15 இன்னும் மூன்று நாள், இன்னும் இரண்டு நாள் என்று எண்ணி எண்ணிக் கடைசியில் பிரயாண தினமே வந்து விட்டது. பகல் ஒரு மணிக்கு விமானம். சிங்கப்பூர் போகிற ஏர் இந்தியா போயிங்கில் பயணத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. முதலில் பினாங்கில்தான் நாடகங்களை நடத்தப்பட வேண்டுமென்று அப்துல்லா கண்டிப்பாகச் சொல்லியிருந்ததனால் சிங்கப்பூரில் இறங்கியதும் உடனே வேறு விமானத்தில் மாறி அவர்கள் மூவரும் பினாங்கு போக வேண்டும். அவர்களை எதிர்கொண்டு அழைத்துச் செல்வதற்காக அப்துல்லா சிங்கப்பூர் விமான நிலையத்திற்கே வந்திருப்பார். பிரயாண தினத்தன்று கோபால் மிகமிக மகிழ்ச்சியாயிருந்தான். மாதவியிடமும், முத்துக்குமரனிடமும் கூட முகத்தைத் தூக்கிக் கொள்ளாமல் கலகலப்பாகப் பழகினான். பங்களாவில் வருவோரும், போவோருமாக ஒரே கூட்டம். போர்டிகோவிலும், தோட்டத்திலும் இடம் போதாமல் - தெருவிலும் 'பார்க்' செய்யப்பட்டிருக்கும் அளவுக்குச் சிறிதும் பெரிதுமாக ஏராளமான கார்கள் 'போக் ரோடே' நிறைந்து காணப்பட்டன. 'ஜில் ஜில்'லும், வேறு பத்திரிகைக்காரர்களும் புகைப்படங்களை எடுத்துத் தள்ளிய வண்ணமிருந்தனர். தேடி வந்திருக்கும் யாரையும் தன் கவனத்திலிருந்து தவறவிட்டு விடாமல் எல்லாரிடமும் சொல்லி விடைபெற்றுக் கொண்டான் கோபால். பெரிய பெரிய மாலைகளை படத் தயாரிப்பாளர்களும், சக நடிகர்களும், நண்பர்களும் கொண்டு வந்து போட்ட வண்ணமாயிருந்தனர். ஹால் முழுவதும் தரையில் ரோஜா இதழ்கள் நெற்களத்தில் நெல்லைப்போல சிதறியிருந்தன. 'பொக்கே'கள் ஒரு மூலையில் மலையைப் போல் குவிந்து விட்டன. பதினொன்றே முக்காலுக்கு விமான நிலையத்திற்குப் புறப்பட ஏற்பாடாகியிருந்தது. விமான நிலையத்திற்குப் புறப்படும்போது கோபாலுடன் அதே காரில் சக நடிகர்களும் பட முதலாளிகளும் சேர்ந்து கொண்டதால் முத்துக்குமரனும் மாதவியும் வேறொரு காரில் தனியே சென்றனர். மீனம்பாக்கத்திலும் பலர் மாலையணிவிக்க வந்திருந்தனர். கூட்டமும் நிறைய இருந்தது. முத்துக்குமரனுக்கு அது முதல் விமானப் பயணம். அதனால் பயணத்தைப் பற்றிய குறுகுறுப்பு மனத்தில் இருந்தது. வழியனுப்புகிறவர்களின் கூட்டம் கோபாலை மொய்த்துக் கொண்டிருந்தது. வழியனுப்ப வந்திருந்தவர்களில் பலரை மாதவி அறிந்திருந்தாலும் அவர்களோடு பேசுவதற்காகவும் சொல்லி விடை பெறுவதற்காகவும் கோபாலருகிலே போய் நின்றால் முத்துக்குமரன் தனியே விடப்படுவான் என்பதை உணர்ந்து அவனருகிலேயே இருந்தாள் அவள். நடுநடுவே கோபால் தன் பெயரைச் சொல்லி கூப்பிட்டு ஏதேதோ கேட்ட போதும் கூட அதற்குப் பதில் சொல்லிவிட்டு மறுபடி முத்துக்குமரனின் அருகிலேயே வந்து நின்று கொண்டாள் அவள். ஆடம்பரமும் பரபரப்பும் நிறைந்த அந்தக் கூட்டத்தில், 'தான் தனியே விடப் பட்டிருக்கிறோம்' - என்று முத்துக்குமரன் எண்ணாதபடி அவனருகே இருக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதை மாதவி உணர்ந்தாள். அவனுடைய இதயம் அவளுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. தான் அப்படி முத்துக்குமரனின் அருகிலேயே ஒட்டிக் கொண்டு நிற்பதைக் கோபால் வித்தியாசமாக எடுத்துக் கொள்வானோ என்ற பயம் இருந்தாலும் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. 'கஸ்டம்ஸ்' சடங்குகள் முடிந்து அப்பாலிருந்த வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கான லவுஞ்சில் அமர்ந்திருந்த போது, ''நீ நாடகத்தின் கதாநாயகி, கோபால் நாடகத்தின் கதாநாயகன், மூன்றாவதாக நான் எதற்கு இப்போது சிங்கப்பூர் வருகிறேன் என்பதுதான் எனக்கே புரியவில்லை'' என்று மீண்டும் அவளிடம் வம்புக்கு இழுத்தான் முத்துக்குமரன். மாதவி முதலில் ஓரிரு விநாடிகள் இதற்கு மறுமொழி கூறவில்லை. சிரித்துவிட்டுப் பேசாமலிருந்துவிட்டாள். சில விநாடிகள் கழித்து அவன் காதருகே மெதுவான குரலில் அவள் கூறினாள்: ''கோபால் நாடகத்துக்குக் கதாநாயகர். கதாநாயகிக்குக் கதாநாயகர் நீங்கள்தான்!'' அவன் முகத்திலும் இதைக் கேட்டுச் சிரிப்பு மலர்ந்தது. கோபாலும் அருகே வந்து அதில் கலந்து கொண்டான். ''என்ன வாத்தியாரிட்ட இரகசியமா ஜோக் அடிக்கிறே...'' ''ஒண்ணுமில்லே! சாருக்கு இதுதான் முதல் விமானப் பயணமாம்...'' ''மெய்டன் ஃப்ளைட் இல்லையா?'' கோபால் அளவுக்கு மீறிய பிரயாண உற்சாகத்திலிருந்தான். திடீரென்று அவர்களிடம் வந்து, ''ஜமாய்ச்சுப்பிடணும், இத்தனை பிரமாதமான நாடகம் இதுவரை பார்த்ததே இல்லேங்கிற மாதிரி மலேயா முழுவதும் பேசிக்கிறாப்பல பண்ணிட்டு வரணும்'' என்றான் அவன். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |