21

     இன்னும் நன்றாக விடியவில்லை. கீழ்வானில் இலேசாக வெண்மேகக் குவியல்கள் கூடிக் கலைந்து கொண்டிருந்தன. வெண்முத்துக்கள் போன்று நட்சத்திரக் கும்பல் மறைவதும் தெரிவதுமாக இருந்தது. காக்கை குருவி கூட ஆரவாரம் செய்யாத அந்த நேரத்திலே மணியக்காரர் தோட்டத்துக் கிணற்றைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது. அவர்களுடைய பரபரப்பான முகங்களைக் கவனித்தாலே ஏதோ பெரிய விபரீதம் நிகழ்ந்திருக்கிறதென்பதை சட்டென ஊகித்துக் கொள்ளலாம். சடையன் கிணற்றுக்குள்ளிருந்து ஒரு பெரிய ‘பாரத்’தோடு மேலே வந்ததும் எல்லோருடைய கண்களும் பயத்தால் மேலும் கீழும் பார்த்தபடி இருந்தன. ஒருவருக்காவது அந்தப் ‘பாரத்தை’ உற்றுப் பார்க்கத் தைரியம் வரவில்லை.

     செம்மணன் இந்த உலக யாத்திரையை இன்றைய இரவோடு முடித்துக் கொண்டு வேறு உலகிற்குப் பிரயாணமாகிவிட்டான். நல்ல நிலைமையில் இருந்தவன் தான். பெண்டாட்டி பிள்ளையைக் காப்பாற்ற வழியில்லாமல், நெல் அறுப்புக்கு வெளியூர் போகலாம் எனப் போன வாரம் தான் முடிவு பண்ணியிருந்தான். அதற்குள் மனைவிக்கு ‘சன்னி’ அதிகரித்து குழந்தையோடு கண்ணை மூடிவிட்டாள். இனி வெளியூருக்கு ஏன் போக வேணும் என்று தானும் முடிவைத் தேடிக் கொண்டான். ஆனால் அவனுடைய காரியத்துக்கு மணியக்காரர் கிணறுதானா ஏற்ற இடமாக இருந்தது? ஊரிலே எத்தனையோ கிணறு குட்டையிருக்க ஏனோ இந்த இடத்தையே தேடிக் கொண்டு வந்து உயிரை விட்டான்! இதில், இரண்டு முன்று வருஷத்துக்கு முன்பு மணியக்காரருக்கும் அவனுக்கும் ஒரு சின்ன தகராறு வேறு. தகராறு என்றால் செட்டியார் நிமித்தம் ஏற்பட்ட சச்சரவுதான். திருட்டுத்தனமாகப் போய் தேங்காய் போட்டுக் கொண்டு வந்துவிட்டான் என மணியக்காரர் மிரட்டி இருந்தார். இந்தச் சின்னஞ்சிறு காரணத்தை எல்லாம் நினைவுறுத்தி, “இப்பொ என்ன பண்றதுங்க? பெரிய வில்லங்கத்தை யல்ல கொண்டு வந்து உட்டுட்டானுங்களே!” என்றான் சடையன். மணியக்காரருக்கோ பேச நாவெழவில்லை. பக்கத்திலிருந்த தோட்டத்து ஆள், தலையாரி, இவர்கள் விழிக்கும் விழியைப் பார்த்தால், மணியக்காரருக்கே தலையைச் சுற்றுகிற மாதிரி இருந்தது. இத்தனை நாளும் இல்லாத பெரிய பொல்லாப்பு வந்து சேர்ந்து விட்டதே என நடுங்கினார். ஆனாலும் வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், “அட, எடுத்துப் போடப்பா! சும்மா முழுச்சுக்கிட்டு நிக்காதே” என்றார். சவத்தின் காலில் ஒரு சின்னக் காயம் காணப்பட்டது.

     “ஐயோ! மோசம் வந்துதுங்களே!” என்றான் வீரணன்.

     “ஏண்டாப்பா? என்ன?” என்றார்.

     “அடிச்சுக் கொண்டாந்து நம்ம கெணத்துலே போட்டிருக்காங்க. இல்லாட்டி ‘திக்கசமாட்ட’ இருந்த செம்மணனுக்கு இப்பொ நாளு வருமா? நெல்லுந் தருணத்துக்குப் போகறம்ணு தும்புட்டுக்கிட்டு மாடாட்ட இருந்தவெ இப்படி மடிவானா? யாருண்ணு தெரியிலீங்களா? அதுதாஞ் சமயம் வருட்டும்ணு காத்துக்கிட்டே இருந்தாங்களே. இது அவுங்க செஞ்ச வேலைதானுங்க. தலைக்குக் கல்லு தப்பாமெ கொணாந்திட்டாங்கொ” என்றான்.

