உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
10 நாலைந்து நாளாகவே மணியக்காரருக்கு உடம்பு ‘ஒரு மாதிரியாக’ இருந்தது. இன்ன வியாதி என்று சொல்வதற்கு இல்லை. அவரும் ‘இது தான்’ என்று ஒரு வியாதியையும் குறிப்பிட்டுச் சொல்லாமலே போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டே படுத்திருந்தார். பவளாக் கவுண்டர் மட்டும் அங்குமிங்கும் வீட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தார். என்னத்தையாவது தழைதாம்பை அறைத்துக் கொண்டு வந்து காலில் தடவச் சொல்லுவார். ஏதாவது பத்தியத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பார். “எதற்கு இது?” என்று யாரும் அவரைக் கேட்பதில்லை. அவரும் நின்று பதில் சொல்லிக் கொண்டிருப்பதில்லை! பொதுவிலே நாட்டராயன் கோவிலுக்குப் போய்விட்டு வருகிறவர்களுக்கு, வந்து ஒரு வாரத்திற்குள் இந்த மாதிரி ‘வியாதி’ வருவது வழக்கம். கொழுப்பு ஏறிய ஆட்டுக் கடாக்களின் பல பாகங்கள் உள்ளே போயிருக்கிறதல்லவா? இரும்பைத் தின்றாலும் எனக்குச் ‘செரி’க்கும் என்று தன்னுடைய சீரண சக்தியில் முழு நம்பிக்கையுள்ள கட்டிளங்குமரன் வரை எல்லாரையும் இந்தக் ‘கடாய்க்கறி’ ஒரு அசப்பு அசைத்தேதான் விட்டுவிடும். பெண்களுக்கு இது விதி விலக்கா என்ன? “என்னுமோ குளுந்து குளுந்து வருதே, ‘பூஞ்சோலை’ புடிச்சாப்பலே இருக்குதே, ‘வெட வெடப்பா’ மனம் பெரட்டுதே, சோகை புடிச்சாப்பலே உக்காந்திருக்கபடலே” என்று பெண்கள் தங்களுடைய ‘கோளாறை’ச் சொல்லுகையில் எந்தக் கைதேர்ந்த வைத்தியனும் மருந்து கொடுக்க கொஞ்சம் பின் வாங்கியே தான் தீருவான். மணியக்காரரும் வைத்தியர்களுடைய சங்கடத்தைத் தெரிந்து கொண்டுதான் மௌனமாக இருந்தார் போலும்? நாட்டு வைத்தியர்களிடம் பார்க்க விருப்பமில்லா விட்டாலும் கை அசைத்தால் காங்கயத்திலிருந்து செட்டியாரே பார்த்து ‘பட்டண வைத்திய’னையே அனுப்பி விடுவார். ஆனால் மணியக்காரர் எதிலும் ‘சோடை’ இல்லாமல் படுத்துக் கொண்டிருந்தார். காலைக்காற்று குளுமையாக வீசிக் கொண்டிருந்தது. அந்த அமைதியான காலை வேளையில் மோட்டார் ஆரன் சத்தம் கர்ண கடூரமாக விட்டு விட்டுக் கேட்டது. இந்தக் கடூரமான சத்தம் சில செவிகளில் தேவாமிர்தம் போல் விழுந்தது என்றால் அது ஆச்சரியப்பட வேண்டிய செய்திதான்! மணியக்காரருக்குக் காரில் வருகிறவர், வீரப்ப செட்டியார்தான் என்பது உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெரிந்து விட்டது. இந்த கிராமத்துக்கு வீரப்ப செட்டியார் காரைத் தவிர வேறு யாருடைய கார் வரப் போகிறது? அங்கங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு கண்மண் தெரியவில்லை. காரைக் கண்டதும் சந்தோஷ மிகுதியால் இன்னும் ஒரு கைமண்ணை வாரித் தலையிலே போட்டுக் கொண்டு குதியாகக் குதித்தன. மணியக்காரர் படுக்கையிலிருந்து எழுந்து உட்காரவும், செட்டியார், “அடடே!” என்று விசாரிக்கவும் சரியாயிருந்தது. கூர்ந்து பார்த்துக் கொண்டே, “எட்டு நாட்களாக வரவேணுமிண்ணு தான் பார்த்தேன். ஓய்வு