15

     ஆற்றுக்கு அவன் வந்து சேர்ந்த சமயம் யாரும் அங்கில்லை. ஏதோ ஒரு பூச்சிதான் ‘ஙொய்’ என்று கத்திக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. வெகு சீக்கிரத்திலே எங்கும் அமைதி நிலவி விட்டதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. இப்படி நிலவு பொழியும் இரா வேளைகளில் விளையாடும் பையன்களுக்குக் கூடவா சலிப்புத் தட்டிவிட்டது? முன்பெல்லாம் கும்மி நடக்குமே? இப்போது கும்மி அடிப்பதையே இளம் பெண்கள் மறந்து விட்டார்கள் போலிருக்கிறது!

     மணலில் துண்டை விரித்துப் படுத்தான். காற்றும் சுகமாக வீசிக் கொண்டிருந்தது. ஆனால் தூக்கம் வரவில்லை. மனசிலே அத்தனை எண்ணங்கள் குமுறிக் கொண்டிருக்கும் போது தூக்கம் எங்கிருந்து வரும்.

     பக்கத்தில் கள்ளிப் புதர் மறைவில் நாலைந்து பேர் ‘குசுகுசு’ வென்று பேசிக் கொண்டிருப்பது போல் இருந்தது. எங்கிருந்தோ ஒரு ஆட்டைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது வேறு யாருடைய ஆடுமல்ல. நம்ம மணியக்காரர் தோட்டத்து ஆடுதான்!

     மாரியப்பன் பார்த்தும் பார்க்காதவன் போல் எழுந்து வீட்டிற்குப் போய்விட்டான். மறுநாள் தன் தகப்பனார் உள்பட ஏழெட்டுப் பேர் மணியக்காரர் தோட்டத்தில் புகுந்து பத்து ஆட்டை ஓட்டிக் கொண்டு வந்து விட்டார்கள் என்ற பேச்சு எங்கும் அடிபட்டது. பாவம், ராமசாமிக் கவுண்டர் வயிற்று வலியால் இரண்டு நாளாக அவஸ்தைப் பட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போகவில்லை என்பதைப் பக்கத்து வீட்டுக்காரன் கூட நம்ப மறுத்து விட்டான்.

     இந்த அறியாமை நிறைந்த சனங்களுக்கு மத்தியில் வாழ்வது கஷ்டமாக இருந்தது. அவர்கள் நிலைமையை மாற்றவும் ஒரு வழியையும் காணோம். அவர்களைப் பிரிந்து போய் விடுவதும் சிரமமாக இருந்தது. இத்தனை சிக்கலுக்கிடையேயும் ஏதோ ஒன்று அந்த மண்ணோடு தன்னைக் கட்டிப் பிடித்திருப்பதை எண்ண எண்ண அவனுக்கே வியப்பாக இருந்தது.

     இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு செல்லாயாளைத் தன் தோட்டத்து வேலியோரம் சந்தித்தான். அவள் குடத்துத் தண்ணியைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாய்த்துக் கொண்டே, “ரண்டு நாளாக எங்கே காணோம்?” என்றாள்.

     “இங்கேதானெ இருக்கிறேன்.”

     “தோட்டத்துப் பக்கமே காணமே?”

     “தோட்டத்திற்கா?” என்றான்.

     அதற்குள் யாரோ அந்தப் பக்கம் வந்ததால் அவசரமாக அவள் போய்விட்டாள்.

     சாயங்காலம் வரை புத்தகத்தை வேண்டா வெறுப்பாகத் திருப்பிக் கொண்டே புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். இராத்திரி நேரத்தில் ஊரிலுள்ள பையன்களுக்கு ஒரு இராப் பள்ளிக்கூடம் ஏற்படுத்தி நடத்தினால் என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயம் பள்ளிக்கூடத்து உபாத்தியாயரும் வந்து சேர்ந்தார்.

     “வா அப்பா, எப்போ வந்தே?” என்று அன்புடன் அவர் விசாரித்தார். தம்முடைய மாணவன் ஆங்கிலம் கற்றுத் தேறி வந்திருப்பதிலே அவருக்கு ரொம்ப திருப்தி. “ரண்டு எழுத்து இங்லீஷ் இல்லாட்டி இந்தக் காலத்திலே எவன் மதிப்பானுங்க?” என்று அடிக்கடி அவர் சொல்லிக் கொள்வார். அதற்காக ஆங்கில எழுத்துக்களை வெகு சிரமப்பட்டுத் தெரிந்து கொண்டார்.

     “இப்போ பள்ளிக்கூடம் எப்படி நடக்குதுங்க?” என்றான்.

     “பள்ளிக்கூடம் நிண்ணு வருஷம் ரண்டு ஆகுது தம்பி” என்றார்.

     விசாரிக்க உண்மை தெரிய வந்தது. திண்ணைப் பள்ளிக்கூடத்து உபாத்தியாயருக்கு முன்பு நல்ல செல்வாக்குத்தான் இருந்தது. வரவர பணம் கொடுப்பது நின்று, தவா தானியம் கொடுத்தார்கள். அதற்கும் எடுபடவில்லை. அது மாத்திரம் இல்லை, பையன்கள் ‘பட்டி தொட்டி’க்குப் போகாவிட்டால் காவலுக்கு ஆள் இல்லை! ‘மாடு, கண்ணு’ மேய்க்கறதுக்குப் பையன்கள் போய்விட்டதால் வாத்தியாரும் தடுக்கைச் சுருட்டி வைத்து விட்டு கிளம்பி விட்டார். அப்புறம் பல தொழிலும் அவர் கற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது. பஞ்சு பருத்தி தரகு முதற் கொண்டு ‘சோசியம்’ வரை வயிற்றுப் பிழைப்புக்காக அவர் மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

     இந்த விவரத்தைக் கேட்டு அவன் நொந்து போனான். பகல் பள்ளிக்கூடத்திற்கே பிள்ளைகள் சேராதிருக்கையில் இராப் பள்ளிக்கூடத்திற்கு எங்கே போய் பிள்ளைகள் சேர்ப்பது?

     செல்லாயாள் அவன் வருகையை எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தாள். பார்த்தவுடன், “நீ எத்தனாவது வரை படிச்சாய்?” என்றான்.

     அவர்கள் இருவரும் சேர்ந்து படித்ததுதான். அதற்குப் பிறகு அவள் ஏட்டைத் திருப்பியும் பார்க்கவில்லை. “உங்களுக்குத் தெரியுமே?” என்றாள்.

     கையிலிருந்த ஒரு புத்தகத்தைக் கொடுத்து, “இதைப் பாரு, படிக்க வருமா?” என்றான். அவள், ‘கடகட’வென்று படித்தாள். அதைக் கேட்டுக் கொண்டே பசும்புல் திட்டின் மீது மெதுவாகச் சாய்ந்தபடி படுத்திருந்தான்.

     மிக்க பரிவுடன், “செல்லம்” என்றான். அவள் தலை நிமிராமல், “ஏன்?” என்றாள். தூரத்திலே குருவிக் கூட்டம் கதம்பக் குரலோடு கம்மங்காட்டை நோக்கிப் பறந்து வந்து கொண்டிருந்தன. “நாமும் இப்படிப் பறவையாக சென்மம் எடுத்திருக்கலாகாதா? வானத்தில் பாடிக் கொண்டே உல்லாசமாகத் திரியலாமே!” என்று எண்ணினான். இதனை நினைக்கவும் அவன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். மாலை இருள் பரவிக் கொண்டிருந்தது. அந்த மங்கலிலும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் ‘பலபல’ வென்று உதிர்வதை அவன் கண்டான்.