உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
2 சுள்ளிவலசுப் பக்கத்திலேயே மணியக்காரர் தோட்டத்துக்கு மிஞ்சியது ஒன்றுமே கிடையாது. விளைச்சலிலும் சரி, தண்ணீரிலும் சரி. தண்ணீர் வற்றிப்போகும் என்ற பயத்துக்கு அங்கே இடமேயில்லை. எந்தக் கோடையிலும் நாலு ஏத்து இறைத்துக் கொண்டே தான் இருக்கும். பவளாக் கவுண்டர் காலை மாலை இரண்டு வேளைகளிலும் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து வரும்போது தினம் இதை ஒரு தரம் எண்ணாமல் இருக்க மாட்டார். சொத்துச் சொகத்தைக் கொடுத்த கடவுள் எல்லாவற்றுக்கும் மேலாக இப்பேர்ப்பட்ட பண்பட்ட நிலத்தையும் அல்லவா கொடுத்திருக்கிறார்! இந்த மாதிரி ‘பொன்விளையும் பூமி’ கிட்டாமல் இருந்திருந்தால் என்னதான் வீடு வாசல் இருந்து என்ன பயன்? காலை நேரம். கத்திரிச் செடிக்குத் தண்ணீர் பாய்வதைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்த கவுண்டர் மனசில் பளிச்சென்று ஒரு யோசனை உதயமாயிற்று. முந்திய நாள் அதை நினைக்கத்தான் கொஞ்சம் துக்கமாகவும் இருந்தது. அதனால்தான் தன்னைத்தானே சலித்துக் கொண்டார். நாளும் பொழுதையும் எதிர்பார்த்ததும், ராக்கியப்பன் சிரியாகச் சிரித்ததும் இதற்குத்தான். “என்ன இருந்தாலும் மகனுக்கு இன்னொரு கலியாணத்தைப் பண்ணி வைத்துவிட்டால்தான் எல்லாம் பரிபூரணமானது மாதிரி இருக்கும்.” ஆனால், பவளாக் கவுண்டர் எண்ணம் கைகூடுவதாயில்லை. மணியக்காரர் கலியாணம் என்று பேச்சு எடுத்தாலே எரிந்து விழுகிறார். அவருக்கேனோ அது எட்டிக் காயாக இருக்கிறது. ஒரு வேளை முதல் மனைவியிடம் கொண்ட அன்பு காரணமாக இருக்கலாமா? ஆனால், அந்த மாதிரி அன்பு ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டுச் சீர்தூக்கிப் பார்ப்பவராகத் தெரியவில்லை. மணியக்காரர் சென்னிமலைக் கவுண்டரும் அப்போது வந்தார். வாய்க்கால் சில இடங்களில் நீரின் வேகத்தால் முறிந்துவிடும். அதையெல்லாம் காலில் தள்ளி, சரிசெய்து விட்டுக் கொண்டே தந்தையின் அருகே வந்தார். வயசு முப்பத்தைந்துக்கு மேல் ஆகியும் தகப்பனிடம் மிக்க பணிவாகவேதான் நடந்துகொள்வார். வழக்கம்போல், “ஏனுங்க ஐயா, பழைய சோறு உண்டாச்சுங்களா?” என்றார். பவளாக் கவுண்டர் சிரித்தார். தம்முடைய மகன் தன்னைத் தினம் அந்தக் கேள்வி கேட்பதிலே அவருக்கு உள்ளூற மகிழ்ச்சியேதான். “இப்பதாண்டா தெளுவுத் தண்ணி குடிச்சேன். ‘வெடவெட’ன்னு இருக்குது. இன்னும் பொழுது வேலிக்கு மேலே கூட வல்லையே!” என்றார். மணியக்காரர் கூடவே இரண்டு தலையாரிகள் ஒரு மூட்டையைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்தார்கள். கத்திரிக்காய் பறித்துக் கொடுத்துக் கொண்டே, “உங்களோடே