3

     நல்லதோ கெட்டதோ நடக்கும் காரியங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. சிலர் இடையே வந்து சேருகிறார்கள். தப்புத் தவறு அவர்கள்மேல் கொஞ்சமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நடுவில் நிற்கும் அவர்கள் மேல் பாரமும் பழியும் சேர்ந்து விடுகிறது. சுள்ளிவலசில் கிட்டத்தட்ட இருநூறு வீடுகள் இருக்கின்றன. பலபட்டரைச் சாதி போக ‘நலம் பொலம்’ முன்னுக்கு நின்று செய்கிற காணியாளக் கவுண்டர்களில் மணியக்காரரும், நடுவளவு ராமசாமிக் கவுண்டரும்தான் முதன்மையானவர்கள். இவர்கள் இல்லாமல் எந்தக் காரியத்தையும் யாரும் செய்யமாட்டார்கள். அதிலும் ஊருக்குப் பொதுவாக கூத்து நடத்துவதிலே இவர்கள் இரண்டு பேரும் இல்லாமல் யாரும் “வெற்றிலை கொடுக்க” மாட்டார்கள். ஆனால் சாயங்காலம் கூட்டத்திற்கு அகஸ்மாத்தாக இரண்டு பேரும் வரவில்லை. கோவில் ஐயர் ஊர்க்காரர்கள் வந்து கூடியிருக்கிறார்களே என்று வேடிக்கை பார்க்க வந்தார். யாரோ ஒருவர், “குடுங்க சாமி, வெத்திலையைக் குடுங்க” என்றார். ஐயரும் எதார்த்தமாக அண்ணாவியிடம் நாளையிலிருந்து ஆட்டத்தைத் தொடங்கும்படி ஊருக்குப் பொதுவாக அழைப்பைத் தந்துவிட்டார். ஆனால், இப்போது ஐயர் தலையில் வந்து விழுந்தது.

     “எப்பொ இருந்து சாமி இதெல்லாம் பண்ண ஆரம்பிச்சிருக்கிறீங்க” என்றார் மணியக்காரர்.

     அங்கிருந்து ஒரு வழியாகத் தப்பித்து வந்து ராமசாமிக் கவுண்டரிடம் சேர்ந்தால், “எல்லாம் தூண்டியுட்டு வேடிக்கை பாக்கிறீங்களா சாமி?” என்று அவர் கேட்கிறார்.

     “தூ, இந்தச் சம்பந்தமே கூடாது” என்று நினைத்துக் கொண்டு நேராகப் பவளாக் கவுண்டரிடம் ஐயர் வந்து சேர்ந்தார். “நீங்க சொல்லுங்க ஐயா! ஏதோ பூசை பண்ணிக்கிட்டு ஊரிலே இருக்கிறதா? அல்லது தலையிலே சீலையைப் போட்டுக்கிட்டு பரதேசம் போய்விடட்டுமா?” என்றார் சாமிநாத ஐயர்.

     கவுண்டர் தடுக்கில் உட்கார்ந்து கொண்டிருந்தவர் எழுந்திருந்தார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கையைப் பிடித்து உட்காரவைத்து, “என்ன நடந்தது சொல்லுங்கோ. ஆத்திரப்படாதீங்கோ. என்ன வந்தாலும் நான் இருக்கிறேனுங்க” என்றார்.

     “இப்படி ஒரு போக்கிடம் இருக்கத்தான் இங்கே வந்தேன். உங்க மகன் செட்டியார் பின்னாலே எங்கியோ போயிட்டார். நடுவளவு ராமசாமிக் கவுண்டர் பையனைப் பள்ளிக்கூடத்திலிருந்து கூட்டிக் கொண்டு வரத் திருப்பூர் போயிட்டார். நடுவிலே நான் சிக்கினேன். இந்த ஏழைப் பார்ப்பான் தலையிலே மிளகை அரைக்கப் பார்க்கிறாங்க. நான் அரசாளக் கொடி கட்டிவிட்டேனாம்!”