     தம்முடைய மனக்குரலே எதிரிலிருந்து பேசுவதுபோல இருந்தது அவருக்கு. என்ன பண்ணுவது என்று புரியாமல் இருப்பதோடு ஜெயிலுக்கும் போகும்படி அல்லவா நேர்ந்து விட்டது என்று கலங்கினார். ஊர்ப் பக்கம் திரும்பிப் பார்த்தார். மங்கிய இருளில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. கூட இருந்த ஆட்கள் சவத்தைத் தூக்கி, வாரியோரம் வாகை மரத்து அடியில் போட்டு துணியால் மூடினார்கள். “இருங்கோ, இதோ வரான்” என்று மணியக்காரர் வேகமாகச் சென்றார். கொஞ்ச நேரத்தில் அக்கம் பக்கமெல்லாம் சங்கதி பரவிவிட்டது. பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள். இதற்கிடையே இறந்தது ஆணா பெண்ணா என்ற சந்தேகம் வேறு பலமாக அடிபட்டுக் கொண்டிருந்தது.

     நன்றாக விடிவதற்குள் எல்லோருக்கும் இந்த ஒரு விஷயத்தைத் தவிர வேறு பேசுவதற்கு ஒன்றுமே இல்லை!

     ராமசாமிக் கவுண்டர் தோட்டத்தில் சிரிப்பும் ‘கெக்கெல’க் கையுமாக இருந்தது. “சொல்லப்பா சொல்லு. ஊட்டைச் சாத்தின ஆள் சாத்தினபடிதான் கெடக்கறானா? சோறு தண்ணிக்குக் கூட கதவைத் தெறக்கிலியா? நல்ல ஆள் வாச்சான்? அப்படியே இருந்தா ஒடம்பு என்னத்துக்கு ஆவும்?” என்றான் ஒருவன்.

     “அதிருக்கட்டு மப்பா. இப்ப வரோணும் வீரப்ப செட்டியார். ‘என்னுங்க மணியாரரே, பாத்து வெகு நாளாச்சுங்க. எப்படி இருக்குதுங்க, ஊரு சேரி. கொஞ்ச நஞ்சம் மிச்சம் உண்டுங்களா? இல்லாட்டி மொளகு அரைக்கிறதுக்கு ஒண்ணாமே இல்லீங்களா?’ என்று இப்படிக் கேட்டுக்கிட்டே செட்டியார் வந்தாருண்ணா நல்லா இருக்குமே” என்றான் மற்றவன்.

     “வெட்டிப் பேச்சு, இருக்கட்டு மப்பா. ஆளெ அமுத்தறதுக்கு இதுதாஞ் சமயம். நம்ம குடுமை எல்லாம் சிக்க வெச்சான் அல்லவா?” என்று ராமசாமிக் கவுண்டர் தன்னோடிருந்தவர்களைப் பார்த்துக் கேட்டான்.

     “ஆமாங்க அண்ணா, இதிலே மாட்டிக்குவானுங்களா, அப்புறம் பாக்கலாமுங்கொ” என்றான் நாச்சப்பன்.

     இந்தப் பேச்சு இன்னும் சுவாரஸ்யமான கட்டங்களுக்குச் சென்று கொண்டிருந்தது.

     மாரியப்பன், குழந்தை பார்ப்பது போல கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். நாலைந்து புத்தகங்கள் பிரித்தபடி தலைமாட்டில் கிடந்தன. என்னவோ யோசிக்கிறவன் போல் தலைக்கு கை வைத்துப் படுத்துக் கொண்டே இந்த அதிசயத்திலே மூழ்கியிருந்தான்.

