உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
14 ஊஞ்ச மரத்து நிழல் குளிர்ச்சியா யிருந்தது. அருகிலிருந்த வேப்ப மரம் இளங்காற்றில் பூக்களைத் தூவி விட்டு அந்த இடத்தை மணக்கச் செய்து கொண்டிருந்தது. அடி மரத்தில் சாய்ந்தபடி வரப்புச் சரிவில் கால் நீட்டிக் கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் மாரியப்பன். புத்தகத்தை சும்மா பார்த்துக் கொண்டிருந்தானே தவிரப் படிப்பில் அவன் சிந்தை செல்லவில்லை. ஆகாயத்தில் இலேசாக மேகக் கூட்டங்கள் பவனி போய்க் கொண்டிருப்பதையும் மஞ்சக் குருவிகளும் அணில் பிள்ளைகளும் தொத்தித் தொத்தி விளையாடிக் கொண்டிருப்பதையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். இள மத்தியானம் ஆற்றுக்குக் குளிக்க வந்த பெண்கள் கையில் குடத்துடன் வீடு திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். கலகலப்பான அந்தக் கூட்டத்திலே எந்த இள முகத்தையோ அவன் கண்கள் தேடித் திரிந்தன. பக்கத்துக் குழியில் ஒரு எருமையை இரண்டு பையன்கள் குளிக்க வைப்பதற்காக படு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் எருமை சொன்னபடி கேட்கவில்லை. திமிறிக் கொண்டு மேலே ஓடி வருவதும், விழுந்தால் அப்படியே குழிக்குள் சண்டித்தனம் பண்ணி படுத்துக் கொள்வதுமாக பெரிய ‘அக்கப்போர்’ கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த எருமை கட்டுக் கடங்காமல் நின்றதைப் போலத்தான் மாரியப்பன் மனசும் விவரம் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஏன் இந்த மயக்கமும் போராட்டமும்? காரணம் அவனுக்கே சரியாகத் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் ஒரே வறட்சி. யாருடைய முகத்திலும் ‘களையே’ இல்லை. ஒரு வேளை இந்தத் தாங்கலையும் தவிப்பையும் கண்டு உள்ளம் சோர்ந்து போய் விட்டதா? எப்படிச் சொல்ல முடியும்? அந்தத் துன்பத்திலும் ஒரு இன்ப வாதனை அவனை வாட்டிக் கொண்டிருக்கிறதே? அது என்னவாக இருக்கலாம்? யாரோ தன் பெயரைச் சொல்லி மெதுவாகக் கூப்பிடுவது போலிருந்தது. இந்த மதுரமான தேன் குரல் இதற்கு முன் எவ்வளவோ தரம் நெஞ்சில் ஒலித்திருக்கிறதே! தலையை உயர்த்திப் பார்த்தான். என்ன? கண்களை நம்ப முடியவில்லை. யாரைக் கண்ணில் பார்ப்பது கூட அபூர்வம், இனிப் பேசுவதேது என்று நினைத்துக் கொண்டிருந்தானோ, அந்த முகம் எதிரே காட்சி அளித்தது. செல்லாயா, ஆம், மணியக்காரர் மகள் செல்லாயாள் தான். பெண்கள் தான் எப்படி வளர்ந்து விடுகிறார்கள்! ஐந்து வருஷத்துக்கு முன் பார்த்த அதே பெண் தானா? அவனால் நம்ப முடியவில்லை. நாட்டுக் கொடி போல் கட்டழகுள்ள அவள் தேகம் இப்போது அழகின் காந்தியை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. அழகு