உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
8 பொழுது விடிவதற்குள் ஊரிலே முந்திய நாள் சாயங்காலம் நடந்த சம்பவம் பராரியாகப் பரவி விட்டது. ஆற்றுக்குக் குளிக்க வந்திருந்த பெண்கள் குடத்தை இறக்கிக் கீழே வைத்ததும், ஈரத் துணியை நன்கு பிழிந்து போடுவதற்கு முன்பே அக்கம் பக்கம் ஒன்றுக்கு நாலாகத் தாங்கள் கண்ட காட்சியைச் சொன்னார்கள். அதற்குப் பிறகு தான் மற்ற வேலைகளில் அவர்கள் மனம் சுலபத்தில் சென்றது. நெஞ்சில் இருந்த பாரம் அப்போது இறங்கியது மாதிரியும் உணர்ச்சி ஏற்பட்டது. பவளாக் கவுண்டருக்கு நேற்று இராத்திரியே தகவல் எட்டிவிட்டது. தோட்டத்தில் வழக்கம் போல் தம்முடைய சகாக்களுடன் பேசிக் கொண்டிருந்தார். ராக்கியப்பன் கையில் ஒரு பெரிய மூட்டையுடன் வந்து சேர்ந்தான். மாலை மசக்கலில் அது என்னவென்று சட்டெனத் தெரியவில்லை. “என்னடா, ராக்கிணா?” என்று பெரியவர் கேட்டார். “ஒண்ணுமில்லீங்க” என்று சொல்லிக் கொண்டே கையிலிருந்த துணியை விலக்கினான். உள்ளே ஒரு பெரிய சட்டியில் சுடச்சுட அரசாணிப் பழம் நன்றாகப் பக்குவம் செய்யப்பட்டு மணமாக இருந்தது. அந்த வாசனை உடனே எடுத்துப் பதம் பார்க்கும்படி தூண்டியது. விசாரித்ததும் சங்கதி வெட்ட வெளிச்சமாகி விட்டது. ராக்கியப்பன் ராக் காவலுக்கு பட்டிக்குப் போய்க் கொண்டிருந்தான். ஆவரம் புதருக்குப் பக்கத்திலே ஆற்றோரம் கொஞ்சம் வெளிச்சம் கண்ணுக்குத் தட்டுப்பட்டது. பார்த்தவுடனே அனுபவஸ்தனான ராக்கியப்பனுக்கு விஷயம் விளங்கிவிட்டது. நேராகப் போனான். சற்றுக் கிட்டத்தில் போனதும் தடியை இரண்டு மூன்று தரம் தட்டினான். ‘பொட்’ என்ற தடிச் சத்தமும், நீளக் கருப்புக் கம்பிளி உருமாலையையும் கண்டதும் பையன்கள் ஓட்டமெடுத்துவிட்டார்கள். காய் வெந்து கொண்டிருந்த சட்டியை நல்லவேளையாக விட்டு விட்டுப் போனார்கள்! அந்தப் பையன்கள் எந்தெந்தத் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் மேற்கொண்டு இதற்கெல்லாம்தான் ‘கடுமை’யான நடவடிக்கை கிடையாதே! வெந்துகொண்டிருந்த காய் லாபம் என எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். பச்சை மிளகாயும் உப்பும்தான் அதில் கூட்டியிருந்தார்கள். ஆனால் கடுகு கருவேப்பிலை போட்டு எண்ணெய் அல்லது நெய்யில் தாளிக்கும் உயர்ந்த பாகம் எல்லாம் இதன் கிட்ட நிற்க முடியாதாக்கும். பவளாக் கவுண்டர் சிரித்துக் கொண்டே, “ஏண்டா, ராக்கிணா, யாரு தோட்டத்துக் காய் இது?” என்றார். பெரியவருக்கு இதில் நல்ல தேர்ச்சி உண்டு. இருமிக் கொண்டே சாளையூட்டுக்காரரும் ஒரு துண்டை வாயில் எடுத்துப் போட்டதும் இதை ஆமோதித்தார். கடைசியில் ராக்கியப்பனும் காய் முடியும் தருணத்தில் உண்மையைச் சொன்னான். “உங்க காயாக இருக்கத்தான் உங்களுக்குப் பங்கு வருதுங்க. இல்லாட்டி