11

     இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு ஒருநாள் அதிகாலை இன்னும் காக்கை குருவி கூட சத்தம் செய்யவில்லை. எங்கும் அமைதி நிலவியது. அந்த அமைதியைக் கலைத்துக் கொண்டு மாரியம்மன் கோவிலுக்கு எதிரிலிருந்து ஒரு தீனக்குரல் எழுந்தது.

     “அம்மா, மாரியாத்தா, நீ இருக்கறது நெசமானா எம் வயறு பத்தி எரியறது மாதிரி இந்த மணியக்காரன் ஊடும் எரிஞ்சி போகோணும் தாயே” என்று ஒரு வயசு சென்ற கிழவி வேண்டிக் கொண்டிருந்தாள்.

     அந்த வேளையில் மாரியம்மனே வேற்றுருக் கொண்டு அங்கு நிற்பது போல் இருந்தது. தலையெல்லாம் பஞ்சு போல் வெளுத்திருந்தது. உடம்பும் தளர்ந்து நடக்க மாட்டாமல் கோலைப் பிடித்துக் கொண்டு வந்து கும்பிடும் அந்த கிழவி யார்? அப்படி என்ன குறை வந்துவிட்டது அவளுக்கு? சற்று நேரத்தில் இந்தக் குரல் கேட்டுத்தானோ என்னவோ ஐந்தாறு பேர் அங்கங்கே பார்த்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆலமரத்தின் கிளைகளில் படிந்திருந்த பறவைகளும் கல்லாய் சமைந்துவிட்டன. பார்த்தவர்களும் அப்படியேதான். கிழவி மேலும், “மாரியாத்தா, எனக்குச் சோடிக் கெடா வெட்டறதுக்குச் சத்தில்லே. எம் பசங்க மூணும் பொளச்சிருந்தா ஒண்ணுக்கு நாலா செய்திடறேன். நீ இங்கெ குடி இருக்கிறயிண்ணா இந்த மணியாரனை மாத்திரம் விசாரிக்காமே இருந்திடாதே!” என்றாள்.

     பிறகு வாயில் முணுமுணுத்துக் கொண்டே தன் தோட்டத்தை நோக்கி நடந்தாள். அவள் தோட்டம் போய்ச் சேருமுன்பே இந்தப் ‘பிரார்த்தனை’ ஊர் முழுதும் பரவிவிட்டது. “அடி சண்டாளி, கோயில்லையா உழுவறது” என்று இரண்டொருத்தி வாய்மேல் கை வைத்தார்கள்.

     “அவளுக்கு இப்படி இருந்து தாக்கும்” என்று அங்கேயே கேள்வி பதிலும் எழுந்து அடங்கிக் கொண்டிருந்தது.

     ராமசாமிக் கவுண்டர் காலையில் தோட்டத்துக்கு வந்ததும் வாரி வெளியில் ‘எமகிங்கரர்’கள் போல் முத்தப்ப கவுண்டன் மக்கள் மூன்று பேரும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். காலையில் கோவிலில் விழுந்தவள் இவர்களுடைய தாயார்தான். விஷயம் இதுதான். எப்போதோ இவர்கள் அப்பன் இருந்த காலத்தில் செட்டியாரிடம் கடன் வாங்கியிருந்தது, இன்று ஒன்றுக்குப் பத்தாகப் பெருகி பூமியே போய்விடும் நிலைமைக்கு வந்துவிட்டது. முதலில் ‘ஏனாதானா’ என்று கவனிக்காமல் இருந்தார்கள். இப்போது, ‘குரல்வளை’யைப் பிடிக்க வரவும் கோவிலில் விழுவதைத் தவிரக் கிழவிக்கு வேறு வழி இல்லாமல் போய்விட்டது. புத்திசாலி மகன் ஒருத்தன் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறான்!

     ராமசாமி நெருங்கிய சொந்தக்காரர். அதனால் தான் வந்திருக்கிறார்கள். “அட என்ன விசயமப்பா கார்த்தாலே?” என்று ராமசாமிக் கவுண்டர் கேட்டார். “மாமா உங்களுக்கு தெரியாதா? செட்டியாருக்கு அத்தனை ‘எளக்காரம்’ குடுக்கறவன் நம்ம மணியாரன் தானுங்க. இண்ணைக்கு ரண்டு தட்டுலே தட்டி, நொங்குக்காய் சீவராப்பலெ சீவி அணைக்கட்டிலே சாக்கிலே கட்டி உடாட்டி நானு எங்க அப்பனுக்கு பொறக்கலீங்க!” என்றான்.

     “போடா போ பதரே” என்று ராமசாமி மிரட்டினார்.

     மூத்தவன், “நீங்களே சொல்லுங்க. ஊடு, நம்ப புள்ளே குட்டி இருக்குதுங்களே? சரியான காணியாளனுக்குப் பொறந்தவன் பண்ற வேலெங்களா இது? நாங்க ஆண்டியுங் கோமணமுமா போனா இவனுக்கு என்ன வருதுங்க? உண்ணியும் ஊரைக் கெடுக்கறதுக்கு இல்லாதெ ‘சதக்கிணு’ இவனைப் போட்டு எறிஞ்சிட்டா என்னுங்க?” என்றான்.

     ராமசாமிக் கவுண்டருக்குச் சமாதானம் சொல்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. கிழவியை மண்ணை வாரித் தூற்ற வேண்டாம் என்றால் கேட்டால் தானே? இதன் பலன் எப்படி ஆனாலும் ஆகட்டும். இப்போது ராமசாமி கவுண்டர் கண் மூட முடியாமல் போனதுதான் மிச்சம்!