குலுங்க அவள் மெதுவாக வந்து அருகே நின்றாள். மாரியப்பனுக்கு எல்லாம் ஒரு கனவு போல் இருந்தது. செல்லாயா கையிலிருந்த புத்தகத்தை பிடுங்கிக் கொண்டு, “படிச்சுப் படிச்சு புத்தி குளம்பிப் போனாப்பலே இருக்குது?” என்றாள். உண்மையில் அவன் குழம்பிப் போய்த்தான் உட்கார்ந்திருந்தான். கொஞ்ச நேரத்திற்குப் பிறகுதான் சுய உணர்வு பெற்று, “என்ன சொன்னே?” என்று கேட்டான். “சொல்ல வரவில்லை? ஏதாச்சும் கேட்டிட்டுப் போக வந்தேன்” என்றாள். நாலைந்து வருஷத்துக்கு முன் அவர்கள் சந்தித்தால், ஒரே கூத்தும் கும்மாளமுமாக இருக்கும். இப்போது ஏதோ ஒரு திரை இருவருக்கும் இடையே விரிந்து விட்டதைப் போலிருந்தது. இருவரும் அதை உணர்ந்தார்கள். சுற்றியும் ஒரு தரம் மாரியப்பன் பார்த்தான். தெற்குப் பக்கத்திலிருந்து பார்த்தால் தான் ஆற்றங்கரையிலிருந்து வருகிறவர்களுக்கு இவர்கள் உட்கார்ந்திருப்பது தெரியும். “இன்னேரத்திலே யாரும் வர மாட்டாங்க. மத்தியானத்திலே இங்கே யாரு வாராங்க? ஆமா, நீங்க ஏ இப்படி மாறிப் போயிட்டீங்க?” என்றாள். அவள் மரியாதையாகத் தன்னை அழைத்தது வருத்தமாக இருந்தது அவனுக்கு. மாறிப் போய் விட்டது அவளா, அவனா? “உனக்கு அப்படித் தெரியுதா? செரி, எல்லாமே மாறிப் போயிருக்கற போது நான் மாத்திரம் மாறிப் போனதிலே ஆச்சரியம் இல்லையே? தோட்டம் துறவு காடு ஊடு எல்லாந்தானே கைமாறிப் போயிருக்குது? இன்னும் பாக்கற சனங்கள் எல்லாமே மாறிப் போயிருக்கலையா? நீ கூடத்தான்!” என்று சொல்லி நிறுத்தினான். அவளுக்குத் துக்கமாக இருந்தது. வருத்தத்தை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், “ஐந்தாறு வருஷத்துக்கு அப்பறம் நமக்குப் பேசறதுக்கு வேறே ஒரு பேச்சும் இல்லையா?” என்றாள். எவ்வளவோ விஷயங்கள் இருக்கத்தான் இருந்தன. அவன் உள்ளத்திலே பல எண்ணங்கள் குவிந்து எழுந்து கொண்டிருந்தன. அதில் எல்லாம் செல்லாயாளும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவனும் ஆசைப்பட்டான். ஆனால், எதைச் சொல்வது எதைச் சொல்லாமல் இருப்பது என்பதே அவனுக்குத் தெரியவில்லை. தன்னுள்ளத்தில் பெருகி வரும் இன்ப ரசத்தைச் செல்லாயாளும் அறிவாளா? ஆனால், அந்த உவகையை யாருக்குச் சொல்வது? கொஞ்ச நேரம் இருவரும் பேசாமல் இருந்தார்கள். “ஊரெல்லாம் பாத்தீங்களா? எல்லாம் கேட்டிருப்பீங்களே?” என்றாள். “ஆமாம்” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விட்டான். அவளுக்கு இது தாங்கலாகத்தான் இருந்தது. அவன் ஏதோ தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறான் என நினைத்து, “எங்க மேலே தப்பு ஏதாச்சும் கண்டீங்களா?” என்றாள். அவனுக்கு யாரிடமும் தப்புக் காண உத்தேசமில்லை. சிரித்துக் கொண்டே, “அப்படிக் கண்டாலும் உம்மேலே