9

     கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகவே ஆண் பெண் அடங்கலாகச் சுள்ளிவலசிலுள்ள எல்லாரும் இந்த வாரச் செவ்வாய்க் கிழமையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நோன்பு நொடி ‘ஏவை தேவை’ என்றால் கூட இவ்வளவு குதூகலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. நாட்டராயன் கோவிலுக்குப் போவதென்றால் அந்த உற்சாகத்துக்கு இணை அதுவேதான். அதோடு தங்கள் குறைகள் எல்லாம் தீர்ந்து போகும் நாள் அடுத்து விட்டது என்றாலே அதுவே ஒரு தனி ஆனந்தம் அல்லவா? அவர்கள் முனியப்பனிடம் செய்திருந்த ‘வேண்டுதல்கள்’ எத்தனையோ! காலாவதியான பாண்டு பத்திரம் வரை முனியப்பன் அருளால் செல்லக்கூடிய பலன் கிட்டும் என்று எதிர்பார்த்து அவர்கள் காரியம் செய்து வந்தார்கள். முக்கியமாகப் பேய் பிடித்த பெண்கள் அத்தனை பேரையும் முனியப்பன் சன்னதியில் பார்க்கலாம். அங்கே ஆடுகிற ஆட்டத்திலும், போடுகிற சத்தத்திலும் பேய்பிசாசுகள் கண்காணாமல் ஓடிவிடும் என்பதில் அவர்களுக்குத் துளிக் கூட சந்தேகமில்லை.

     மாலைக் கதிர்கள் பசும்புல் மைதானத்தையும், இளம் பயிர்களையும் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தன. இரட்டை மாட்டு வண்டிகள் தயாராகக் காளைகள் பூட்டி நின்று கொண்டிருந்தன. காளைகள் வயிறு நிறைந்திருந்ததால் கண்களிலே ஒரு தனிக் கவர்ச்சியும், உடம்பில் ஒரு சுகமான நெளிவும் தென்பட்டது. பையன்கள் வண்டி ஓட்டுவதற்கு சாட்டைகளைப் பத்திரப்படுத்திக் கொண்டும், சாட்டைத் துளிரை நன்கு திரித்துக் கொண்டுமிருந்தார்கள். கட்டுச் சாதத்தைக் கவனமாக எடுத்து வைப்பவர்களும், ராத்திரிக்குப் போர்த்துக் கொள்ள துப்பட்டியை எடுத்து வைப்பவர்களும், வண்டியில் இடத்தைப் ‘பதனப்’ படுத்துபவர்களுமாக ஒரே கோலாகலமாக இருந்தார்கள்.

     ஆச்சு; நாட்டராயனுக்கு வெட்டக் கொண்டு செல்லும் கடாக்கள், ‘பிலுபிலு’வென்ற கண்களோடு தடித்த உடம்பை உதறி விட்டுக் கொண்டு வந்து நின்றன. அந்த மனிதக் கும்பலோடு, வாய்பேசும் மிருகங்களோடுதான் இந்த வாயில்லா மிருகங்களும் பிரயாணத்தை ஆரம்பிக்கத் தயாராக இருந்தன. பொழுது சாயச்சாய வண்டிகள் பூட்டியாயிற்று. இருபது இருபத்தைந்து வண்டிகள் இருக்கும். போகப் போக அக்கம்பக்கத்திலிருந்தும் பல வண்டிகள் வந்து சேர்ந்து விடும். ஆனால் ஒவ்வொரு ஊர்க்காரரும் கூட்டமாக இருந்தால்தான் எல்லா காரியத்திற்கும் சௌகரியமாக இருக்கும். அதற்காக ராமசாமிக் கவுண்டரின் வண்டி மணிகள் ‘கணீர் கணீர்’ என ஒலிக்க முதலில் புறப்பட்டது. பெரிய காளைகள் பூட்டிய மணியக்காரர் வண்டி எல்லா வண்டிக்கும் பின்னால் கிளம்பியது.