     கோவில் ஐயர் எப்போதுமே வேடிக்கையாகப் பேசுவார். ஆனால் நாளது வரை அவர் வேடிக்கையில் இவ்வளவு பதட்டம் கலந்திருந்ததில்லை.

     “என்னுங்க சாமி, உங்களை எந்த மட்டிப்பயல் என்ன சொன்னானுங்க?” என்றார்.

     “அந்தக் கூத்தை ஏன் கேக்கறீங்க? கூத்தாடறதுக்கு நான் தான் “வெத்திலை” கொடுத்திட்டேனாம். குறுக்கே நின்ன பாவம். என் தலையைத் தின்கிறான்கள்” என்றார்.

     இதற்குள் ஊர் முழுதும் பேச்சுப் பரவி விட்டது. ராமசாமிக் கவுண்டருக்கு இது பெருத்த ‘மொக்கப் பட்டம்’ என்று ஒரு கட்சி தீவிரமாக வாதித்துக் கொண்டிருந்தது. மணியக்காரருக்கு இப்பேர்ப்பட்ட அவமானம் இதுதான் முதல் தடவை என்றொரு பக்கம் பேச்சு எழுந்தது. ஐயர் என்ன இருந்தாலும் இப்படிச் செய்திருக்கப்படாது என்று சிலர் வாதாடிக் கொண்டிருந்தார்கள்.

     இந்த பேச்சு ஒன்றும் காதில் போட்டுக் கொள்ளாமல் ஊரிலிருக்கிற அத்தனை குழந்தைகளும் ஒன்று திரண்டு கோவிலுக்கு முன் போட்டிருந்த கொட்டகையில் கூடி விட்டார்கள். அந்தக் கொட்டகையின் அழகே அலாதி. ஒரு சின்னப் பந்தலும் மேடையும்தான். “ராசா வேசக்காரன்” குதிப்பதற்கு தனியான இடம்! எதிரிலே ஆர்மோனியக்காரனுக்கு எடுப்பான ஆசனம். முன்னால் பரந்த பெரிய மைதானம். சந்திரமதியின் புலம்பல் குறைந்தது இரண்டு மூன்று மைலுக்காவது கேட்கும் என்ற நம்பிக்கையில் வந்து கூடும் ரசிகக் கூட்டம்!

     அக்கம் பக்கத்திலிருந்து கணக்கு வழக்கில்லாமல் பலரும் வந்து கூடிவிட்டார்கள். ஆனால் நாடகக்காரர்களுக்கு இன்னும் சாப்பாடு கிடைக்கவில்லை. சாயங்காலத்திலிருந்து தகராறு நடந்து கொண்டிருந்ததால் யார் வீட்டுக்குப் போவது என்ற சங்கடமான நிலைமை! ஆனால், இதையெல்லாம் பவளாக் கவுண்டர் ஒரு நொடியில் தீர்த்து வைத்துவிட்டார். நேராக வீட்டுக்குப் போய் மகனை ஒரு ‘சிம்புச் சிம்பினார்’. ராமசாமிக் கவுண்டனை மருமகன் முறை கொண்டாடி “வசவு பொழிவது” வழக்கம். அப்படியே செய்ததோடு, ஆட்டக்காரரில் பத்துப் பேருக்குச் சாப்பாடும் போட ஏற்பாடு பண்ணிவிட்டு, மீதிப் பத்துப் பேரை தம் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார். திருப்தியாகச் சாப்பாட்டைப் போட்டு, “சட்டுண்ணு போய் ஆட்டம் கட்டுங்க. செலையோடோணும். சுத்துப் பக்கம் பத்து ஊரிலயும் கூத்து நடத்தோணும். கடைசி நாள் உங்களுக்கு நல்ல ‘கெடாய்’ விருந்து வெச்சிடரேன்” என்றார்.

     “மகராசன்! தங்கம்னா தங்கம்” என்று வாழ்த்திக் கொண்டே நாடகக்காரர்கள் போய்ச் சேர்ந்தார்கள். கோவில் ஐயர் அன்று அடைந்த மகிழ்ச்சிப் பெருக்குக்குக் கங்கு கரை கிடையாது!