தப்புச் சொல்லுவனா?” என்றான். அவளுக்கு இந்தப் பதில் ஆறுதலாக இருந்தது. செல்லாயாளின் யௌவன உள்ளம் கட்டுத்தளைகளை மீறிய ஆனந்த உலகிலே சஞ்சரிக்கத் துடித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் மாரியப்பனைச் சந்திக்கும் போது தங்களுடைய பால்யப் பருவத்து அனுபவங்களையும், பிரயாணங்களையும் நினைத்து இன்பக் கடலிலே மூழ்க விரும்பினாள். அவள் முக மாறுதலைக் கண்டு, “உனக்கு பயித்தியமா! என்னைக் கண்டு பயப்படுவாய் போல இருக்குதே? நீ இப்படிப் பயப்படுவாணு தெரிஞ்சா இங்கே என்னத்துக்கு வாரேன்?” என்றான் மாரியப்பன். அவன் அப்படிச் சொல்லியது அவளை எங்கோ ஒரு அற்புத உலகுக்கு அழைத்துச் சென்று விட்டது. தனக்காகவே தான் வந்திருக்கிறான்; இல்லாவிட்டால் வந்திருக்கவே மாட்டான் என்பதை எண்ணும் போதெல்லாம் அவளுக்கு அந்த மண்ணின் மேல் இருக்கிற ஞாபகமே இல்லை. எங்கோ அவர்கள் இருவரும் கைகோத்து உல்லாசமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். போட்டி பொறாமை, வறுமை கொடுமை, துக்கம் துயரம் இல்லாத அந்த உலகிலே அவர்கள் ஆனந்தமாகக் காட்டுக் குருவிகள் போல் பறந்து சென்று கொண்டிருந்தார்கள். இப்படிக் கோமளமான கனவிலே எவ்வளவு நேரம் ஈடுபட்டிருந்தாள்? பொழுது உச்சிக்கு வந்து வெயில் ‘சுரீர்’ என்று எப்போது உறைக்க ஆரம்பித்தது? அதெல்லாம் அவளுக்கு ஞாபகத்திற்கு வரவேயில்லை. மாரியப்பன், “போய்ட்டு எப்போ வாரே?” என்று பலமாகக் கேட்ட போதுதான் அவள் விழிப்படைந்தாள். அப்போதுதான் தான் ராமசாமிக் கவுண்டர் தோட்டத்திற்குள் நின்று கொண்டிருப்பதும் ஞாபகத்திற்கு வந்தது. மறுபடி சாயங்காலம் அவர்கள் ஆற்றங்கரையில் சந்தித்த போது பேச்சு வார்த்தைகள் அதிகமாக நடைபெறவில்லை. கூடப் பெண்கள் இருந்தது காரணமல்ல. அவன் மணல்கரை ஓரமாகத் தங்கள் தோட்டத்துப் பக்கம் தான் போகிறான் என்பதை ஊகித்துக் கொண்டு விரைவாக வீட்டிற்குப் போய், குடத்தை வைத்து விட்டதும், அத்தையிடம் சொல்லிக் கொள்ளாமலே பால் பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு அவசரமாகப் புறப்பட்டாள். பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் வாழைத் தோட்டத்தில் இருவரும் சந்தித்தார்கள். மணியக்காரர் தோட்டத்துக்கு பிறத்தியார் இப்போது யாரும் வருவதில்லையாதலால் சாவகாசமாக ஒரு பெரிய மரத்தடியில் உட்கார்ந்திருந்தார்கள். சாயங்காலச் சூரிய ஒளி வாழை இலைகளை முத்தமிட்டுக் கொண்டிருந்தன. அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த செல்லாயாளின் கண்கள் காரணமின்றிக் கலங்கின! ஏன் இந்தச் சோகம்? மணியக்காரர் சம்மதத்துடனே சிறப்பாகத் தங்கள் திருமணம் நடைபெறும் என்று ஒரு காலத்தில் இன்பக் கோட்டை கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்தக் காலம் மலையேறி விட்டது. இப்போது கட்சி பிரதி கட்சி. அது மட்டுமா? ராமசாமிக் கவுண்டர் குடும்பம் தான் கீழ் நோக்கிப் போய்விட்டதே? பழையபடி மீண்டும் இன்ப நாட்கள் தளிர்க்குமா? சமாதானம் ஏற்படுமா? செல்லாயா எப்போதுமே முன் யோசனைக்காரி. செட்டியார் அடிக்கடி வீட்டுக்கு வரப்போக இருந்தாலும், மணியக்காரரும் செட்டியாரும் அடிக்கடி கலந்து பேசியதிலிருந்தும், அவள் சின்னப் பெண்ணாக இருந்தாலும் குடும்பப் பொறுப்பும், கவலையும் இன்னதென அறிந்திருந்தாள். பெரியவர்களைப் போல் வருங்காலத்தை நோக்கியும் அவள் மனம் பாய்ந்து கொண்டிருந்தது. நிலாக் கிளம்பிக் கொண்டிருந்தது. மாரியப்பன் நிலவுக் கதிர் சிந்திக் கிடக்கும் அவள் முகத்தையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்கு வெட்கமாக இருந்தது. முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, “இத்தனை நாளும் என்ன பண்ணீட்டு இருந்தீங்க!” என்றாள். வேறு யாராவது இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் தான் கற்ற கல்வியையும், படித்த புத்தக ஜாப்தாக்களையும் சொல்லித் தீர்த்திருப்பான். செல்லாயா கேள்விக்குச் சிரிப்புத்தான் கிடைத்த பதில். செல்லாயா என்னவோ நினைத்துக் கொண்டு சிரித்தாள். “ஊரெல்லாம் சுத்திப் பாத்தீங்களா? எப்படி? எங்கய்யனை வந்து பாக்கலியா? வாரிங்களா?” என்றாள். அவள் பேச்சில் குத்தலும் கலந்திருந்தது. மாலை மதியம் புரியம் விந்தையைக் கண் கொட்டாமல் கவனித்துக் கொண்டே பார்வையைக் கீழே செலுத்தினான். அன்று செல்லாயா குளித்துக் கூந்தலைக் கோடாலிக் கொண்டை போட்டு மத்தியில் மல்லிகை மலர் சூடியிருந்தாள். இந்த மல்லிகை மலரைச் சுற்றி வெண் கதிர்கள் விளையாடுவதில் அவள் பார்வை லயித்தது. “நாஞ் சொல்றதைக் கேட்டுப் பயந்துக்க மாட்டயே?” “இல்லை.” “கொஞ்சங்கூட பயக்க மாட்டயே?” “இல்லவே இல்லை.” “அழ மாட்டயே?” செல்லாயா மௌனமாக இருந்தாள். அதைக் கேட்கத் தான் அவளுக்கு அழ வேணும் போல் இருந்தது. மாரியப்பன் சிறு வயதிலிருந்தே பிடிவாதக்காரன். திடீரென ஏதாவது ஒரு முடிவுக்கு வந்துவிடுவான். மற்றவர்களை அது எவ்விதம் பாதிக்கும் என்பதைக் குறித்து அவன் கவலை கொள்ளுவதில்லை. “சொன்னால்ல தெரியும்” என்றாள் செல்லாயா. “சொல்லப் போறேன். ஆனா நீ அழக்கூடாது.” கொஞ்ச நேரத்திற்குப் பிறகு குனிந்திருந்த அவள் தலையைத் தொட்டு நிமிர்த்தியபடி, “இந்த ஊரை உட்டு போகப் போறேன்” என்றான். மாரியப்பன் தன்னைத் தொடவும் மெய்மறந்தாள். அந்த ஸ்பரிசம் அவளுடைய அந்தக்கரணத்தையே தீண்டியது போலிருந்தது. இப்புதுப் புளகாங்கிதத்துக்கிடையே ஏன் இந்த