     சின்ன வயசிலிருந்தே அவனுக்கு இந்த மாதிரியான போக்கே பிடித்துப் போயிருந்தது. பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போதும் யாராவது சின்னப் பையன்கள் அட்டை கிழிந்து விட்டதே என்று ஏக்கத்தோடு கண் கலங்கி நின்றாள், உடனே முடிந்தால் ஒரு புத்தகத்தையே வாங்கிக் கொடுத்து விடுவான். கிழிந்து போன புத்தகத்திற்கு ஒட்டுப் போடுவதோ, கண் துடைத்து விடுவதோ அவனால் ஒரு நாளும் ஆகாத காரியம். பெரியவன் ஆன பிறகும் மற்றவர்களுக்குப் புத்தி சொல்வதிலோ, அல்லது உபதேசம் செய்வதிலோ அவன் நேரத்தைக் கழிக்க விரும்பவில்லை. பெரிய பெரிய கனவெல்லாம் கண்டு கொண்டிருந்தான். ஆனால், பார்க்கப் போனால் அவைகள் கனவே அல்ல. முதிர்ந்த உள்ளத்தில் கனிந்த அனுபவ வெளியீடுகள் தான் அவைகள். அவள் உள்ளத்தில் உருவான லட்சியம் பிஞ்சு போல இருக்கலாம். ஊரும், தானும் உருப்பட வேண்டும் என்று அவன் நினைத்தான். அதற்காக பூசல்களை முதலில் ஒழித்து விட வேண்டும். சமுகம் ஒரே கணத்தில் நாம் நினைப்பது போல் மாறிவிடப் போவதில்லை. ஆனால் அதற்காக அதே சிந்தனையுடன் கையைக் கட்டி உட்கார்ந்து கொண்டிருப்பதைப் போன்ற பைத்தியக்காரத்தனம் வேறொன்றுமில்லை. செல்லாயா அவன் இதயமலர். ஒரு நாள் அவளே சொன்னாள். “நான் தான் பூவாம்; நீங்கள் எங்கிருந்தோ வந்து அதைச் சூடிக் கொண்டு போவீர்களாம்.” அதற்கு மாரியப்பன், “நீ பூ தான். சந்தேகமில்லை. ஆனால், நானோ இன்னும் கொஞ்சம் முற்றியவன். அதாவது பிஞ்சு. இந்தப் பூவும் பிஞ்சும் முதிர்ந்தே கனியாவது, நாம் பயன்பட்டால்தான் மற்றவர்களுக்கும் பயன். தனி மரத்தைத் தோப்பு என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நாம் இல்லாமல் சமூகம் இல்லை. சமூகம் நம்மைப் பிரித்துவிட்டு சமூகமாகவும் ஆகிவிட முடியாது” என்றான்.

     அவள் சிரித்தாள். “எனக்கு இதெல்லாம் தெரியாது? நீங்க பாட்டுக்கு என்னத்தையாவது பேசிக் கொண்டிருங்கள்!” என்றாள்.

     ஆனால், இன்று அவள் பேசவில்லை. தன்னுடைய தந்தைக்கும் அவனுக்கும் எத்தனையோ வித அபிப்பிராய பேதங்கள். சமயம் வந்தால் தானாகத் தீர்ந்து விடுகிறது. முன் கூட்டியே எதற்காக வீண் வாதங்கள் என்று அவள் மௌனமாக இருந்துவிட்டாள்.

     ராமசாமிக் கவுண்டர் எதையோ கூர்ந்து உற்றுக் கேட்டார். “ஆமாங் கண்ணா, வண்டி யாட்ட இருக்குதுங்க” என்றான் பக்கத்திலிருந்தவன். சற்று நேரத்தில் மணியக்காரர், ஏட்டு, இன்ஸ்பெக்டர் எல்லாம் வந்து சேர்ந்தார்கள்.

     அதைப் பார்த்ததும் “அடே, கெட்டிக்காரண்டா, நேராப் போயிக் கூட்டியாந்திட்டான்” என்று குப்பணன் சத்தம் போட்டுச் சொன்னான். மற்றவர்கள் சிரிப்பதை குப்பணன் பொருட்படுத்தவே இல்லை. எப்படியோ புது ஆட்களுடன் பேச்சுக் கொடுப்பதிலே குப்பணன் கைதேர்ந்தவன்.

     அதே சமயத்தில் இன்னொரு வண்டியும் வந்தது. அந்த வண்டியில் வந்த கோர்ட்டு அமினாவோடு பேசி, வந்த விவரத்தைத் தெரிந்து கொண்டு ஓட்டோட்டமாக வந்தான், குப்பணன் ஆனந்த வெறியில் குதிப்பதைக் கண்டு மற்றவர்கள், “என்னப்பா? உனக்கு அதிலே பங்கு உண்டா?” என்று கேட்டார்கள்.