வருமுங்களா?” என்றான். “அட அது போவுது. குட்டீணன் என்னமோ ‘கசாமுசா’ங்கறானாம். நம்ம அப்பனை (மகனைச் செல்லமாக அழைப்பது) என்னுமோ குத்தறன் வெட்டறம்ணு சொல்றானாம்!” என்றார் பவளாக் கவுண்டர். “நடந்த நாளைக்கு நெசமுங்க. அப்பப் பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு ராக்கியப்பன் போய்விட்டான். ஆனால், பெரியவருக்கு மனசு சமாதானமாயில்லை. பலவிதமாக யோசித்தபடி படுத்திருந்தார். ஆடிக் காற்றும் ‘சிர்சிர்’ என்று வீசிக் கொண்டிருந்ததால் சரியான தூக்கமுமில்லை. ‘இதற்கு என்ன வழி பண்ணுவது?’ என்று தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார். நிச்சயமாகத் தெரியாத ஏதோ ஒன்றுக்கு எப்படியோ ஒரு வழி செய்து தீர்த்துவிட வேண்டுமென்று அவர் மனம் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியது. இத்தனை வருஷமாக இம்மாதிரி குழப்பம் அவருக்கு வாழ்விலே நேர்ந்ததே கிடையாது. முப்பது நாற்பது வருஷத்துக்கு முந்தி ஒரு பூமி சுவாதீனத்தின் போது ஊரிலே இரண்டு கட்சிதான். ஒரு கட்சிக்கு இவர்தான் தலைவர். இவரே முன்னால் நின்று நடத்தி வைத்தார். பெரிய அடிதடியும் ஏற்பட்டது. பத்துப் பதினைந்து பேரைச் சாய்த்த பிறகே இவர் விழுந்தார். மண்டையில் பலத்த அடி. கட்டிலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போதும் நெஞ்சம் கலங்கவில்லை. “செத்தாலும் உங்களுக்கு பணியறது ஏதடா” என்று காய்ச்சல் வெறியில் பிதற்றினார். அப்பேர்ப்பட்ட வைரம் பாய்ந்த நெஞ்சு படைத்த பவளாக் கவுண்டர், இன்று தன் மகனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று கிலி பிடித்துப் போனார். புலிக்குப் பிறந்தது பூனையாகும் என்று ஏன் எண்ணினார்? ஒருவேளை பிள்ளை செய்கையில் இருந்தா? ‘அப்படித்தான் இருந்தாலும் ‘காலுக்கு வராத’ குட்டீணன், அந்த ‘வளுக்குவால்’ என்னத்தைப் பண்ணிப் போடுவான்’ என்று தன்னையே திடப்படுத்திக் கொண்டார். ஏறுவெயில் ‘சுள்’ளென்று உறைக்கத் தொடங்கியது. இத்தனை நேரம் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த மாடு கன்றுகள் வெயிலைக் கண்டதும் புல்லைக் கூட சரியாகத் தின்னாமல் கொம்பை அங்குமிங்கும் ஆட்டிக் கொண்டே நின்றன. ஆட்டுக்குட்டிகள் ‘ராஞ்சுகாலில்’ வேலிக்குமேல் உள்ள செடி கொடிகளைத் தாண்டிக் கொண்டிருந்தனவே ஒழிய வாய் வைத்துக் கடிக்கவில்லை. கவுண்டர் கொளுமிச்சை மரத்து நிழலில் நின்று கொண்டே இயற்கையில் நிகழ்ந்து கொண்டிருந்த அற்புதங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கோவில் ஐயர் வெகு வேகமாகத் தோளில் பெரிய கட்டுடன் ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தார். பெரியவரிடம், ஐயருக்கு எத்தனையோ குறைகள் சொல்லவேண்டி இருந்தது. ஆனால், நேரமும் காலமும் அதற்கு