25

     பொழுது சாயும் வரை மணியக்காரரோடு காடு மேடெல்லாம் மாரியப்பன் சுற்றிக் கொண்டிருந்தான். எவ்வளவோ பேசினார்கள்! இன்னும் எவ்வளவோ பேச வேண்டிய விஷயங்கள் பாக்கியிருந்தன. நடந்த சலிப்புத் தோன்ற வேண்டுமே? ஒன்றுமே தெரியவில்லை அவனுக்கு. என்னென்ன சொல்ல வேண்டுமென்று நினைத்தானோ அத்தனையும் சொல்லித் தீர்த்தான். மணியக்காரர் சாவதானமாக எல்லாவற்றையும் கேட்டார். கேட்டுக் கொண்டிருக்கையிலேயே, ‘ஆகா! இந்தப் புத்திசாலிப் பிள்ளையோடு இத்தனை நாளும் பேசாமலெ கழித்து விட்டோமே’ என்று உண்மையாகவே அவருக்கு வருத்தமாகத்தான் இருந்தது.

     வருங்காலத்தைப் பற்றி நினைத்ததும், சுடு மண்ணிலிருந்து தண்ணீர்த் தடாகத்துக்குள் குதித்தது போன்ற உணர்ச்சி மணியக்காரருக்கு உண்டாயிற்று. மாரியப்பன் அவர் கண்ணுக்கு சாதாரண மாரியப்பனாகத் தோன்றவில்லை. குலத்தை விளங்க வந்த மாணிக்கமாகக் காட்சி அளித்தான். இத்தனை நாளும் இதனால் தான் செல்லாயாளின் கலியாணம் தடைப்பட்டு வந்ததோ! அடடா! போன மாசம் எத்தகைய வேதனைக்கும் துக்கத்துக்கும் காரணமாக இருந்த விஷயம், இப்போது ஆனத்தத்திற்கும் அகமகிழ்வுக்கும் காரணமாயிருக்கிறது! எல்லாம் விசித்திரம் தான் என்று எண்ணித் தமக்குள்ளே சிரித்துக் கொண்டார்.

     மணியக்காரர், தன்னை விட்டுப் பிரிந்து தோட்டத்திற்குப் போய்விட்டார். ஆனால், மாரியப்பன் இந்த உலக நினைவே இல்லாமல், கொய்யாக் கொம்படியில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

     மாலையின் மோகன மயக்கில் இயற்கைத் தேவியே மூழ்கிவிட்டாள் போலிருந்தது. சமீபத்தில் பெய்த மழையினாலும், பெருகி வந்த ஆற்று வெள்ளத்தினாலும், எங்கும் செழித்திருந்தது. எங்கே பார்த்தாலும் பச்சையும் மஞ்சளுமாகப் பரவசக் காட்சியுடன் திகழ்ந்தது. ஆனால், மாரியப்பனுக்கு அப்போது இவைகளைப் பார்க்கவோ, நினைக்கவோ நேரமே இல்லை.

     தன் நெஞ்சில் நெடுநாளாக நிறைந்திருந்த பெரியதொரு பாரம் இறங்கியது போலிருந்தது. மழை பெய்த பின் நிர்மலமாக விளங்கும் வானத்தைப் போல மனம் பளிச்சென்றிருந்தது.

     அப்போது ‘கலகல’ வென்ற சிரிப்பின் ஒலி இலேசாகக் கேட்டது. திரும்பிப் பார்த்தான். இன்னும் பலமாகச் சிரித்தபடி ஒரு சிறு பெண்ணுடன் செல்லாயா வந்து கொண்டிருந்தாள்.

     வரகுப் பாத்தி யோரம் பிரிகிற சின்னத் தடத்திலே சிறுமியைப் போகும்படி சொல்லிவிட்டு, “பால் கலயத்தைக் கீழே சிந்தாமல் கொண்டு வரோணும்” என்று பணிக்கையும் சொல்லி அனுப்பினாள்.

     சின்னப் பெண் போன பிறகும் சிரித்துக் கொண்டே வந்தாள் செல்லாயா. மாரியப்பனும் சிரித்துக் கொண்டு, “ஏன் சிரிக்கிறாய்?” என்றான்.

     “ஏனா?” என்று கேட்டுவிட்டு அவள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருந்தாள்.

