26

     காலடி ஓசை கேட்டது. யார் மாரியப்பனா? வந்து விட்டானா?

     ஆவல் நிறைந்த கண்களோடு தாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். தணல் பொங்க ராமசாமிக் கவுண்டர் திரும்பிப் பார்த்தார்.

     “வா அப்புனு” என்று வேடிக்கையாக முருகணன், வாசலுக்குள் வந்தும் வராததுமாய் மாரியப்பனிடம் கேட்டான்.

     மாரியப்பன் மேல் துண்டைத் திண்ணை மீது போடப் போனான்.

     கோபத்தோடு ராமசாமி, “இப்படிப் பார்ரா! அடே, இந்தப் பக்கம் பார்ரா!” என்றார். மாரியப்பன் திடுக்கிட்டுத் திரும்பினான்.

     “நல்ல வேலை செய்தீடா?” என்றார்.

     “என்ன?”

     அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

     “உனக்கு எப்படீடா தெரியும்? கேளப்பா நீயே நாயத்தை. முருகணா நீயே கேளு?” என்றான் எரிச்சலுடன்.

     முருகணன் உடனே, “படிச்ச பயன், புத்தி, ரோசனையோடெ இருப்பீண்ணு இருந்தா, மணியாரம் பொறத்திலே சுத்தீட்டு வாரயே அப்புனு?” என்றார்.

     அப்போதுதான் மாரியப்பனுக்கு கொஞ்சங் கொஞ்சமாக அவர்களுடைய கோபத்தின் காரணம் அர்த்தமாக ஆரம்பித்தது. இதற்குள் தாயார், அவசரமாகத் தண்ணீரைக் கொண்டு வந்து, “இந்தாப்பா, கைகாலெல்லாம் கழுவிக் கிட்டு வா. வெடியாப் பொளுதா? நீ சித்தெ இந்தப் பக்கம் வாப்பா” என்று தன் மகனைக் கூப்பிட்டாள்.

     மாரியப்பன், “இரம்மா” என்று சொல்லிக் கொண்டு, திண்ணையின் மேல் உட்கார்ந்தான். “என்னுங்க ஐயா? ஏனுங்க அண்ணா, கோவிக்கறீங்க?” என்றான்.

     அதற்குக் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, “நீங்க மிந்திப் புடிச்சுச் சொன்ன சங்கதிதானுங்க. உங்களைக் கேக்காமெ கொள்ளாமெ ஒரு காரியமும் செய்திடலீங்க. இப்பொ மணியக்காரர் வேறீங்க, மிந்தி இருந்த மணியக்காரர் வேறீங்க! ஏனுங்க ஐயா, நாலு வருசத்துக்கு மிந்தி நாப்பதாயிரம் உங்களுக்கு இருந்ததுங்கோ. இப்பொ நாலு காசு கூட கையிலெ இல்லை. இதுக்கு நீங்க ஆரைச் சலிச்சுக் கிட்டீங்க. மணியாரரையா? செட்டியாரையா? விதியையா? உங்களைப் படைத்த கடவுளையா? சொல்லுங்க? நீங்க எங்கிட்ட ‘ஏன் போனீன்னு?’ கேட்டீங்க. நாஞ் சொல்றேன் நீங்களும் கொஞ்சஞ் சொல்லுங்க” என்றான்.

     முருகப்பனும் பேசாமலிருந்தான்.

     “மணியாரர் சொன்னாருங்க. ‘இன்னைக்குச் செத்தா நாளைக்கு மூணுநாள். நம்ம ராமசாமி மனசிலொண்ணு சொல்லிலே ஒண்ணு வெச்சுக்கறவனல்ல. என்னமோ கெட்ட காலம் இப்பவாச்சு சாளேசரம் நீங்கிச்சு. நீதானப்பா வெளிச்சங் குடுத்தெ. தம்பி, இதெல்லாம் உங்க அப்பங்கிட்டெ சொல்லாட்டி என் மண்டை வெடிச்சுப் போகும்.’ இண்ணு சொல்லி அவர் அங்கலாச்சார். இப்ப வந்தாலும் வருவார். போனதைப் பேசறதில்லே என்னுங்க ஐயா இருக்குது? நேத்து அறுத்த காயி இன்னைக்கு வாடித் தானுங்க போகும்” என்றான் மாரியப்பன்.

