1

     தென்னோலைத் தடுக்கை வாசலில் வரிசையாகப் போட்டுத் தண்ணீரும் தெளித்திருந்தார்கள். மத்தியானம் தான் மரத்திலிருந்து வெட்டிப் பின்னியிருந்தாலும் சித்திரை வெயிலின் கொடுமையால் லேசாக வாடிப் போயிருந்தது. இருந்தாலும் ஓலையின் புதுமணம் மனோகரமாக வீசிக் கொண்டுதான் இருந்தது. சுள்ளிவலசிலுள்ள பாதிக் குழந்தைகள் இராத்திரி வெகுநேரமாகியும் தூங்கப் போகாமல் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தன. குழந்தைகளுக்கு மட்டுமா தூக்கம் வரவில்லை? பங்குனி சித்திரை மாதத்தில் யாருக்குத்தான் தூக்கம் வருகிறது? வயசானவர்களுக்குத்தான் புழுக்கத்தின் அயர்வும், வெப்பத்தின் கொடுமையும் நன்றாக உறைக்கிறது. நாளெல்லாம், சாளை முன்னாலும், வீட்டுத் திண்ணையிலும், கட்டிலைப் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘தூங்காமல் தூங்கிச் சுகம்’ பெற்றுக் கொண்டிருக்கும் அவர்களுக்கு இராத்திரியில் ‘கலா முலா’ என்று சத்தமானால் கண்ணைச் சுத்தின தூக்கமும் மாயமாய் மறைந்து விடுகிறது. அதுவும் மணியக்காரர் தோட்டம் ஊரடியிலிருப்பதால், பக்கத்து மைதானத்தில் குதிக்கிற குதிப்புக்குத் தோட்டத்தையும் அனுமதியில்லாமல் சேர்த்துக் கொள்ளலாம். மணியக்காரருடைய தகப்பனார் தான் ஏதாவது சொல்வார். என்னத்தைச் சொன்னால் என்ன? வேடிக்கையில் ஈடுபட்டிருக்கிற பையன்களுக்கு அதெல்லாம் காதில் விழவா போகிறது?

     அவருக்கு ஒரே ஒரு குறை. ‘வாசலைத் தண்ணி வெண்ணி தெளித்துச் சுத்தமாக்கி ஓலைத் தடுக்குப்போட்டுப் பாங்கு பணிக்கையாக வைத்திருந்தால், அதிலும் உரிமை கொண்டாட வந்து விடுகிறார்களே பையன்கள்!’ ஆனாலும் சின்னஞ்சிறு குழந்தைகள் கட்டிப் புரண்டு விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டால் அவருக்கு உள்ளங் குளிர்ந்துவிடும். காரமாக இரண்டு வார்த்தை சொன்னாலும் உடனே மறந்துவிட்டு, “வளுசல்கள் எப்படியோ போகுது” என்று திண்ணையில் ஏறி உட்கார்ந்து கொள்வார். ஆனாலும் அவருடைய இரண்டு மூன்று சகாக்கள் தடுக்கில் உட்கார்ந்து கொண்டேதான் பேச்சைத் தொடங்குவார்கள்.

     “ஏனுங்கண்ணா, உங்களுக்குத் தெரியுமிங்களே இப்ப கெணறு வெட்ட உடலாமுங்களா?”

     “போடா போ, மசப் பயா. வேடையிலே எவனாச்சும் கெணத்து வெட்டுண்ணு பேச்செடுப்பானா? நல்லாக் கேட்டாய். கையிலே நாலு காசு துள்ளறாப்பலே இருக்குதே!” என்று சொல்லிச் சிரிப்பார்.

     கிணற்று வெட்டுப் பேச்சு நிற்கும். கொஞ்ச நேரம் அடிக்கடி மௌனம் நிலவுவது உண்டு. ஏனென்றால் எல்லாருமே அந்தக் கூட்டத்தில் அறுபது எழுபது கடந்தவர்கள். வேகமாகவோ, உணர்ச்சி வசப்பட்டோ பேசும் ‘முறுக்கை’ அங்கு எதிர்பார்க்க முடியாது தானே? இருந்தாலும் பவளாக் கவுண்டர் இருமிக் கொண்டே என்ன சொல்லுகிறோம் என்பது தெரியாமல் ‘மளமள’ வென்று இருமலும் பேச்சும் கலந்து கொட்டுவார். அதையும் அந்தச் சபை அனுபவித்தே தான் தீரும். அங்கே யாருக்கும் என்ன வேண்டுமானாலும் பேசத் தாராள சலுகையும் உரிமையும் உண்டு. ஆனாலும், வாசலில் படுத்திருக்கிற சிறு குழந்தைகளும், விளையாடிக் கொண்டிருக்கிற ‘சிறிய பெரிய’ பையன்களும், பலமாகச் சத்தம் போடக்கூடாது! ‘திடுபுடு’வென்றும், ‘கடபட’ வென்றும் கதம்ப ஒலி வருகிறபோது பவளாக் கவுண்டரும் சகாக்களும் சொல்லி வைத்தாற் போல் முகம் சுளிப்பார்கள்.