     பிறகு முழுதும் சொல்லி முடித்தாள். ஆற்றங்கரையோரம் உள்ள புளியமரத்தில் தான் பேய்களுக்கு ஆணி அடிப்பது வழக்கம். புளியமரத்துக்குப் பக்கத்தில் இந்தக் கொய்யாமரம் இருந்ததால், ‘பேய்மரம்’ என்று செல்லப் பெயர் வேறு இதற்கு உண்டு. இந்த மரத்தின் பழங்களை சிறு குழந்தைகள் தின்பதில்லை. அதனால் லாபமேதான். அழுத குழந்தைக்குப் பழம் தருவதாகச் சமாதானப் படுத்திப் பால் கலயத்தோடு கூட்டி வந்தாள் செல்லாயா. இப்போது பழம் வேண்டாம் என்று சொன்னதோடு, கூடவே வர நடுங்கியது அந்தக் குழந்தை. கடைசியாக, மங்கிய வெளிச்சத்தில் ஒரு ஆளும் அங்கு உட்கார்ந்திருக்கக் கண்டு, “ஐயோ பேயி அங்கிருக்குது” என்று குழந்தை ஓட்டமெடுக்கவும் ஆரம்பித்து விட்டது.

     “நீங்க பேயா பிசாசா?” என்றாள் செல்லாயா.

     “ஏன் உனக்கு எப்படி இருக்குது?”

     “எனக்கு இருக்கறது இருக்கட்டும். எப்படியும் எங்க ஐயனைப் புடிச்சிருந்த பேயை ஓட்டிவிட்டீங்கல்ல?” என்றாள்.

     இரண்டு பேரும் சிரித்தார்கள்.

     “உக்காரு, போவலாம்” என்றான் மாரியப்பன். அவள் மண்ணைக் காலால் தள்ளி விட்டுக் கொண்டே, “காலெல்லாம் வலிக்குதா?” என்றாள்.

     “மனசு வலி தீர்ந்து போச்சு. அப்புறம் இதென்ன வலி?” என்றான்.

     செல்லாயாளுக்கு அன்றையப் பேச்சு அத்தனையும் கேட்டுவிட வேண்டும் என்று ஆவல். ஆனால், அவனாகச் சொல்லட்டுமென்று, “இன்னம் ஊட்டுக்கே போகிலையா?” என்றாள்.

     “போறதா? நேரம் எங்கே? உங்க ஐயன் என்னை அந்தப்புறம் இந்தப்புறம் போக உட்டாத்தானே?” என்றான்.

     “அதுபோகுது, கடைசிலே என்ன சொன்னாங்க?” என்றாள்.

     “கடைசிலையா? மொதல்லிருந்துதான் சொல்லிட்டு வந்தாங்க!” என்று குறும்பாகப் பார்த்துச் சிரித்தான்.

     பக்கத்திலுள்ள தாழம்பூப் புதரிலிருந்து ‘கமகம’வென மணம் வந்து கொண்டிருந்தது. அன்றைக்குச் சுப்பண முதலிக்கும் ஆனந்தம் தாங்க முடியவில்லை போலிருந்தது. அதனால் தான் நாதசுரத்திலிருந்து இனிய இசை பொழிந்து கொண்டிருந்தான். ஆம், அந்த இசை இனிமையாகத்தான் இருந்தது. காற்றிலே மிதந்து வந்து இருவர் புலன்களிலும் லேசாக அது மோதியது. அந்த இன்பக் கிளர்ச்சியும் சுற்றுப்புறச் சுகச் சூழ்வும் அவள் பெண் இதயத்தைத் தீண்டியது.

     மெல்லிய வெண்ணிலாக் கதிர்கள் எங்கும் விரிந்து கிடப்பதும், தெளிவற்ற தெம்மாங்கின் ஓசையோடு, மணிகளின் இன்பநாதமும், விட்டு விட்டுக் கேட்கும் பறவைகளின் சிறகடிப்பும், ‘சோ’வென்ற பச்சைப் பயிர்களின் இரைச்சலும் சேர்ந்து ஒரு அற்புதமான உலகைக் கண் எதிரே காட்டிற்று. அந்த உலகிலே அவர்கள் இருவர் மட்டுமே கைகோத்தபடி போய்க் கொண்டிருந்தார்கள். எந்த விதமான கட்டும் தளையும் இல்லை. கேள்வி கேட்பார் இல்லை. சுதந்திரம்... எல்லாருக்குமே சுதந்திரம். துக்கம் துயரம் மருந்துக்கும் கிடையாது. அந்த உலகில் அவள் ராணி, அவன் ராஜா.