     ஆற்றுக்குச் சற்று நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். பாதம் அளவுதான் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. கடாக்கள் மேல் தண்ணீர் தெளித்தார்கள். உடம்பை நன்றாக குலுக்கின. “நாளைக்கும் இப்படியே துலுக்கோணும்” என்று கடாக்களைத் தட்டிக் கொடுத்தார்கள். உடம்பை சரியாக குலுக்காவிட்டால் என்னவாவது ‘எசகேடு’ நேர்ந்து விடுமாம். வண்டிக்குள் இருந்த கடாக்களும் தலையையும் உடம்பையும் நன்றாகவே ஆட்டின.

     அடுத்த நாள் சாயங்காலம் பயணம் போயாக வேண்டும். இராத்தங்கல் இல்லை. வண்டி மெதுவாகவே அந்த இட்டேறித் தடங்களில் போய்க் கொண்டிருக்கும். தெம்மாங்கு பாடிக்கொண்டே உல்லாசமாக வண்டியைத் தட்டிவிடுவார்கள்.

     காலையில் காங்கயத்துக்குப் பக்கத்தில் ஒரு தோட்டத்தில் வண்டிகளை அவிழ்த்து விட்டார்கள். நல்ல நிழல். உட்கார சாப்பிட ரொம்ப சௌகரியமாக இருந்தது. குழந்தைகளுக்கு இட்லிகள் வாங்கிக் கொடுத்துவிட்டு, கட்டுச் சாதத்தை பெரியவர்கள் சாப்பிட்டவுடன் வண்டியைப் பூட்டினார்கள்.

     திங்கள் சாயங்காலம் நாட்டராயன் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். ஒருநாள் முழுதும் வண்டியிலே வந்திருந்ததால் எல்லாருக்குமே கொஞ்சம் சோர்வும் சலிப்புமாக இருந்தது. ஆனால் வந்திருந்த வண்டிகளையும், தோல் தரகுக்காரர்களையும், பொரி கடலை, சூடம், தேங்காய்பழம் கடைக்காரர்களையும் கண்டதும் சோர்வு சற்று நீங்கியது மாதிரி இருந்தது.

     எப்போதுமே நாட்டராயன் கோவிலில் திங்கள்கிழமை இரவுதான் கூட்டம் கூடுவது வழக்கம். வாராவாரம் ஆயிரக்கணக்கான ஆட்டுக்கடாக்கள் பலியாகும். மற்ற மாதங்களைக் காட்டிலும் ஆடிமாச வாரங்களில் அதிகக் கடாக்கள் வெட்டப்படும். தோல் வாங்கும் வியாபாரிகளும் பேயோட்டும் பூசாரிகளும் நிறைந்திருப்பார்கள். தோலைக் கொடுத்துவிட்டு மீதி ஆட்டைத் தங்களுடன் எடுத்துக் கொண்டு மறுநாள் காலையில் அங்கிருந்து எல்லாரும் புறப்பட்டு விடுவார்கள். அப்புறம் மறுவாரம் வரையிலும் சுற்றுப் பக்கங்களில் இருப்பவர்கள் கூட யாரும் தலைகாட்ட மாட்டார்கள்.

     இராத்திரி “ஹே, ஒ, ஓ!” என்ற ஓங்கார ஒலி எழும். “அட அண்ணா, உம்பேரென்ன! ஊரென்ன?” என்ற ஒரே சத்தம் விடியும் வரை அந்தப் பிராந்தியத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும். பேயோடும் பெண்களுக்கு ஏற்ற விதம் உடுக்கை அடித்து பேயோட்டுகிறவர்கள் பாட்டுப் பாடுவார்கள். இரண்டு பேய் மூன்று பேய் பிடித்த பெண்கள் தலையை இருபுறம் ஆட்டி, ‘ஊர் பேர்’ சொல்லும் காட்சியைப் பார்க்க வேண்டியதுதான்.