ஒத்துக் கொள்வதில்லை. ஏதாவது ‘எக்கச்சக்கமாக’ மாட்டிக் கொண்டால் தான் ஓடோடியும் வருவார். அல்லது அவசரத்தில் இப்படி அகஸ்மாத்தாக சந்திக்க வேண்டும். “ஊரிலே இருக்கிற தெய்வம் ஒதுங்கி நிக்குதாம்... என்னமோ சொல்லுவாங்களே!” என்றார் ஐயர். அவருக்குப் பழமொழிகள் சட்டென்று ஞாபகத்திற்கு வருவதில்லை. ஆனாலும், பழமொழியோடு தான் பேச்சைத் தொடங்குவார். அவர் சொல்ல விரும்பிய சாராம்சம் இதுதான். மறுநாள் ஊரெல்லாம் நாட்டராயன் கோவிலுக்கு காணிக்கை. ஆட்டுக் கிடாக்களுடன் போகிறார்களே, உள்ளூரிலே ஒன்றுக்கு இரண்டாக செல்லியாண்டி அம்மனும் ஆதீசுரனும் இருக்கிறார்களே! இந்த தெய்வங்களையும் கண் கொண்டு கடாட்சிக்கலாகாதா என்பதே அவருடைய பிரார்த்தனை. “இதுக்குத்தான் கட்டடம் எல்லாம் கட்டறதாக இருக்குதே. ஏலப்பணமும் ஒதுக்கிருக்காங்கில்ல சாமி?” என்றார் கவுண்டர். “என்னத்தை ஒதுக்கி என்ன பண்ணறது?” என்றார் சலிப்போடு. “ஏஞ்சாமி இத்தனை சலிப்பு?” என்று கேட்டுக் கொண்டே சுப்பண முதலியும் வந்து சேர்ந்தான். “வா சுப்பணா” என்று இருவரும் வரவேற்றார்கள். “நாளத்த பயணத்தை நிறுத்தப் போடாதீங்க சாமி!” என்றான் சுப்பணன். “எல்லா எங்கையிலா இருக்குது? சே! அப்படிச் சொல்லாதே!” என்றார் ஐயர் பாசாங்குக் கோபத்துடன். “ஏஞ்சாமி, நம்ம ஐயனுக்கு ‘எரிச்சல் அடங்கினது’ தெரியுமுங்களா?” என்று கேலிச் சிரிப்புடன் பவளாக் கவுண்டர் முகத்தைச் சுப்பணன் பார்த்தான். ஐயருக்கு கொஞ்சமும் எரிச்சலாகவும் இருந்தது. சிரிப்பும் வந்தது. சுப்பண முதலி பெரியவரிடம் சொல்லியே விட்டான். அது ஒரு ரசமான கதை. அம்மன் கோவிலுக்கு வெளியூரிலிருந்து சனங்கள் வண்டி கட்டிக் கொண்டு அடிக்கடி வருவார்கள். அந்தக் கோவில் வரும்படி பண்டாரங்களைச் சேர்ந்தது. பூசை எல்லாம் பண்டாரங்களே தான். ஈசுவரன் கோவில் மட்டும் ஐயர் ஆதினத்தில் இருந்தது. அம்மன் கோவிலுக்கு வருகிற கவுண்டர்கள் ஈசுவரன் கோவிலுக்கும் வருவார்கள். ஆனால், பால் தயிர் எல்லாம் தங்கள் குல தெய்வமான அம்மனுக்கே அபிஷேகம் செய்து விடுவார்கள். கொஞ்சம் ஈசுவரனுக்கும் பால் தயிர் அபிஷேகம் செய்ய விரும்பினாலும் பண்டாரங்கள் அதற்கு அனுமதிப்பதில்லை. ஐயரும் இதை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று வெகு நாளாக எண்ணி வந்தார். ஒரு நாள் ஈசுவரன் கோவிலில் தீபாராதனை சமயத்தில், “அடே, எரியுதே எரியுதே!” என்று விபூதித் தட்டைக் கீழே எறிந்துவிட்டு குதிக்க ஆரம்பித்து விட்டார் ஐயர். “சாமி, என்ன வேணும்? என்ன வேணும்?” என்று குடங் குடமாகத் தண்ணீரைக் கொண்டு வந்து காலில் கொட்டினார்கள். ஆனால் அந்தச் ‘சாமி’ இதற்கெல்லாம் குளிர்ந்துவிடுமா? ‘கொண்டு வாங்கடா, பால் தயிர்” என்றது. அப்போதுதான் நாலைந்து குடம் பால் வெளியூரிலிருந்து