     இந்த மாதிரி அமுதமயமான நினைவிலே எவ்வளவு நேரம் திளைத்துக் கொண்டிருந்தார்கள்? இந்த மாதிரி சுந்தரக் கனவுகளுக்கு முடிவு ஏது?

     “அடடா!” என்றாள்.

     “என்ன?” என்று அவன் கேட்டான்.

     “அதோ, அங்கே பாருங்க. எந்தப் பக்கம் வேணுமானாலும் பாருங்க. எப்படி யிருக்குது?” என்றாள்.

     அவன் பேசவில்லை.

     “இந்த நெலா வெளிச்சமும், ‘கமகம’ன்னு வரும் வாசனையும், கண்ணையும் மனசையும் என்னென்ன பண்ணுது? உங்களுக்கு இதைப் பாக்க எப்படி இருக்குது?” என்றாள்.

     இந்த எழில் விளையாட்டை அவன் கூர்ந்து கவனித்து, இதயம் விம்மிக் களிப்புக் கடலில் நீந்திக் கொண்டிருக்கையில், அவன் மற்றவர்களுடைய துன்பம், துக்கம் ஏழ்மை இவைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

     வெகுநேரம் மௌனமாகவே இருந்தார்கள். தாழம்பூவின் மணம் சும்மா உட்கார்ந்திருக்க விடவில்லை. அவள் எழுந்து போய் ஒரு மடலிலிருந்து ஒரு பூவைக் கிள்ளி எடுத்துக் கொண்டு வந்தாள். பூவைக் கையிலிருந்து வாங்கி அவள் தலையில், மெதுவாக அதைச் செருகப் போனான். சாயங்காலம் தான் கொண்டையில் சூடியிருந்த மருக்கொழுந்து அபாரமாக வாசனை வீசிக் கொண்டிருந்தது.

     அவள் வெட்கத்துடன் தலை குனிந்தாள்; பேசவில்லை, உதட்டருகே குறுநகை தவழ்ந்து கொண்டிருந்தது.

     தாழம்பூவைச் சரியாக வைத்துக் கொண்டு, “யாராச்சும் பார்த்தா?” என்று பாசாங்குக் கோபத்தோடு, அவன் முகத்தைப் பார்த்தாள்.

     “அதுக்குத்தானே வெச்சேன். யாரும் பாக்கிலையா? இன்னொருக்கா வெக்கட்டுமா?” என்றான்.

     இரண்டு பேரும் சிரித்து விட்டார்கள். மாரியப்பன் அவள் கையைத் தொட்டு, “பயப்படாதே. ஆரு பாத்தாலும் ஒண்ணும் வந்திடாது. உங்க ஐயனும் நானும் பேசிக்கிட்டு வந்ததைப் பார்த்தே ஒருத்தரும் ஒண்ணும் சொல்லிலே. இதுக்கு ஆரு என்னத்தைச் சொல்லப் போறாங்க?” என்றான்.

     அவள் மெய் மறந்திருந்தாள். ஏதோ பேசிக் கொண்டிருப்பது தான் காதில் விழுந்ததே தவிர, மாரியப்பன் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறான் என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது.

     ஒவ்வொரு கணமும் தேன் ததும்பிக் கொண்டிருந்தது. நேரம் போனதே தெரியவில்லை.

     இங்கே நேரம் போவதே கொஞ்சம் கூடத் தெரிவதில்லை யென்றால் ராமசாமிக் கவுண்டருக்கு ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகக் கழிந்து கொண்டிருந்தது.

     அரைத் தூக்கத்திலிருந்து எழுந்தவருக்குத் தலை சுற்றியது. கூட இருந்தவர்கள் சொல்வதை அவரால் கொஞ்சங் கூட நம்ப முடியவில்லை. ஆனால், தன் நம்பிக்கை இப்படித் திடீரென்று பாழாகிவிடும் என்று அவர் துளியும் எதிர் பார்க்கவே இல்லை.

     “மணியக்காரங் கிட்டே இவனுக்குப் பேச என்ன நாயம்?” என்ற ஒரே வார்த்தையை அவர் வாய் முணு முணுத்துக் கொண்டிருந்தது.