     இன்னும் பலவிதமான வேண்டுதல்களுக்கு வந்திருப்பவர்கள் சோற்றை ஆக்கி, அங்கே கிடைத்த மோரோ தயிரோ போட்டுச் சாப்பிட்டுவிட்டு இந்தக் காட்சியை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். கடாக்களை அதிகாலையில் வெட்டத் தொடங்குவார்கள். சுள்ளிவலசுக்காரர்களில் பல ரகமான குறைபாடுடையவர்களும் வந்திருந்தார்கள். தங்கள் தங்கள் வண்டிக்கடியிலே அடுப்பு மூட்டினார்கள். பலர் அங்கங்கே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்திலே மணியக்காரரும் ராமசாமிக் கவுண்டரும் ஒரு ஊஞ்ச மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பேச்சில் செல்லாயாளுக்கு என்ன ருசி இருக்கப் போகிறது? ஆனால், மாரியப்பன் மட்டும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

     “என்ன ராமசாமி, விடியாலே நேரமே முத்தூர் தாண்டிப் போயிடலாம். நீதானப்பா பாத்து சட்டுண்ணு பொறப்படச் சொல்லு. இப்பப் படுத்தாக்கா கார்த்தாலேதான் எந்திரிப்பேன். செல்லாயாளுக்கோசரம் வந்தேன். சும்மா நச்சிக்கிட்டே இருந்தது” என்று சொல்லிவிட்டு “சொல்லு. எப்படி யாத்தா இருக்குது? பயிந்துக்காதே” என்றார் மணியக்காரர்.

     செல்லாயா சிரித்தாள். ராமசாமிக் கவுண்டரும் மாரியப்பனைப் பார்த்துக் கொண்டே, “ஏனப்பா எப்படி? உங்க அம்மா கட்டாயத்திலே வந்தயே எப்படி யிருக்குது?” என்றார்.

     எந்தப் பக்கத்தில் திரும்பினாலும் ‘ஓங்கார’ நாதமே ஆடிக் காற்றையும் பீறிக்கொண்டு மேலெழுந்து ஒலித்தது. அருகில் கிராமம் ஒன்றுமில்லை. அந்த மங்கிய இருளில் ஊஞ்ச மரங்கள் நிற்பது பேய்கள் சடைவிரித்து அசைவது போலவே இருந்தது. ஒவ்வொரு வண்டிக்கூடும் அந்தப் பூதகணங்களின் வாகனங்கள் போலவும், எதிரிலுள்ள பெரிய கட்டிடம், செம்மண் குதிரைகளும், “இதுவன்றோ, பேய் நாடு! எமலோகத்திற்கே வந்துவிட்டோம்” என்ற உணர்ச்சியையுமே கொடுத்துக் கொண்டிருந்தன. அரிவாள் தீட்டப்படும் சத்தம், பூதகணங்களுக்கு விருந்தளிக்க ‘குட்டிச்சாத்தான்’கள் மும்முறமாகக் காரியத்தில் ஈடுபட்டிருப்பது போலவே இருந்தது.

     தங்கள் வண்டிப் பக்கத்தில் வந்த போது, “நீ பயந்துக்கிலையே!” என்று மாரியப்பன் செல்லாயாளிடம் கேட்டான்.

     அவள் சிரித்துக் கொண்டே, “தலையைத் தான் கொஞ்சம் ஆட வாராப்பலே இருக்குது” என்றாள்.

     “ஐயையோ, வாண்டாம். உன்னைப் புடிக்கிற பேய் என்னையும் புடிச்சிக்கப் போகுது” என்றான் விளையாட்டாக.

     “அப்பொ ரண்டு பேரும் நல்லாப் பேயாடலாம்!”