     ராமசாமிக் கவுண்டருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தன்னுடைய மகன் இப்படி மணி கோத்த மாதிரி அதுவும் ஊர் நியாயத்தைப் பேசுவான் என்று எதிர்பார்க்கவே இல்லை. தாயார் வாய்மேல் வைத்த கையை எடுக்கவே இல்லை. “அண்ணா, தம்பி சொல்றது நெசந்தானுங்க. பார்க்கப் போனா என்னுங்க இருக்குது? நாளைக்கு நாம போகையிலே கூட வாரது என்னுங்க” என்று முருகணன் கூட மாரியப்பனைப் பின் தொடர ஆரம்பித்து விட்டான்.

     அன்று சோறு தின்ன வேண்டிய அவசியத்தைத் தாயார் வற்புறுத்தாமல் விடவே, மாரியப்பனும் சிரித்துக் கொண்டே நிலா வெளிச்சத்தில் கட்டிலைப் போட்டுக் கொண்டு வாசலில் படுத்தான். ஆனால், கூட இருக்கிறவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

     “தம்பி, மணியாரர் வளவு முட்டுப் போயிட்டு வாரோம்” என்று புறப்பட்டார்கள். அதே சமயம், மணியக்காரரும் வீட்டைத் தாண்டி வந்து கொண்டிருந்தார். வழியில் சந்தித்த மூன்று பேரும், பிள்ளையார் கோவில் கல்கட்டில் போய் உட்கார்ந்தார்கள். கொஞ்ச நேரத்தில் தகவல் தெரிந்ததும் ஊரே அங்கு கூடிவிட்டது. பட்டி தொட்டிக்குப் போகிறவர்கள் போர்த்திக் கொண்டு தலைக் கட்டோடு வந்து உட்கார்ந்தார்கள். பவளாக் கவுண்டர் கூட்டாளிகளும் அங்கு பிரசன்னமாகி யிருந்தார்கள். சுப்பண முதலி சிரித்தபடி அங்குமிங்கும் சுற்றிச் சுற்றி வருவதைப் பார்த்தால் நாலைந்து கலியாணத்துக்கு ‘அச்சாரம்’ வாங்கியவன் போல் காணப்பட்டான்!

     பெண்களெல்லாம் வாசற்படிகளிலும் திண்ணையிலும் நின்று கொண்டிருந்தார்கள். இளம் பெண்கள் கும்மி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சின்னப் பையன்கள் நிலாவையே எட்டிப் பிடிக்க வானத்திற்குத் தாவிக் குதித்துக் கொண்டிருந்தார்கள். இன்று தான் பல நாட்களுக்குப் பிறகு ஊரே ‘கலகல’ப் பாகக் காணப்பட்டது. எங்கும் சிரிப்பும், விளையாட்டும் நிறைந்திருப்பது போலிருந்தது.

     கூட்டத்தில் எதைப் பற்றியும் பேசாவிட்டாலும் எல்லாமே பேசித் தீர்த்து விட்ட மாதிரி இருந்தது! ‘நாம் ஒற்றுமையுடன் இருந்தால் அயலான் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது’ என்று அனைவர் முகத்திலும் எழுதி ஒட்டியிருப்பது போலிருந்தது. மணியக்காரரும், ராமசாமிக் கவுண்டரும் பக்கம் பக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்குள் இருந்த கசப்பு எல்லாம் நீங்கி விட்டது. மாரியப்பனைப் பற்றிப் பலரும் பேசிக் கொள்வதைக் கேட்டு ராமசாமிக் கவுண்டர் சிந்தை குளிர்ந்தது.

     வெண்ணிலாப் பொழியும் ஆனந்தகரமான அந்த இனிய வேளையிலே, இளம் பெண்கள் வளைக்கரங்கள் ஒலிக்க, கும்மி அடிக்கும் இனிய இசையும் பாட்டும் எல்லோருடைய உள்ளத்தையும் நிறைத்தது. உள்ளம் நிறையும் போது வாழ்வும் நிறையுமல்லவா? உள்ளத்திலே ஒலி உதயமாகும் போது வாழ்க்கையிலும் ஒளி உண்டாகித் தானே தீரும்!

முற்றும்