     திண்ணையில் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கவும் முடியவில்லை. வாசலில் நடந்து பார்ப்பார். வெளியே வருவார் கதவருகே நின்று தோட்டத்துப்புறம் நோக்குவார். “என்னடா கார்த்தாலெ போனானே. ஊடு வாசலை நெனைக்கலயே? உம். அவ்வளவு தூரம் ஆகிப் போச்சா? வரட்டும், சொல்றேன்!” என்று ஆத்திரத்தோடு நின்று கொண்டிருந்தார் ராமசாமிக் கவுண்டர்.

     “சித்தெ” உக்காருங்கொ வாரான். வராமெ எங்கே ஓடிப் போவான். அதுக்கு இத்தனை கோவமா?” என்று மனைவி எவ்வளவுதான் சொல்லியும் ராமசாமிக் கவுண்டர் கொதித்துக் கொண்டு இருந்தார்.

     “நீ சும்மா இரு!” என்றார்.

     அவ்வளவு தான். எப்போதுமே பாவம் சும்மாயிருக்கிறவள், அன்று வாஸ்தவத்திலேயே சும்மா இருந்து விட்டாள். பாலை மட்டும் எடுத்து பொறைக் குத்தி விட்டு, அடுப்புப் பக்கமே போகவில்லை. மகனை எதிர்பார்த்து அவள் ஏக்கத்தோடு உட்கார்ந்து விட்டாள். அப்போது முருகணன் வந்தான். “ஏண்டா, முருகா! நம்ம அப்பன் எங்கே?” என்றார்.

     “தெரியாதா?” என்று சொல்லி அவன் சிரித்தது, வேதனையை இன்னும் பன்மடங்கு அதிகரித்தது.

     முருகணனுக்கு மந்திர தந்திரங்களிலே நம்பிக்கை அதிகம். “ஏனுங்கண்ணா, நம்ம பையனுக்கு ஏதாச்சும் ‘செய்வினை’ செஞ்சிருப்பானுங்களா மணியகாரன்?” என்றான்.

     ராமசாமிக் கவுண்டர் ‘கடகட’வென்று சிரித்து விட்டார். “அடப் பொளாயா, நம்ம அப்பன் ஒண்ணையும் நம்பாண்டா!” என்றார்.

     அந்தச் சமயத்தில் ராமசாமிக் கவுண்டருக்கு தன் மகன் போக்கு கர்வத்தை அளித்தது. பேய், பிசாசு, பில்லி சூன்யம் என்றால் சும்மா சிரித்துவிட்டு மாரியப்பன் போய் விடுவான். கொஞ்ச நாளைக்கு முன் சுடுகாட்டில் பிணம் எரிந்து கொண்டிருந்தது. தோட்டத்திற்குப் படுத்துக் கொள்ளப் புறப்பட்டான் மாரியப்பன். தாயார் தடுத்ததற்கு மகன் சொன்னது ராமசாமியின் காதில் இப்போது கணீர் என ஒலித்துக் கொண்டிருந்தது; “அம்மா இனிமேலு எங்கிட்டெ இப்படியெல்லாம் சொல்லாதே. எவனாச்சு அக்கிரமக்காரன் அநியாயக்காரன் அவங்கிட்டப் போகாதப்பா, அப்படீண்ணு, நீ சொன்னா நாங் கேப்பேன். ஆனால் பில்லி, சூனியம், செய்வினை, காத்துக் கருப்பு, அப்படி இப்படீண்ணா, போகாமெ இருக்க மாட்டேன். என்னை என்ன பண்ணுகிறதோ பாக்கறனே!”

     இப்படிச் சொல்லிய மகன் இன்று என்ன செய்தான்? நமக்குச் சரியான விரோதி வீட்டிற்குப் போனான். போனது மட்டுமா? சாப்பிட்டான். பின்னே இவ்வளவு நேரமாகியும் சாப்பிடாமலா இருப்பான். அதோடு இன்னும் வரவில்லை. இனி... இனி என்ன? மணியக்காரனுக்கும் துணை யாருமில்லை. வீட்டில் மகள் இருக்கிறாள். கலியாணம் பண்ண வேண்டியதுதான். கலியாணத்திற்கு பையன் வந்து நம்மை அழைப்பானோ மாட்டானோ?

     அவருடைய மனசு பலவிதமாக அலைந்து கொண்டிருந்தது. இருந்தாலும், “அப்படி இருக்காதப்பா” என்று முருகணனுக்கு உண்டான ‘செய்வினை’ப் பயத்தைப் போக்கினான்.