     அவள் ‘பேயாடலாம்’ என்றவுடன் மாரியப்பன் இள மனசில் எண்ண அலைகள் இலேசாக மோதத் தொடங்கின. பெண்ணின் சின்னஞ்சிறு இதயக்கரையிலும் விவரிக்க முடியாத நினைவுகள் பெருக்கெடுத்துக் கொண்டுதான் இருந்தன. வேடிக்கை பார்க்கலா மென்றுதான் அவள் வந்தாளே யொழிய அதிலே ஒரு கோரம் இருக்கிறது. பார்க்கச் சகிக்காத ‘தலைச்சுற்றல்’ வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. மாரியப்பனுக்கு அங்கு நடக்கும் காரியங்கள் ஒரு விதத்தில் வேடிக்கையாகவே இருந்தது. ஆனால் ஒரு கிழவன், “அப்பனே, எம் பணம் கூடப் போனது இருபது ரூபாயும் எங்கிருந்தாலும் கொண்டு வந்து குடுத்திடு” என்று வேண்டிக் கொண்டது விசித்தரமாக இருந்தது. தான் பார்க்கும் மனிதர்கள் ஒரு அணாவானாலும் இறுக்கி முடிந்து கொள்கிறார்கள். கோழிமுட்டை விற்கும் காசுகளை உரிச்சட்டியிலே போட்டுப் பத்திரப்படுத்துவதைத் தினம் அவன் பார்க்கிறான். வேப்பங்கொட்டை பொறுக்கி விற்பதில் ஒரு படிக்குத் தம்பிடி தள்ளிக் கொடுக்க மனசு வராத கிழவிகளையும் அவனுக்குத் தெரியும். அப்பேர்ப்பட்ட யாராவது ஒருவருக்கு இந்தக் கிழவன் பணம் கிடைத்து விட்டதாக வைத்துக் கொள்வோம். திரும்பி அதை அடைய முடியுமா? இதை எண்ணவும், நேற்றுத் தன் தகப்பனார் ஒரு பெண்ணின் கண்ணீரைக் கண்டதும் மனமிளகி அவளுக்கு உடனே உதவி செய்ய ஒப்புக் கொண்டதும் ஞாபகத்துக்கு வந்தது. என்ன விசித்திரம்? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அசைவற்று நின்றான்.

     செல்லாயா அவனைத் தொட்டுப் பேசவும் தான் உணர்ந்தான். “கல்லுப்போல நிக்கறயே! நெசமாப் பயந்துக்கிட்டயா? அங்கெல்லாம் போய்ப் பார்க்கலாமுண்ணு இருந்தா இப்படி ‘விருமித்தி’ புடிச்சாப்பலே நிக்கறியே?” என்றாள்.

     அந்தச் சமயம் கையைத் தட்டிச் சிரித்துக் கொண்டே யாரோ வண்டிக்கு அருகில் வருவது தெரிந்தது. ஏதாவது ‘மிரண்ட பேய்’ கிளம்பிவிட்டதா? அப்படி ஒன்றுமில்லை. சுப்பண முதலிதான் வந்து உட்கார்ந்தான். “அட வாப்பா, நல்ல சமயத்தில் வந்து சேந்தாய்” என்றார் மணியக்காரர்.

     “இந்த இருட்டைப் பார்த்ததும் எனக்கு ஒரு வேடிக்கை நெனப்புக்கு வந்திட்டதுங்கோ. அதை உங்ககிட்டச் சொல்லாமப் போனா, இங்கு யாருகிட்டச் சொல்றதுங்க. பேய் கிட்டத்தானுங்க சொல்லோணும்!” என்றான்.

     முதலியார் பேச்சென்றால் சிறுவர்களுக்கு அதிக ருசி உண்டு. செல்லாயாளும் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

