந்த சிகரெட்டை எடுத்து எறிந்து விட்டுப் புதியது ஒன்றைப் பற்ற வைத்தான். நேற்று நடந்தது போல் இருக்கிறது. எவ்வளவு காலமாகி விட்டது. மக்கள் வெள்ளத்தில் எதிர் நீச்சல் அடித்துச் செட்டித் தெருவை நோக்கி ஓடினான். நெடுகிலும் ஒரே ஓலக்குரல்; போச்சே! போச்சே! எல்லாம் போச்சே! தலையிலும் வயிற்றிலும் அடித்துப் புலம்பினார்கள். தெய்வங்களை அழைத்தார்கள். முருகா! அல்லா! பதினெட்டாம் படிக் கருப்பா! ஓடினவர்கள் ஒருவர் மீதொருவர் மோதிப் புரண்டார்கள். பெண்களும் குழந்தைகளும் சுருண்டு விழுந்து கதறினார்கள். மூட்டை முடிச்சுகளும் பெட்டிகளும் உருண்டு சிதறின. கார், சைக்கிள் ரிக்ஷாக்கள் பறந்து சென்றன. துறைமுகத்தை அடுத்த பகுதியின் பல இடங்களில் பெருந்தீ கொழுந்துவிட்டு எரிந்தது. ஒரே புகை மூட்டம், செல்லையா ஓடினான். சூலியா தெரு - செட்டித் தெரு சந்திப்பில் வடிவேலின் உடல் கிடந்தது. இரு கைகளாலும், மூன்று நாட்களுக்கு முன் வாங்கிய ஸ்போர்ட்ஸ் சைக்கிளின் கைப்பிடியைப் பற்றியிருந்தான். சுற்றிலும் இனம் தெரியாத உடல்களும் உறுப்புகளும் சிதறிக் கிடந்தன. கிழக்கே, வடக்கே, தெற்கே கடைகள் கேட்பாரின்றி எரிந்தன. வானாயீனா மார்க்கா கிட்டங்கியை நோக்கி ஓடினான். திண்ணையில் மூன்று பிணங்கள் சம்மணம் கூட்டி உட்கார்ந்திருந்தன... திரும்பி, வடிவேல் கிடந்த இடத்துக்கு ஓடினான். ஒலி முகமது கடை நெருப்பு தெருவில் பரவி, வடிவேலை அணுகிக் கொண்டிருந்தது. நல்லவேளை...! உடலைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் வீடு போய்ச் சேர்ந்தான்... தாயும் மகளும் முட்டி மோதிக் கொண்டு அழுத அழுகை... எட்டி நடந்தான். ஆள் நடமாட்டம் கூடியது. எதிரே டத்தோ கிராமட் சாலை. “ஜே ஹிந்த்!” வலது பக்கம் பல குரல்கள் சேர்ந்து ஒலித்தன. சுதந்திர விலாஸ் ஹோட்டலில், உயிரை வெறுத்த தோற்றத்துடன் ஐந்தாறு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் ஐ.என்.ஏ. உடையில் காட்சியளித்தார். ஹோட்டலுக்குள் நுழைந்தான். “ஜே ஹிந்த்” எல்லோரும் ஒருமித்து வரவேற்றனர். “ஜே ஹிந்த்” முக்கியமான ஓர் அறிவிப்பு. நேற்று முதல் யூனியன் ஜாக் பறக்கிறது.” “டேய் ராமு! காபி கொண்டாந்து வை.” கல்லாவில் இருந்த ‘பிலாசபர்’ சுந்தர்ராமன், கையிலிருந்த புத்தகத்தை மேசையில் வைத்துவிட்டுக் கூவினான். “வாப்பா தம்பி, நமஸ்காரம்.” “நமஸ்காரம்” கதவை ஒட்டியிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். “செல்லையா, சங்கதி தெரியுமா? நம் ஆட்களை எல்லாம் கண்காணிக்கும்படி சொல்லியிருக்கிறார்களாம். மேனன் பயல்தான் விலாசங்களை எழுதிக் கொண்டு திரிகிறான்.” ஜித்ரா முகாம் லெப்டினன்ட் அரசமுத்து சொன்னான். “போகட்டும் போ. நீ எப்பொழுது வந்தாய்?” காபியை எடுத்துக் குடித்தான். “நேற்று. மேனன் பயலுக்கு செம்மையாய் நாலு போடு போட்டு விடலாமா?” “ஆக வேண்டிய வேலையைப் பார்த்தால் போதும். முதலில் ரத்தப் பாஞ்சாங் போய்ச் சேர். மேனனை அடித்தால் கேள்வி இராது என்று நினைத்தாயா? நீ அவனை அடித்து விட்டுப் போனால், இருப்பவர்கள் எல்லோரும் பூசை வாங்க நேரும்.” “ஓ! மேனன் அவ்வளவு பெரிய கொம்பனா?” “அரசமுத்து, வெறும் தடித்தனத்தால் கெடுதல்தான் வரும். எதையும் கால நேரம் பார்த்துச் செய்ய வேண்டும்.” “சரி, உன்னிடம் யோசனை கேட்டதே தவறு.” முகம் சுளித்தது. பிறகு, செல்லையாவுக்குப் பழக்கமில்லாத இருவரை அறிமுகம் செய்து வைத்தான். முதல் ஆள் கிம்லான் முகாம் சாத்தையா. இரண்டாவது ஆள், ராணுவ உடையில் இருந்தான். “இவன் தான் ராணுவ கவர்னரின் காரை மறித்து சிகரெட்டுக்கு நெருப்புக் கேட்டவன் - சப் ஆபீசர் நடராஜன்.” நடராஜன் கண்களைக் குறுக்கிக் கொண்டு சிரித்தான். ‘ஜித்ரா’ நடராஜனின் திருவிளையாடல்களை அறிந்த நண்பர்களின் சிரிப்பு கலகலத்தது. “நெருப்புக் கேட்டதுக்குப் பிரத்தியா அவன்ட்ட வேட்டி சட்டை கேட்டிருந்தா, இன்னிக்கு ரொம்பப் பிரயோஜனமாயிருக்கும்.” மூக்குக் கண்ணாடி வழியாகக் கண்களை உயர்த்திப் பார்த்தவாறு, கல்லாவில் இருந்தவர் குறிப்பிட்டார். “அஅஆ! அஆஅஅ!” சிரிப்பொலியில் கட்டிடம் அதிர்ந்தது. “செட்டிநாட்டு வெட்டு தெரிகிறதே, அப்படித்தானா?” செல்லையா கேட்டான். “கொஞ்சம் ஒதுங்கிய சரக்கு, பாரிவள்ளல் தலைநகருக்கு அடுத்த ஊர்; கிருங்காக்கோட்டை” நடராஜன் பெருமிதத்தோடு சொன்னான். “நானும் அந்தப் பக்கந்தான்; செவல்பட்டி. இனிமேல் அடிக்கடி சந்திக்கலாம்... நேரமாகிறது. முதலாளியைப் பார்க்க வேண்டும். பிறகு வருகிறேன்.” “ஏப்பா, நீ மீசையை மைனஸ் பண்ணிக்கிட்டுப் போகப்படாதோ? அவர் பார்த்தால் மிரண்டு போயிடுவாரே.” பிலாசபரின் உதடுகள் நீண்டன. மீசையைத் தடவியவாறு புன்னகை புரிந்த செல்லையா விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான். “அது பத்தாதுன்னு குழாய் வேற மாட்டிண்டு போறயே...” கல்லாவில் இருந்தவரின் குரல் பின் தொடர்ந்தது. கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|