ஒழிச்சல் இருந்தால் தானே? எங்கே நேரம்? அந்தக் கூத்தை ஏன் கேக்கறீங்க? இன்னும் கருப்பராயன் கோவில் பயணம் ஏதாச்சும் மீதி இருக்குதா? அல்லது எல்லாம் ஆச்சா? அடடே, நாளைக்கு வெள்ளிக்கிழமை இல்லே? அதுவும் ஆடி வெள்ளிக் கிழமை. மலைக்குப் போவீங்களே? எங்கே சேமலைக்கா? இல்லாட்டிச் சென்னிமலைக்கா?” என்றார். மணியக்காரர் மெதுவாகச் சிரிக்க முயன்றார். இதற்குள் செல்லாயா இரண்டு டம்ளரில் பால் கொண்டு வந்து வைத்தாள். செட்டியார் தலையைத் தடவிக் கொண்டே, “அம்மணி, என்னாயா அய்யம் படுத்துக் கிட்டாங்களே!” என்றார். “இனி நல்லாயிருமிங்க” என்றாள் செல்லாயா. செட்டியாருக்கு ரொம்ப சந்தோஷம். “பாத்தீங்களா? பாத்தீங்களா? நா வந்தாலே ஒரு ‘கலகல’ப்பு இல்லீங்களா? அம்மணிகூடக் கண்டிட்டா பாருங்க. எங்கே செல்லாயா, அய்யனுக்கும் கொஞ்சம் ‘காப்பி’ போட்டாயா. இந்தப் போர்வையை இப்படித் தூக்கி எறியுங்க. நாஞ் சொல்றபடி கேட்டாத்தான் இங்கே உட்காந்திருப்பேன். சோறு தின்பேன். இல்லாத போனா, இதே காரைத் திருப்பிட்டுப் போகறப் போறேன்” என்றார் செட்டியார். மணியக்காரருக்கு பேச்சைக் கேட்கக் கேட்க உடம்பு குணமாவது போல இருந்தது. மனசு என்ன நிலையில் இருந்தாலும், ஒரு உற்சாகமான பேச்சு, ஆதரவான வார்த்தை - இவைகளைக் கேட்டால் ‘கட்டுப் பிடித்து’ விட்ட மாதிரி குதூகலம் கொள்ளுகிறது. கொஞ்ச நேரம் வேடிக்கை விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்த பிறகு, “உள்ளே போகலாமே?” என்று மணியக்காரரையும் கூட்டிக் கொண்டு செட்டியார் உள் அறைப் பக்கம் சென்றார். “கையை உடுங்க. அப்படி நடக்கச் சீவனா செத்துக் கிடக்கிறேன்” என்று அவரே விசையாக எட்டி வைத்து நடந்தார். செட்டியாருக்கு அடிக்கடி இங்கு வந்து பழக்கம். ஆதலால் அந்த அறையில் துணிமணியும், கொள்ளு மூட்டையும் நிறைந்திருக்கவே, படுக்கை அறையிலேயே போய் மெத்தையின் மீது இருவரும் உட்கார்ந்தார்கள். செட்டியார் கொஞ்சங் காரமாகவே, “என்னுங்க மணியக்காரரே, நாளுக்கு நாள் ‘பதிரு’ப் பட்டம் எச்சாகறதைத் தவிர என்னத்தைக் கண்டோமுங்க?” என்றார். என்ன சொல்ல ஆரம்பிக்கிறார் என்பது நன்றாகத் தெரியவில்லை. “யாரு மேலே கோவிக்கிறீங்க?” என்றார் மணியக்காரர். “உங்க மேலெதான். எம்மேலெதான்!” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே தலையை இரண்டு தரம் தடவிக் கொண்டார். மறுபடியும், “உங்களுக்கு என்ன தெரியாதா? நாம ரண்டு பேரும் சேர்ந்து ஊரைக் கெடுக்கறமாம்? எப்படி யிருக்குது கதை” என்றார். “சொல்றவனுக்கு என்னுங்க? சொல்லிக்கிட்டுத்தான் இருப்பான். நாம காதிலே போட்டுக்காமே இருந்திட்டாப் போகுது” என்றார் மணியக்காரர். “அப்படிச் சொல்லுங்க. தலைபோற அவசரம்ணு ஆவிப்பறந்து கிட்டு ஓடியாறபோது ஓடியாறது. செட்டியாரே நீங்கதான் சகாயம், நீங்க குடுத்து ஒதவாட்டி குடி முளுகிப் போகும்கறது. அண்ணா உங்க சகாயம் இல்லாட்டி பொளப்புத்தனம் எப்படி நடக்கும்? நீங்கதான் செட்டியாருக்கு சொல்லோணும்னு உங்க காலைப் புடிக்கிறது. அட அப்பாவி போறாம்போண்ணு