     இரண்டு வருஷத்துக்கு முந்தி சுப்பண முதலியார் மேளத்துக்கு வள்ளக்காட்டார் வீட்டுக்குப் போயிருந்தார். வள்ளக்காட்டார் பக்கத்து ஊர் பண்ணாடி. ரொம்ப அப்பாவி மனிதன். கொடுக்கப் போவதோ மூணு ரூபாய். ‘சீர் சீர்’ என்று வீட்டிற்கும் பிள்ளையார் கோவிலுக்குமாக நடையா நடக்க வைத்து காலை ஒடித்து விடுவார் போல் இருந்தது. என்ன பண்ணுவது என்று பார்த்தான். கலியாணத்துக்கு வந்து விட்டு நாதசுரத்தில் ‘சத்தம்’ பண்ணாமல் இருக்க முடியுமா? சுப்பண முதலி ஒரு வழி செய்தான். கோவிலுக்குப் புறப்பட்டு போன போது நல்ல இருட்டு. நடு வழியில் ‘கக்’ என்று வாசிக்காமல் விட்டுவிட்டான். “அடே ஏனப்பா, சுப்பணா ஊது. பையனைத் தட்ட சொல்லப்பா. (தவுல்) சும்மா வாரீங்களே?” என்றார் பண்ணாடி.

     “இருட்டுக்குள்ளே எப்படீங்க ஐயா ஊதறது? நீங்க தான் வந்து பாருங்கோ. (நாதசுரத்தைக் காட்டி) இத்தனை ஓட்டையை அடைக்க வாண்டாமுங்களா?” என்றான்.

     பண்ணாடி கேட்டுக் கொண்டார். மேற்கொண்டு நடையும் மிச்சமாச்சு. சுப்பண்ண முதலியார் சுவாரஸ்யமாக இதைச் சொல்லிவிட்டு, “இந்த இருட்டைப் பார்த்ததும் இது மாத்திரம் இல்லீங்க. இங்கிருக்கிற இத்தனை ‘கெடாய்களை’யும் மொள்ள ஓட்டிக்கிட்டு போய் நாளைக்கு வெள்ளகோயில் - காங்கயம் சந்தை வாக்கிலே வித்துக்கிட்டு ஊருக்குப் போயிட்டா யாருங்க என்ன பண்ணுவாங்க? கார்த்தாலே வெட்ட இருந்த ‘கெடாய்’ எல்லாம் ராத்திரியே மினியப்பன உசிரோடே உறிஞ்சீட்டுதுண்ணு சொன்னா நம்பமாட்டாங்களா?” என்று சொல்லிவிட்டு, பலமாகச் சிரித்துக் கொண்டு, “அங்க பாருங்க, இந்தப் பாறையிலே குப்புற உளுந்து நாட்டராயா, நாச்சி முத்தையா நீயே கெதிண்ணு கெடக்கறாங்களே இவுங்கெல்லாம் என்ன சொன்ன நம்பமாட்டாங்க?” என்றான் சுப்பணன்.

     சுப்பணன் சமயம் போல் பேசுகிறதெல்லாம் மணியக்காரருக்குப் புதிதல்ல. “எல்லாம், நம்பினவனுக்குத் தானப்பா தெய்வம்” என்றார் பெரும் போக்காக.

     அதைத் தொடர்ந்து, “நம்பாதவனுக்குக் கல்லுத்தானுங்க. நாம் உக்காந்திருக்கிறதும், இண்ணைக்குப் படுக்கப் போரதும், இந்தக் கோயிலுக்கு உள்ளே இருக்கறதும், எல்லாமே கல்லுத்தானுங்க!” என்று சுப்பணன் சொன்ன போது பக்கத்திலிருந்த எல்லாருமே சிரித்து விட்டார்கள்.

