உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
6 நிலாக் கால் வீசியது. எங்கும் வெண் துகில் போர்த்தியதைப் போல் கதிர்கள் மாயா ஜாலம் புரிய ஆரம்பித்தன. இளங்காற்றும் லேசாக வீசிக் கொண்டிருந்தது. குளிர்ந்த நிலவும் காற்றும் மனசுக்கு எவ்வளவோ உற்சாகமளித்திருக்க வேண்டும். அதனால் தான் மணியக்காரர் வீட்டில் கூடியிருந்த முப்பது நாற்பது பேர்களும் இன்னும் அதிகப் பலமாகத் தங்கள் விவாதத்தைத் தொடங்கினார்கள். பேச்சு ஓய்வாகவோ, அதற்கு ஒரு முடிவு ஏற்படுவதாகவோ காணோம். இதையெல்லாம் உத்தேசித்துத்தான் மணியக்காரரும் ‘ராச் சாப்பாட்டை’த் தம்முடைய வீட்டிலேயே வைத்துக்கொள்ள எல்லாருக்கும் முன் கூட்டியே அறிவித்தும் இருந்தார். காலையிலிருந்து என்ன பேசுகிறார்கள் என்று அந்தக் கிழட்டுத் தலையாரிக்குத் தெரியவே இல்லை. மணியக்காரர் ஆனமட்டும் கூப்பிட்டும் அவன் வாசலில் படுத்த இடத்தை விட்டு அப்புறம் இப்புறம் நகரவே இல்லை. கடைசியாகச் செருப்பைக் காலில் மாட்டிக் கொள்ளாமலே இலை கொண்டு வருவதற்காக தோட்டத்தை நோக்கி விரைவாகப் புறப்பட்டார். நல்ல வேளையாக சுப்பண முதலியாரும், பெரியவரும் கையில் இலைக்கட்டுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். வாசல் விளிம்பிலும், ஆசாரத்திலும், பந்தக்கால் ஓரத்திலும் முப்பது பேருக்கு மேல் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடைய தலையிலே பெரிய வேட்டியை உருமாலாகக் கட்டியிருந்தார்கள். இடுப்புக்கும் மேலே இழுத்துக் கட்டிய மடிப்புத் துணியிலே வெள்ளி அரைஞாண் புரண்டது. சிலர் கடைவாயில் வெற்றிலையை அடக்கிக் கொண்டே பேசும்போது பக்கத்திலிருக்கிறவர்கள் மீது தெறித்த திவலைகளைப் பன்னீர் அபிஷேகம் என்றே கருதிக் கொண்டார்கள் போலும். பாய் விரித்துத்தான் இருந்தது. ஆனால் குனிந்த தலையோடும், ஆகாசத்தைப் பார்த்தபடியும் வீற்றிருந்த அவர்கள் ஆசனத்தை அவ்வளவு குறிப்பாகக் கவனிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நெற்றிக் கட்டுக் கைத்தடிகளும், கவைகளும் திண்ணையோரம் சாத்தியிருந்தது. யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல அந்தத் தடிகள். இராத்திரி அப்படியே பட்டிக்குப் போகும் போது ஆதரவாக ‘கைக்’ காவலாக இருக்கட்டும் என்றே கொண்டு வந்திருந்தார்கள். இவர்கள் அப்படி என்ன தான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள்? இன்னும் இரண்டு நாளில் ஊர்க் கள்ளுக்கடை ஏலம் வருகிறது. ஊரெல்லாம் ஒரே ‘கட்டுமானத்தில்’ இருந்தால் ஏலத் தொகையைக் குறைத்து கடையை எடுத்து விடலாம். அப்படி எடுப்பதனால் வருகிற லாபப் பணத்தைக் கொண்டு, கோயில் கட்டிவிடலாம். கோயில் செப்பனிட்டுச் சரி செய்யா விட்டால் இன்னும் சில நாளில் ஆண்டவன் ஆகாயத்தைப் பார்க்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். கடவுளுக்கு அப்பேர்பட்ட கஷ்டகாலம் வராமல் இருக்கட்டும் என்பதற்காக கருணையுடன் இந்தக் காரியத்தை முடிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு மூன்று வருஷங்களாகவே இந்த யோசனை இருந்தும் ஏனோ தெய்வச் செயலால் அந்தத் தெய்வ காரியம் நிறைவேறாமலேயே