உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
20 பவளாக் கவுண்டருக்கு வரவரக் கண்பார்வை மங்கிக் கொண்டே வந்தது. யாரென்று தெரியாமல், “இங்கே வாப்பா!” என்று வரப்பின் மேல் போகும் ஆளைக் கூப்பிட்டார். வந்ததும், மேலும் கீழும் பார்த்தும் அடையாளம் தெரியவில்லை. “இந்த அல்லி அரசாணி மாலையை எடுத்துக் குடப்பா. கட்டிலுக்குக் கீழயோ செவுத்து மேலெயோ இருக்குது பாரு” என்றார். ஒரு ஓரத்தில் பக்கங்கள் அரையும் குறையுமாகக் கிழிந்து கிடந்த புத்தகத்தை எடுத்துக் கொடுக்கவும், கையில் வாங்கிக் கொண்டு, “அய்யரை காணோம். சுப்பணனும் வாரமிண்ணவன் எங்கியோ போயிட்டானாட்ட இருக்குதே?” என்றார். பிறகு, “ஏனப்பா நீ யாரு?” என்றார். “நாந்தானுங்க” என்றான் அவன். “நாந்தானுங்க” என்றால், அதிலேயே கிராமத்தில் வயசான பெரியவர்கள் மற்றவர்களைச் சுலபத்தில் குரல் அடையாளம் கண்டு கொள்வார்கள். ஆனால், பவளாக் கவுண்டர் தடுமாறுவதைக் கண்டு, “நடுவளவு ராமண மவனுங்க” என்றான், மாரியப்பன். அவன் டவுன் பள்ளிக்கூடத்தில் படித்திருந்தாலும், ஊர்க்காரர்கள் புரிந்து கொள்ளும் விதத்திலேயே பேசி வந்தான். “அட, நம்ம ராமணன் ஊட்டுப் பயனா? அப்படிச் சொல்லு! எப்ப டாப்பா வந்தே? சித்தெ உக்காரப்பா. அந்தத் தடுக்கை எடுத்துப் போட்டுக்க. இதெச் சித்தை படிச்சு சொல்லப்பா” என்றார் பவளாக் கவுண்டர். மாரியப்பன் மறுத்துச் சொல்லவில்லை. அல்லி அரசாணி மாலையை ராகத்தோடு பாட ஆரம்பித்துவிட்டான். அவன் படிக்கப் படிக்க ஆனந்த மேலீட்டால் பவளாக் கவுண்டரால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. அவருக்கு எத்தனையோ கவலைகள் இருந்த போதிலும் எல்லாமே ஒரு நொடியில் பஞ்சாய்ப் பறந்து விட்ட மாதிரி இருந்தது. சிறுகச் சிறுக அவருடைய கூட்டாளிகளும் வந்து கூடிவிட்டார்கள். “பயங் கெட்டிக்காரம் போ” என்று பெரியவரோடு சேர்ந்து எல்லோரும் ஆமோதித்தார்கள். “அதுதாங் கேக்கறெ, பொயித்தமும் கையுமாவெ இருந்தா. அப்படி கரைச்சுக் குடிச்சிருக்கிறானப்பா! ராமண்ணனுக்கு சொத்துப் போனாப் போவுது போ. தங்கமாட்டப் பையன்! இண்ணைக் கெல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கலாங்கறேன்” என்றே எல்லோரும் பாராட்டினார்கள். இந்தப் பாராட்டுக்களையும் புகழுரைகளையும் கேட்கக் கேட்க, மாரியப்பனுக்கு நல்ல ‘தெம்பு’ வந்துவிட்டது. இவர்கள் நாம் சொன்னபடி கேட்பார்கள். இவர்களுக்காக எதுவும் செய்யலாம் என்று எண்ணிக் கொண்டான். கோவில் ஐயர் தம்மைப் பிடித்த ‘படிப்பு’ நீங்கி விட்டதற்காகச் சந்தோஷப்பட்டார். பவளாக் கவுண்டருக்கு தினம் சற்று நேரமாவது படித்துக் காட்ட வேண்டிய பாரம் அவர் தலையில் விழுந்திருந்தது. சுப்பணனைப் போல் தானும் ஏதாவது சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், பெரியவர் ‘பொக்’கென்று மனசு உடைந்து விடுவாரே என்று ஐயர் அப்படிச் செய்யவில்லை. இன்னொரு விதத்திலும் ஐயருக்குப் பரம திருப்தி ஏற்பட்டிருந்தது. பவளாக் கவுண்டர் எத்தனையோ நாள் தன் பேத்தியின் கலியாணத்தைக் குறித்து ஐயரின் அந்தரங்க அபிப்பிராயத்தைக் கேட்டிருக்கிறார். ஒவ்வொரு தடவையும், “தங்கமான மாப்பிள்ளையே வருவான்” என்று உறுதி கூறியிருந்தார். ஆனால், கடைசியில் மணியக்காரர் ஒரு ‘உதவாக்கரை’க்கு கொடுக்க ஒப்புக் கொண்ட போது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என்னத்தைச் செய்ய முடியும்? மூன்று தரமும் ‘செம்பூவை’யே கொடுத்து பொருத்தமில்லை என்று அம்மன் சன்னதி சோசியத்து மூலம் நிரூபித்தார். கேட்கிறவன் கேட்டால்தானே? ஆனால், அதே மணியக்காரர் “நீங்க சொன்னது செரியாப் போச்சுங்க. அந்த மாப்பிள்ளையும் செரியில்லீங்க. இந்த முகூர்த்தமும் நிண்ணு போச்சுங்க” என்று சொன்ன போது, “அப்பவே சொன்னனே” என்றார். கலியாணம் நின்றதில் தான் அவருக்கு திருப்தி. பவளாக் கவுண்டருக்கும் ஐயர் தான், “தங்கமான மாப்பிள்ளை வருவானுங்க” என்று தேறுதல் சொன்னார். மற்றவர்கள் என்னென்னவோ பேசிக் கொண்டார்கள். “என்னடா வந்த மாப்பிள்ளையெல்லாம் கலஞ்சு போகுதே!” என்று மணியக்காரர் வியாகூலப் பட்டாலும், நல்லவனே தான் மகளுக்கு வந்து வாய்ப்பான் என்று எண்ணியிருந்தார். மாரியப்பன் தோட்டத்தை விட்டு வெளியே போகையில் செல்லாயா பாட்டனுக்குச் சோறு எடுத்துக் கொண்டு வந்தாள். மத்தியானத்தில் தங்கள் தோட்டத்தில் அவனைப் பார்க்கவும் அவள் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. |