     செல்லாயாளுக்கு இந்தப் பேச்சைக் கேட்டதும் மினியப்பனிடம் இருந்த மதிப்பில் இன்னும் ஒருபடி குறைந்தது. மினியப்பனைப் பற்றிப் பேச்சு வருகையில், “ஆகா! கண் கண்ட தெய்வமாச்சே! அங்கே ஆயிரக்கணக்காக ஆடுகள் வெட்டப்பட்டும் ரத்தம் ஆறு போல் ஓடியும் ஒரு துளி துர்நாற்றமாவது உண்டா? அங்கே ஒரு ஈ எறும்பைக் காண முடியுமா?” என்று மற்றவர்கள் சொல்லக் கேட்டிருந்தாள். இப்போது அதற்கு நேர்மாறாக இருப்பதைக் கண்டாள். மஞ்சள் பொடியை ஏராளமாகக் கரைத்துத் தூவிக் கொண்டிருப்பதாலே ‘ரத்தவாடை’ அடிக்கவில்லை என்பதை அவளே உணர்ந்து கொண்டு விட்டாள். ‘மஞ்சள் போடாதிருக்கட்டும், பார்க்கலாம். இந்த மகாமினியப்பனால் கூட ‘சூர’ நாத்தத்தை பொறுக்க முடியாது!’ என்று மாரியப்பன் சொன்னது விளையாட்டுக்கு அல்ல என்பதும் தெரிந்தது. என்ன இருந்தாலும் இவ்வளவு மகிமை படைத்த மினியப்பனைப் பெரியவர்கள் பயபக்தியுடன் வணங்கி வழிபடும் போது தாங்கள் அலட்சியம் செய்வது எப்படி? மாரியப்பன் கண்டபடி பேசுகிறானே! இது மினியப்பனுக்குத் தெரிந்து கண்ணைக்கிண்ணைக் கெடுத்து விட்டால்? கெடுப்பதாவது? உடனே சுப்பண முதலியார் சொன்ன, “எல்லாம் கல்லுத்தான்!” என்ற வாசகம் உள்ளத்தில் வட்டமிடும்.

     இப்படியாக அன்று இரவு செல்லாயாளின் உள்ளத்தில் பொங்கிய எண்ணத்தை விவரிக்க முடியாது. ஒரு பதின் மூன்று வயதுப் பெண்ணின் மனசிலே இவ்வளவு சிந்தனைகள் உருண்டோடிக் கொண்டிருந்ததென்றால், அந்த மாதிரி இரண்டத்தனை மூன்றத்தனை வயசானவர்கள் மனத்தில் என்னென்ன நினைவுகள் ஊற்றெடுத்ததுவோ? ஆனால் இந்த உலகில் எல்லாருமா சிந்திக்கிறார்கள்? பாவம், நாளைக் காலையில் வெட்டுண்டு உருளப் போகும் தலைகளை இவ்வளவு உல்லாசமாக ஆட்டிக் கொண்டு அந்த ஆட்டுக்கடாக்கள் நிற்கவில்லையா? அந்த மாதிரி கவலை அற்று ஒன்றைப் பற்றியுமே நினையாமல் தூங்குகிறவர்கள் எத்தனை பேரோ?

     பொழுது விடிந்தது. விடிவதற்கு முன்பே கருக்கிருட்டில் ஆட்டுத் தலைகள் உருள ஆரம்பித்து விட்டன. இளமத்தியானத்திற்குள் எல்லாம் முடிந்து வண்டிகள் ஊரை நோக்கிப் புறப்பட்டுவிட்டன.

     ஒவ்வொரு வண்டிக்கூட்டின் இரண்டு பக்கத்திலும் தோல் உரித்த ஆடு தொங்கிக் கொண்டு வந்தது. அதைப் பார்த்தாலே ‘ஐயங்கோயில்’ போய் வருகிறார்கள் என்பதைக் கண்டுகொள்ளலாம். செக்கச் செவேலென்று செவ்வலரிப் பூப்போல இருக்கும் மாமிசத்தின் மீது சூரிய கிரணங்கள் பட்டு இன்னும் பிரகாசமாக எடுத்துக் காட்டியது. அதை மற்றவர்கள் பார்த்து என்ன நினைத்தார்களோ? மாரியப்பனுக்கு மட்டும் அருவருப்பாகவும், காணச் சகிக்க முடியாமலும் இருந்தது. ‘இந்தப் பாழாய்ப் போன ஊருக்கு ஏன் வந்தோம்’ என்று நினைத்தான். பள்ளிக்கூடத்திலே, பாட்டி சொல்கிற மாதிரி தங்கம் போலப் படித்துக் கொண்டிருக்கலாம். கூத்துப் பார்க்க! சை, கூத்தாம் கூத்து? அதுதான் போகிறது? இங்கே இந்தப் பேய்க் காட்டுக்கும் வரவேணுமா? வந்து பார்க்க வேணுமா? நேற்று தளதளவென்று ஓடிவந்த ஆடுகள் இன்று ‘பொக்’ கென்று போய்விட்டது அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. செல்லாயா உட்கார்ந்திருந்த வண்டிப் பக்கம் பார்த்தான். கண்ணை மூடிக்கொண்டிருந்தாள் அவள்.