ஆபத்துக்கு ஒதவுனா அப்பற கெடைக்கிற பட்டம் என்ன தெரியுமுங்கல்லோ? செட்டி தம்பிடி வட்டி கொறைக்க மாட்டான். இந்தப் பாழாப்போன மணியக்காரன் நம்ம வாயிலே மண்ணைப் போட்டுட்டானேண்ணு நம்மளைத் துரத்தரதா? நாமளா கடனை வாங்குண்ணு சொன்னோம்? நாமளா வட்டி சல்லிக் காசு கூட கட்டவேண்டாம், பூமி ஏலத்திலே போற மட்டும் சும்மா இரப்பாண்ணு சொன்னோம்? மண்டை கிறுகிறுத்தவனைத் தவிர்த்து வேறே எவனாச்சும் பேசற பேச்சுங்களா இது?” என்று சொல்லி மூச்சு வாங்குவதற்காக செட்டியார் கொஞ்சம் நிறுத்தினார். அசையாமல் மணியக்காரர் கேட்டுக் கொண்டிருந்தார். “இன்னும் பாருங்க அக்கிரமத்தை. குடுக்கறதையும் குடுத்திட்டு நூத்தி எட்டு தடவை அவனைக் காலைக் கட்ட வேண்டியிருக்குதுங்க? கொஞ்சம் ‘நறு’க்கிணு கேக்கப் போனா, ‘வெட்டறன் குத்தறன்’கறது? குத்தறதுண்ணா இவங்க அப்பனூட்டுக் கிள்ளுக் கீரையிண்ணு நெனைச்சுக் கிட்டாங்களா?” என்று கோபத்தோடு கூறினார். தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே மணியக்காரர், “கடங் கொடுத்தவன் அதட்டற காலம் போய், கடன் வாங்கினவன் மெரட்டற காலமாக இருக்குதுங்களே? உங்களைப் போல இருக்கறவஞ்க தலையைக் குத்தீட்டுப் போற காலந்தானுங்க” என்றார். செட்டியார் என்னவோ யோசித்துக் கொண்டிருந்தார். “இந்த ஆத்தோரம் ராமசாமிக் கவுண்டன் ‘பொளி’க்குப் பக்கத்திலே யாருதுங்க? நல்ல பூமி, புகையிலை நல்லா வருமாமல்ல?” என்றார் செட்டியார். எப்போதுமே செட்டியார் யோசனை எடுத்துச் சொல்ல வேண்டியது. மற்றக் காரியங்கள் மணியக்காரர் மனத்திரையில் உருவகம் ஆகிவிடும். அடுத்த கணமே கோடுகள் கிழித்து மானசீகமாக கட்டிடம் கட்டிவிடுவார். சாயங்காலம் ஆற்றங்கரைக்குப் புறப்பட்டார்கள். மணியக்காரருக்கும் கொஞ்சம் ‘காலாற’ நடக்க வேண்டும் என்று தான் தோன்றியது. இருந்தாலும் செட்டியார் தூண்டுதலினால் அந்தப் பூமியை மனதில் வைத்துக் கொண்டு மணல் ஓரமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். தலையாரி கைத்தடியுடன் இவர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தான். கரை மேட்டில் ஏழெட்டுப் புளிய மரங்கள் இருக்கின்றன. அது காய்த் தருணம். ஏலத்துக்கு விடுவதற்கு முன்பே மரத்தை மொட்டை அடித்து விடுவார்கள். ஆனால் அந்தப் பங்கில் ‘குடு குடு’ கிழவி பாவக்காளும் ஈடுபட்டிருந்ததைக் காண மணியக்காரருக்கு ஆச்சரியமாக இருந்தது. அடிக்கடி மணியக்காரர் வெளியே வருவதில்லை. வந்தாலும் தோட்டமுண்டு, வீடுண்டு. இந்த மாதிரி அவர் கண்ணில் ஒன்றும் படுவதில்லை. மணியக்காரர் ஏனோ சோர்வு தட்டியவராக இருக்கிறார் என்பதைக் கவனித்த செட்டியார், “என்னுங்க மணியாரே, இருந்தால் உங்களாட்ட இருக்கோணும். என்னுங்க பின்னே, பூமிக்கும் கேடாப் பொறக்கறதிலும் சும்மா இருந்திரலாமே” என்றார். பார்க்கப் போனால் அந்தப் பேச்சுக்கு அர்த்தம் ஒன்றுமில்லை. இருந்தாலும் மணியக்காரர் சிரித்துக் கொண்டு, “என்ன சொல்றீங்க?” என்றார். “எடுத்த காரியத்தை முடிக்கறதிலே உங்களைப் போல கண்டதில்லீங்கோ. காரியத்துக்கு