     “இந்த எளவு கெரகங்களுக்கு ஒண்ணுமே தெரியறதில்லையே! வெவிரியோட மட்டும் பெரண்டுக்கிட்டே இருக்குங்களாட்ட இருக்குதே.”

     “என்ன தட்டுக்கரயான் கட்டுதுகளா? குந்தான் அடிக்குதுகளா?”

     “எல்லாந்தானுங்க மாமா. கும்மியடிக்கிறதும் கேக்குது பாருங்க. கேளுங்க, மேக்குவளவுச் செம்பானாட்ட இருக்குதுங்கோ. அந்த முண்டப் பயன் எல்லாப் பாட்டும் படிச்சு வெச்சிருக்கானுங்கோ.”

     “ஆமாங்க ஐயா” என்று ஆமோதித்தது ஒரு குரல். தடியைப் ‘பொட்டு பொட்டு’ என்று ஊன்றிக் கொண்டே ராக்கியாக் கவுண்டர் பட்டிக்குப் போக வந்து கொண்டிருந்தார்.

     “ஏண்டாப்பா, நெலா உச்சிக்கு வந்திட்டுதா” என்று பவளாக் கவுண்டர் கேட்டார்.

     “இல்லீங்க அண்ணா. உங்களுக்கு நெலா உச்சிக்கு வந்தாத்தான் தூக்கம் வருமுங்களா? கணக்குக் கிணக்கெல்லாம் பாத்து வெச்சிருக்காப்பலே இருக்குதுங்களே” என்று சொல்லிக் கொண்டே ராக்கியப்பன் சிரித்தான்.

     கூட இருந்தவர்களும் சிரித்தார்கள். “இல்லீப்புனு, படித்திடி பண்ணாதே. தூக்கம் கண்ணெச் சுத்தினாத்தான் இந்த ரவுசிலே கண்ணே மூட முடியிதா? என்னமோ நாளெக் கடத்தோணுமே இல்லையோ” என்றார்.

     “நல்லாச் சொன்னீங்க” என்று படித்திடி பண்ணினான் ராக்கியப்பன். மற்றவர்களும் அதை ஆமோதித்தார்கள்.

     அவர்கள் அப்படிச் சொல்வதற்குத் தகுந்த காரணங்களும் இருந்தது. பவளாக் கவுண்டர் துக்கப்பட இந்தப் பரந்த உலகில் ஒரு விஷயமும் கிடையாது என்று அவர்கள் எண்ணினார்கள். மகனோ ஊருக்கு மணியக்காரர்; நல்ல செல்வாக்கு. இரவு பகல் கட்டிக்காத்துக் கொண்டு பத்து பேர் தயாராக இருக்கிறார்கள். மனைவி இரண்டு வருஷத்திற்கு முன் காலஞ் சென்று விட்டாள். ஆனாலும், மாணிக்கம் போல் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. குழந்தையின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பதால் தான் மருமகளை மறக்க முடிகிறது என்று பவளாக் கவுண்டர் அடிக்கடி சொல்வார். தோட்டந் துறவுக்கும் குறைச்சலில்லை; கொடுத்து வைத்தவர். அவருடைய விதவை மகள் கண்ணும் கருத்துமாகக் குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறாள். என்ன வேண்டுமோ அன்னது அந்தக் கணத்திலே நடக்கிறது; எதற்கும் திண்ணையை விட்டுக் கீழே இறங்க வேண்டியதில்லை. காலை வேளையில் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு தரம் போவார். வாசலைவிட்டு இறங்க வேண்டியதுதான் தாமதம். கண்ணில் கண்டவன் ஓடிவந்து விடுவான். தோட்டியிலிருந்து தொண்டமான் வரையிலும் யார் பார்த்தாலும் பேச்சுத் துணைக்கு வந்துவிடுவார்கள். மனதறிந்து யாருக்கும் இவர் கெடுதல் நினைக்கவில்லை. மற்றவர்களும் இவரிடம் கொஞ்சமும் வெறுப்புக் காட்ட நியாயமில்லை. ஆகையால்தான், “நாளையும் பொழுதையும் கழிக்கோணும்ல தம்பி” என்றதும் ராக்கியப்பன் படித்தடி பண்ணினான். கூட இருந்தவர்களும் சிரித்தார்கள்.