வந்திருந்த சனங்கள் கொண்டு வந்திருந்தார்கள். பால் வந்தது. அபிஷேகமும் ஆயிற்று. ஈசுவரனுக்கு அபிஷேகம் ஆனால் ஐயருக்கு ஆன மாதிரி, அவர் மனசும் குளிர்ந்தது. பண்டாரங்கள் இதற்குப் பிறகு வழிக்கு வந்து விட்டார்கள். அம்மனுக்கு வரும் பங்கில் ஈசுவரனுக்கும் பாதி தந்துவிட ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இந்த ‘எரிச்சல்’ சங்கதியை மட்டும் நாளது வரை மறப்பதில்லை. பவளாக் கவுண்டரும் சிரித்துக் கொண்டு, “நாட்டாராயன் கோயில் போவதை ஐயர் தடுப்பாரா?” என்று பரிந்து பேசினார். தலையிலுள்ள மூட்டையை ஒரு தரம் தொட்டுப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து ஐயர் கிளம்பினார். “வா சுப்பணா போவலாம்” என்றார் கவுண்டர். இருவரும் பேசிக் கொண்டே தோட்டத்துச் சாலைக்குப் போனார்கள். ஒரு தடுக்கைக் கையில் எடுத்துக் கொண்டு வாதநாராயண மரத்துக் கல்கட்டு ஓரம் போய் உட்கார்ந்தார்கள். புளிமஞ்சி கொஞ்சம் கிடந்தது. அதை எடுத்துக் கயிறு திரித்துக் கொண்டே, “நீ கேட்டயாப்பா” என்றார். சுப்பணன் குறிப்பறிந்து கொண்டான். “குட்டீணன் ‘உருட்டா’த்தானுங்க! அவனையும் ‘நிக்கிருசா’ நம்பரதுக்கு இல்லே. கண்ணை மூடிக்கிட்டு போட்டாலும் போட்டான். எதுக்கும் நம்ம ஐயனை (மணியக்காரரை) பத்திரமா இருக்கச் சொன்னாப் போவுதுங்க” என்றான். “மடியிலே கத்தி வெச்சுகிட்டே திரியறானாம். ஆச மோசம் ஏதாச்சிண்ணா என்ன பண்றது? இந்த எளவு செட்டியோடே சேந்து நம்ம ஆள் இப்படிக் கெட்டுப் போயிட்டானே” என்றார் பவளாக் கவுண்டர். “அது கெடக்குதுங்க வெட்டிப் பழமை. மணியாரர் கத்தித்தடி கையிலே வெச்சிருக்காங்க. வலம்பயன் வண்டி ஓட்டறானே, அவன் என்ன அத்துவானமுங்களா? இப்படி விதி மூறிப் போனாப் போகுட்டுங்க. இண்ணைக்கு இவங்கிட்டப் பயந்துகிட்டா நாளையும் பின்னே குடியிருக்கிறதா? ஊரை உட்டு ஓடிப்போறதுங்களா?” என்றான் சுப்பணன். பெரியவருக்குக் கொஞ்சம் ஊக்கமாயிருந்தது. “இப்ப நாளைக்கு நீயும் நாட்டராயங் கோயிலுக்குப் போறயா?” என்றார். “பருப்பு இல்லாமையா கண்ணாளமுங்க!” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டான் சுப்பணன். ஒரு கன்றுக்குட்டி துள்ளிக் குதித்துக் கொண்டே மிரண்டபடி திரிந்தது. செல்லாயா அதை விடாமல் கழுத்தில் கைபோட்டு இழுத்துப் பிடித்துத் தன் தாத்தா உட்கார்ந்து கொண்டிருக்கும் வாதநாராயண மரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தாள். பெரியவரும் சுப்பணனும் இந்த வேடிக்கையை கண் கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தார்கள். “நாளைக்கு நானும் போகப் போறேன்” என்று ஆனந்தமாக குதித்துக் கொண்டே வந்தாள் செல்லாயாள். “நானும் தான்” என்று அந்த மகிழ்ச்சியில் சுப்பண முதலியும் கலந்து கொண்டான். |