அப்புறந்தான் உங்களுக்குச் சோறு தண்ணி எல்லாம்” என்றார். அதிலும் உண்மை இல்லாமல் இல்லை. கண்ணுக்கெட்டிய தூரம் சுற்றிலும் பரந்து கிடக்கும் எத்தனையோ தோட்டங் காடுகள் மணியக்காரர் சம்பந்தத்தால் செட்டியாருக்கு வசமாகி யிருக்கிறது. செட்டியார் உறவினால் மணியக்காரரும் பயன் பெற்றிருக்கிறார். நடைச் சலிப்புத் தெரியாமலே முக்கால் மைலுக்கு மேல் வந்து விட்டார்கள். தாங்கள் வாங்கப் போகும் நிலத்தை ‘நோட்டம்’ பார்த்துக் கொண்டே சின்ன அணைக்கட்டின் கரடுமுரடான கற்களின் மேல் உட்கார்ந்தார்கள். தலையாரி ஒரு அணிலைத் துரத்திப் பிடிப்பதில் மும்முரமாக முனைந்திருந்தான். மாலைக் கதிர்கள் எங்கே பார்த்தாலும் மாயாஜாலம் புரிந்து கொண்டிருந்தன. இளம் ராகி நாற்றுக்களின் உச்சியைப் பொன்னிறமாக்க முயலுகையில், தங்கமும் பச்சையும் கலந்த ஒரு வர்ணஜாலம் கண்ணைக் கருத்தைக் கவர்ந்தது. குறுகுறு என்று ஓடும் ஆற்று நீரின் மீதும் பாறைகளின் மீது உட்கார்ந்திருக்கும் வெண்ணிறக் கொக்குகளின் மேலும், பக்கத்திலுள்ள பசும் மைதானங்கள், மரத்தின் இடைவெளிகள், கரையோரப் புதர்கள் இங்கெல்லாம் மாலைக் கதிர்கள் ஓடிப் பாய்ந்து புதுப்புது வனப்புக் கோலத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. ஆனால், இந்த அற்புத அழகிலே இதயம் ஒன்றிப் பரவசப் படுவாரைத்தான் அங்கு காணோம்! மணியக்காரர் மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்தார். செட்டியாரும் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தீர்க்கமான குரலில், “கட்டாயம் உங்களுக்கும் ஒரு ‘கார்’ வேணுமுங்க. அது இல்லாத போனாச் செரிப்பட்டு வராதுங்க” என்றார். நாளதுவரை செட்டியார் பேச்சை தட்டியவரல்ல. அந்தப் பிராந்தியத்திலே பழைய சோற்றுக்குப் பதில் ‘காப்’பியைக் கைக்கொண்ட முதல் மனிதர் மணியக்காரர் தான். ஆனால் இதற்கு அவருக்குக் ‘குரு’வாக விளங்கியவரும், இன்றைக்கும் அந்த ஸ்தானத்தை வகித்து வருபவரும் நமது செட்டியாரவர்களே தாம். இன்னும் செட்டியாரோடு காங்கயம் போகும் போதெல்லாம் புதுப்புது அனுபவங்களை அவர் அடைந்தே வந்தார். அழகான திரைச்சேலைகள், மகளுக்கு விதவிதப் படங்கள். விநோதப் பொருள்கள் முதலியன அவர் வீட்டை வந்தடைந்தன. ஏற்கெனவே இப்படி எல்லாம் நிகழ்ந்திருக்க ஒரு கார் வாங்குவது என்ன பிரமாதமான காரியமா? தவிர அவருக்கும் வெகு நாளாக அந்த ஆசை உண்டு. “ஆகட்டும் நீங்களே நல்லதாப் பார்த்து ஒண்ணை முடிச்சுக் குடுங்கோ?” என்று அவரிடமே அதை விட்டு விட்டார். இருவரும் திரும்பி வீட்டிற்கு வரும்போது நன்றாக இருட்டிவிட்டது. செட்டியார் இரவில் ஆகாரம் சாப்பிடுவதில்லை. பாலும் பழமும் மட்டும்தான் உட்கொள்வார். நல்ல பலகாரமாக இருந்தால் தள்ளுபடி இல்லை. அன்றைக்கு அவர் விருப்பம் போலவே இரண்டு தினுசும் கிடைத்தது. ஆகையால், “செல்லாயா, தங்கமான பொண்ணு” என்று அவர் வாயார வாழ்த்துவதை பவளாக் கவுண்டர் மனப்பூர்வமான வாழ்த்துதல் என்றே எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். |