22

     வீரப்ப செட்டியார் கடைக்கு முன்னால் எப்போதும் ஒற்றை மாட்டு வண்டி பூட்டியபடியே இருக்கும். செட்டியாரிடம் வருகிற ஆட்கள் எவ்வளவு நேரம் தான் பேசலாம் என்பதற்கு அந்த வண்டியின் அசைவு, ஆட்டம், மணிச்சத்தம் இவைகளும் சில சமயங்களில் அளவுகோலாக இருப்பதுண்டு!

     வட்டிக் கடைக்குப் பல ரகமானவர்கள் வருவார்கள். யார் யாரோடு இவ்வளவு நேரம் பேசுவது என்ற கணக்கு உண்டு. செட்டியாருக்குப் பிடித்தமில்லாத போது, வண்டிக்காரன் வருவான். ‘வண்டி பூட்டியாச்சு’ என்று ஞாபக மூட்டுவான். காளையே சில வேளைகளில் கழுத்தை அசைத்து மணிச் சத்தம் செய்யும்.

     இந்த மாதிரி மிருகத்தையே அவர் தம் ‘கைக்குள்’ போட்டு வைத்திருந்தால் தான் நாளது வரை கோணாமல் எடுத்த காரியங்களில் வெற்றி பெற்றுக் கொண்டே வந்து விட்டார். இதிலே பக்தி, தான தருமம் எல்லாம் கலந்திருந்ததால், நல்லவன் கெட்டவன் என்று இல்லாமல் எல்லோருமே அவர் கடையை நாடி வருவார்கள்.

     ரோட்டுப் புழுதிக்குப் பயந்து கடைக்கு முன்னால் திரை போட்டிருந்தாலும், அதற்கு அடுத்த அறையில் தான் பேச்சு வார்த்தை எல்லாம் வைத்துக் கொள்வார். சோடா வேண்டுவோருக்கு, காப்பியும், காப்பி குடிப்பவர்களுக்குச் சோடாவும் கொண்டு வரச் சொல்லிவிட்டு, அந்தச் சிரிப்பு வாக்கில் ‘அப்படிங்களா, மறதி அதிகமுங்க எப்படியும் உங்க சாலையோரம் இருக்கற பூமியை இந்த வருசம்...” என்று தான் பேச்சு தொடங்குவது வழக்கம். நேராக எந்தப் பேச்சையும் ஆரம்பிக்கக் கூடாது என்பது அவர் கண்ட முடிவுகள். ஆனால், இன்றைக்கு, அவர் உண்மையிலேயே சுள்ளிவலசு மணியக்காரர் தோட்டத்தை எப்படி ஏலத்திற்குக் கொண்டு வந்து முடிப்பது என்பதற்கு ஒரு முடிவு தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். ஆனால், அதற்காக செய்ய வேண்டிய ஏற்பாட்டில் ஒன்றும் ‘சோடை’ போகவில்லை.

     சுள்ளிவலசில் அடி எடுத்து வைத்த புதிதில் மணியக்காரர் தயவால், மற்றவர்களை ஒரு வழியாகத் தலையைத் தடவி விட்டார். இப்போது, மணியக்காரர் மேலேயே ‘அம்பு’ தொடுக்க வேண்டியிருந்தது! மறைந்து நின்று தொடுக்க வேண்டியதில்லைதான். இருந்த போதிலும், யார் கையில் வில்லைக் கொடுப்பது என்ற சங்கடம் வாட்ட ஆரம்பித்து விட்டது!

     அதற்கேற்ற ஆள் புத்தூர் அப்பன் தான். புத்தூர் அப்பன் வெகு சீக்கிரத்திலே முன்னுக்கு வந்து விட்டார். மைனர் நீங்கி மேஜர் ஆவதற்குள்ளே அந்தப் பக்கத்திலே குதிரை வண்டி ஓட்டுவதில் அவருக்கு இணை அவரேதான். மணியக்காரர் கார் வாங்க யோசித்துக் கொண்டிருந்த போது இரண்டு கார் வாங்கியவர். இன்னும் சரிக்கி விழாததற்குக் காரணம் சொத்து பூராவுக்கும் மாமா வாரிசாக இதுவரை இருந்தார். அவர் காலத்திற்குப் பின் இந்த ஒரு வருசமாகத் தான் தலை நிமிர்ந்து வெளியே நடமாட ஆரம்பித்திருக்கிறார். செட்டியார் நட்பும் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. சுள்ளிவலசிலிருந்து பத்து மைல் தான் இருக்கும் அவர் ஊர். ஆகையால், தக்க உதவி செய்வார். உதவி செய்யக் காத்திருந்தார். இப்போது தருணம் வந்து வாய்த்தது.