     “ஏனுங்கண்ணா நீங்க மாத்திரம் எங்க போய் படிச்சுக்கிட்டீங்க?” என்றான் ராக்கியப்பன்.

     “எதுக்கு?” என்றார் பவளாக் கவுண்டர். பக்கத்திலிருந்தவர்கள் சிரித்தார்கள்.

     “நானும் பாத்திருக்குறேனுங்க. வயசு ஆகி என்னுங்கண்ணா பண்ணறது? சொல்லுவாங்களே செலவாந்தரம், ‘குட்டிச் செவுத்துக்கு வயசு ஆனாப்பலேன்னு’ அந்த மாதிரி ஆகி என்ன பண்ணறது? நாலும் தெரிஞ்சிருக் கோணுங்களே. வெவுரியோடினதிலிருந்து பட்டிக்குப் போறவரை மாடாட்ட பாடுபட்டு என்னத்தைக் காணற முங்கோ? நாலு நாளைக்கு இருந்தாலும் நம்ம அய்யனைப்போல வெட்டு வெடுக்கிண்ணு இருந்திட்டு, பத்துப்பேரு ‘ஆமா’ண்ணு ஒத்துக்கற மாதிரி நாய நடத்தை பேசீட்டுப் போகோணும். ஏனுங்கண்ணா, நான் சொல்றது செரிதானுங்களா?” என்றான் ராக்கியப்பன்.

     “போடாப்பா நீ” என்றார். அவர் பேச்சில் ஒருவித சலிப்பேதான் இருந்தது. ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை. விளையாட்டுக் கோபம் என்று எண்ணிக் கொண்டு மேலும் ராக்கியப்பன் ஆரம்பித்தான்; “ஊருக்குள்ளே போய்ப் பாருங்க, மத்த ஊராட்ட வெடியா மூஞ்சியாகவா இருக்குது நம்ம ஊரு? எப்படீங்கறதைப் போய்ப் பாருங்கோ. உங்க பேத்திமாருக குதிக்கிற குதியிலே, அடிக்கிற கும்மியிலே செலை ஓடுதுங்க அண்ணா. இந்த வாத்தியாந்தான் எத்தனை கும்மிப் பாட்டுச் சொல்லிக் குடுத்திருக்கிறான் போங்க! கேளுங்க, பாட்டுக் கேக்கலே?” என்றான் ராக்கியப்பன்.

     பையன்கள் விளையாட்டுச் சத்தம் ஓய்ந்து கொஞ்சம் அமைதி நிலவி இருந்தது. பௌர்ணமி கழிந்து இரண்டு நாள் தான் ஆகியிருந்தது. சித்திரை வெயிலில் வாடியிருந்த உச்சாணிக் கிளைகள் நிலா வெளிச்சத்தில் ‘தள தள’த்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் இளம் பெண்களின் கோலாகலமான கும்மிப் பாட்டு ஏதோ ஒரு மோகன மயக்கத்தை எங்கும் நிறைத்தது. இயற்கைத் தேவியே பெண்களின் கீதத்தில் பரவசப்பட்டு மெய் சிலிர்த்து நிற்பது போல் இருந்தது. இந்த இன்பம் அந்த வயோதிகர்கள் உள்ளத்தைத் தீண்டியதில் ஆச்சரியம் என்ன? அவர்கள் உள்ளங்கள் மௌன பாஷையில் என்னவோ பேசிக் கொண்டுதான் இருந்திருக்க வேண்டும். இளம் உள்ளங்களில் தான் அழகின் காந்தி எல்லையில்லா மயக்கத்தை உண்டாக்கும் என்றெல்லாம் சொல்லுகிறார்களே! என்னமோ இந்தத் திண்ணையிலே, தடியை நம்பி நடமாடும் அத்தனை பேருடைய உள்ளங்களும் ரொம்பவும் இளமையுடையதுதான். வசந்தத்தின் தளிரைவிட இளமை கொண்டவைதான்!