ஏக்கம்? கண்கள் கண்ணீரைச் சிந்தின. “இதுக்குத் தாஞ் சொன்னேன். எம் பேச்சை நீ கேக்கலப் பாரு?” அவள் விக்கி விக்கி அழுதாள். யாராவது வந்துவிடப் போகிறார்களே என்று அவனுக்கு பயம். அவன் அங்குமிங்கும் பார்ப்பதைப் பார்த்து, “அப்படித் தைரியம் இல்லாதபோனா ஏம் வரவேணும்? வந்து இப்படித்தான் பேசுவாங்களா?” என்றாள். அவன் கொஞ்ச நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு, “இந்த தற்குறிகளோடு எத்தனை நாளிக்கு மாரடிக்கறது? எழுத்து வாசனை கிடையாது. சொன்னாலும் தெரிய மாட்டேங்கறது. ஒருத்தருக்கொருத்தர் ஏமாத்து வித்தை, பில்லி சூனியம், பேய் பிசாசுண்ணு இதுகளே பேய் மாதிரி திரியறது. நாட்டராயன் கோயிலுக்குப் போறது நிக்கிலையே?” மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். “சொல்லுங்க, நிறுத்தாதெ சொல்லிக்கிட்டே போங்க” என்றாள். அவனுக்கு ஆத்திரம் அதிகரித்தது. “கெட்டுப் போனவங்களை அடியோடு கெடுக்கறதுக்கு உங்க அப்பன்! அப்பனுக்கு தகுந்த மணியம். ஆமாம், மணியக்காரர் பத்து வருசமா ஊரைக் கெடுத்துக் குட்டிச்சுவர் பண்ணினதைத் தவிர என்ன மணியம் பண்ணினார்? நாலுபேரு சேந்து வாழ்றதுக்கு இல்லாமெ எல்லாருத்து குடுமியும் சேத்திச் செட்டியார் கையிலே குடுத்திட்டார். அந்தப் படுபாவி தலையிலே கல்லுப் போட்டாப்பலே ஒண்ணு உடாமே தீத்துப் போட்டான். ஒரு குடும்பம் மிச்சமிருக்குதா? பார் உங்க குடும்பத்தையும், மரத்திலே உளுந்த கரயான் ஒரு கொம்பை மாத்திரம் பாக்கி உட்டு வைக்கும்னு நெனைக்காதே. இண்ணைக்குப் பாக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கும். பாத்துக்கிட்டே இரு. உங் கண் எதிரே மணியக்காரர் ஓட்டாண்டி ஆகறாரா இல்லையாண்ணு.” ஆவேசம் வந்தவன் போல் மறுபடியும் தொடங்கினான். ஆனால் செல்லாயாளின் கண்ணீர் பொங்கும் கண்களைக் கண்டதும் அப்படியே சொல்ல வந்ததை நிறுத்திக் கொண்டான். தன் தந்தை ‘ஓட்டாண்டி’ ஆகும் காலமும் அதிக தூரத்தில் இல்லை! அவள் தேகம் நடுங்கியது. பதட்டத்தை அடக்கிக் கொண்டு, “இப்படி ஒண்ணும் தெரியாத சணங்களுக்கு ஏதாச்சும் சொல்லிச் சீர்திருத்தம் பண்ணப்படாதா? வாயில்லாப் பூச்சிகளை சும்மா உட்டுட்டுப் போனா, மண்ணோடு மண்ணா இதுகள் மடிஞ்சிதானே போகும்?” என்றாள். வாஸ்தவமான பேச்சு என்றே அவனுக்குப் பட்டது. ஆனாலும் ‘கம்’மென்று உட்கார்ந்து கொண்டிருந்தான். பிறகு திடீரென்று, “செல்லாயா, கோவத்திலே ஏதாச்சும் சொல்லியிருந்தா அதுக்கு என்னைக் கோவிச்சுக்காதே” என்றான். அவளுக்கு யார் பேரிலும் கோபமோ வெறுப்போ இல்லை. பிரிந்து செல்லும் போது, “நாளைக்குக் காங்கயம் போனாலும் போவேன்” என்றாள். அதற்கு அவன் ஒன்றும் பேசாமல் ஆற்றங்கரைத் தடத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். |