     “என்னுங்க உங்களை நம்பித்தான் ஏலத்துக்குக் கொண்டு வருதுங்க. ஆள்கீள் வேணுமிண்ணா அனுப்புங்க. சுவாதீனத்துக்கு உடாமே உள்ளேயே மணியாரர் உக்காந்திட்டா, நீங்கதாம் பாத்து ஒரு வழி பண்ணோணுமிங்க” என்றார் வீரப்ப செட்டியார்.

     “அதுக் கென்னுங்க! இளுத்துப் போட்டுக் கொண்ணாலும் கேக்க ஆளு இல்லீங்க. நீங்க சும்மா இருங்க. பாத்துக்கறன்” என்றார் புத்தூர் அப்பன்.

     “எளவயசு, சொன்னதையும் சட்டிணு தெரிஞ்சுக்குது” என்று பேசிக் கொண்டார் செட்டியார்.

     மணியக்காரர் இப்போது திண்டாட்டத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது செட்டியாருக்கு ரொம்ப நன்றாகத் தெரியும். இந்தத் தருணத்தைக் கைவிடலாகாது என்று தீர்மானித்து விட்டார். அந்தப் பக்கமே எல்லாரும் தன்னிடம் தான் குத்தகைச் சீட்டு வாங்கி யிருக்கிறார்கள். ஆனானப்பட்ட ராமசாமிக் கவுண்டரே, என்ன துள்ளுத் துள்ளினவன், இப்பொழுது பெட்டிப் பாம்புபோல் அடங்கி விடவில்லையா? பிறகு என்ன? அங்கே யார் ரொக்கமாகப் பணம் வைத்திருக்கிறார்கள். ஏலத்தில் எடுத்து எவனையாவது பார்த்துக் கொள் என்றால், “நான் முந்தி, நீ முந்தி” என்று ஆயிரம் பேர் ஓடிவரக் காத்திருக்கிறார்கள். தேவலை எப்படியும் இந்த வருசம் பத்துப் பூமி வசப்படுத்தி விடலாம். திருப்பதி வேங்கடாசலபதிக்கு காணிக்கையும் செலுத்தி விடலாம், என்று பக்திப் பெருக்கிலும், பணப் பெருக்கிலும் மூழ்கி மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தார் செட்டியார்.

     புத்தூர் அப்பன் போன பிறகும், “இவங்கிட்டச் சொல்லிட்டா, இவந்தாங் கதியிண்ணு நம்பியிருப்பேண்ணு நெனச்சுக்கிட்டுப் போறான்!” என்று தானே சிரித்துக் கொண்டு கடை ஆள், முத்துச்சாமியைக் கூப்பிட்டார்.

     “ஏண்டா முத்து, அந்தச் சுள்ளிவலசு ராமசாமிக் கவுண்டன் கணக்கைப் பாத்தியா? ஏதாச்சும் ‘தள்ளிக் குடுக்கற’ எனம் இருக்குதா? ஆளை இப்படிக் கூப்பிட்டா வருவானா? நம்ம மேலெ அவனுக்குக் கசப்பு இருக்கும். ஆனாக் கொஞ்சம் கருப்பட்டியைப் போடலாமாடா” என்றார்.

     கற்கண்டைப் போட்டாலும் வருவானா என்று சந்தேகப்பட்டான் முத்துசாமி, “எதுக்கும் பாப்பம்” என்றான்.

     “பாக்கறதென்ன? அவனைக் கொஞ்சம் திருப்பினா நல்லாத்தான் இருக்கும். இருந்தாலும் மணியக்காரனுக்கும் அவனுக்கும் இப்ப எப்படி? அவம் பக்கம் தலைவெச்சே படுக்கிற தில்லீல்லோ!” என்றார் தலையைத் தடவிக் கொண்டு.

     முத்துச்சாமியும் சிரித்துக் கொண்டு, “இந்தக் கேசிலெ கூட மாட்டி வைக்கப் பாத்தாங்களாம். ஆனாத் தப்பிச்சுக் கிட்டாராமுல்ல. அமீனா சொல்லக் கேள்வி” என்று முத்தப்பன் சொன்னான்.

     செட்டியார் நடந்த விருத்தாந்தத்தை முழுதும் கேட்டு விட்டு, “காத்துள்ள போதே தூத்துண்ணு தெரியாமையா சொன்னாங்க. ஆக வேண்டிய காரியத்தைப் பாரப்பா. தூங்கி விடாதே” என்றார். முத்துசாமி, வெளியே பார்த்து விட்டு, “வண்டியை அவித்து விடலாமா?” என்றான்.

     “வெளியே ஆளு ஆரும் இல்லீண்ணா சொல்லோணுமா? தெரியாதா?” என்றார். இவர்கள் பேச்சைக் கேட்டதும், வண்டிக்காரன் காளையை அவிழ்த்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் சென்றான். எழுந்து கொட்டாவி விட்டுக் கொண்டு, “சங்கரா” என்று ஈசனை அழைத்தபடி குளிப்பதற்குச் சென்றார்.