இருந்து வந்தது. இந்த வருஷம் முகாமைக்காரர்களான நடுவளவு ராமசாமியும், மணியக்காரரும் முனைந்து நிற்பதால் காரியம் கைகூடியே தீரும். ஆனாலும் எத்தனையோ குறுக்கு யோசனைகளும், திருத்தங்களும் இடையே சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கைகள் பலப்பட்டது. இதை உத்தேசித்தே மணியக்காரரும் அன்று பூராவும் அதற்காக நேரத்தை ஒதுக்கி வைத்துவிட்டார். சுப்பண முதலியாருக்குக் கூட்டத்தைக் கண்டதுமே சிரிப்பு வந்துவிட்டது. எல்லாரிடமும் உரிமை பாராட்டிப் பேசுகிறவன் ஆதலால், “மடம் கட்டியாச்சுங்களா?” என்று சபையைப் பார்த்துத் தன் கேள்வியைப் போட்டான். யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால் சிரித்தார்கள். சபை கொஞ்சம் கலகலப்பாக இருக்கிறது என்பதை உணர்ந்து, சுப்பணன் மெதுவாக, “இதுக்கப்பறமாவது கோயில் பக்கம் எட்டிப் பாப்பீங்களா?” என்றான். “அடக் கட்டியாகட்டு மப்பா. புள்ளே பொறக்கறதுக்கு மிந்தியே பேர் வைக்கறயே?” என்றார் ஒருவர். “நம்ம சுப்பப் பயன் பேசினா சிறுமைக் கூத்துத் தானுங்க” என்று ஆமோதித்தது ஒரு குரல். மேக்கால் வீட்டுக் கொத்துக்காரர், “எங்க நாயங் கெடக்கட்டும் சுப்பணா, நீ ‘பாதி ஊத்து’ நாசரம் ஊதின கதையைச் சொல்லப்பா” என்றார். சுப்பண முதலியார் கதைகள் ஊரிலே எத்தனையோ உலவி வருகிறது. குப்பம்பாளத்துக்காரர் நாதசுரக் கச்சேரிக்குக் கூப்பிட்டதும், சுப்பணன் மூணு ரூபாயிக்குப் போய் வந்ததும் ஒரு நல்ல வேடிக்கைக் கதை. அந்தப் பக்கத்திலேயே பிரபல மேளகர்த்தா நமது சுப்பண முதலியார்தான். குடிபடைகளுக்குச் சிரமமில்லாமல் கலியாண காலங்களில் ‘சத்தம் பண்ண’ (மேளம் தான்) சுப்பணனுக்குத்தான் முதல் பாக்கு வெற்றிலை! கடந்த முப்பது வருஷங்களாக ஏகபோக உரிமை. போட்டியாக யாரும் முளைக்கவே இல்லை. மற்றவர்கள் தலையெடுப்பார்கள் என்பதற்குத் துளியும் நம்பிக்கை இல்லை! “என்ன சுப்பணா. ‘சத்தம் பண்ண’ வாரியா?” என்றார் தம் மகள் கலியாணத்திற்கு குப்பம்பாளத்தார். “அதுக்கென்னுங்க ஐயா, வரத்தானே இருக்கறனுங்க.” “ஆளக் காணமா? நீ ஒருத்தம் போதுமா?” என்றார். “ஆளுக் கென்னுங்க பஞ்சம். நான் எந்திரிச்சா ஒத்து நாசரமும் கூடவே வராதா?” என்றான் சுப்பணன். “என்னப்பா கேக்கறே?” “இதுதானுங்க மொதத் ‘தேவை’. உங்க ‘தேவையிலே’ எனக்கு ஒரு ஆறு ரூபாயாச்சு வாண்டாமுங்களா?” “என்ன கொள்ளுப் பருப்பாட்ட, ஆறு ரூவா கேக்கறயே!” “ஆமாங்க.” “அப்படீண்ண, மூணு ரூவாயிக்கு ஊதற ஊத்தை ஊதப்பா.” “நா பாதி ஊத்துத்தானுங்க ஊதுவேன்!” அந்த அப்பாவி குப்பம்பாளையத்தான் ஒத்துக்கொண்டானாம். இதைச் சுப்பண முதலியார் சொல்லும் போது வெகு வேடிக்கையாக இருக்கும். சுப்பணன் வாயைக் கிளறினால், பருப்புக் கடையும் மத்தை ஒத்து என்று சொல்லி பையில் போட்டு ஒண்ணேகால் ரூபாயிக்கு அக்கணம்பாளத்து ஆயாள் வீட்டிலே அடகு வைத்தது வரை அடுக்கடுக்காக எடுத்து விட்டு விடுவான்! சாப்பாட்டுக்குப் பிறகு கள்ளுக்கடை ஏலப்பேச்சு ஒரு விதமாக முடிந்தும், சுப்பண முதலியைச் சுற்றிய கூட்டம் கலைவதாயில்லை. அங்கிருந்து தப்பித்துக் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. |