     வழி நெடுக அழகிய சின்னஞ்சிறு கிராமங்கள்தான். ஊர் வரும் வரை இருமருங்கிலும் நொச்சிச் செடிகளும், அவைகளின் மனோகர மணமும் ‘குறுகுறு’வென்று இடையே ஓடிக் கொண்டிருக்கும் சிறு வாய்க்கால்களும், பச்சைப்பயிர்களின் சுந்தரக் காட்சிகளும், ஏற்று இறைத்தலும், கட்டை வண்டியைத் தட்டிவிட்டுக் கொண்டே பையன்கள் பாட்டும், இன்னும் ஓரம்பாரத்தில் பண்டம் பாடி மேய்க்கிறவர்களின் உல்லாச இசைகளுமாக எங்கும் இன்ப இசைகளே சூழ்ந்து கொண்டிருப்பது மாதிரி இருந்தது. ஆனாலும், அவனுடைய மனதிலே இந்த நிகழ்ச்சிகள் ஒன்றும் படியவில்லை. கண்ணைத் திறந்தலும் மூடினாலும் கோரக் காட்சிகளே நினைவுச் சுழலில் வட்டமிட்டது. வரும் போது இன்பங்கலந்த ஒரு பயம் மனசிலே நிறைந்திருந்தது. ஆம், அந்த இன்பத்திலே மெல்லிய பயப்படலம் படர்ந்திருந்தது. இப்போது கொஞ்சங்கூட இன்பமோ பயமோ இல்லை! வெறுப்பு! தாங்க முடியாத வெறுப்பு, அவனை வாட்டிக் கொண்டு வந்தது. இதை மறக்க வழியில்லையா? இந்த வண்டியிலிருந்து குதித்து ஊரை நோக்கி ஏன், தன் பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடினால் என்ன?

     ஒருவிதமாக என்னென்னவோ பயங்கரக் கனவுகள் கண்டுகொண்டே ஊர் வந்து சேர்ந்தான். வண்டியை விட்டு இறங்கியதும் தன் அம்மாவிடம் போய், “இதுக்குத் தானா வரச்சொன்னாய்?” என்று கேட்டான்.

     அவள் வாய் நிறையச் சிரிப்போடு, “பாத்தியா அப்புனு?” என்றாள். “என்னத்தை?” என்று அவன் கேட்கவில்லை. அப்போதே காலையில் திருப்பூருக்குத் தான் புறப்படுவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தான். ஊரிலுள்ள வீடுகளிலே வழி பார்த்துக் கொண்டிருந்த எல்லாருக்கும் மணிச்சத்தம் கேட்கவும் காணாததைக் கண்டது போல் உவகை பொங்கியது. பவளாக் கவுண்டர் தடியை ஊன்றிக் கொண்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். பேத்தி வண்டியிலிருந்து இறங்கியதும், “அட சாமி, நீ பயந்துக்கிலையே?” என்றார். அத்தை ஓடி வந்து அணைத்துக் கொண்டு, “கண்ணு, நீ பயந்துக்கிலையே?” என்றாள்.

     தன்னை எல்லாரும் “பயந்து கொள்ளவில்லையே?” என்று கேட்பது கொஞ்சமும் செல்லாயாளுக்குப் பிடிக்கவில்லை.

     “நானென்ன, கொளந்தப் புள்ளையா பயக்கறதுக்கு? அந்த மகா மினியப்பனையே பயப்படுத்திடுவேன்!” என்றாள்.

     பவளாக் கவுண்டர் அப்படியே பரவசமாகி விட்டார்.


புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247