சேந்து புள்ளெயும் கெட்டுப் போச்சுங்க!” என்றார். “என்னடா அது!” என்று பவளாக் கவுண்டர் கேட்கும் போதே, “தாத்தய்யோ!” என்று மதுரமான ஒரு இளம் குரல் கேட்டது. பவளாக் கவுண்டரின் பேத்தி செல்லாயா தென்னை மரத்தடியில் கோட்டையில் தெளூவு ஊற்றிக் குடித்துக் கொண்டிருந்தாள். வயசு பத்துத்தான் ஆகிறது. பார்க்க அழகாயிருப்பாள். தென்னோலைகளுக்கிடையே விழும் காலைக் கதிர்கள் அந்த இளமுகத்திலே விளையாடிக் கொண்டிருந்தது. இயற்கையிலே ‘களை’ சொட்டும் முகம். இப்போது இன்னும் அழகு பெற்று விளங்கியது. தன் மகள் ‘துருதுரு’ வென்று பேச்சுக் கேட்காமல் ஓடியாடித் திரிவதிலும், எந்த நேரமும் தோட்டத்தையே சுற்றிக் கொண்டிருப்பதிலும் மணியக்காரருக்கு ரொம்ப திருப்தி. இருந்தாலும் ஒப்புக்கு, “உங்க பேத்தியைப் பாருங்க ஐயா; தென்னந்தெளுவு உப்புக் கரிக்கும்னு சொன்னாலும் கேக்குதா பாருங்க” என்றார். “சொன்னபடி கேக்கிற புள்ளெ உனக்குப் பொறக்குமாப்பா? தூர ஏம் போவறே? நீயே எம் பேச்சு கேக்கிறியா?” என்றார். தன்னுடைய கலியாண விஷயத்தைக் குறிப்பாக வைத்துக் கொண்டு, பேசுவதை அறிந்து கொண்டார். “கெழக்கு வேலியோரம் பாவச்செடி படர்ந்திருந்துதே, பாத்தீங்களா” என்று சொல்லிக் கொண்டே, இளம் கத்திரிக்காயும், வெண்டைக்காயும் பறித்திருந்ததைத் தலையாரியிடம் கொடுத்து, “சட்டுண்ணு கொண்டுபோய் கொடடா” என்றார். தன் மகன் செய்யும் அவசரத்தைக் கண்டு, “என்ன, செட்டியார் வந்திருக்கிறாரா?” என்று பவளாக் கவுண்டர் கேட்டார். “ஆமாம், சொல்லியிருக்கிறார். கடை ஆள் காலம்பரமே வந்திட்டான்” என்று சொல்லிவிட்டு மணியக்காரர் வேகமாக நடக்க ஆரம்பித்தார். புது வரப்பு அவர் கால் பட்டு அதிர்ந்தது. நல்ல பாராசாரியான ஆள். எடுப்பான அவர் தோற்றத்தைக் கண்டாலே ஆள் அம்புகளுக்கு வயிறு கலங்கும். தமது ஒன்று சேராத மீசையை அடிக்கடி முறுக்கி விட்டுக் கொண்டிருப்பார். பார்க்கிறவனை அது வம்புக்கு இழுப்பது மாதிரி இருக்கும். மணியக்காரர் வம்புத்தனத்திற்கும் பின் வாங்குகிறவர் அல்ல. பவளாக் கவுண்டர் இன்னும் என்னவோ சொல்லலாமென நினைத்தார். பேச்சும் ஆரம்பித்தார். அதற்குள் மகன் வேகமாகச் சென்றுவிடவே பேத்தி நின்ற பக்கம் திரும்பினார். பேத்தியும் அவசரமாக வந்து, “ஊருக்குள்ளே கூத்தாடரவங்க வந்திருக்காங்களாம். நான் போறேன்” என்று ஓடிவிட்டாள். கவுண்டர் மட்டும் என்னத்தையோ மறந்தவர் போல் நின்று கொண்டிருந்தார். அவருக்கு அப்போது வீரப்ப செட்டியார் மேல் தான் மிகக் கோபம் வந்தது. ஏனென்றால் வீரப்ப செட்டியார் நிமித்தமாகத்தான் மகன் இவ்வளவு அவசரமாகப் போகிறான் என்பதை ஊகித்துக் கொண்டார். |