     “நானேண்டா பங்குக்குப் போறேன்? இண்ணத்த நாளைக்கு மணியக்காரன் பூமி ஏலத்துக்கு வரேலே அதெ எனக்கெ உட்டுடுங்க. குறுக்கெ எவனும் பேசப்படாது. நான் எப்படியும் ஏலத்திலே எடுத்து ரண்டு நாளைக்காச்சு உழுவாட்டி எனக்கு மனசு கேக்காது!” என்றான்.

     மணியக்காரர் பூமி ஏலத்திற்கு வருகிறது என்பதைக் கேட்டதும் ஒரு பெருத்த ஆரவாரம் எழுந்தது. அந்த மகிழ்ச்சிப் பெருக்கை மாரியப்பன் கண்டும் காணாதவன் போலே கண்ணை மூடிக் கொண்டிருந்தான்.

     “ஏண்டா, உங்கிட்டெ சொத்து ஏது? செட்டியார் அதுக்கல்லாம் வழி பண்ணீருப்பார். அது நெசந்தானா?” என்று கேட்டது ஒரு குரல்.

     “நெசமிண்ணா! அமீனாவுக்கு ரண்டு எளனியும், வெத்தலை பாக்கும் குடுத்தவன் நாந்தானப்பா, பூராச் சங்கதியும் சொல்லீட்டா, செட்டியார் உருமிக்கிட்டெ இருக்காராம். வீரப்பன் வீரபத்திரன் அல்ல, சும்மா உடுவானா?” என்றான்.

     கெட்டுப் போகும் மனிதனைக் கண்டு பரிதாபப்படுவது உலக இயற்கை. ஆனால் அவனுடைய முன்னைய வாழ்க்கை தான் எல்லாவற்றுக்குமே காரணமாயிருக்கிறது. நாலு பேரும் சௌக்கியமாக இருந்தால் நல்ல காரியத்தைச் செய்யலாம். மணியக்காரருக்கு வரப் போகும் துர்க்கதியை எண்ணிப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது மாரியப்பனுக்கு. ஆனால், எத்தனை பேருக்கு அந்த நிலைமை ஏற்பட அவர் காரணமாக இருந்தார்? பலமாகக் கூச்சல் போடுவதால், முன்பு கேட்ட பரிதாபக் குரலை யெல்லாம் மறந்து விட முடியுமா?

     ராமசாமிக் கவுண்டர், வெற்றிலையை மென்று கொண்டே, “பொயிலைச் சருகு இருந்தாக் குடப்பா. ஊம், சொல்லு அப்பறம் என்ன? ஏட்டும், பூட்டும் வந்தவங்க என்ன பண்ணுனாங்க?” என்றான்.

     அவர்கள் காலையில் எதிர்பார்த்ததிற்கு மாறாகவே நடந்தது. ‘அகஸ்மாத்தாக மரணம்’ என்று இன்ஸ்பெக்டர் எழுதிக் கொண்டு, சவத்தை எடுத்துக் கொண்டு போகும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

     மணியக்காரர் தோட்டத்தில் இருந்தாரே ஒழிய அவர் உள்ளம் சுற்றுப் பக்கங்களில் திரிந்து கொண்டிருந்தது! கண்ணுக் கெட்டிய தூரம் வரை அவருக்கு வேண்டிய ஆசாமி. தென்படவே இல்லை. யாரிடம் போய்ப் பணம் கேட்பது? எப்படி ஏலத்தை நிறுத்துவது? ஏலத்தில் பூமி போகாமல் தடுக்க வழியே இல்லையா? போகட்டும். ‘யார் தான் எடுப்பார்கள் பார்க்கலாமே’ என்று தைரியமாக இருக்க முடிகிறதா? ஒண்டிக்காரன் எடுத்தால் கூட, அதைத் தடுக்க இவரால் ஆகுமா? தலையாரி கூட வரவர காது கேட்பதில்லை என்று சொல்லிக் கொண்டே, கூப்பிட்டாலும் வாசலில் அசையாமல் உட்கார்ந்து விடுகிறானே!

     காலையில் நடந்ததை எண்ணவும் நடுக்க மெடுக்க ஆரம்பித்தது. ‘நாமளா இப்படி பயங்கொள்ளி ஆனது?’ என்று அவருக்கே வியப்பாக இருந்தது.