     எய்தவன் இருக்க அம்பை நோவதில் என்ன பயன் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் இதிலே எய்தவன் யார்? அம்பு எது? என்று கண்டுபிடிப்பது மகாக் கஷ்டமாக இருந்தது. மணியக்காரரைச் சலித்துக் கொள்வதா? அல்லது செட்டியாரைத் திட்டுவதா? இல்லாவிட்டால் தங்களுடைய தலைவிதியையே நொந்துகொள்வதா?

     இயற்கையிலேயே ராமசாமிக் கவுண்டருக்கு பரோபகார நோக்கு அதிகம் உண்டு. ஒரு விதத்தில் மற்றவர்களிலிருந்து அவர் மாறுபட்டே இருந்தார். தன் பையனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும்போதே இதை உத்தேசித்தே தான் அனுப்பினார்.

     எல்லாரையும் போல மண்ணைக் கிளறிக் கொண்டிருப்பதிலே என்ன சுகம்? பையன் படித்துப் பெரிய கெட்டிக்காரனாகவும், புத்திசாலியாகவும் பெயர் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இடையிலே இந்த மாதிரி எத்தனையோ ‘எக்கச்சக்கமான’ காரியங்கள் வந்து குறுக்கிட்டன. தானும் நாலு பேருக்கு நல்லவனாக நடக்க வேண்டும் என்று அவர் படாதபாடு பட்டார். எந்தக் கட்சியிலும் சேர்ந்தவன் அல்ல என்று காட்டிக் கொள்வதற்காகவே நாட்டராயன் கோவிலில் மணியக்காரரோடேயே பக்கத்தில் இருந்தார். தவிர, வந்த இடத்தில் அவரை ஜாக்கிரதையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவருடைய அந்தரங்க ஆவல்.

     ஊருக்குள் ‘கட்சி கிட்சி’ என்ற பேச்சே இருக்கக் கூடாதென்பதற்கு எவ்வளவோ முயற்சித்தார். தனி மனிதன் முயற்சியால் எல்லாமே திருந்தி விடுகிறதா? எப்படியோ போகட்டும். தன்னைப் பொருத்த வரையிலாவது அது திருப்திதான் என்று இருந்தார். அப்படியும் மற்றவர்கள் சும்மா இருக்கவிடுவதில்லையே?

     கடைசியாக ராமசாமிக் கவுண்டர் முழு உதவியும் செய்வதாக வாக்களித்த பிறகுதான் தீட்டிய அரிவாளைக் கீழே வைத்தார்கள். கிழவியும் சாந்தமடைந்தாள்.

     ஆனால், மற்ற இடங்களில் அது எப்பேர்ப்பட்ட குமுறலை உண்டாக்கியது என்பது போகப்போக ராமசாமிக் கவுண்டருக்கே துலாம்பரமாகிவிட்டது.

     ஒருநாள் மணியக்காரர் ராமசாமிக் கவுண்டரைத் தம் வீட்டுக்குக் கூப்பிட்டார்.

     வெகுநேரம் தனித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். என்னதான் தனக்கு மணியக்காரரிடம் துளியும் விரோதம் கிடையாது என்றாலும் அவர் நம்பத் தயாராக இல்லை.

     “நானும் என்னென்னவோ ஆசை வெச்சிருந்தேன். அதெல்லாம் அடியோடு கெடுத்துப் போட்டீங்க” என்றார் மணியக்காரர்.

     இருவரும் மரியாதையாகவேதான் பேசிக் கொள்வார்கள். இப்போதும் அப்படியேதான் பேசிக் கொண்டார்கள். அதில் ஒன்றும் குறைவு இல்லை. மணியக்காரர் மகன் கலியாண விஷயத்தைத் தான் குறிப்பிடுகிறார் என்பது ராமசாமிக்குத் தெரியாததல்ல. குறிப்பை அறிந்து கொண்டார். ஏன்? ராமசாமியின் மனப்பூர்வமான ஆவலும் அதுதானே? மகனுக்கு ஏற்ற இடம் என்றே கருதி வந்தார். ஊரிலே இருவரும் நல்ல புள்ளிகள். நல்ல சம்பந்தம். ஆனால் இடையே ஒரு பெரு நெருப்பல்லவா வளர்ந்து வருகிறது?

     அந்த நெருப்பு சுலபத்தில் அணைந்து விடுவதாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் சும்மா புகைந்து அணைந்து விடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இப்போது அது கொழுந்துவிட்டு ஜகஜ்ஜோதியாக எரிய ஆரம்பித்து விட்டது.

     “உண்ணிச் சொல்றதுக்கு என்ன இருக்குது? அவரவர் கையிலானதைப் பாத்துக்க வேண்டியதுதான்” என்றார் முடிவாக. “என்னுங்க அப்படிச் சொல்றீங்க?” என்று அமைதியாகவே ராமசாமி கேட்டார்.

     செல்லாயா மல்லிகைச் செடிக்கு வாசலில் தண்ணீர் ஊற்றிக் கொண்டே இந்தப் பேச்சுகளைக் கேட்டாள். தன் தந்தையின் கடும் வார்த்தைகளைக் கேட்க அவள் கண் கலங்கியது. ‘இது என்ன ஆகுமோ?’ என்று அவள் துடித்தாள்.

     மணியக்காரர் அடக்கமாக, “செரி, நீங்க போங்க” என்றார்.

     ராமசாமிக் கவுண்டன் கோபத்தைத் தணிக்க ஆன மட்டும் பார்த்தான். முடியவில்லை. அவர் பிடிவாதமாகவே இருந்தார். குற்றம் செய்யாதவன் கூட சில சமயம் குற்றத்தை ஒப்புக் கொண்டு விடுகிறான். ஆனால், குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொள்வதுதானே அரிய காரியமாக இருக்கிறது!